பட மூலம், South China Morning Post

தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடம் இருந்து ஆதரவை பெருக்கும்.

இந்தியாவிலும் மாலைத்தீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால், இந்த இரு நாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவே திசைதிரும்பி இருந்தன. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை அவரது விஜயம் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகத் தெரியவில்லை. நீண்டகாலமாக இலங்கையில் மிகவும் பாரிய முதலீடுகளை செய்திருக்கும் சீனாவை அந்நியப்படுத்தக்கூடாது என்பதில் இலங்கை மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்த முதலீடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. பிரமாண்டமான முதலீடுகளுக்கு நிகரானதாக அமெரிக்காவினால் கூட செய்யமுடியாதுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுமுறையின் வரலாறு ஒரு முக்கியத்துவமான பரிமாணத்தைக் கொண்டது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவும் இலங்கையும் மிகவும் நீண்ட உறவுகளைக் கொண்டிருந்துள்ளன. இலங்கையில் இருந்து பௌத்த மதபோதகர்கள் சீனா, ஜப்பான் மற்றும் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுமுறை செழுமையானதும் சஞ்சலமானதாகவும்இருந்து வந்திருக்கின்ற அதேவேளை பல சகாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்துள்ளது. இந்த இயக்கவிசை அடிப்படையாக நோக்கும்போது சீனாவை அந்நியப்படுத்துவது தனக்கு கட்டுப்படியாகாத ஒன்றாக இலங்கை அரசு நம்பக்கூடும். உண்மையில் இந்தியா மீது அளவுக்கதிகமாக தங்கியிருப்பதை தவிர்ப்பதற்கு இலங்கையில் சில வகையான சீனப்பிரசன்னம் அவசியமானது என கொழும்பு கருதக்கூடும். குறிப்பாக ராஜபக்‌ஷ குடும்பம் இந்தியாவுடனான உறவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் விட சீனாவுடன் நீண்டகாலமாக நல்ல இராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது.

அதேவேளை, மறுபுறத்தில் குறிப்பாக இந்தியாவுடனான அதன் உறவுகள் மிகவும் திருப்திகரமானவையாக இல்லாத காரணத்தினால் சீனாவைப் பொறுத்தவரை ‘ஒரு சூழல் – ஒரு பாதை’ (One Belt – One Road) திட்டத்தில் ஒரு மூலோபாய அமைவிடத்தில் இருக்கும் இலங்கை மிகவும் பெறுமதியான  பங்காளியாக விளங்குகிறது.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு தெரிவுகள் இருக்கலாம். ஆனால், இந்து சமுத்திரத்தில் இலங்கையுடனான நல்ல உறவுகள் சீனாவிற்கு  தவிர்க்க முடியாத அளவிற்கு அவசியமானதாக உள்ளது. அதன் விளைவே இந்தளவு பிரமாண்டான முதலீடுகள்.

இலங்கையின் அணிசேராக் கொள்கைப் பற்றி இலங்கையின் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், இது ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஏன் என்றால், அணிசேரா இயக்கம் இப்போது உண்மையில் செயலிழந்துவிட்டது. அந்த இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நேரு, என்குருமா, டிட்டோ, நாசர், சுகார்னோ மற்றும் பண்டாரநாயக்க போன்ற மேன்மை மிகு தலைவர்கள் இன்று இல்லை. அவர்களுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு முன்னுரிமைகள் இருக்கின்றன. அத்துடன், மூன்றாம் உலக நாடுகளின் ஒருமைப்பாடுகள் பற்றி அதே நோக்கும் இவர்களிடம் இல்லை.

மேலும், காலப்போக்கில் ஐரோப்பிய காலனித்துவம் பற்றிய நினைவும் காலனித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டல்களை செய்வதற்கான ஊக்கமும் வலிமையும் மறைந்துபோய் கொண்டிருக்கின்றன. அணிசேரா இயக்கம் என்பது ஒருபுறத்தில் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கொண்ட முகாமுக்கும் மறுபுறத்தல் சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பியாவையும் கொண்ட முகாமுக்கும் இடையிலான போட்டா போட்டியின் பின்புலத்தில் கட்டி எழுப்பப்பட்டதாகும். சோவியத் முகாமும் தகர்ந்த அதேவேளை உலக விவகாரங்களில் மையப்பாத்திரத்தை வகிப்பதில் இருந்து ஐரோப்பாவும் அருகிப்போன நிலையில் அணிசேரா இயக்கத்தின் அத்திவாரம் உண்மையில் காணாமல்போய்விட்டது.

இலங்கையில் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தேவைப்படுவது எல்லாம் நாட்டில் சீனாவின்  பிரமாண்டமான முதலீடுகளே ஆகும். அந்த முதலீடுகள் இலங்கையில் பிரகாசமாக தென்படுகின்ற உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களாக மிளிர்கின்றன; இந்தத் திட்டங்கள் தொடர்கின்றன, மேலும், பல வருடங்களுக்குத் தொடரும். வேறு எந்த ஒரு நாடுமே நிறுவனமுமே ஒப்பீட்டளவில் இத்தகைய முதலீட்டை செய்ய முடியாது.

இந்தத் திட்டங்களின் தகுதிகள் பற்றி பெறுமதியான விவாதங்கள் இடம்பெறுகின்றன. இவை நாட்டுக்கா அல்லது தனிப்பட்டவர்களுக்கா நன்மைபயக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் இலங்கை கடனில் மூழ்கி மேலும் கூடுதலான அளவுக்கு சீனாவில் தங்கியிருக்கின்ற நிலைமை ஏற்படலாம். அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு சீனாவினால் கையாளப்படவிருக்கிறது. இது இலங்கை, சீனா மீது நீண்டகாலமாக தங்கியிருக்கப் போகின்றது என்பதற்கான அறிகுறியாக உள்ளது.

தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கு அமெரிக்காவிற்கு கூடுதல் எண்ணிக்கையில் நேச நாடுகள் தேவைப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் முதலீடுகளைப் போன்று பிரமாண்டமான முதலீடுகளை சமாந்திரமாக செய்யாத பட்சத்தில் இது விடயத்தில் அமெரிக்காவினால் குறிப்பிடத்தக்கதாக எதையும் செய்துவிட முடியாது. அமெரிக்கா அதை செய்யத்தயாராகவும் இல்லை, செய்யவும் முடியாது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுடனும் சீனாவுடனுமான இலங்கையின் உறவுமுறையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவது சாத்தியம் இல்லை.

தேவநேசன் நேசையா

5.11.2020 அன்று கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் US Unable to Counter China’s Hold on Sri Lanka என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம்.