படம் | www.groundviews.org

ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம் என்ற கர்வத்துடன், தங்களுடைய சகோதரர்களின் இரத்தத்தை குடித்து 5 வருடங்கள் கடக்கப்போகின்றன.

5 வருடங்கள் கழிந்தும் வடக்கு மற்றும் தெற்குக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளதா? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளதா?

யுத்தத்தின் பின்னர் தென்னிலங்கை மக்கள் கர்வத்துடன், “இனிமேல் பயமில்லாமல், சந்தேகமின்றி வீதியில் நடந்துபோகலாம்” என்று தெரிவித்தனர். உண்மையிலேயே எங்களுக்கு சுதந்திரமாக வீதியில் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறதா? நாட்டில் அந்தளவுக்கு சுதந்திரமாக உள்ளதா? நீதி உங்களுக்கும் எனக்கும் சமமான முறையில் வழங்கப்படுகிறது என்ற சுதந்திரத்தை யார் அனுபவிக்கிறார்கள்? மாகாண சபை உறுப்பினர்கள் ஆசிரியரை முழங்காலிடச் செய்தமை, கற்பழிப்பை கொண்டாடுகின்றமை, விளையாட்டு துப்பாக்கியைக் கொண்டு நகரசபை உறுப்பினர் மக்களுக்கு விளையாட்டு காண்பிக்கின்றமை ஆகியனவா நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம்?

யுத்தம் நிறைவு பெற்றிருந்தாலும் இன்றும் வடக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் என்ற சொல் தொடர்பாக எந்தவித உணர்வும் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என்றே தெரிகிறது. நாளை நாள் தொடர்பாக சிந்திக்க முடியாதவர்களாவே அவர்கள் இருக்கிறார்கள். தென்னிலங்கை மக்களுக்குள்ள வீதியில் நடந்துசெல்லக்கூடிய சுதந்திரம் கூட, அவர்கள் வீட்டினுள் இருக்கின்றபோதும் கிடைப்பதில்லை. எந்த நேரமும், யாராவது தன்னை கொண்டுசெல்லக்கூடும் என்ற அச்சமே அவர்களிடம் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசிர்வாதத்துடன் வலிந்து காணாமலாக்கப்படுகின்றமை இடம்பெறுவதாலேயே அவர்கள் வீட்டினுள் இருந்தும் சுதந்திரமற்று வாழ்கின்றனர்.

5 வருடங்கள் கடக்கப்போகின்ற நிலையில் ஒரு விடயம் மட்டுமே நடந்தேறியுள்ளது. அது, வடக்கு மாகாண சபை உருவாக்கம். இருப்பினும், 5 வருடங்களுக்குப் பின்னரும் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் துளி அளவேனும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. தென்னிலங்கை அரசியலைப் போன்றே வடக்கிலும் வாக்குறுதிகள் மட்டும் வழங்கும் அதிகார ​பேராசை கொண்ட ஆட்சியே நடந்துவருகிறது. இதுவொன்று மட்டும்தான் அங்கு நடந்தேறியுள்ளது.

வடக்கின் வசந்தம் என்ற ஏமாற்று அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஊடாக வடக்கு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தாகிவிட்டது. யுத்தம் நிறைவுற்று 5 வருடங்கள் கடக்கப்போகின்ற சூழ்நிலையில் வடக்கு மக்களை அரசு இன்னும் மோசமான ஒரு நிலையிலேயே கையாள்கிறது. உயிரிழந்த தங்களது உறவினர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றவும் அவர்களுக்கு இடமில்லை. நினைவு நிகழ்வொன்றை நடத்தவும் முடியாத நிலை. அவர்களது வாழ்க்கை இராணுவத்தாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. சுவாசிப்பதும் இராணுவத்தினரின் அனுமதியுடனேயே… உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை மாமன்னர் மற்றும் மன்னரின் பணியாளர்கள் பயப்படுகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் வடக்கில் இடப்பெற்றது போன்றே அழிக்கப்பட்டதுடன் அன்றிலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களால் உயிரிழந்த போராளிகள் நினைவுகூரப்படுகின்றனர். ஆனால், உயிரிழந்த தன்னுடைய மகனுக்காக ஒரு விளக்கையேனும் ஏற்ற வடக்கிலுள்ள தாய்மார்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அன்று தங்களுடைய உறுப்பினர்களை கொன்றொழித்த இராணுவத்தினர் தற்போது வீரர்களாக போற்றப்படுவது இனவாதத்தினாலாகும்.

ஐந்து வருடங்களுக்குப் பின்னரும் வடக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கு உட்பட்டே வருகின்றனர். வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளின் நிழல் மறையும் முன்னரே தெற்கில் அவ்வாறானதொரு அதிகாரம் பிரயோகிக்கப்படும்போது “மனித உரிமை மீறல்” எனத் தெரிவிக்கும் மக்கள், வடக்கில் தொடர்ந்து அடக்குமுறை நிகழும்போது அதற்கு ஆசிர்வாதம் வழங்குகின்றனர். கட்டுநாயக்கவில் ரொஷேன் மற்றும் அன்தனி சிலாபத்தில் கொல்லப்படும்போது குரல் எழுப்பியவர்கள், சிறைச்சாலையினுள் நிமலரூபன் மிருகத்தனமாக கொல்லப்படும்போது மௌனம் காக்கின்றனர்.

மக்களிடையே வீரமான அரசியல்வாதியாக வீற்றிருக்க வேண்டுமாக இருந்தால் நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல், மக்களிடையே முறுகலை உருவாக்கி, அவர்களுக்கிடையில் அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்த வேண்டும். எந்நேரமும் அருகில் உள்ளவர்களை இணைத்துக்கொண்டு உண்மையான அல்லது பொய்யான எதிரிகளை உருவாக்கவேண்டும் என்ற ஹிட்லரின் போதனைக்கமைய மஹிந்த ரெஜீம் நாட்டை ஆட்சிசெய்து வருகிறது. தமிழர்கள் தங்களுடைய பரம எதிரி என்ற போதனை சிங்கள மக்களுடைய தலைகளுக்குள் புகுத்தியாகிவிட்டது. இந்தப் பொய்யான பயத்தால் மற்றும் பொய்யான எதிரியினாலேயே மஹிந்த ஆட்சி தங்கியுள்ளது.

5 வருடங்களுக்குப் பின்னரும், யுத்தம் நடைபெறாத போதும் அமைதி நிலவாமல், அமைதியை எதிர்பார்த்து சாகவும் முடியாமல், எதிர்பார்ப்புகளின்றி, உணர்வற்ற உடல்களுடன் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். (அவர்கள் வாழ்கிறார்கள் என்று என்னால் கூறமுடியாது, உணர்வற்ற உடலமே அங்கு உலாவுகிறது)

விகல்ப இணையதளத்தில் “ලෙයින් නැහැ වී වසර 5කට පසුත්…” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.