Photo: Selvaraja Rajasegar
பெருந்தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் 1000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 2015ஆம் ஆண்டில் முன்வைத்தன. ஆனால், ஆறு வருடப் போராட்டத்தின் பின் இந்த நீண்டகாலக் கோரிக்கை 2021 மார்ச் மாதத்திலே யதார்த்தமாகியது. இருப்பினும், நடைமுறையில், இத்தொழிலாளர்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு நன்மையளிப்பதற்குப் பதிலாக இது தொழிலாளர்களுக்கு அதிக தீங்கினையே ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய, 2021 பெப்ரவரி வரையில் செலுத்தப்பட்ட தற்போதைய நாட்கூலியான 700 ரூபா 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. முன்னூறு ரூபா சம்பள அதிகரிப்பில் தேசிய வரவு-செலவுத் திட்டப் பங்களிப்பில் இருந்தான 100 ரூபா உள்ளடங்கியுள்ளமை இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு வரலாற்றில் பாரிய வெற்றியாகக் கருதப்பட முடியும் என்பதை இங்கு குறிப்பிடுவது சாலப் பொருத்தமானதாக இருக்கும். இது தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே பரவசம் ஏற்படுத்தும் செய்தியாகும். நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் அவர்களின் கோரிக்கையினை இது யதாரத்தமாக்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களில் இப்புதிய ஊதியம் ஒரு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் தொழிலாளர்களுக்கு இது ஒரு கொடுங்கனவாக மாறியுள்ளது. புதிய சம்பளமான 1000 ரூபாவின் தாக்கத்தினையும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதியத்தின் பலாபலனையும் இந்தக் கட்டுரை கோடிட்டுக்காட்ட முயற்சிப்பதுடன் தற்போதைய நெருக்கடியினைத் தீர்த்து தொழிற்துறையினை நிலைபேறானதாக்குவதற்கு பெருந்தோட்டத் துறையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றீடுகளையும் அடையாளம் காண முயற்சிக்கின்றது.
புதிய நாட் சம்பளமான 1000 ரூபா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
நாளாந்த ஊதியமாக 1000 ரூபா வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் 2015ஆம் ஆண்டில் முன்னெடுத்தன. எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கையினைப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) எதிர்த்தன. இருந்தபோதிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பத்தில் இருந்தே நாட்டின் ஊடகக் கலந்துரையாடல்களில் பரந்த கவனத்தினைப் பெற்று பரவலாக உள்ளடக்கப்பட்ட விடயமாக மாறியது. தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏனைய இணை அமைப்புக்களும் ஆதரவு வழங்கின – அரசியல் கட்சிகளும் பல்வேறு சிவில் சமூக இயக்கங்களும் கல்வியியலாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கை பற்றி அறியாத தனிநபர்களும் இதில் தலையிட்ட காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தினை அதிகரிக்கவேண்டிய பாரிய அழுத்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. ஊதியக் கோரிக்கைக்கு மத்தியில் கொழும்பில் வேலை செய்யும் பெருந்தோட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 2018 ஒக்டோபர் மாதத்தில் காலி முகத்திடலில் நடத்தப்பட்டது. பேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் பெருந்தோட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது ஆர்ப்பாட்டமாக இது கருதப்பட்டது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முக்கியமான விடயமாக மாறி அரசாங்கத்தின் தலையீடு இந்த விடயத்தில் தவிர்க்க முடியாதது என்பதைச் சுட்டிக்காட்டியது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த பல அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமான 1000 ரூபாவுக்கான கோரிக்கைக்கு ஆதரவு வழங்கின என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பல பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதான விடயங்களில் ஒன்றாக இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இறுதியில், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தினை 2021 ஜனவரியில் இருந்து அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தினைப் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 1000 ரூபா கொடுப்பனவு செலுத்தப்படுவதைக் கட்டாயமானதாக ஆக்குவதற்காக ஊதியங்கள் சபை ஒழுங்குவிதிகளைத் (WBR) திருத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டது. நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரவு-செலவுத் திட்ட உரையில், ஊதியச் சபை ஒழுங்குவிதிகளுக்குப் பொருத்தமான திருத்தத்தினை 2021ஆம் ஆண்டில் கொண்டுவருவதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய நாளாந்த ஊதியம் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும். பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படும் 900 ரூபாவும் வரவுசெலவுத் திட்டக் கொடுப்பனவான 100 ரூபாவும் இதில் உள்ளடங்குகின்றன. ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்பும் ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பும் நாளாந்த மொத்த ஊதியமான 1000 ரூபாவினை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
புதிய ஊதியத்திற்கு அமைவாக, ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 20 நாட்கள் வேலை செய்பவர்கள் அனைத்து நியதிச்சட்டக் கழிவுகளுடனும் மாதாந்தம் 17000 ரூபா முதல் 18000 ரூபா வரை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, உதாரணமாக, பெருந்தோட்டத்தில் வேலை செய்யும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் மொத்தமாக 34000 ரூபா முதல் 36000 ரூபா வரையில் பெற்றுக்கொள்வர். இந்த வாய்ப்பு புதிய பெருந்தோட்ட ஊதிய வீதம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இவர்கள் பெற்றுக்கொண்ட மாதாந்த வருமானத்தினை விட 40 சத விகிதம் அதிகமானதாகும். 1000 ரூபா நாளாந்த ஊதியம் அறிவிக்கப்பட முன்னர் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 700 ரூபா ஊதியமாகப் பெற்றுவந்தனர் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தொழிலாளர்களுக்கு இந்தப் புதிய அதிகரிப்பினைக் கொண்டுவருவதற்குப் பல வருடங்கள் சென்றபோதிலும் தொழிலாளர்கள் இந்த அடைவினால் மகிழ்ச்சியடைந்திருப்பதுடன் இதை ஒரு மைல்கல் வெற்றியாகவே கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்குப் புதிய ஊதியங்களை வழங்குவதில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மத்தியில் தனித்துவமான தன்மை இல்லாதிருக்கின்றது. தொழிலாளர்கள் புதிய ஊதிய வீதத்தில் இருந்து நன்மை பெறுவதற்குப் போதிய வேலை நாட்களை வழங்கும் நிலையில் பல தோட்டங்களில் உள்ள முகாமைத்துவம் இல்லை. ஏனெனில் தொழிலாளர்களின் மாதாந்த ஊதியம் கணிசமான அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஊதியம் ஊதியச் சபை ஒழுங்குவிதிகளின் கீழ் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தம் (Collective Agreement) இனிமேல் செல்லுபடியாகாது என்றும் அதிகமான தோட்ட முகாமைத்துவங்கள் வலியுறுத்திக் கூறியுள்ளன. ஊதிய அதிகரிப்பு எனும் சூழமைவில் தோட்டங்களில் காணப்படும் ஸ்திரமின்மை தொடர்பாகவும் உருவாகிவரும் பிரச்சினை தொடர்பாகவும் கடந்த சில மாதங்களில் நாட்டின் பெரும்போக்கு ஊடகங்கள் அறிக்கையிட்டு வருகின்றன. இது தொடர்பில், தோட்ட முகாமைத்துவத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எவ்விதமான நடைமுறைச்சாத்தியமிக்கதும் இணக்கமானதுமான தீர்வுகள் இன்றி முடிவடைந்துள்ளன.
எனவே, தோட்ட முகாமைத்துவத்தினால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்த ஊதியச் சிட்டையினை ஆராய்ந்து பார்த்ததன் மூலம் இந்தக் கட்டுரையின் ஆசிரியர்களினால் இப்பிரச்சினையினைக் கவனித்து அதன் பாரதூரத்தினைக் கண்டறிய முடிந்துள்ளது. நாளாந்த ஊதியம் மூன்று கட்டங்களில் ஒப்பிடப்பட்டுள்ளன: புதிய அதிகரிப்புக்கு முன்னர், 1000 ரூபாவினை நாளாந்த ஊதியமாக அமுல்படுத்திய பின்னர் மற்றும் புதிய ஊதியத்தின் பின்னரான நிலை. பின்வரும் அட்டவணை 1 இல் மூன்று ஊதியச் சிட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன:
Table 1: Monthly Wage Received by Estate Workers in Selected Months – 2021
அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளதற்கு அமைவாக, பெப்ரவரி மாதத்தில் நாளாந்த ஊதியம் 700 ரூபாவாக உள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 நாட்கள் வேலை செய்த தோட்டத் தொழிலாளர்கள் மொத்தக் கொடுப்பனவாக 18,210 ரூபாவினைப் பெற்றுள்ளனர். தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்து மேலதிகமாக தேயிலைக் கொழுந்துக் கிலோக்களைப் பறித்ததற்காக ஊதியப் பேச்சுவார்த்தைகளில் இணங்கப்பட்டது போல் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக மேலதிக பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே, கழிவுகள் கழிக்கப்பட்ட பின்னர், 2021 பெப்ரவரி மாதத்தில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற மொத்தக் கொடுப்பனவு 13,397 ரூபாவாக இருந்தது.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில், தொழிலாளர்கள் நாளாந்தம் 1000 ரூபா என்ற புதிய சம்பள அளவுத்திட்டத்திற்கு அமைவாகச் சம்பளம் பெற்றுக்கொண்டனர். இந்த அதிகரிப்பின் உச்சப் பலனை அடைவதற்காக இவர்கள் 27.5 நாட்கள் வேலை செய்து 27,200 ரூபா பெற்றுக்கொண்டுள்ளனர். இறுதியில், மொத்தக் கழிவுகள் கழிக்கப்பட்ட பின்னர் வீட்டுக்குக் கொண்டுசெல்லக்கூடிய கொடுப்பனவாக 23,297 வழங்கப்பட்டுள்ளது. இது 7900 ரூபா அதிகரிப்பாகும். அதாவது முன்னைய மாதத்தினை விட 34 சதவிகித அதிகரிப்பாகும். உண்மையில் புதிய ஊதியமானது தொழிலாளர்களின் வருமானத்தில் கணிசமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இரண்டு நபர்களைக் கொண்ட குடும்பம் தோட்டத்தில் 27 நாட்களுக்கு வேலை செய்கையில் 30794 ரூபாவாக இருக்கும். அவர்களின் மாத வருமானம் (Rs 15,397 x 2) 2021 மார்ச் மாதத்தில் 46,594 ரூபாவாக அதிகக்கின்றது (Rs.23,297 x2).
எவ்வாறாயினும், தொடர்ந்துவந்த மாதங்களில், மிகக் குறுகிய காலப்பகுதியில், புதிய ஊதியம் தொழிலாளர்களுக்கு யதார்த்தமற்றதாக மாறியுள்ளது. அட்டவணையில் உள்ள மூன்றாவது நிரல் 2021 மார்ச், மே மாதங்களில் தொழிலாளர் பெற்றுக்கொண்ட ஊதிய விபரங்களை வழங்குகின்றது. 10,520 ரூபா ஊதியம் என்பது மார்ச் மாதத்தில் பெற்றுக்கொண்ட மொத்த ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 58 சதவிகிதக் குறைப்பாகும். இது 1000 ரூபா நாளாந்த வீதத்தினை அமுல்படுத்துவதற்கு முன்னரான ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவிகிதக் குறைப்பாகவும் உள்ளது. தோட்டத்தில் ஊதியங்கள் தொடர்பாக நோக்குகையில் இது முன்னெப்பொழுதும் நிலவாத ஒரு சூழ்நிலையாகும். இதற்கமைவாக, தற்போது, அதிகமான சந்தர்ப்பங்களில், பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளால் விருப்பமின்றி ஏற்றிணங்கப்பட்ட நாளொன்றுக்கு 1000 ரூபா என்ற கணக்கீட்டின் அடிப்படையில் ஊதியத்தினைக் கணக்கிடுவதற்குப் பதிலாக தொழிலாளரால் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவின் அடிப்படையிலேயே ஊதியம் கணக்கிடப்படுகின்றது. இது தோட்ட முகாமைத்துவத்தின் தன்னிச்சையான தீர்மானமாகும். ஏனெனில், தோட்ட முகாமைத்துவம் அரசாங்கத்தின் தீர்மானத்தினை உதாசீனம் செய்து இவ்வாறான தீர்மானத்தினை எடுத்துள்ளது. பல தசாப்தங்களாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்தக் கொடுப்பனவுச் சிட்டை தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. நியதிச்சட்டக் கழிப்பான ஊழியர் சேமலாப நிதியக் கழிவு மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் தொழிற்சங்கச் சந்தாக்களும் வழங்கப்படுவதில்லை. இது தோட்டத் தொழிலாளர்களை 2021 மே மாதத்தில் தற்காலிகத் தொழிலாளர்கள் அல்லது அமையத் தொழிலாளர்கள் என்ற வகைக்குள் தள்ளியிருக்கின்றது. மேலும் இந்த நிலைமை ஊதிய அதிகரிப்பின் பின்னர் சிறிது காலத்தில் இருந்து இன்றும் தொடர்கின்றது.
மேலே உள்ள அட்டவணையின் மூன்றாவது நிரலில் தெளிவாகக் காட்டப்பட்டது போல் தொழிலாளர்களின் ஊதியத்தினைத் தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களின் உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட ஆரம்பித்துள்ளது. எனவே, சேகரிக்கப்பட்ட அறுவடையினை அடிப்படையாகக் கொண்டே கொடுப்பனவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு கிலோ கொழுந்துக்கு 40 ரூபா வழங்கப்படுகின்றது. எனவே, 2021 மே மாதத்தில் தொழிலாளர் ஒருவரால் பறிக்கப்பட்ட 437 கிலோ கொழுந்துக்கு (Rs.40 x 437 Kgs) 17,480 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதுவே அந்த மாதத்திற்கான மொத்தக் கொடுப்பனவாகும். கூட்டுறவுக் கடையில் இருந்து வாங்கிய உணவுப் பொருட்களுக்கான கழிவு மற்றும் வங்கிக் கடனுக்கான கழிவு என 6960 ரூபா கழிக்கப்பட்ட பின்னர் கடைசியில் கைக்குக் கிடைத்த கொடுப்பனவு 10,520 ரூபாவே.
சந்தேகத்துக்கிடமின்றி, சம்பளத் திருத்தத்துக்கான தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அதீத அழுத்தங்களின் காரணமாக மாத்திரமன்றி சிவில் சமூக இயக்கங்களின் அழுத்தம் காரணமாகவே மேலே குறிப்பிடப்பட்டவாறு அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு யதார்த்தமாகியுள்ளது. தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட ஊதிய அதிகரிப்புக்கான கோரிக்கை பேச்சுவார்த்தை மேசையில் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளினால் பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது என்பது நன்கறியப்பட்ட விடயமாகும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அது ஏற்கனவே வழங்கப்படும் ஊதியத்திற்கான அற்பமான அதிகரிப்பாகவே இருந்திருக்கின்றது. அற்பமான அதிகரிப்பு வழங்கப்பட்ட நேரத்திலும் புதிதாகச் சீராக்கப்பட்ட ஊதியங்களுக்காகப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் எப்போதும் மேலதிக வேலையினையே எதிர்பார்த்தன. ஊதிய அதிகரிப்பின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் ஊழியர் உற்பத்தித் திறனின் உயர் மட்டங்களைப் பெற்றுக்கொள்வதே தேயிலைத் தோட்ட முகாமைத்துவத்தின் பிரதான கரிசணையாக இருந்திருக்கின்றது. மேலே குறிப்பிட்டுள்ளவாறு தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமாக 1000 ரூபாவினை வழங்குவது என்று சட்டபூர்வமாக இணங்கப்பட்ட உடன்படிக்கையினைப் பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகள் இறுதியில் அலட்சியம் செய்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவருகின்றது. இந்தக் கூற்றுக்கான தெளிவான சான்றாக 2021 மே மாதத்திற்கான வருமானப் பரம்பல் அமைந்துள்ளது. மேலும் இந்தத் தடங்கல் நிலை நாட்டின் பல பிராந்தியப் பெருந்தோட்டக் கம்பனிகளில் தொடர்ந்து நிலவி வருகின்றது.
ஊதியங்களைத் தம்மால் அதிகரிக்க முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்களைத் தோட்ட முகாமைத்துவம் வழங்கியிருந்தது. இவை நாளை வௌியாகும் இக்கட்டுரையின் இரண்டாவது இறுதியுமான பகுதியில் விரிவாக ஆராயப்படும்.
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் மற்றும் கலாநிதி ஆர். ரமேஸ்
பின்வரும் முகவரிகளில் ஆசிரியர்களை அணுகமுடியும்: பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ், சமூகக் கற்கைகள் திணைக்களம், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் திணைக்களம், திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொட: [email protected]/[email protected], கலாநிதி ஆர். ரமேஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் அறிவியல் திணைக்களம், கலைப் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்: [email protected]