படம் | Dailyvedas

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான வட்டாரங்களை எவ்வாறு அணுகுவது என்றும் இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம் கூட்டமைப்பின் உயர் பீடத்திடம்மோடி அரசை நெருங்கிச் செல்வதற்கேற்ற போதிய தொடர்புகள் இல்லை என்பதே வெள்ளிடைமலையாகிறது. மோடி அலையொன்று உருவாகிவருவதான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்​போது, சம்பந்தன், தமிழ் நாட்டிலுள்ள சில பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதை, இப்பத்தி முன்னரும் பிறிதொரு விவாதத்திற்காக எடுத்தாண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், குறித்த அந்த சந்திப்பும் கூட திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. அவ்வப்போது இந்தியா செல்லும் சம்பந்தன் சிலரை எதேச்சையாக சந்திப்பதுண்டு. அத்தகையதொரு சந்திப்புத்தான் மேற்படி பா.ஜ.க. தலைவர்களுடனான சந்திப்பும் கூட. மொத்தத்தில் பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டமைப்பினருக்கு நெருங்கிய தொடர்புகள் ஏதும் இல்லை என்பதே உண்மை. விடுதலைப் புலிகள் தமிழர் அரசியலை ஏகபோகமாக தீர்மானித்திருந்தகடந்த முப்பது வருடகாலத்தில், இந்தியாவுடனான தொடர்புகள் என்பது வெறுமனே சில தமிழ் நாட்டின் புலி முகவர்களுடனானதாக மட்டுப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் இந்தியாவை எதிர்த்துநின்று சாதிக்க வேண்டுமென்னும் ஆர்வக் கோளாறுக்குள் அகப்பட்டுக் கிடந்ததால், தமிழ் நாட்டைத் தாண்டிய தொடர்புகள் எதுவும் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கவும் இல்லை.

ஆனால், புலிகள் அல்லாத அமைப்பினர் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு தற்போதும் அந்தத் தொடர்புகள் உண்டு. புலிகளின் அழிவுக்கு பின்னரான கடந்த ஜந்து வருடங்களில், இந்திய தரப்புக்களுடன் பரவலான தொடர்புகளை பேணிக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தும் கூட, அதனை கூட்டமைப்பு சரியாக கையாண்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியே! இங்கு இந்திய தரப்புகள் என்பதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இருதரப்புக்களையுமே இப்பத்தி கருத்தில்கொள்கிறது. கூட்டமைப்பின் மேற்படி இயலாமைக்கு, கூட்டமைப்பிற்குள் நிலவும் உட்சிக்கல்களும் ஒரு காரணமாகும். கூட்டமைப்பிற்குள் விடயங்களை கலந்தாலோசித்து முன்னெடுப்பதில் பலவீனங்கள் காணப்படுவதால், அரசியல் விடயங்களை தூரநோக்கில் ஆராய்ந்து முடிவெடுத்தல், எடுத்த முடிவை கட்டம் கட்டமாக அரங்கேற்றுவதற்கான முனைப்பு என்பவை மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இவற்றின் விளைவுதான், தற்போது மோடி அரசை அணுகுவதற்கு ஆட்கள் தேடுவதன் பின்னணியாகும்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா ஒரு தீர்க்கமான சக்தி என்பதையும், அதற்கான காரணங்களையும் இப்பத்தியில் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மூளைபெருத்த சில அறிவாளிகளைத் தவிர, இதனை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சிக்கல்கள் இருக்கப் போவதில்லை. ஆனாலும், இந்தியா தனது நலன்களை நிறுத்துப்பார்த்துத்தான், இலங்கை தொடர்பான எந்தவொரு விடயத்தையும் கையாளும் என்பதையும் இப்பத்தியாளர் ஒரு போதும் நிராகரித்ததில்லை. அது ஒரு வெளிவிவகார யாதார்த்தமாகும். இன்று, இலங்கையின் இறுதிப் போர் தொடர்பிலான பொறுப்புக் கூறல் தொடர்பில்அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்காவும் சரி, கொழும்பு சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம் அதனை முறியடிப்பதில் பக்கபலமாக இருக்கும் சீனாவும் சரிதத்தமது நலன்களை நிறுத்துப்பார்க்காமல் எதனையும் செய்யவில்லை. இதனை வாசிப்பாளர்கள் மனதில் இருத்திக்கொள்வது அவசியம். இதனை இன்னுமொரு வகையில் சொல்வதாயின், அதுவே அவர்களது அரசியல் தர்மமாகும். இதனை விளங்கிக்கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை சிதறவிடுவதுதமிழர் தரப்பின் அறியாமையாகும். தமிழர்களின் அறியாமைக்கு மற்றவர்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள்?

கடந்த ஜந்து வருடகால கூட்டமைப்பின் வெளிநோக்கிய உறவாடலில் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆனால், மோடியின் இந்தியா நோக்கிய உறவாடலுக்கு கூட்டமைப்பு புதிய ஒருவரை களமிறக்குவதே சரியாக இருக்கும். சுமந்திரனின் கிறிஸ்தவ பின்னனி ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புக்களை அணுகுவதற்கு ஏற்புடைய ஒன்றல்ல.

இப்பத்தி இந்தியாவின் தவிர்க்கவியலா இடம் குறித்து, இவ்விடத்தில் பேச வந்ததன் நோக்கம் வேறு. கூட்டமைப்பும் சரி, கூட்டமைப்புக்குஎதிர்க்கட்சியாக தொழிற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் சரி ஒரு விடயத்தில் உடன்பாடுவார்கள் என்றே இப்பத்தி நம்புகிறது. அதாவது, இந்தியாவை பகைத்துக்கொண்டு, தமிழர்கள் எந்தவொரு தீர்வையும் இலங்கைக்குள் பெற்றுவிட முடியாது. அது எத்தகைய தீர்வு என்பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபாடான பார்வைகள் இருக்கலாம். அது குறித்த விவாதத்திற்குள் இப்பத்தி செல்லவில்லை. அது தனியாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. உண்மையில் புலிகளின் வீழ்சியைத் தொடர்ந்து அதுவரை மூடுண்டு கிடந்த இந்திய – தமிழர் உறவுக்கான கதவு திறந்தது. ஆனால், அக்கதவு வழியாக பயணித்து நன்மைகளை பெறுவதற்கான போதிய முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? உண்மையில் கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர் உடனடியாகவே, புதுடில்லியில் ஒரு அரசியல் அலுவலகத்தை திறந்திருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பு அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கவில்லை. இது கூட்டமைப்பின் பக்கத்திலுள்ள பாரிய தவறாகும். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இந்தியாவுடன் இணைந்து தமிழர் அரசியலை கையாண்ட காலத்தில்டில்லியில் ஒரு அரசியல் அலுவலகத்தை (Political desk)உருவாக்கி செயலாற்றியிருந்தது. கூட்டமைப்பு ஒரு அரசியல் அலுவலகத்தை புதுடில்லியில் ஏற்படுத்தியிருப்பின், மத்தியில் எந்த ஆட்சியிருப்பினும், அதனை அணுகுவது இலகுவாக அமைந்திருக்கும். இந்தியாவின் முன்னனி புத்திஜீவி (Think tank) அமைப்புக்களுடனும், ஊடகங்களுடனும் உரையாடுவதற்கான ஒரு களமாக தங்கள் அலுவலகத்தை கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்க முடியும். போனது போகட்டும், இனியாவது கூட்டமைப்பு இப்படியானதொரு முயற்சியை மேற்கொள்ள முடியும்.

இந்திய தரப்பினருடனான தொடர்பாடல் என்பது வெறுமனேதமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் செல்வாக்குமிக்கஅதேவேளை, இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறையுள்ள முன்னனி புத்திஜீவித்துவ அமைப்புக்கள், முன்னனி ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் கூட்டமைப்பு தொடர்புகளை பேணியிருக்க வேண்டும். இப்படியான தொடர்புகளுக்கு ஊடாகத்தான் இந்திய அதிகாரப்பிரிவினரின் காதுகளுக்குள் பல்வேறு விடயங்களை கொண்டு சேர்பிக்க முடியும். ஆனால், கூட்டமைப்பு கடந்த ஜந்து வருடங்களில் இப்படியான எந்தவொரு முயற்சியையும் மேற்கொண்டதாகச் சான்றில்லை. கூட்டமைப்பும் சரி, ஏனைய தமிழ் தரப்பினரும் சரிதமிழ் நாட்டின் சில அரசியல்வாதிகளை அண்னார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும். தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகளுடன் மட்டுமே தொடர்புகளை பேணியதன் வாயிலாக அடைந்துகொண்ட நன்மைகள் என்ன? இதனை எப்போதாவது தமிழர் தரப்புகள் எண்ணிப்பார்த்ததுண்டா? தமிழ் நாட்டிலுள்ள ஒரு சில புலியாதரவு அரசியல்வாதிகளின் கிளிப்பிள்ளைகளாக கூட்டமைப்பு செயற்படுமாயின், மோடி அரசை நெருங்குவதில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரலாம். சில தினங்களுக்கு முன்னர் கூட வை.கோபாலசாமி, சுப்பிரமணியவாமியே தமிழர் விவகாரத்தை திரிபுபடுத்தியதாக குறிப்பிட்டிருந்ததையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம்.

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவு பெயர் பட்டியலில், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் 1984 தொடக்கம் 1988 வரைபணியாற்றிய கர்தீப் பூரியின் பெயரும் உள்ளடங்கியிருந்தது. பூரி, ஒரு முறை குறிப்பிட்டதை இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். இந்தியா புலிகளுக்கு எதிராக இருக்க முடியும், ஆனால், தமிழர்களுக்கு எதிராக இருக்க முடியாது. (முன்னாள் உள்ளக உளவுத் துறையின் தலைவரான அஜித் குமார் டொவல் (Ajith Kumar Doval) அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.) இப்படியான ஒரு கண்ணோட்டத்தின் ஊடாகத்தான்சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களையும்கூட்டமைப்பு கணிப்பிட வேண்டும். சுப்பிரமணிய சுவாமி புலிகளுக்கு எதிரானவர் ஆனால், தமிழர்களுக்கு எதிரானவர் அல்லர். சுவாமி, தமிழ் மக்களுக்கான நியாயமானதொரு அரசியல் தீர்வுக்கு எதிரானவர் அல்லர். அந்தவகையில், கூட்டமைப்பின் உயர் பீடம், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுடன் உரையாடுவதில் தயக்கம் காட்டக்கூடாது. அதனால், நன்மை அதிகம். இதேபோன்று, இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறையுள்ள பேராசிரியர் சூரிய நாராயணன் போன்ற புத்தீஜீவிகளுடனும், தமிழர் தரப்பு ஆலோசனைகளைக் கோரவேண்டும்.

பா.ஜ.கவுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குமான தொடர்பு இரகசியமான ஒன்றல்ல. வெளிவிவகார விடயங்களில் ஆர்.எஸ்.எஸ். இன் பங்கு எத்தகையது என்பதை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், பா.ஜ.க. அரசில் ஆர்.எஸ்.எஸ். ஒரு சக்திவாய்ந்த அமைப்பு என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. கூட்டமைப்பின் உயர்பீடம் இந்த விடயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பிரதமர் மோடிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நீண்ட காலத்திற்கு பின்னர்வடக்கு கிழக்கில் வாழும் ‘இந்து தமிழ் மக்கள்’ என்று அழுத்தியிருக்கிறார். சம்பந்தன் இத்தகைய நோக்கிலும், புதிய இந்திய அரசை அணுக முயல்வது உண்மையாயின், இதனை இலங்கை அரசிற்கு எதிரானதொரு சுலோகமாக முன்னிறுத்தாமல்பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்கு உதவுதல் என்னும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களையும் அணுக முடியும். இதற்கு முன் நிபந்தனையாக கூட்டமைப்பின் உயர் பீடம் ஒரு சில கத்தோலிக்க மத குருமார்களை திருப்திப்படுத்துதல் என்னும் குறுகிய அரசியல் வட்டத்திற்குள் இருந்து வெளிவர வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தில் தமிழ் மக்களின் சார்பில் வெளியுலகிற்கு கருத்துச் சொல்லும் ஏகக் குரலாக, வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த ஆயர்களே முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். இவர்களில் அனேகர் விடுதலைப் புலிகள் குறித்து ஒரு மென்போக்கை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் தங்களை புலிகளின் தீவிர ஆதரவாளர்களாவும் காண்பித்துக் கொண்டனர். இதன் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் சிவில் குரலாக மேற்படி ஆயர்களே விளங்கினர்; இப்போதும் விளங்குகின்றனர். இதற்குவலுவான இந்து சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கில் இல்லாமையும் ஒரு முக்கிய காரணம் எனலாம். இது குறித்து இந்து சிவில் தலைவர்கள் சிந்திப்பதும் அவசியம்.

எனவே, மோடி தலைமையிலான புதிய அரசை கூட்டமைப்பு நெருங்கிச் செல்ல வேண்டுமாயின், சில அடிப்படையான விடயங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்னும் நோக்கிலேயே இப்பத்தி சில விடயங்களை எடுத்தாண்டிருக்கிறது. கூட்டமைப்பின்கடந்த ஜந்து வருடகால வெளிவிவகாரக் கையாளுகையை உற்றுநோக்கினால் அதிகம் மேற்குலகு நோக்கி பயணித்திருப்பதையே காணலாம். ஆனால், இனி அது மட்டும் போதுமா? இனிவருங் காலத்தில் மீண்டும் பெரியண்ணனின் மீள்வருகை என்று வர்ணிக்கப்படும் மோடி இந்தியாவின் பக்கமும் கூட்டமைப்பு தன் பார்வையை அதிகம் திருப்ப வேண்டியிருக்கும். கடந்த ஜந்து வருடகால கூட்டமைப்பின் வெளிநோக்கிய உறவாடலில் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். ஆனால், மோடியின் இந்தியா நோக்கிய உறவாடலுக்கு கூட்டமைப்பு புதிய ஒருவரை களமிறக்குவதே சரியாக இருக்கும். சுமந்திரனின் கிறிஸ்தவ பின்னனி ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புக்களை அணுகுவதற்கு ஏற்புடைய ஒன்றல்ல. அந்த வகையில் நோக்கினால் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே அதற்கு முற்றிலும் பொருத்தமானவர். இப்படிப் பல விடயங்களை சம்பந்தன் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாரம்பரிய இந்துக் குடும்பப் பின்னனியை கருத்தில்கொண்டு,அவரும் மோடி இந்தியாவை நோக்கி வேறு கோணத்தில் சிந்திக்க முடியும். அரசியலுக்கென்று நிரந்தரமான நிற ஆடைகள் ஏதும் இல்லை. எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் நோக்கம் உடலை பாதுகாப்பதாக இருந்தால், அது சரியான ஆடைதான்.

தினக்குரல் புதிய பண்பாடுக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

DSC_4908