படம் | dbsjeyaraj

அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான அபிப்பிராயங்களின் சாரம்சமாகும். அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட முன்னைய பிரேரணைகளுக்கு ஆதரவளித்திருந்த இந்தியா, இறுதியாக கொண்டுவரப்பட்ட பிரேரணையின்போது வாக்களிப்பை தவிர்த்திருந்தது. ஆனால், இந்தியாவின் மேற்படி செயற்பாடு, குறித்த பிரேரணையின் வெற்றியை எந்தவகையிலும் பாதித்திருக்கவில்லை. இந்தியாவின் ஆதரவின்றியே அமெரிக்காதனது பிரேரணையை வெற்றிபெறச் செய்திருக்கிறது. இந்த ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டே, விடயங்கள் அனைத்தும் இந்தியாவின் கைகளை மீறிச்சென்றுவிட்டதாக சிலர் அபிப்பிராயம் கொள்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் என்னுடன் தொடர்புகொண்ட ஒரு மூத்த ஊடக நண்பர், விடயங்கள் இந்தியாவை மீறிச்சென்றுவிட்டன, பின்னர் ஏன் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்? இதுவரை தெற்காசியா தொடர்பான விடயங்களில் இந்தியாவிற்கு ஒரு தவிர்க்கமுடியாத இடமுண்டு, அதனை எவராலும் நிராகரித்துச் செல்ல முடியாதுஎன்றெல்லாம் நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், இப்போதுதான் அது பொய்ப்பிக்கப்பட்டு விட்டதே! இந்தியாவை மீறி அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்துவிட்டதே. இனி இந்தியாவிற்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? பின்னர் ஏன் இந்தியாவிற்கு பின்னால் இழுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றவாறு தனது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினார். சமீபகாலமாக நான் இந்தியா தொடர்பில் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை முன்னிறுத்தியே அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்பதை விளங்கிக்கொண்டேன். இது சரியான பார்வைதானா? உண்மையிலேயே விடயங்கள் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டனவா?

வெளித்தோற்றத்தில் பார்த்தால், விடயங்கள் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டதான ஒரு தோற்றப்பாடே தெரியும். ஆனால், அது உண்மையல்ல. கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று, இந்தியாவின் வாக்களிப்பை தவிர்க்கும் முடிவானது, அதன் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டதொரு முடிவாகும்.

இந்திய கொள்கை வகுப்புப் பிரிவினர் இரண்டு விடயங்களை கருத்தில்கொண்டு, மேற்படி முடிவை எடுத்திருக்கலாம். ஒன்று, இலங்கைக்குள் அதிகரித்துச் செல்லும் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துதல். அவ்வாறு மட்டுப்படுத்த வேண்டுமாயின் நடுநிலைமை வகிப்பது அவசியம். இரண்டு, ஒரு பிராந்திய வல்லரசு என்னும் வகையில் இலங்கையின் மீதான ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பதனால், ஏற்படப்போகும் எதிர்கால பாதிப்புக்கள். அதாவது, தெற்காசிய எல்லைக்குள் ஒரு சர்வதேச விசாரனைக்கு ஆதரவு தெரிவிப்பதானது, எதிர்காலத்தில் இந்தியாவின் மீதும் அவ்வாறான விசாரனைகளை கோருவதற்கான வாய்ப்பை கொடுத்துவிடலாம். நாடுகளின் நீண்டகால நோக்கங்கள் என்பன ஊகங்களுக்கு அப்பாற்பட்டவை என்னும், சர்வதேச விதியின் கீழ் பிறிதொரு நாடும், இவ்வாறானதொரு விசாரணையை இந்தியாவின் மீதும் கோர முடியும். இவற்றையும் இந்தியா கருத்தில் கொண்டிருக்கலாம். ஏனெனில், இலங்கை விடயத்தில் அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்காவின் நீண்டகால நோக்கங்கள் பற்றி ஊகிக்க முடியாது. எனவே, ஒரு பிராந்திய வல்லரசு என்னும் வகையில் இந்தியா தனது நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டுதான் முடிவுகளை எடுக்கமுடியும் என்பதை விளங்கிக்கொள்வது கடினமானதல்ல.

எனவே, இந்த பின்னணியில்தான் இந்தியாவை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த ஒரு தனி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது சரியானதொரு பார்வையாக அமையாது. இப்பொழுதும் இலங்கை தமிழர் விவகாரத்தை கையாளுவதில் ஆற்றல் வாய்ந்த நாடாக இந்தியா மட்டுமே இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டுதான் கூட்டமைப்பின் தலைமை இந்தியா தொடர்பில் நிதானத்தை கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவை விரோதித்துக் கொள்வதன் நீண்டகால விளைவுகளை கூட்டமைப்பின் தலைமை நன்கறியும். இதன் காரணமாகவே, இந்தியாவை விரோதித்துக் கொள்ளாதவாறுமிகுந்த நிதானத்தை சம்பந்தன் கடைப்பிடித்து வருகின்றார். ஆனால், அத்தகைய நிதானம் கூட்டமைப்பில் உள்ள அனைவரிடமும் இல்லை.

இந்தியாவின் செல்வாக்கை மீறி விடயங்கள் சென்றுவிட்டதாக வாதிடுவோர், தற்போது தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக தென்னாபிரிக்க விவகாரத்தையும் கையிலெடுக்க விளைகின்றனர். தென்னாபிரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுமானால், அதன் மூலம் இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் கீழிறங்கும் என்பது அவ்வாறானவர்களின் கணிப்பு. ஆனால், தென்னாபிரிக்காவும் அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. இந்தியாவைப் போன்றே வாக்களிப்பை தவிர்த்திருந்தது. சமீபகாலமாக இலங்கை நல்லிணக்க முயற்சிகளில் தென்னாபிரிக்காவை ஈடுபடுத்தும் முனைப்புக்களில் அரசு மற்றும் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினரும் ஈடுபாடுகாட்டி வருகின்றனர். இது பற்றி சில விமர்சனங்கள் வெளியானபோதும், உண்மையிலேயே தென்னாபிரிக்காவின் பங்கு என்ன என்பது பற்றிய தகவல்கள் போதியளவு வெளியாகியிருக்கவில்லை. கூட்டமைப்பும் இதனை ஒரு மூடிய அறை விவகாரமாகவே கையாண்டு வருகிறது.

சிலர் குறிப்பிடுவது போன்று, தென்னாபிரிக்கத் தலையீடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வலுவிழக்கச் செய்துவிடுமா? இந்தியா தொடர்பில் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தனது பிராந்திய நலன்களை குறுக்கறுக்காத எந்தவொரு விடயத்திலும் இந்தியா தலையீடு செய்யப்போவதில்லை. நிச்சயமாக தென்னாபிரிக்காவின் தலையீடு இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்திற்கு எந்த வகையிலும் சவாலாக அமையாது. எனவே, இந்தியா அது குறித்து அலட்டிக்கொள்ளப் போவதில்லை. ஆனால், தென்னாபிரிக்கா என்னதான் விடயங்களை கையாள முற்பட்டாலும், இந்தியாவின் ஆசீர்வாதம் இன்றி எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடாது. எந்தவொரு நாடும் தங்களுடைய நலன்களை நிறுத்துப் பார்த்துத்தான் வெளிவிவகாரங்களில் தலையீடு செய்ய முற்படும். அவ்வாறு நிறுத்துப் பார்க்கும்போது, எப்போதுமே இந்தியாவின் ஆதரவு அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கும். இலங்கை விவகாரங்களில் ஈடுபடும் எவரும் பிராந்திய சக்தியான இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது ஓரம்கட்டி, இலங்கை விவகாரத்தை கையிலெடுக்கப் போவதில்லை. அவ்வாறு எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.

எனவே, இலங்கை விவகாரத்தில் இந்தியா எந்நேரத்திலும் தலையீடு செய்யக்கூடிய ஏதுநிலையை கொண்டிருக்கின்றது. இது ஒரு அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை புறம்தள்ளி செயலாற்றலாம் என்று தமிழர் தரப்பு எண்ணுமாயின், அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருத்தவரையில், அதில் இரண்டு வகையான தரப்பினர் இருக்கின்றனர். ஒன்று, ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வருபவர்கள். இரண்டு, இந்தியா தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இவ்வாறு இந்தியா தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களை எடுத்து நோக்கினால், அவர்களில் அனேகர் புலிகள், தமிழர் அரசியலை ஏகபோகமாக தீர்மானித்த காலத்தில் அரசியல் கற்றுக்கொண்டவர்கள் ஆவர். புலிகளின் அரசியல் வகுப்பில் எப்போதுமே இந்தியா குறித்து எதிர்மறையான நிலைப்பாடுகளே போதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறானவர்கள் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம், இந்தியாவை தமிழ் மக்களின் எதிரியாக சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

உண்மையில் இந்தியா தமிழ் மக்களின் நன்பணுமல்ல எதிரியுமல்ல. மாறாக தமிழ் மக்களின் விடயங்களில் உரிமையுடன் தலையீடு செய்யக்கூடிய ஆற்றல்கொண்ட ஒரேயொரு நாடாகும். எனவே, இலங்கையின் உடனடி அயல் நாடென்னும் வகையில் இந்தியா, தமிழர்களால் எக்காலத்திலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு சக்தியாகும். எனவே, அமெரிக்கப் பிரேரணை என்னும் ஒரு தனி விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியா அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக கணிப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

யதீந்திரா

DSC_4908