பட மூலம், VOAnews

இன்னும் சில வாரங்களில் வெள்ளைமாளிகை கைமாற இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய மூலோபாய வகைப்பாடு ஒன்று இப்போதிருக்கும் நிலையில், முதலாவது உலகப்போருடன் ஒப்பிடக்கூடிய அழிவொன்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் முதுபெரும் இராஜதந்திரியான ஹென்றி கீசிங்கர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும் விட கூடுதலான அளவிற்கு வேறுபட்ட அணுகுமுறையொன்றை பதவிக்கு வரவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று 1970 களில் மாவோ சே துங்கின் சீனாவுடன் றிச்சர்ட் நிக்சனின் நிர்வாகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதற்றத்தணிவை கடைப்பிடிப்பதற்கு வழிவகுத்த – இராஜதந்திர அணுகுமுறையை வகுத்த கீசிங்கர் வலியுறுத்தியிருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பின் கொவிட் – 19 தடுப்புமருந்து மற்றும் உலக பொருளாதார மீட்சி போன்ற விவகாரங்களில் சீனாவுடன் ஒத்துழைப்பது உட்பட பெருமளவிற்கு வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிப்பதிலான தனது விருப்பத்தை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பைடன் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வந்திருக்கிறார்.

தென்சீனக்கடல் கவலையை சுட்டிக்காட்ட வேண்டியது தன்னைப் பொறுத்தவரை முக்கியமானதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நீடித்த வர்த்தகப்போர், சீனப்பிரஜைகள் மற்றும் கம்பனிகள் மீது குடிவரவு, முதலீடு ஆகியவை தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சீனாவின் புறஎல்லைப் பிராந்தியங்களில் அமெரிக்கக் கடற்படையின் அதிகரித்த விரிவாக்கம் ஆகியவற்றின் ஊடாக பெய்ஜிங்குடன் பதற்றங்களை அதிகரித்து வந்திருக்கிறார். கொவிட் – 19 தொற்றுநோயை சீனக்கொள்ளை நோய் என்று குறிப்பிட்டதன் மூலம் ட்ரம்ப் பெய்ஜிங்கை சீற்றமடையவும் வைத்தார்.

தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் ட்ரம்ப் தனது பதவிக்காலத்தின் எஞ்சிய காலப்பகுதியில் பதற்றநிலையை அதிகரிக்கலாம் என்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பென்டகன் அதியுயர் பதவிகளுக்கு இறுதிநேரத்தில் ட்ரம்ப் விசுவாசிகளும் கடும்போக்காளர்களும் சீன அதிகாரிகளை இலக்குவைத்து விதிக்கப்படும் தடைகளும் மிகவும் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க ட்ரம்ப் முனைப்புக்காட்டுகிறார் என்பதற்கான சமிக்ஞைகளாகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதிநேர நடவடிக்கைகள் பைடனை பெருமளவிற்குக் கட்டுப்படுத்தக்கூடும் என்பதுடன் சீனாவுடனான நடைமுறைச்சாத்திய உறவுகளைப் புதுப்பிப்பதற்கான அவரின் ஆற்றலையும் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தும் என்று நிபுணர்களும் அவதானிகளும் கூறுகிறார்கள். மேலும், ட்ரம்பின் நகர்வுகள் வரவிருக்கும் வருடங்களில் இருதரப்பு உறவுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வல்லரசுகளுக்கு இடையிலான மோதலுக்கான வாய்ப்பைத் திடீரென்று அதிகரிக்கும்.

பெய்ஜிங் அதன் போக்கை மாற்றி, உலக அரங்கில் பொறுப்புவாய்ந்த ஒரு பங்கை வகிக்க முன்வரவில்லையானால் ஜனாதிபதி ட்ரம்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எதிர்கால அமெரிக்க ஜனாதிபதிகள் மாற்றியமைப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலையாக இருக்கும் என்று ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் உலியொட் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோபர் மில்லர் போன்று கடுமையான எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் மக்கள் விடுதலை இராணுவத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சீனக்கம்பனிகளுக்கு எதிராக தடைகளை விரிவாக்குவதற்குத் தயாராகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன்பிடித்தொழிற்துறையில் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது உட்பட மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மேலதிக தடைகளை விதிப்பது குறித்தும் ஹொங்கொங்கிலும் உய்குர் முஸ்லிம் இனத்தவர்களின் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் சின்ஜியாங் மாகாணத்திலும், மனித உரிமைகளை ஒடுக்குவதில் ஈடுபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீன அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

சீனா ஒரு சண்டைக்குத் தயாராகிறது. கடந்த மாதம் தென் சீன மாகாணமான குவாங்டொங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தளமொன்றுக்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி ஜின்பிங் போருக்குத் தயாராவதில் முழுக்கவனத்தையும் சக்தியையும் திருப்புமாறு நாட்டின் துருப்புக்களுக்கு அழைப்புவிடுத்தார்.

கொந்தளிப்பான மாற்றமும் சீனாவின் இருப்புக்கு அச்சுறுத்தலும் தோன்றப்போகின்ற காலகட்டமொன்று வரவிருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்த ஷி ஜின்பிங் உயர்ந்த உஷார்நிலையில் இருக்குமாறு மக்கள் விடுதலை இராணுவத்தின் படைவீரர்களுக்குக் கூறியதுடன் முற்றுமுழுதான விசுவாசமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்ததாக ஊடகங்களின் செய்திகள் தெரிவித்தன.

பெரிய வல்லரசுகள் மத்தியில் ‘மூலோபாய விளக்கப்பாடு’ இருக்கவேண்டும் என்று குரல்கொடுக்கும் வரலாற்றைக் கொண்டவராக ஜோ பைடன் இருக்கின்ற போதிலும், கடந்த வருடம் அவரும்கூட சீனா மீது கடுமையான நிலைப்பாடொன்றைக் கடைப்பிடிப்பதில் பெரும் அக்கறைகாட்டினார்.

சீன ஜனாதிபதியை ‘ஒரு போக்கிரி” என்று வர்ணித்த ஜோ பைடன் ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை ஒரு ‘சர்வாதிகாரம்’ என்று கண்டனம் செய்தார். அத்துடன், சீனப்பிராந்தியங்களில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துரித பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.

“சீனா மீது அமெரிக்கா கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை” என்று இதே ஜோ பைடன் வெளிவிவகாரங்கள் சஞ்சிகையில் வசந்தகாலத்தில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அண்மைய வாரங்களில் பைடனும் அவரது உயர்மட்ட ஆலோசகர்களும் தாய்வானுக்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பெய்ஜிங்குடன் கடற்பிராந்திய தகராறுகளைக் கொண்டிருக்கும் பிராந்திய நேசநாடுகளுக்குமான தங்கள் ஆதரவை மீளவும் அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார்கள்.

இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் தீவிரமடையும் பயங்கரமான இயக்கவிசையை கருத்திலெடுத்த ஹென்றி கீசிங்கர் அமெரிக்காவும் சீனாவும் மோதலை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன என்று எச்சரிக்கை செய்ததுடன் இரு நாடுகளும் அவற்றின் இராஜதந்திரத்தை ஒரு மோதல்பாணியில் முன்னெடுக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வெறும் ஆரவாரப்பேச்சுக்களுக்கு அப்பால் உண்மையாகவே இராணுவமோதலொன்று இடம்பெறக்கூடியதாக சில நெருக்கடிகள் தோன்றும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கை செய்த முதுபெரும் இராஜதந்திர நிபுணர் கீசிங்கர் நம்பிக்கைக்குரிய ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கிரமமாக தகவல்களை பரிமாறி நிலைவரம் கொதித்து கொந்தளிப்பதற்கு முன்னதாக பதற்றங்களைத் தணிக்கக்கூடிய ‘நிறுவனரீதியான ஒழுங்குமுறையொன்று” ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

‘முதலாவது உலகப்போரின் தோற்றுவாய்: தூக்கத்தில் நடந்தோர்’ என்ற தனது தலைசிறந்த நூலில் கேம்பிரிட்ஜ் வரலாற்றாசிரியர் முன்றோ கிளார்க் ‘பெரிய வல்லரசுகளில் எந்தவொன்றுமே போரை எதிர்பார்க்கவுமில்லை, விரும்பவுமில்லை. 1914ஆம் ஆண்டில் போரை ஆரம்பித்தவர்கள் உலகிற்கு தாங்கள் கொண்டுவரப்போகின்ற கொடூரத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாதவர்களாக ‘தூக்கத்தில் நடந்து சென்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமாளிக்கக்கூடிய ஒரு மட்டத்தில் பதற்றங்களைத் தணிக்கும் முகமாக சிலவகையான ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கீசிங்கரின் ஆலோசனையை பைடன் நிர்வாகம் செவிமடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பினால் தொடங்கப்பட்டு தற்போதும் தொடருகின்ற வர்த்தகப்போரிலும் தொழில்நுட்பப்போரிலும் ஒரு தணிவை ஏற்படுத்துவது, காலநிலை மாற்றம், கொவிட் – 19 தடுப்புமருந்து மற்றும் உலகப்பொருளதார மீட்சி போன்ற விவகாரங்களில் சீனாவுடன் ஒத்துழைப்பது உட்பட பெருமளவிற்கு வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிப்பதிலான தனது விருப்பத்தை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பைடன் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வந்திருக்கிறார்.

தென்சீனக்கடல் தகராறு மற்றும் தாய்வான் போன்று சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கூட, பைடன் ‘நிதானமாகச் சிந்தித்து தீர்க்கமான நடவடிக்கைகளில் இறங்கும்” அணுகுமுறையைக் கடைப்பிடித்து சீனாவுடன் அநாவசியமானதும் பயங்கரமானதுமான பதற்ற அதிகரிப்பைத் தவிர்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘அமெரிக்காவும் சீனாவும் அவற்றுக்கு ஏறத்தாழ சமமான பரிமாணத்தைக் கொண்ட நாடுகளுக்கு ஒருபோதும் முகங்கொடுத்ததில்லை. இப்போது தோன்றியிருக்கும் நிலைவரம் முதலாவது பரிசோதனையாகும். மோதலாக இது மாறுவதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். சில வகையான ஒத்துழைப்பு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்” என்று ஹென்றி கீசிங்கர் கூறினார்.

US, China sleepwalking towards World War III என்ற தலைப்பில் ஏசியா ரைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.