படம் | Todayonline (சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மிரியம் பெரர் (இடது) – மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மொஹகர் இக்பால் (வலது) ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை கைமாற்றுகின்ற காட்சி)
2008ஆம் ஆண்டு இலங்கையில் தம்புள்ளவில் உள்ள உல்லாச விடுதியொன்றில் ஒரு சுவாரசியமான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்த இந்தோனேஷியாவின் ஒரு மாகாணமாகிய ஆசேயின் மக்களின் விடுதலைப் போராட்டம் 2005ஆம் ஆண்டு பின்லாந்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இச்சமாதான உடன்படிக்கையின் வரைவாளர்களான இந்தோனேஷிய அமைச்சரும் இராணுவத்தளபதிகளும் அலுவலர்களும், ஆசேயின் விடுதலைப் போராட்டக் குழுவின் (Free Aceh)தலைவரும் சில உறுப்பினர்களும், எமது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி இடைநிலை தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பே இது. இந்தோனேஷியாவின் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து இலங்கை எடுத்துக் கொள்ளும் படிப்பினைகள் எவை என்பதே இந்த சந்திப்பின் சாராம்சமாக இருந்தது.
எமது விருந்தினர்கள் தாம் மேற்கொண்ட சமாதான முறைவழியினை விபரித்தபோது அங்கிருந்த சிங்கள நண்பர்களின் ஆச்சரியம் பன்மடங்கானது. பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து அம்முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்திருக்க, 2003ஆம் 2004ஆம் ஆண்டுகளில் இந்தோனேஷிய இராணுவம் ஆசேயின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கியிருந்தார்கள். இந்தத் தோல்வி போதாதென்று 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பேரழிவு ஆசேயின் எஞ்சிய விடுதலைப் போராட்டத் தளங்களையும் அழித்திருந்தது (ஆசேதான் 2004ஆம் ஆண்டு சுனாமியினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்). இவ்வாறு விடுதலைப் போராட்டம் தோல்வியைத் தழுவிக்கொள்ள, சுனாமி அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி தேவையாயிருக்க, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஆசே ஒரு சுயாதீன மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு போராளிக்குழுவின் தலைவரே அப்பிரதேசத்தின் கவர்னராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தோற்றுப்போன போராளிகளுடன் இந்தோனேஷிய அரசு பேச்சுவார்த்தைகளுக்குப் போனது ஏன் என்பதே எங்களவர்களின் கேள்வியாக இருந்தது. சிங்கள அரசியல்வாதிகளின் பண்புகள்தான் நமக்குத் தெரியுமே. இதனால், அவர்களின் கேள்வி எமக்கு வியப்பைத் தரவில்லை.
இக்கேள்விக்கு இந்தோனேஷிய அமைச்சர் நன்கு சிந்தித்தே பதிலளித்தார். போராட்டம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் மக்களின் அபிலாஷைகள் தொடர்ந்தும் முரண்பாடுகளை மலியச் செய்திருக்கும். சுனாமியின் அழிவுகள் அரசும் போராளிகளும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு மேலாக அமைச்சரவையில் நாம் கணக்குப் பண்ணினோம். ஆசேயை இராணுவமயப்படுத்தி வைத்திருப்பதால் ஏற்படும் செலவுகளையும் அதனை சுதந்திரமாக இயங்க விடுவதனால் ஏற்படும் அபிவிருத்தி இலாபங்களையும் ஒப்பு நோக்கினோம். அபிவிருத்தியினால் கூடிய இலாபங்கள் எமக்குத் தென்பட்டன. உண்மையில் பொருளாதாரக் காரணிகளே இதில் தீர்மானம் செய்தன என்றார். அந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கிருந்த முதிர்ச்சி எங்கள் அரசியல்வாதிகளுக்கு இன்னமும் வரவில்லை.
அதே போலவே, தென்கிழக்காசியாவின் அரசியல் தலைமைத்துவத்தின் முதிர்ச்சியினைப் பறை சாற்றுவதாய் இப்பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டில் அதன் அரசுக்கும் அந்நாட்டின் ஒரு பிரதேசமான மிந்தனாவோவின் மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட அமைப்பிற்குமிடையே வரலாற்றுப் பூர்வமான சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படிநாணயமாற்று, பாதுகாப்பு வெளியுறவு இவை தவிர்ந்த ஏனைய சகல துறைகளையும் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்ட பங்ஸாமோரோ என அழைக்கப்படும் சுயாட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு வரி வசூல் செய்யும் அதிகாரமும் அத்துடன் அதன் வளங்களிலிருந்து பெறப்படும் வருமானம் மத்திய அரசுடன் பங்கிடப்படும் ஏற்பாடும் வழங்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் கலந்து வாழும் இப்பிரதேசத்தின் அரசு மதச்சார்பற்றதாக இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1960களிலிருந்து பெரும்பாலும் இராணுவ ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடெனினும் இவ்வகையான ஒப்பந்தத்தினை எட்டியது சாதனையே எனலாம்.
மிந்தனாவோ பிரதேசமானது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மூலையின் உள்ள ஒரு மாகாணமாகும். இங்கு 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் மோரா இனத்தவர் எனக் கருதப்படும் முஸ்லிம் சமூகத்தினர் வந்து குடியேறினர். 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஸ்பானியர்கள் அங்கு வந்து சேரும்போது மிந்தனாவோ சுல்தான்களினால் ஆளப்பட்ட பிரதேசமாக இருந்தது. ஸ்பானிய ஆட்சியின்போதும், அதன் பின்பு அமெரிக்கர்களின் கைக்கு அது மாறியபோதும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையராக வாழ்ந்த இந்தப் பிரதேசம் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொருளாதார அரசியல் ரீதியாகப் பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டபொழுது மிந்தனாவோ பிலிப்பைன்ஸின் பெரும்பான்மைக் கிறிஸ்தவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. மிந்தனாவோ எண்ணெய்வளம், இயற்கை வாயு மற்றும்கனிப்பொருள் வளம் மிக்க பிரதேசமாகும். எனவே, 1946ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அதன் அரசு கிறிஸ்தவர்களை ஏராளமான அளவில் அங்கு குடியேற ஊக்குவித்தது. இக்குடியேற்றங்களினால் முஸ்லிம் சமூகத்தினர் இடம்பெயர நேர்ந்தது மட்டுமல்லாமல் அவர்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையில் 5 வீதமே என்றாகி விட்டது. இவ்வாறு தமது பிரதேசத்திலேயே அவர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இதனால் தமக்கு அபிவிருத்தி கோரியும் தமது பாரம்பரிய பிரதேசத்தைக் கோரியும் சுயநிர்ணயப் போராட்டத்தினை 1960களில் அம்மக்கள் ஆரம்பித்தனர். 1989ஆம் ஆண்டு மிந்தனாவோ சுயாதீனமான மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தாலும் அதற்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் போதாமையினால் அம்மக்களின் போராட்டம் திரும்பவும் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட 40 வருட ஆயுதப் போராட்டமும், அதில் 17 வருடங்களாக ஆரம்பிப்பதும் நிற்பதுமான சமாதானப் பேச்சுவார்த்தைகளுமாய் இப்போக்கு நீண்டு இன்று 2014இல் ஓரளவுக்கு உறுதியான சமாதான உடன்படிக்கைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது. இந்த சிவில் யுத்தத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் இறந்ததாகவும் 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால், சமாதான உடன்படிக்கைக்குப் பின்னாலும் பெரிய எதிர்பார்ப்புக்கள் இருப்பது தவிர்க்க முடியாததே. பாதிக்கப்பட்ட மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும் புனர்வாழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலே ஒதுக்கப்பட்டு வாழ்ந்த மக்கள் அபிவிருத்தியினை பெற வேண்டும். ஆனால், அரசியல் சூழ்நிலைகளோ இன்னமும் சிக்கலாகவே தோன்றுகின்றன. தற்போதைய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்கினோவின் பதவிக்காலம் 2016இல் முடிவடையும் முன்னமே இந்த சமஷ்டி அரசு ஸ்தாபிக்கப்படவேண்டும். அதற்காக பிலிப்பைன்ஸின் நாடாளுமன்றில் ஒரு சுதந்திர உள்ளூராட்சியை ஸ்தாபிக்க வேண்டிய புதிய சட்டமூலம் அங்கீகரிக்கப்படவேண்டும். 2015இல் மிந்தனாவோ மக்கள் மத்தியில் பங்ஸாமோரோவின் எல்லைகள் குறித்த அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்த்தப்படவேண்டும். இனிமேல்தான் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் 11,000 அளவு படையினரின் ஆயுதங்கள் கலையும் முறைவழிகள் ஆராயப்படவேண்டும். இது தவிர மிந்தனாவோ எப்பொழுதுமே மாவோயிஸ்ட் போராளிகள், உடைந்து பிரிந்த விடுதலைப் போராட்ட அமைப்புக்கள், இஸ்லாமியக் குழுக்கள், தனிப்பட்ட குடும்பங்களின் ஆயுதக்குழுக்கள் போன்ற குழுக்களின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்து வந்திருக்கின்றது. இக்குழுக்களின் நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்படவேண்டும். இவையெல்லாமே சவால் மிகுந்த மைல் கற்களாகும். இவை போதாதென்று, மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட அமைப்பின் உடைவுக்குழுவொன்று இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தனது போராட்டத்தை இன்னமும் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. அங்கு வாழும் கத்தோலிக்க சமூகத்தினரும் இவ்வுடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டனரா என்பதும் சந்தேகமே.
மிந்தனாவோவின் பிரச்சனைகளுக்கும் ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நீண்டகாலம் தொடரும் எந்த முரண்நிலையும் சிக்கலான வடிவெடுக்கும். பிரித்தாளுகின்ற தந்திரங்களை என்றும் அதிகாரத்திலுள்ளோர் பிரயோகித்தேயாவர். தீர்வுகள் கிட்ட விடாமல் நிலைமையை என்றும் குழப்பிக் கொண்டேயிருப்பர். சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்பொழுது பொது மக்களுக்கும் அது பற்றிய யதார்த்தபூர்வமான விளக்கமும் எதிர்பார்ப்புக்களும் இருப்பது வேண்டத்தக்கது. அடுத்து, எடுக்கப்படும் சமாதான முயற்சிகளைக் கலைக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ முனையும் சக்திகளுடன் தொடுத்து இயங்கத் தயாரான சிவில் அமைப்புக்களும் எமக்குத் தேவை. எனவே, எப்போதாவது ஸ்ரீலங்கா அரசு சமாதான உடன்படிக்கைக்குத் தயாராக வந்ததென்றாலும் அதற்குப் பின்னராக நாம் கடக்கவேண்டிய பல தடைகள் உண்டு. எப்படியிருப்பினும், மிந்தனாவோ மக்களின் வெற்றி எமக்கு இன்னுமொரு உற்சாகப் படிக்கல்லே என்பதில் சந்தேகமில்லை.
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.