Photo: ASIA TIMES

“ஒரு சீர்குலைந்த முறைமை: இலங்கையில் போதைப் பொருள் பாவனையாளர்களைத் தடுத்து வைத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு” என்ற எனது ஆய்வறிக்கையை (முழுமையான அறிக்கை) Harm Reduction International நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை, இலங்கையில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை இராணுவமயமாக்கப்பட்டிருக்கும் விடயம், சட்ட அமுலாக்கத்தில் உள்ள குறைபாடுகள், தடுப்பு மையங்களில் – புனர்வாழ்வு நிலையங்களில் இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஆராய்கிறது. ஆய்வறிக்கையின் சுருக்கமான கட்டுரையே இது.

###

இராணுவமயமாக்கல்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, இலங்கை அரசாங்கமானது போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாள்கின்றது, ‘போதை பொருட்கள் மீதான யுத்தத்தில்’ இராணுவமானது விஷேடமான வகிப்பங்கினை கொண்டுள்ளது. குறித்த வகிப்பங்கானது போதைப்  பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் மாத்திரமல்லாது போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றவற்றையும் உள்ளடக்குகிறது. 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தனது விஞ்ஞாபனத்தில் ‘போதைப் பொருள் அச்சுறுத்தலை’ ஒழித்தலுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவித்தமைக்கு இணங்கவே போதைப் பொருள் கட்டுப்பாட்டில் இந்த இராணுவமயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி இராணுவத்தினரின் ஈடுபாட்டினை ஏற்படுத்தியுள்ளார்.

அரசாங்கமும் ஊடகங்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் பிழையாக கருத்தைப் பரப்புகின்றன. அதனால் அனைவரும் அவர்களை குற்றவாளிகளாக்கி ஒதுக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த மனிதத் தன்மையற்ற செயற்பாடுகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட வழிவகுக்கிறன. அவை பொது வெளியில் குறைந்தளவிலான கவனத்தையே ஈர்த்துள்ளன.

தண்டனை வழங்குகின்ற மற்றும் பாரபட்சமான சட்ட கட்டமைப்பு

இலங்கையில் காணப்படும் போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள் பற்றிய ஆய்வினை எடுத்துப் பார்த்தால், சட்ட கட்டமைப்பானது சிறந்த முறையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவற்கு பொருத்தமற்றதாக இருக்கிறது. மேலும் அது உள்ளடக்கியிருக்கும் முரண்பாடான சட்ட ஏற்பாடுகள் நியாயாமற்ற மற்றும் சமமற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. அத்துடன், சட்டம் தொடர்பான நிர்வாக  சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன பொதுவாகவே சட்டங்களுக்கு மேலாக பிரயோகிக்கப்படுகின்றன. இதனால் சட்டத்தின் உறுதியான நிலை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன நலிவடைகின்றன. இச் சட்டங்கள் நியாயமற்ற கடினமான தண்டனைகளை விதிக்கின்றன. இரண்டு கிராம் போன்று சிறிய அளவிலான ஹெரோயின் வைத்திருப்பதற்கும் அல்லது கடத்துவதற்கும் ஆயுள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகளின் அதிகரிப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறைக் காரணமாக போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விசாரணைக்கு முன் தடுப்புக் காவலில் வாரங்கள் மற்றும் மாதங்களை கழிக்கின்றனர். இந்த காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தப்படுகின்றனர் (அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பதை பொருட்படுத்தாது). அந்நபர்கள் தண்டப்பணம் செலுத்தி விட்டு விடுதலை செய்யப்படுகின்றனர். இருந்த போதிலும், தண்டப்பணத்தினை செலுத்த முடியாதவர்கள் ஆறு மாதங்கள் அளவில் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர். ஆகையால் வறுமை அவர்களை குற்றவாளியாக்குகிறது.

சில போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை. எனவே, சட்டம் விசாரணைக்கு முன்னர் தடுப்புக் காவலில் வைத்திருப்பதினை கட்டாயப்படுத்துகிறது. இது சுதந்திரத்திற்கான ஒருவரது உரிமை மீறப்படுவதற்கும் வழி வகுக்கின்றது. வளங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாக ரீதியான இடைஞ்சல்கள் காரணமாக, விசாரணையானது கணிசமானளவு பிற்போடப்படுகிறது. எனவே, விசாரணைக்கு முன்னர் தடுப்புக் காவலில் மக்கள் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட  தடுத்து வைக்கப்படுகின்றனர்.

சட்ட அமுலாக்கத்தின் மூலமான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம்

சட்டம் மற்றும் கொள்கையில் காணப்படும் முறைமைப்படுத்தப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் பொலிஸார் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதும் தண்டனைக்குட்படுத்தப்படாமல் விடுவது சட்டத்தை மதிக்காத கலாச்சாரத்தை உருவாக்குகிறது. இக்காரணங்கள் காவல் துறையினுள் கடுமையான தவறான நடத்தை மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்கின்றன. இது போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரின் உரிமைகளை பாதிக்கின்றன. உதாரணமாக, சிறையில் உள்ள நபர்கள் பொலிஸார் தம் மீது போதை பொருட்களை நாட்டியதாக அடிக்கடி குற்றம் சாட்டினர். முக்கியமாக போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் சித்திரவதைக்கும் மோசமான நடத்துகைக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என பரவலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் கைது செய்யப்பட்டவுடன் பலவந்தமான உடற் பரிசோதணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். போதைப் பொருள் சார் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பும் பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டு தொந்தரவு செய்யப்படுகின்றனர்.

விசாரணைகளின் போதான குறைந்த மேற்பார்வையானது போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நேரம், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றில் பிழையான அறிக்கைகள் முன்வைப்பதற்கு பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. மேலும், வேண்டுமென்றே அவர்கள்  விசாரணை நடவடிக்கைகளை பிற்போடுகின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் போதைபொருள் சார் குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டிருப்பதனால், இலங்கையின் சிறைகள் மக்கள் திரளால் நிரம்பி வழிகின்றன. இதனால், சிறைக் கைதிகள் மனிதாபிமானமற்ற நிலைக்கு ஆளாக்கப்படுவதுடன் இழிவான நடத்துகைக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் சட்டமானது நீதிமன்றம் ஆட்களை வலுக்கட்டாயமான சிகிச்சைக்கு அனுப்புவதற்கான கட்டளை வழங்குவதை அனுமதிக்கிறது. அவ்வாறு இல்லாவிடின், விஷேட வேண்டுகோளின் பேரில் குறித்த நபர்கள் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையினால் அரசு  நடாத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவர் அல்லது புனர்வாழ்விற்கான பொது ஆணையாளர் பணியகத்தினால் கண்காணிக்கப்படும் இராணுவத்தினரால் முகாமை செய்யப்படுகின்ற மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

2007ஆம் ஆண்டின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல்) சட்டமானது போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புவதற்கும் குறித்த நபரை நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கிறது. நீதவான் நீதிமன்றமானது போதைப் பொருள் சார்புநிலை தொடர்பான மருத்துவ மதிப்பீட்டறிக்கையின் அடிப்படையிலோ அல்லது விஷங்கள், ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான மருந்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழோ குறித்த நபரை தண்டிக்கும் பொருட்டு வலுக்கட்டாய புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்க முடியும். மேலே சொல்லப்பட்ட சட்டத்தின் பிரிவு 10 ஆனது எந்தவிதமான சாட்சிகளும் இல்லாமல் ஆட்களை கைதுசெய்து தன்னிச்சையாக தடுப்புக் காவலில் வைப்பதற்கு இடங்கொடுப்பதுடன் வலுக்கட்டாயமான போதைப்பொருள் புனர்வாழ்விற்கு அவர்கள் தீர்ப்பளிக்கப்படுவதற்கும் வழி வகுக்கின்றது. இவ்வாறு போதைப் பொருள் பாவனைக்கான சிகிச்சையானது தன்னிச்சையான தடுப்புக் காவலில் வந்து முடிகிறது.

வலுக்கட்டயாமான போதைப் பொருள் பாவனை தடுப்பு மையங்கள்

நபர்கள் இந்த நிலையங்களில் அனுமதிக்கப்படும் போது மனநிலை சம்பந்தமான மதிப்பீடுகள் செய்யப்படுவதில்லை. மையங்களில் குறிப்பாக தீங்கு குறைப்பு மற்றும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட தனியாள் மயப்படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படுவதில்லை. போதைப் பொருள் பாவனை நிறுத்தப்பட்டவுடன் உருவாகும் உடல் ரீதியான விளைவுகளை அனுபவிக்கும் ஆட்களும் தினந்தோறுமான செயற்பாடுகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த விஞ்ஞான முறையல்லாத சிகிச்சை அணுகுறையானது தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் பிற்போக்கான மனநிலையை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கட்டுப்பாட்டுச் சபையை பொருத்தவரை போதைப் பொருளுக்கு அடிமையாவது தனிப்பட்ட ஆளுமையில் உள்ள பலவீனங்களால் ஏற்படுவது என்பதாகும்.

மனநல சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்த்தமுள்ள அணுகுமுறை ஒன்று இல்லாததால் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் அதிகப்படியான சம்பவங்கள் இம்மையங்களில் பதிவாகின்றன. வைத்தியர்களிடமிருந்து மருத்துவ ரீதியான போதைப் பொருட்கள் பெறப்பட்டு விடலாம் என்ற கருத்தை கொண்டிருப்பதால் அடிக்கடி வைத்தியர்கள் இந்த மையங்களுக்கு வருகைத் தருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனை நிறுத்தப்பட்டவுடன் உருவாகும் உடல் ரீதியான விளைவுகளை அவர்கள் அனுபவிக்கும் காலப்பகுதியில் பாரதூரமான சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் போது மாத்திரமே மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால், குறித்த நோய் அறிகுறிகளை குறைப்பதற்கு பதிலீடுகள் அல்லது மாற்று மருந்துகள் வழங்கப்பட மாட்டாது.

நீதி அமைச்சின் கீழான, புனர்வாழ்விற்கான பொது ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பின் கீழ் இரண்டு புனர்வாழ்வு மையங்கள் காணப்படுகின்றன: கந்தக்காடு போதைப் பொருள் பாவனை தடுப்பு சிகிச்சை மையம் மற்றும் சேனாபுரம் தொழில் பயிற்சி நிலையம். அவை இரண்டுமே இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்றன. வலுக்கட்டாயமான ஒரு வருடக் கால புனர்வாழ்விற்காக தண்டனையளிக்கப்பட்ட நபர்கள் சிறைவாசத்திற்கு மாற்றீடாக ஆறு மாதங்கள் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திலும் மீதி ஆறு மாதங்கள் சேனாபுரம் தொழில் பயிற்சி நிலையத்திலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த இரண்டு மையங்களும் 2013ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதுடன் அன்று தொட்டு அவை இராணுவத்தினராலேயே நிர்வகிக்கப்படுகின்றன. குறித்த நிலையங்களில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளை எடுத்து பார்ப்போமேயானால் அவை இராணுவ விதிகளை பின்பற்றுவதை கட்டாயப்படுத்துகின்றன. இங்கு காணப்படும் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டமானது, உடலுழைப்பு, ஆன்மீக மற்றும் மத நிகழ்வுகள், விளையாட்டுக்கள், தலைமைத்துவ/ வழிகாட்டுதல் நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. உதாரணமாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வழங்கப்படும் ‘விவசாய-சிகிச்சை’ போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஆதாரங்கள் எதுவுமற்ற மற்றும் சுகாதார முறைகளை அடிப்படையாகக் கொள்ளாத ஒரு சிகிச்சை முறையாகும்.

சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளானவை, தீங்கினை குறைக்கும் சேவைகளானது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் சுகாதாரத்திற்கான உரிமையின் ஒரு அத்தியவசியமான பகுதி என்று தெரிவிக்கின்றன. அத்துடன், வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பிற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்டாய சிகிச்சையானது தன்னிச்சையான தடுப்புக் காவல் மீதுள்ள தடை, சித்திரவதை செய்யப்படுவதன் மீதுள்ள தடை, தவறான நடத்துகை மீதுள்ள தடை  மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை போன்றவற்றை மீறுவதாக அமையும் என வலியுறுத்துகின்றன

புனர்வாழ்வு மையங்களில் இடம்பெறும் வன்முறை

இந்நிலையங்களில் வன்முறைகள் மற்றும் தவறான நடத்துகைகள் தண்டனைக்காக அல்லது காரணமேயில்லாமல் அங்கு தடுத்து வைக்கப்படும் நபர்களின் மேல் இழைக்கப்படுகின்றன. ஏதேனும் பிழை செய்தால் அல்லது எவரேனும் விதிமுறைகளுக்கு கீழ்படியாமல் இருந்தால் அந்த நபர்கள் தாக்கப்படலாம், வயரால் தாக்கப்படலாம், பலாத்காரமாக அதிகமான புஷ் அப்கள் செய்விக்கப்படலாம் அல்லது வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வதற்கும் ஆளாக்கப்படலாம். ஒரு சந்தர்ப்பத்தில், சண்டையில் ஈடுபட்ட நபரொருவர் மூன்று நாட்களுக்கு தான் மரத்தோடு இணைத்து விலங்கிடப்பட்டதாக கூறினார். அத்தருணத்தில் போது அவர் மூன்று நாட்களும் நின்றுக் கொண்டிருக்க வேண்டி நேரிட்டது. சாப்பிடுவதற்கும் கழிப்பறையை பயன்படுத்தவுமே அவர் விடுவிக்கப்பட்டார். உணவு மற்றும் நீர் என்பன அவருக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதுடன் அவர் உறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

விடுதலையாகிய பின்னர் எதிர் கொள்ளும் சவால்கள்

2015ஆம் ஆண்டின் ஆய்வுகளின் படி தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் சிகிச்சையின் திறனை பொறுத்தவரையில் 64 சதவீதம் ஆன சிகிச்சை பெற்றவர்கள் விடுதலையான பின்பு போதைப் பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்தனர். இது அதிகளவானவர்கள் போதைப் பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்ததை சுட்டிக்காட்டுகிறது. 2018இல் வெளியிடப்பட்ட அதே போன்றதொரு அறிக்கையில், நேர்காணல் செய்யப்பட்ட 170 நபர்களில், அரசினால் செய்யப்பட்ட வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பு சிகிச்சையின் பின்பு 123 நபர்கள் போதைப் பொருள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த அறிக்கைகள் வலுக்கட்டாயமான புனர்வாழ்வளிப்பதானது  செயற் திறன் அற்றதாகயிருப்பதை காட்டுகிறது. வலுக்கட்டாயமான போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை முறையானது செயற்திறனற்றது என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன. மேற்கூறப்பட்ட விடயமானது நேர்காணல் செய்யப்பட்ட நபர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர்களுக்கு அவர்களது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அல்லது சமூகத்துடன் இணைந்துக் கொள்வதற்கான உதவிகள் குறைவாகவே காணப்படுகின்றன. தேசிய ஆபத்தான போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அறிக்கையின் படி, விடுதலை செய்யப்பட்ட பின்னரான கண்காணிப்புக்கள் வெறுமனே 45 சதவீதம் ஆன சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கே செய்யப்பட்டுள்ளன. சில புனர்வாழ்வு மையங்களே ‘மீண்டும் போதைப் பொருள் பாவனைக்குச் செல்வதை தடுக்கும் நிகழ்ச்சிகளைக்’ கொண்டுள்ளன.  இந்நிகழ்ச்சிகளின் நோக்கம் கள உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்ட நபர்களை அதிகளவு மூன்று மாதக் காலப் பகுதிக்கு கண்காணிப்பதேயாகும். இதில் வீடுகளுக்குச் சென்று பார்வையிடலும் உள்ளடக்கப்படும்.

போதை பொருளுக்கு அடிமையானவர்களை சுயவிருப்புடன் சமூக மட்டத்தில் சிகிச்சைப் பெறுவதற்கு மற்றும் வாழ்வாதார உதவிபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

அம்பிகா சற்குணநாதன்