படம்: Kannan Arunasalam, Iam.lk
தனது 94ஆம் வயதில் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மரணத்தோடு ஈழத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தம் நிறைவுறுகிறது எனலாம்.
மற்றைய எழுத்தாளர்களின் பங்களிப்பிற்கும் ஜீவாவின் பங்களிப்பிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அவர் படைப்பாளியாக மட்டுமன்றி, தன்னுடைய படைப்புகளை வெளியிடுவது, அவற்றைச் சமகால சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது என்பதற்கு உரிய முக்கியத்துவம் அளித்தார். படைப்பிலக்கியம் என்கின்ற வகையில் அவர் 1950 -60களில்தான் தீவிரமாகச் செயல்பட்டார். பின்னாளில் சுமார் நாற்பத்தேழு ஆண்டு காலம் அவர் அனைத்து அம்சங்களிலும், தனது சக்திக்கு மீறிய முயற்சிகளின் ஊடாக, அவரது கால கட்டத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இலக்கிய வெளிப்பாடுகளுக்குக் களம் அமைத்துத் தருவதற்கே முக்கியத்துவம் அளித்தார்.
அவரது முக்கியமான சாதனையாக நினைவு கூரப்படுவது தனது ‘மல்லிகை’ சஞ்சிகை மூலமும், ‘மல்லிகைப் பந்தல்’ பதிப்பகம் மூலமும் தன் சக்திக்கு மீறி அவர் ஒரு காலகட்ட ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும், அதனூடாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றியுள்ள பணியாகும்.
ஈழத் தமிழ்ச் சமூகம், இந்தியச் சமூகங்களைப் போலவே ஒரு சாதீயச் சமூகம். சகமனிதரில் ஒரு சாரரைத் தீண்டாமை எனும் பெருங் கொடுமை மூலம் ஒதுக்கி வைக்கும் ஒரு சமூகம். அப்படியான ஒரு சமூகத்தில் பிறந்ததோடு மட்டுமின்றி, அவ்வாறு தீண்டாமைக்குக் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்ட தொழிலை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தன் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தவர் ஜீவா. எழுத்துப் பணியைத் தொடர்ந்து அவர் ’மல்லிகை’ இதழ் வெளியீட்டை மேற்கொள்ளத் தொடங்கிய பின்னும் கூட சில காலம் வரை அவர் தன் தொழிலை விடவில்லை.
’மல்லிகை’ ஒரு தனிமனித சாதனை ஆகும்.
இந்த வகையில் ஈழத் தலித் இலக்கியத்தின் இன்னொரு முக்கிய பங்களிப்பாளரான டானியல் அவர்களிலிருந்தும் ஜீவா வேறுபட்டு நிற்கிறார். டானியல் சொந்தமாக ஒரு தொழிற்பட்டறை வைத்திருந்ததோடு தனது நூல்களைப் பெரிய சிரமங்களின்றி நூலாக வெளியிடும் வாய்ப்புகளும் பெற்றிருந்தார். ஆனால், அவரும் கூடத் தன் எழுத்துகளையும் பிற ஈழ எழுத்தாளர்களின் எழுத்துகளையும் வெளியிடுவதற்கென இதழ் ஒன்றைத் தொடங்க முயன்றாரில்லை. அவரது கவனம் வேறு திசையில் இருந்தது. ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றின் ஊடாக நேரடியாகக் களத்தில் இறங்கி ஆதிக்க சக்திகளுடன் போராடியவராகவே அவர் வெளிப்பட்டார்.
ஜீவா, டானியல் இருவருக்கும் இடையேயான சில நுணுக்கமான வேறுபாடுகள் இங்கே நினைவுகூரத் தக்கன. இருவருமே இடதுசாரிக் கட்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர் என்ற போதும் அவர்களின் காலத்தில் கம்யூனிச அகிலம் சோவியத் மற்றும் சீனம் எனும் இரு எதிரெதிர்க் கூறுகளாகக் கடும் பகையுடன் வேறுபட்டிருந்தது. அந்நிலையில் ஜீவா ரஷ்ய கம்யூனிச ஆதரவு நிலைபாடு கொண்டவராகவும், டானியல் அக்காலகட்டத்தின் புகழ் பெற்ற மார்க்சிஸ்டான சண்முகதாசனுடன் நின்று சீன ஆதரவை மேற்கொண்டவராகவும் இருந்தார்.
கட்சிப் பங்களிப்புகள் என்பதிலும் கூட நானறிந்த வரை இந்த இருவரது செயல்பாடுகளும் இருவேறு மட்டங்களில் இருந்தன. டானியல் தீவிரமான கட்சிப் பணி என்பதைக் காட்டிலும், தீவிரமான தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் இருந்தார். அவருடைய ‘பஞ்சமர்’ வரிசை நூல்கள் அந்த வகையில் ஒரு வரலாற்றுப் பெட்டகம். ஆனால், இன்னொரு பக்கம் 1971இல் ஜே.வி.பி அமைப்பின் முதல் ஆயுத கிளர்ச்சியின் போது டானியல் கைதுசெய்யப்பட்டு சுமார் ஓராண்டு காலம் சிறைப்பட்டிருக்க நேரிட்டது.
ஜீவாவின் கட்சிப்பணி என்பது மிகவும் வெளிப்படையாக இருந்தது. அன்று அவர் சார்ந்திருந்த ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அந்த அளவிற்குத் தீவிரமாகக் கருதப்பட்டதில்லை. இந்தியாவில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட வரலாறெல்லாம் உண்டு. அந்த வகையில் ஜீவாவிற்கு அப்படியான பிரச்சினைகள் ஏதுமில்லை. அது மட்டுமல்ல, அவரது கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘தேசாபிமானி’ இதழை சக தோழர்களுடன் தூக்கிச் சென்று மக்கள் மத்தியில் கூவி விற்கிற அளவிற்கு ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிப்படையான தீவிர உறுப்பினராகவும் ஜீவா இருந்தார்.
பின்னாளில் ரஷ்யாவிற்கு அவர் அழைக்கப்பட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட வரலாறை எல்லாம் அவரது சுய வரலாறு சார்ந்த கட்டுரைகளில் பார்க்கலாம்.
டானியலின் எழுத்திற்கும் ஜீவாவுடையதற்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. முன்னவரின் எழுத்துக்கள், அது உரையாடலாக இருந்தாலும் சரி, விவரணமாக இருந்தாலும் சரி சுமாராக அவை யாழ்ப்பாணத் தமிழிலேயே இருக்கும். டானியலின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் நாங்கள் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தோம். அப்போது அவர் தன் ‘பஞ்சமர்’ நாவலைத் தஞ்சையில் அச்சிடக் கொடுத்துக் காத்திருந்தார். இங்கு வழக்கத்தில் இல்லாத முக்கிய இலங்கைத் தமிழ் வழக்குகளுக்குப் பொருள் எழுதி நூலில் இணைத்தால் தமிழ்நாட்டு வாசகர்களுக்குப் பயனுடையதாக இருக்கும் என்பதே அந்த வேண்டுகோள். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார்.
ஆனால், ஜீவாவின் எழுத்துகளில் அப்படியான சிக்கலை இங்கு யாரும் எதிர்கொண்டதில்லை. மிகச் சில யாழ்ப்பாண வழக்குகள் தவிர மற்றபடி எந்தச் சிரமமும் இன்றி வாசிக்கத் தக்க உரைநடையாக அவை அமைந்தன.
ஜீவாவுக்கும் டானியலுக்கும் இருந்த இன்னொரு வேறுபாடு டானியலின் எழுத்துக்கள் பஞ்சமர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் அதற்கெதிரான அவர்களின் எழுச்சி ஆகியவை குறித்தவையாகவே இருக்கும். ஜீவாவின் எழுத்துகளை அப்படிச் சொல்லி விட இயலாது. ஆனாலும் பெரும்பாலும் அப்படியானவையாக இருக்கும். தவிரவும் தான் அப்படியான ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலெழுந்து வந்தவன் என்பதை ஜீவா ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தீவிரமாக வெளிப்படுத்திக் கொள்பவராகவே இருந்தார். அவர் எங்கும், எப்போதும், யாழ் சமூகத் தீண்டாமைக் கொடுமைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டும், கண்டித்துக் கொண்டும் இருந்தார். எள்ளல்கள், எதிர்ப்புகள் ஆகிய எல்லாவற்றையும் எதிர்கொண்டு அவர் எழுந்து நின்றார்.
கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜெ.கனகரட்னா முதலான நாடறிந்த அறிஞர் பெருமக்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது. ஜீவாவுக்கும் கைலாசபதிக்கும் நல்ல உறவு இருந்தது. அப்படியான ஒரு நல்லுறவு கைலாசபதியுடன் டானியலுக்கு இருந்ததில்லை. “நாங்கள் நினைப்பதை விடவும் மிக மிக பிரமாண்டமான இலக்கியப் பேராசான் கைலாசபதி. அவர் காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் தனிப் பெருமையாகும். அவருடன் சமகாலத்தில் இலக்கிய சர்ச்சை செய்து களித்திருந்தோம் என்பதே சொல்லில் வடிக்க முடியாத தனிப்பெரும் பேறு” என அவர் மறைவின் போது ஜீவா பதிந்தது குறிப்பிடத்தக்கது.
‘சாகித்ய மண்டலம்’, ‘தேச நேத்ரு’, ‘சாகித்ய ரத்னா’ முதலான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. தனது எழுத்து மற்றும் ’மல்லிகை’ உள்ளிட்ட வெளியீடுகள் ஆகியவை குறித்து நியாயமான பெருமையும் கர்வமும் ஜீவாவுக்கு இருந்தன. தனது எழுத்துகளின் ஊடாக வெளிப்படும் வீணான கற்பனைகள் அற்ற நம்பகத்தன்மை, எழுத்து ஜாலமின்மை, கடந்து வந்த பாதையின் அவலங்களின் ஊடாகப் பெற்ற ஆரோக்கியமான வழிகாட்டல்கள், அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியனவே தன் வெற்றிக்குக் காரணம் என ஜீவா நம்பினார். வரலாறு என்னைத் தோற்கடித்து விடவில்லை என ஆறுதல் கொண்டார். மானுடக் கொடுமைகளையும், புறக்கணிப்புகளையும் மீறி இத்தனை காலம் ஒரு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்தமைக்காகப் பெருமைப்பட்டார்.
டொமினிக் ஜீவா சுமார் அறுபது சிறுகதைகள் வரை எழுதியிருப்பார் என நினைக்கிறேன். 1996 இல் வெளிவந்த ‘டொமினிக் ஜீவா சிறுகதைகள்’ எனும் தொகுப்பில் 50 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. முன்னதாக தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் முதலானவை வெளிவந்தன. ஒரு சிறுகதை எழுத்தாளராகத்தான் அவர் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார். முக்கிய சிங்கள எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் அவர் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அப்போதைய இலக்கிய இதழ்களான விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’, ரகுநாதனின் ‘சாந்தி’ முதலானவற்றிலும் அவரது சிறுகதைகள் வெளியிடப்பட்டன.
‘அச்சுத்தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம்’ என்பது அவரது சிறு பத்திரிகை அனுபவங்களைச் சொல்லும் நூல். ’எழுதப்படாத கதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்பது அவரது சுயசரிதை நூல். மல்லிகையில் வெளிவந்த தலையங்கங்கள், கேள்வி பதில்கள், நேர்காணல்கள், அட்டைப்படக் கட்டுரைகள் என்றெல்லாம் மொத்தத்தில் சுமார் 18 நூல்கள் வெளிவந்துள்ளன.
எந்தவிதப் பொருளாதாரப் பலமோ, சமூகப் பின்னணியோ, கல்விப் பின்புலமோ, இதழ் வெளியீட்டு அனுபவமோ, மூலதன வலிமையோ இல்லாமல், தான் சுமார் 47 ஆண்டு காலம் நடத்திய பத்திரிகை அனுபவங்களை இப்படியான நூல்களில் மட்டுமல்லாமல் வாய்ப்பு வந்தபோதெல்லாம் பேச்சுக்களிலும் பதிவுகளிலும் சொல்வதற்கு ஜீவா தயங்கியதில்லை.
மல்லிகை எக்காரணம் கொண்டும் நின்று விடக் கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.
ஒன்றைச் சொல்வது அவசியம். ஜீவா பல நேரங்களில் யாழ்ப்பாண சாதிய வெறுப்பு குறித்துக் கடுமையாகப் பேசி இருந்த போதும் அதை ஒரு கண்மூடித்தனமான உயர்சாதி வெறுப்பாக ஆக்கிக் கொள்ளவில்லை. “என்னை உருவாக்கியவர்கள் கூட தலித்கள் அல்ல. எங்களிடம் சிந்தனை தந்ததும் பின்னணியாக நின்றதும் தலித் அல்லாதவர்களே. பச்சையாகச் சொல்லப் போனால் இலங்கையில் இருக்கிற மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இடதுசாரிகள்தான் எம்மை இப்படி சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர்கள்” என்றதுடன், அவர் அப்படியானவர்களைச் சுட்டிக் காட்டத் தயங்கவுமில்லை.
கடும் சாதிய வெறுப்புகளுக்கு அப்பால் ஜீவாவுக்குப் பலரும் உதவியுள்ளனர். அவர்களில் உயர் சாதியினரும் இருந்தனர். ஜீவா இதைக் குறிப்பிடத் தவறுவதும் இல்லை. “எந்த அளவிற்கு இப்படியான எதிர்ப்புகள் இருந்ததோ அந்த அளவிற்கு உதவியும் வந்தது” என ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். சில எடுத்துக்காட்டுகளையும் ஆங்காங்கு சொல்லிச் செல்கிறார்.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் தன் உயிரிலும் மேலாக நேசித்த ‘மல்லிகை’யை நிறுத்த நேரிட்ட போது, அவரைச் சந்தித்த நண்பர் கனக செந்திநாதன் கொழும்பில் இருந்த அலுமினிய நிறுவன முதலாளி திருநாவுக்கரசைச் சந்திக்க அவரிடம் சொல்கிறார். அப்படிச் சந்தித்த போது மிக்க மரியாதையுடன் வரவேற்ற அவர் ஜீவாவையும், அவரது பங்களிப்புகளையும் அறிந்துள்ளதாகச் சொல்கிறார். அத்தோடு அவர் நிறுத்தவில்லை. ஒரு அச்சகம் நிறுவுவதற்குத் தேவையான அத்தனை கருவிகளையும் ஒரு நல்ல நிறுவனத்தில் ‘ஓர்டர்’ கொடுத்து விட்டு வந்து சொல்லும்படி கூறுகிறார். அவ்வாறே ஜீவா வந்து சொன்னவுடன் அந்த முழுத் தொகையையும் செலுத்தி அவற்றை ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார். அந்தப் பேருதவியின் ஊடாகவே மீண்டும் ‘மல்லிகை’ மலரத் தொடங்கியது. அதேபோல ஒட்டப்பிடாரம் குருசாமி அண்ணாச்சி முதலான பலரும் ஜீவாவுடன் நட்புடன் இருந்துள்ளனர்.
‘மல்லிகை’ முகப்பில் ஆசிரியராகத் தன் பெயரே தொடர்ந்து வந்த போதும் பலரும் அதற்குப் பங்களித்துள்ளனர் என்பதையும் ஜீவா குறிப்பிடத் தவறுவதில்லை. அதேபோல ”கருத்தாலும், தத்துவார்த்த நோக்கிலும் மாறுபட்டிருந்த பல தோழர்களை நான் அண்டி அணைத்துச் சென்று கொண்டிருந்தேன்” என்பதையும் பதிவு செய்கிறார். ஒவ்வொரு மல்லிகை இதழ் அட்டையிலும் ஒரு ஆளுமையின் படம் பிரசுரிக்கப்பட்டு அவர் குறித்த மதிப்புரை ஒன்றும் எழுதப்படும். கருத்து மாறுபடுகின்ற அப்படியானவர்களுக்கும் அதில் இடமிருந்தது.
ஒரு கட்டத்தில் சோவியத் இதழ்களில் வரும் நல்ல கட்டுரைகளின் மொழியாக்கங்கள் ’மல்லிகை’யில் இடம்பெற்றன. தரமான கட்டுரைகள் தேவையான அளவிற்கு வராததால் அப்படி மொழியாக்கங்களை வெளியிடலாயிற்று என ஜீவா அதற்கு விளக்கமளித்த போதும், ஜீவாவைப் பிடிக்காதவர்கள் சோவியத்திலிருந்து அவருக்கு நிதி உதவி செய்யப்படுகிறது எனக் கதைகட்டி விட்டனர்.
கடைசி ஐந்தாண்டுகள் அவர் அதிகம் பொது நிகழ்ச்சிகளில் பங்குபெறாமல் வீட்டோடு அடங்கி இருந்தார். அப்படியான நிலையில் அவரை நான் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் இருந்த அவருடைய வீட்டில் சென்று பார்த்து வந்தேன். அதிகம் பேசும் நிலையில் அவர் அப்போது இல்லை. தஞ்சையில் நான் இருந்தபோது ஒரு முறை அவர் என் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நான் ஊரில் இல்லை. என் மனைவி அவரை வரவேற்று மரியாதை செய்துள்ளார். டானியலின் கல்லறையைப் பார்க்க அவர் விருப்பம் தெரிவித்த போது, ஒருவரை அந்த நினைவுச் சின்னத்தை அடையாளம் காட்ட அவருடன் அனுப்பி வைத்துள்ளார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவரோடு விரிவாக உரையாட இயலாமறபோன வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
பேராசிரியர் அ. மார்க்ஸ்
தினகரன் பத்திரிகையில் வௌியாகியிருந்த இக்கட்டுரையை நன்றியுணர்வுடன் இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.