படம் | Veooz
சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு சவால் மிக்கதாக இருப்பினும் கூட, இலங்கையின் பொறுப்பளித்தல் மற்றும் நீதி எட்டப்படுதலுக்கான நம்பகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில்அமெரிக்கா இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக் கொள்ளும் என்று நிஷா குறிப்பிட்டிருக்கின்றார்.
தென்னாசியா மீதான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை: செழுமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஒரு நோக்கு என்னும் தலைப்பில் நிஷாஆற்றிய உரையின் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார். ரொபட் பிளேக்கிற்குப் பின்னர் உதவி இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்ட நிஷா பிஸ்வால் இராணுவ ஒத்துழைப்பு குறித்து குறிப்பிட்டிருப்பதானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இலங்கை தொடர்பான அமெரிக்க அணுகுமுறையில் கொள்கைசார் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய பதவிக்குரிய ஒருவர் என்னும் வகையில், நிஷாவின் அறிவிப்பு அமெரிக்காவின் எதிர்கால அணுகுமுறையையே கோடிகாட்டுகின்றது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ பொருளாதார ஒத்துழைப்புக்களை எடுத்து நோக்கினால் மிகவும் சுமூகமானதொரு உறவே நிலவி வந்திருக்கிறது. அன்று, பிராந்திய வல்லரசான இந்தியாவின் நேரடித் தலையீட்டின் பின்னால் இருந்த காரணங்களில் ஒன்று, அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசுடனான அமெரிக்க உறவாகும். அன்று இந்திய உளவுத் துறையின் தலைவர் ஆர்.என். காவோ சுட்டிக்காட்டிய நான்கு காரணங்களில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க குரல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமையும் ஒன்றாகும். தற்போது குறித்த அமெரிக்க வானொலி பரிவர்த்தனை நிலையமானது அமெரிக்காவின் சர்வதேச பரிவர்த்தனைக்கான நிலையம் (International Broadcast Bureau of the US) என்று பெயர்மாற்றி மீளமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீளமைக்கப்பட்ட புதிய அமெரிக்க – இந்திய மூலோபாய கூட்டின் பின்னர் நிலைமைகள் முற்றிலும் மாற்றமடைந்தது. இன்றைய அர்த்தத்தில் அமெரிக்க – இந்திய கூட்டு மிகவும் வலுவானது.
வளர்ச்சியடைந்துவரும் சீன விரிவாக்கம் என்னும் ஒரு புள்ளியில் தவிர்க்க முடியாமல் அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு நேர்கோட்டில் சந்தித்தேயாக வேண்டிய புறச் சூழல் காணப்படுகிறது. இந்தப் பின்னனியில் இலங்கையில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இலங்கை அரசிற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. புலனாய்வு பரிவர்த்தனை, தாக்குதல் படையினருக்கான பயிற்சிகள் மற்றும் கடற்படையினருக்கான பயிற்சிகள் என பல்வேறு இராணுவ வலுப்படுத்தல் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. குறிப்பாக, 1997ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்கா ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது. இதனைத் தொடர்ந்து 32 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்திருந்தன. அமெரிக்காவின் மேற்படி முடிவானது விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்துவதில் இலங்கை அரசுக்கு பாரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்திருந்தது. அந்த வகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்தத்திற்கு அமெரிக்கா பாரிய ஒத்துழைப்பை நல்கியிருக்கிறது எனலாம். நோர்வேயின் ஊடான சமாதான முன்னெடுப்புக்கள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில்விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் இலங்கை அரசின் இறுதி யுத்தத்திற்கு அமெரிக்கா உட்பட்ட ஜரோப்பிய நாடுகள் பலவும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன. குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் உரியநேர உளவுப் பரிவர்த்தனையே காரணமாகும்.
இதனை பாதுகாப்புச் செயலரே சுட்டிக் காட்டியிருக்கின்றார். ஆனால், இவ்வாறு சுமூகமாக நிலவிய அமெரிக்க – இலங்கை உறவில் சமீபகாலமாக சில விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தில் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்கா, அதன் பொருட்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்களைக் கொண்டு வந்து வெற்றிபெறவும் செய்திருக்கிறது. இந்தப் பின்னனியே சமீபகால அமெரிக்க – இலங்கை முரண்பாடுகளுக்கு காரணமாகும். ஆனால், இவ்வாறானதொரு முரண்பாடு நிலவிக் கொண்டிருக்கின்ற சூழலில், ஒபாமா நிர்வாகத்தினால் இலங்கை விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிஷா பிஸ்வால், தற்போது இராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் பேசியிருக்கின்றார் எனின் அது எத்தகைய இராணுவ ஒத்துழைப்பு? இதுவரைக்கும் நிலவிய அமெரிக்க – இலங்கை இராணுவ ஒத்துழைப்பிற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
அமெரிக்காவின் மூலோபாய அக்கறை முன்னர் எப்போதும் இல்லாதவாறு ஆசியாவில் அதிகரித்துச் செல்கின்ற பின்புலத்தில்தான் இலங்கையின் மீதான அமெரிக்க ஆர்வமும் அதிகரித்துச் செல்கிறது. இந்தப் பின்னனியில்தான் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது எனலாம். பொதுவாக நாடுகளுக்கு இடையிலான வெளிவிவகார அணுகுமுறை தொடர்பிலும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும், அடிப்படையிலேயே வேறுபாடுகள் காணப்படும். இன்றைய சூழலில் பலம்பொருந்திய நாடுகளின் வெளிவிவகார அணுகுமுறையை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். வெளிவிவகார அமைச்சின் அணுகுமுறையும், பாதுகாப்பு விவகாரங்களை கையாளுவோரின் அணுகுமுறையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தெரிவதை காணலாம். ஆனால், உண்மையில் இது முரண்பாடல்ல. இது ஒரு வெளிவிவகார அணுகுமுறையாகும். பாதுகாப்புக் கொள்கையில், வெளிவிகார அமைச்சு தலையீடு செய்ய முடியாது.
பொதுவாக பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு பலம்பொருந்திய நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களை செய்யாது. வெளிவிவகார அமைச்சின் அணுகுமுறைகளின் மூலம் கிடைக்கும் பெறுபேறுகளை தங்களது பாதுகாப்புக் கொள்கையை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவே ஒவ்வொரு பலம்பொருந்திய நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள விளையுமேயன்றி, பாதுகாப்பு விடயங்களில் எந்தவகையிலும் தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளாது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அணுகுமுறையையும் பலம்வாய்ந்த பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் அணுகுமுறையையும் நாங்கள் அவதானிக்கலாம். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கை இராணுவத்திற்குப் பயற்சிகள் வழங்குவதை இந்திய பாதுகாப்பு அமைச்சு நிறுத்திக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அவ்வாறு அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து பாதுகாப்பு விடயங்களில் இந்தியா விட்டுக்கொடுக்குமாக இருந்தால்அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். இந்தியாவின் வரலாற்று எதிரியான பாக்கிஸ்தான் அந்த இடத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொள்ள எத்தணிக்கும். சீனா அந்த இடத்தை கைப்பற்றிக்கொள்ளும். இந்த விடயங்களை கருத்தில்கொண்டுதான் பாதுகாப்பு விடயங்களில் இந்தியா எந்தவிதமான தளர்வுகளையும் காண்பித்துக் கொள்ளாமல் இருக்கின்றது. இந்தியா தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு குறித்து கரிசனைகொள்வது வேறு, அதன் பாதுகாப்பு விவகாரங்களில் தளர்வுகளை ஏற்படுத்திக்கொள்வது வேறு. இந்தப் பின்னனியில்தான் அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்து சமூத்திர பிராந்தியத்தை கண்காணிப்பதற்கான அமெரிக்காவின் மிக முக்கிய கடற்படைத் தளமான டிக்கோகாசியா தளத்திற்கான (Diego Garcia base) உடன்பாடு 2016ஆம் ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. மேற்படி தளம், அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு மாற்றப்படலாம் என்றும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவானது, 27 சிறிய பவளத் தீவுகளை (Small coral islands) உள்ளடக்கியிருக்கிறது. டிக்கோகாசியா தீவிற்கு கிழக்காக, 2,700 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மேற்படி தீவுகள், அவுஸ்திரேலிய – இலங்கை கடற்பரப்பின் அரைப்பகுதியில் அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னனியில்தான் சமீபகாலமாக அமெரிக்க – அவுஸ்திரேலிய மூலோபாய நெருக்கம் அதிகரித்து வருவதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது பற்றி பதிவிட்டிருக்கும் வாசிங்டன் போஸ்ட், இத்தளம் மனிதர்கள் ஊடாக கண்காணிக்கப்படும் விமானங்களை பயன்படுத்துவதற்கு மட்டுமன்றி, அதியுயரத்தில் பறந்து கண்காணிக்கும் ஆளில்லாத உளவு விமானங்களை பயன்படுத்துவதற்கும் ஏற்றவாறான ஒரு சிறந்த தளமாகும் (Ideal site) என்று எழுதியிருக்கிறது.
இந்தப் பின்னனியில்தான் அமெரிக்கா இலங்கையில் ஒரு தளத்தை உருவாக்கிக்கொள்ளவும் முயற்சிக்கலாம் என்னும் கருத்து சிலர் மத்தியில் தோன்றிருக்கிறது. சமீபகாலமாக அவுஸ்திரேலிய – இலங்கை நெருக்கமும் அதிகரித்துச் செல்கிறது. அமெரிக்காவின் மூலோபாய பங்காளியான அவுஸ்திரேலியா, இலங்கையின் மீதான சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளலாம். எனவே, இந்தப் பின்னனியில் நோக்கினால், இலங்கையின் எதிர்கால முக்கியத்துவம் இராணுவ ஒத்துழைப்புக்கள் வாயிலாக நோக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் போல் தெரிகிறது. இராணுவ நோக்கங்கள் முன்னிலைப்படுத்தப்படுமாக இருந்தால், இலங்கையின் உள்ள நிலைமையில் ஒரு அமைதி நிலை காணப்படுவது அவசியம். அத்தகையதொரு அமைதியை ஏற்படுத்துவதற்கானதொரு இடைநிலையாளர் முயற்சியாக தென்னாபிரிக்க முயற்சியும் அமையலாம். நிலைமை எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் இராணுவ மூலோபாய இலக்கினுள் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.
தினக்குரல் புதிய பண்பாடுக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.