பட மூலம், Ishara S. Kodikara/AFP Photo

“… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்) ரைபிளைப் பறிப்பதற்காக அவருடன் சண்டை செய்கிறார். இந்த சண்டையில் துப்பாக்கி வெடித்து உயிரிழக்கிறார்” – 2019 டிசம்பர் 17ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட ரட்னாயக்க தரங்கா லக்மாலி எதிர் நிரோஷன் அபேகோன் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து ஒரு பகுதி.


2020ஆம் ஆண்டில் பொலிஸ் ‘துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்’ பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஐந்து பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஒருவர் பொலிஸின் தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடுகையிலும், இரண்டு பேர் போதைப்பொருட்கள் அல்லது ஆயுதங்களை மீட்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சமயம் பொலிஸாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முனைந்தபோதும், இரண்டு பேர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்திலும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

அரச வன்முறைகள்: நிரந்தர வழமை

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய சூழமைவில் ‘புதிய வழமை’ (New Normal) என்ற சொற்றொடர் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய வழமையிலும் தாம் தப்பிக்க முடியாத நிரந்தர வழமையொன்று உள்ளது. அதுவே அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் வன்முறை. அரச வன்முறை; அரசிற்கு அச்சுறுத்தலாகத் திகழ்வதாகக் கருதப்படும் ஆட்களுக்கு எதிரான அரச வன்முறை, இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் நிரந்தர வழமையாக இருக்கிறது. இந்த ஆட்களில் அரச அதிருப்தியாளர்கள், மனித உரிமைப் போராளிகள், செய்தியாளர்கள், போதைப்பொருள் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டவர்கள் போன்றவர்களும் அடங்குகிறார்கள்.

தடுப்புக்காவல் மரணங்களும், பொலிஸாருடனான என்கவுன்டர்களில் ஆட்கள் கொல்லப்படுவதும் குறித்ததொரு அரசியல் ஆட்சிபீடத்திற்கு மாத்திரம் தனித்துவமானவையாக இல்லாமல், முறைமைப்படுத்தப்பட்டதாக இருப்பதால், அவற்றை நான் நிரந்தர வழமை என்று குறிப்பிடுகிறேன்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யஹபாலன (நல்லாட்சி) ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததை உதாரணமாகக் கூறலாம். தமது மோட்டார் சைக்கிளை பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தத் தவறியதாகக் கூறப்படும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் பொலிஸார் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற மறுத்தார்கள். இவ்விரு மாணவர்களும் குடிபோதையில் இருந்ததால், வேகமாக விரைந்த மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஒருவரது உடலில் துப்பாக்கி ரவைகள் இருந்தமை பிரேதப் பரிசோதனைகளில் புலனானது. இருவரதும் இரத்தத்தில் அற்கஹோல் கலந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இன்றைய தினம் வரை, இந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர் யார் எனக் கண்டுபிடிக்கப்படவும் இல்லை.

இந்தப் புதிய வழமைக்கும், நிரந்தர வழமைக்கும் இடையிலான தொடர்பு என்ன? நிரந்தர வழமையில் உள்ளுறைந்து நின்றவையும், இலங்கையின் பெரும்பான்மை மீது பாதிப்பை ஏற்படுத்தாதவையுமான சில சூழ்நிலைகள், மாற்ற முடியாதவையாக இயல்புமயமாகி இருக்கின்றன. இவை பெருந்தொற்று சமயத்தில் புதியவையும், வழக்கமாக மாறக் கூடியவையுமான வடிவங்களை எடுத்துள்ளன.

கடந்த காலத்தில், ஒரு சில குழுக்கள் மாத்திரமே சட்டத்திற்கு புறம்பான கொலைகளுக்கோ, தடுப்புக் காவல் கொலைகளுக்கோ, தத்தமது அந்தரங்கம் கண்காணிக்கப்படுதலுக்கோ, மீறப்படுதலுக்கோ உள்ளாகக்கூடிய அச்சுறுத்தலுக்கு இலக்காகியிருந்தன. உதாரணமாக, மனித உரிமைகளுக்காக போராடுவோரையும், செய்தியாளர்களையும், சிவில் சமூக/ அரச சார்பற்ற ஸ்தாபனங்களையும், குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ளவர்களைச் சொல்லலாம். இத்தகையோர் அரசை விமர்சிக்கக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பட்சத்தில், இவர்கள் கண்காணிப்பிற்கும், இம்சைப்படுத்தலுக்கும் இலக்கானார்கள். இன்றைய காலத்தில், ஊடகங்கள் மற்றும் ட்ரோன் கருவிகள் மூலம், பொதுமக்களே இதே வடிவிலான கண்காணிப்பிற்கும், அந்தரங்க மீறல்களுக்கும் இலக்காகிறார்கள்.

கடந்த காலத்தில், முன்னர் கூறப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் வில்லத்தனம் செய்பவர்களாகவும், குற்றமிழைத்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ஆனால், இன்றோ வில்லர்களாக ஆக்கப்பட்டு, பச்சாதாபம் இன்றி நடத்தப்படுவோராக கொவிட்-19 தொற்றாளர்களும் மாறியுள்ளனர்.

மீளவும் இராணுவமயமாதல்

கொவிட் பதிலளிப்பு நடவடிக்கை இராணுவமயமாதல் பற்றியும், கொவிட்-19 இன் போர்வையிலான பரந்த இராணுவமயமாதல் பற்றியும் பரந்தளவு கரிசனை உள்ளது. இருந்தபோதிலும், இராணுவமயமாதல் என்பது புதிய இயல்நிகழ்வு அல்ல. 2009ஆம் ஆண்டில் போரின் முடிவைத் தொடர்ந்து, குறிப்பாக வடக்கு, கிழக்கில் பரந்தளவு இராணுவமயமாதல் இருந்தது. இதனை யஹபாலன (நல்லாட்சி) அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது.

2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் பிரசுரித்த ‘உள்நாட்டில் இடம்பெயர்ந்த பின்னர் மீளத் திரும்பிய, வேறு இடங்களுக்குச் சென்ற அல்லது உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணையும் இலங்கையர்களின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை’யைக் கூறலாம். அந்த சமயத்தில், மன்னாரில் 100 சதவீதமானோரும், கிளிநொச்சியில் 99 சதவீதமானோரும், முல்லைத்தீவில் 90 சதவீதமானோரும் தமது குடும்பங்களை இராணுவம் பதிவு செய்திருந்தாகக் கூறியிருந்தார்கள்.

போரின் காரணமாக, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதலும் இராணுவமயமாகி இருந்தது. பல தசாப்தகாலமாக ஆட்களைக் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்திருக்கும் அதிகாரத்தை அவசரகாலப் பிரமாணங்கள் இராணுவத்திற்கு வழங்கியிருந்தன. அத்தகைய கைதுகள் இடம்பெறுகையில், பொலிஸாரும் உடனிருக்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்திருந்தன. சமகால மற்றும் முன்னைய ஜனாதிபதிமார் அடங்கலாக அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட இராணுவத்தை அழைத்ததுடன், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதலை மென்மேலும் இராணுவமயமாக்கியது. இந்தப் போக்கு பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் கொண்டுவருவதன் மூலம் மென்மேலும் வலிதாகியது.

ஒரு சமயத்தில், நாட்டின் 25 பொது நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்திற்குள் இருந்ததையும், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 14 பேர் வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திர தூதுவர்களாகவும், அமைச்சின் செயலாளராகவும், பொதுமக்களுக்கான அலுவலகங்களில் உயர் பதவி வகித்ததையும் நாம் மறந்து விடக்கூடாது. சமகாலத்தில், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சினது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கொவிட் பதிலளிப்பு நடைமுறை இராணுவமயமாதலில் வியப்புக்குரிய ஒரேயொரு விடயமாக அமைவது, இதன்மூலம் எவரேனும் வியப்படைவது தான்.

வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்கள் மற்றும் பாதிக்கப்படுவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கை

கைவிடப்பட அல்லது இழக்கப்படத்தக்கவர்களாக அரசாங்கம் கருதும் ஆட்கள், எதுவித எதிர்விளைவுகளும் இன்றி அரச வன்முறைக்கு உள்ளாக நேரிடலாம். இத்தகைய கைவிடப்பட அல்லது இழக்கப்படத்தக்க ஆட்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்? இத்தகைய குழுக்களுக்கு எதிரான தனது வன்முறைகளை நியாயப்படுத்துவதற்காக அரசு பயப்பீதி அரசியலின் மூலம் இவர்களை வில்லத்தனம் மிக்கவர்களாகவும், மனிதகுலத்திற்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்கிறது. பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் நியாயப்படுத்த வில்லர்கள் உருவாக்கப்பட்டு, வில்லர்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றப்பாடு காண்பிக்கப்படுகிறது.

இப்போதெல்லாம் போதைப் பொருள் கடத்தல்காரர்களும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் மாத்திரம் வில்லர்களாக இருப்பதில்லை. அவர்களில் கொவிட்-19 தொற்றாளர்களும், ஒரு கட்டத்தில் கொவிட்19 தொற்றுப் பரம்பலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினரும் உள்ளடங்குகிறார்கள்.

பொதுவாக அரசாங்கத்தால் வில்லத்தனம் மிக்கவர்களாகவும், மனிதகுலத்திற்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்கப்படுபவர்கள் நிச்சயமற்றதொரு வாழ்க்கையை வாழத்தலைப்படுகிறார்கள். அதாவது, இவர்கள் குடிசைகளில் வாழ்பவர்கள் அல்லது வீடில்லாமல் வீதிகளில் வாழ்பவர்களைப் போன்று, சமூக பொருளாதார ரீதியாக விளிம்புநிலை சமூகங்களில் இருந்து வந்து, வறுமையிலும் வன்முறைகளிலும் உழல்பவர்களாக இருக்கிறார்கள்.

அரசின் சார்பில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் பொலிஸாரும் நிச்சயமற்றதொரு வாழக்கையை வாழ்கிறார்கள். இவர்கள் குறைந்த சம்பளத்தையே பெறுகிறார்கள். கஷ்டமான சூழ்நிலைகளில் நீண்டநேரம் வேலை செய்கிறார்கள். வன்முறையின் அச்சுறுத்தலில் இருக்கிறார்கள். தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் வைரஸ் தொற்றக்கூடிய ஆபத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

பொலிஸ் படையை மேம்படுத்துதல் பற்றி விதந்துரைப்பதற்காக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு 1947இல் வெளியிட்ட அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருப்பது வியப்பானது. அது ஆச்சர்யம் தராமலும் இருக்கலாம்.

இந்த அறிக்கை பொலிஸாரின் தங்குமிட விடுதிகள் பற்றி விபரிக்கையில், “துறைமுக பொலிஸ் விடுதி, மருதானை பொலிஸ் விடுதி, கண்டி பொலிஸ் விடுதி, காலி மற்றும் யாழ்ப்பாண விடுதிகள் என்ற ரீதியில் பட்டியலிட்டால் பல விடுதிகள் விபரிக்க முடியாத அளவிற்கு தூய்மை அற்றவையாக இருந்தன. இவை ஆண்டாண்டு காலமாக அழுக்காகத் தான் இருக்கின்றன என்று எமக்கு கூறப்பட்டது” என்று குறிப்பிடுகிறது.

2017ஆம் ஆண்டில் அமைச்சர் சாகல ரட்னாயக்க கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் விடுதிகளை பார்வையிடச் சென்றார். இதன்போது, எந்தவொரு கழிவறையிலும் தண்ணீர் வரக்கூடிய ஷவர்களோ, குழாய் இணைப்புக்களோ இருக்கவில்லை என்பதையும், விடுதிக் கட்டத்திற்குப் பின்னாலுள்ள நீர்த்தாங்கி மாத்திரமே பொலிஸ் உத்தியோகத்தர்கள் 550 பேர் குளிக்கக்கூடிய வசதியாக இருந்தது என்பதையும் அமைச்சர் கண்டறிந்ததாக அறிவிக்கப்படுகிறது.

வேலைநேரம் பற்றி விபரிக்கையில், “இரவு முழுவதும் வேலை செய்த ஒருவர், மறுநாள் காலை நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார். அவர் அங்கு சமூகமளிக்க வேண்டும். சிலநேரம் முழுநாளும் கடமையில் இருக்க வேண்டும்” என்று பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. இத்தகைய கட்டமைப்பிற்குள் பெண் பொலிஸாரின் நிலைமை எவ்வாறு இருக்குமென கற்பனை செய்து பார்க்கலாம்.

இத்தகைய கட்டமைப்பிற்குள் அரசாங்கத்தின் சார்பாக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாரபட்சத்திற்கும், அமைப்பு ரீதியான வன்முறைகளுக்கும் இலக்காக முடியும். இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கத்தவராக இருந்த சமயம், எமக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் இருந்து அவதானித்திருக்கிறேன். எனவே, நிச்சயமற்ற வாழ்க்கையை வாழும் ஆட்கள் மாத்திரமன்றி வன்முறைகளைப் புரிவதாகக் கூறப்படுவோரும் அரச வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். இவ்விரு குழுக்கள் எதிர்நோக்கும் நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற தன்மையானது தவறாகப் பயன்படுத்தக்கூடிய நிர்வாக முறைமைக்கு அனுகூலம் தரலாம். இது அதிகாரத்தில் உள்ளவர்களின் நிகழ்ச்சிநிரல்களை நிறைவேற்றவே உதவும்.

பொலிஸ்படை மூலம் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படும் கலாசாரம் (Policing Culture)

இலங்கையில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் ‘பொலிஸ்படை மூலம் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படும் கலாசாரமானது’ (Policing Culture),தனிநபர்களின் கௌரவத்தைப் பறிக்கும் வன்முறைக் கலாசாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாகவும் அதிகாரம் செலுத்தி, கீழ்ப்படிதலை/ அனுசரித்தலை உறுதிப்படுத்த பலத்தை பிரயோகித்தலின் மீது தங்கியிருக்கும் ஒன்றாகவும் பரிமணித்துள்ளது. இதனை பொலிஸ் முறைமையின் சகல அம்சங்களிலும், உதாரணமாக, சிரேஷ்ட அதிகாரிகள் தம்மை விடவும் குறைந்த பதவிகளில் உள்ளவர்களை அழைக்கையில் பயன்படுத்தும் மட்டுமீறிய, அவதூறான வார்த்தைப் பிரயோகங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கு இதனுடன் நின்றுவிடுவதில்லை. அது பொலிஸ் கட்டமைப்பை நாடும் பிரஜைகளையும் இதே மாதிரியாக நடத்தும் வகையில் நீட்சி பெறுகிறது.

பொலிஸார் யாருக்கு சேவையாற்ற வேண்டுமோ, அவர்களையே போதியளவு பொருட்டாக மதிக்காமல் இருப்பதை 1947ஆம் ஆண்டின் பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை கோட்டிட்டுக் காட்டுகிறது. அதில், “பொது மக்களுக்குரிய வசதி அல்லது சௌகர்யம் பற்றிய எந்தவொரு சிந்தனையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய புனிதமான இடங்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவது பற்றியேனும் பொதுமக்கள் திருப்தியடைய வேண்டும் என்பதே பொலிஸாரின் மனப்பாங்கு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது.

அரச வன்முறை பற்றி பரிசீலிக்கையில், பெரும்பாலும் தனிப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கவனம் குவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், தனிப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கைகள், சட்டரீதியான விலக்களிப்பு ஆழமாக வேரூன்றியுள்ள முறைமைக்குள்ளேயே நிகழ்கின்றன.

இந்த சட்டரீதியான விலக்களிப்பு நிர்வாக முறைமைக்குள் எந்தளவிற்கு வலுவாக ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறது என்பதை 1947ஆம் ஆண்டின் பொலிஸ் ஆணைக்குழு அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது. “மாத்தறை பொலிஸ் நிலைய கொலை வழக்கில் சாட்சியம் அளித்தபோது, பொய்சாட்சி சொன்னதாக உயர்நீதிமன்றம் கருதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கூடுதல் சேவை மூப்புள்ள உத்தியோகத்தர்களைத் தாண்டி பதவி உயர்வு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரைத்த சந்தர்ப்பத்தை” ஆணைக்குழு எதிர்கொண்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

‘இத்தகைய முறைப்பாடுகளைப் பெற்று அரசு திருப்திகரமான முறையில் விசாரிக்க மறுப்பதாலோ, தவறுவதாலோ பொதுமக்களின் நம்பிக்கை பெருமளவில் ஆட்டம் கண்டது’ என்று ஆணைக்குழு மேலும் கூறுகிறது. எனவே, பொலிஸ் திணைக்களம் போன்ற கட்டமைப்புக்களிலும். நிறுவனங்களிலும் ஏற்றத்தாழ்வும், பாகுபாடுகளும், வன்முறைகளும் பிணைந்துள்ளன.

தடுப்புக்காவல் மரணச் சம்பவங்கள் பற்றி ஓரளவுக்கேனும் நம்பகத்தன்மையுடன் விளக்கமளிக்கத் தவறுகின்றபோது, சட்டரீதியான விலக்களிப்பு எந்தளவுக்கு ஆழ வேரூன்றியிருக்கிறது என்பது புலனாகிறது. உதாரணமாக, ரட்னாயக்க தரங்கா லக்மாலி எதிர் நிரோஷன் அபேகோன் வழக்கை எடுத்துக் கொள்ளலாம். இது லக்மாலியின் கணவர் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணத்தைத் தழுவியதுடன் தொடர்புடைய வழக்காகும். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொல்லப்பட்ட நபர் பாதாள கும்பலைச் சேர்ந்தவர் என்பதையும், ஒப்பந்தங்களின் பேரில் கொலை செய்தவர் என்பதையும் அறிந்து பின்னரும் கூட, அவரை விசேட தடுப்புக் காவலில் வைத்திருந்து முன்னைய தருணங்களில் கடும் காவலுடன் வாகனங்களில் அழைத்துச் சென்றும் கூட, ஒரு நாள் இரவு கதவில்லா வேனில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சகிதம் கை விலங்கிடாமல் அழைத்துச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை மாக்கந்துரே மதுஷின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட தொடர் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஊடகங்களுக்கு பொலிஸார் கூறிய தகவல்களின் பிரகாரம், 22 கிலோகிராம் ஹெரோயினை மீட்பதற்காக தமது சக குழுவினரைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மதுஷைக் கேட்டதாகவும், அந்த இடத்திற்கு மதுஷ் வருவாரென குறித்த நபர்கள் அறிந்திருந்ததாகவும் தெரிகிறது.

மதுஷ் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்ததை அனைவரும் அறிந்திருந்ததால், மதுஷுடன் பொலிஸாரும் வருவார்களென குழுவினர் எதிர்பார்த்திருப்பார்கள் என்பது ஓரளவு உறுதியான விடயமாகும். இத்தகைய பின்புலத்தில், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. இருந்தபோதிலும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்திற்கு நள்ளிரவில் மதுஷ் அழைத்துச் செல்லப்பட்ட சமயம், போதியளவு முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.

பொலிஸ் திணைக்கள நிலையியல் கட்டளையின் 8 (ஆ) பிரிவில் ‘தப்பிக்கக்கூடிய அல்லது வன்முறையாளராக மாறக்கூடிய’ ஆளொருவரை அழைத்துச் செல்கையில் போதியளவு பாதுகாப்பு வழங்கக்கூடிய குழுவொன்று அவருடன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. அதன் 8(அ) பிரிவானது ‘ஒரு நபரின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் அவரை அழைத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகள் இருந்தால் மாத்திரமே, அவரைத் தடுப்புக் காவலில் இருந்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய சட்டதிட்டங்களுக்கு மத்தியிலும் மதுஷ் வெளியே அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

செந்தில்நாயகம் எதிர் செனவிரட்ன உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டவாறு, எவரேனும் மெச்சத்தக்க கடந்த காலத்தை உடைவராக இல்லாவிட்டாலும் கூட அதனைக் கருத்திற்கொள்ளாமல், அவர் அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட தனிநபர் சுதந்திரத்தைத் துய்க்க வேண்டுமென்ற அடிப்படைக் கோட்பாட்டை அரசாங்கம் பொருட்படுத்தாமல் இருப்பதை இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அமல் சுதத் சில்வா எதிர் கொடித்துவக்கு வழக்கில் குறிப்பிடப்பட்டவாறு மிகவும் ‘மோசமான’ அல்லது ‘பாரதூரமான’ குற்றவாளிகளும் கூட சித்திரவதைக்கோ, மனிதாபிமானம் அற்ற அல்லது கீழ்த்தரமான நடத்தைக்கோ, தண்டனைக்கோ உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமையும் இதில் உள்ளடங்கும்.

பாதுகாப்பு பற்றி நாம் எவ்வாறு (மீள்) கற்பனை செய்கிறோம்?

கொவிட்-19 பதிலளிப்பிற்கும், மாக்கந்துரே மதுஷின் மரணத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இந்தத் தொடர்பானது மரபார்ந்த ரீதியில் வன்முறை மிக்கதாகவும், தனது பிரஜைகளின் மனித உரிமைகள் பற்றி குறைவாக அக்கறை காட்டுவதாகவும் தோன்றும் அரசின் இயல்பில் தங்கியிருக்கிறது. அரசு மக்களை பிரஜைகளாக அன்றி, பண்டங்களாகப் பார்க்கிறது.

ஒழுங்கில்லாத, சிக்கலான ஆட்சி நிர்வாக விடயத்தை சமாளிக்கும்போது அரசு தோல்வி காண்கையில், அது முரண்பாட்டையோ, நெருக்கடியையோ கையாள்வதற்கு இராணுவமயமான, ஒடுக்குமுறையான வழிகளை நோக்கித் திரும்புகிறது. கொவிட்-19 தொற்றாளர்களை வில்லத்தனம் மிக்கவர்களாகவும், மனிதகுலத்திற்கு எதிரானவர்களாகவும் சித்தரித்து, ஊரடங்கு அமுலாகும் பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்தல் என்பது, கடந்த காலத்தில் சிறுபான்மையினர், அதிருப்தியாளர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோரை அரசு எவ்வாறு நடத்தியதோ, அதன் நீட்சியாகவே அமைந்துள்ளது. இந்த வழிமுறைகள் குறித்ததொரு குழுவிற்கு எதிராக அன்றி, ஒட்டுமொத்த சனத்திற்கும் எதிராகப் பிரயோகிக்கப்படுவது இப்போதைய வித்தியாசம்.

அரசையும், பொலிஸ்படை மூலம் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படும் விதத்தையும், பொது நிறுவனங்களையும் மீளக் கற்பனை செய்து, அவற்றை மீளமைக்க வேண்டுமென்ற மறுசீராக்கல் கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், இந்தக் கட்டமைப்புக்களும் நிறுவனங்களும் கட்டியெழுப்பப்பட்டுள்ள அடிப்படை பெறுமானங்கள் சீரழிந்திருக்கும் பட்சத்தில் அல்லது சீரழிந்தவையாகவே இருக்குமாயின் என்ன செய்ய முடியும்? இத்தகைய சூழமைவில், பாதுகாப்பு மற்றும் இடரில்லா நிலையின் அர்த்தம் என்ன என்பதை நாம் புதிதாக கற்பனை செய்து பார்க்க வேண்டும். அரசு இல்லாதொழிக்கவோ கட்டுப்படுத்தவோ எதிர்பார்த்திருக்கும் குழுக்கள் என்ற ரீதியில், அரசிற்கு சவாலாக திகழும் குழுக்கள் மீது ஆக்கிரமிப்பு செலுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே  தேசிய பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் எண்ணக்கரு அமைந்துள்ளது. இத்தகைய சூழமைவில் எவ்வாறு பாதுகாப்பு மற்றும் இடரில்லா நிலையை அடையலாம் என்பது பற்றி புதிதாக கற்பனை செய்வது அவசியம்.

அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைகள் பற்றி கலந்துரையாடுகையில், அந்நாட்டின் வரலாற்று ஆய்வாளர் டேவிட் எம். கென்னடி சொல்வார்: “எமது அரசாங்கம் நீதியின் வேறுபட்ட நிறங்களின் கீழ், நாம் தடுப்பதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் கூட என்றென்றும், எப்போதும் எம்மைக் கொல்லும், எம்மைத் தாக்கும் என்று நாம் கூறுவதாக வைத்துக் கொள்வோம்… அது எமது ஜனநாயகமும், அமெரிக்க பரிசோதனையும் தோல்வி கண்டுள்ளதாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாகும்.” அதேபோன்று எமது அரசாங்கம் ‘சட்டத்தின் நிறத்தின் கீழ் என்றென்றும், எப்போதும் எம்மைக் கொல்லும், எம்மைத் தாக்கும், வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும்” என்று அஞ்சி அதனை ஏற்றுக் கொள்கிறோமா என்பதில் எமது ஜனநாயகத்தின் வலிமையும், ஆரோக்கியமும் தங்கியிருக்கிறது. இதனை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் எமது ஜனநாயகத்தின் தோல்வியையும் ஏற்றுக்கொள்பவர்கள் ஆகிறோம்.

அம்பிகா சற்குணநாதன்