பட மூலம், Selvaraja Rajasegar
முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆளுந்தரப்பு எம்பிக்கள் சுமார் 157 பேர் கையொப்பம் இட்ட நிலையில் அவர்களுக்கு மேலதிகமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்ட விடயம் சமகால அரசியலில் பெரும் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான அந்த செய்தி தமிழ், சிங்கள ஊடகங்களில் பரவலடைந்ததுடன் தமிழ் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று (29) தான் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக ஊடக மாநாடு ஒன்றைக் கூட்டி அறிவித்து உள்ளார்.
முன்னதாக அத்தகையதான கோரிக்கை மனு ஒன்றில் கைச்சாத்திட்டபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குறித்த குற்றத்தை இழைத்த நேரத்தில் மதுபோதையில் இருந்தார் என்றும், இளவயதானவராக இருந்தார் என்றும் அந்தத் தவறை நியாயப்படுத்தி இருந்தார். அதேநேரம் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த துமிந்த சில்வா திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், இந்தக் கோரிக்கை மனுவில் கையொப்பம் இட்டதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயம் அரசின் கவனத்தைப் பெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.
மனோ கணேசன் கையொப்பம் இட்டதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக அவர் கூறும் நியாயங்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பலராலும் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானார். தமிழ் அரசியல் கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஒப்பமிட்டு இருந்தால் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், 2/3 பெரும்பான்மையான கையொப்பம் அந்தக் கோரிக்கைக்கு வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் எங்கும் இல்லை. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இவ்வாறு மரண தண்டனைக் கைதிகள் பலர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே, 160 உறுப்பினர் கையொப்பம் இட்டதனால் தாங்களும் கையொப்பம் இட்டோம் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் வறட்டு வாதம் மக்களிடத்தில் எடுபடவில்லை. 150 ஐ விட குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டாலும் அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு பொதுமன்னிப்பு வழங்கலாம். வழங்கப்படவும் போகிறது.
அந்த ஒரு இலக்கை வைத்தே ஆளும் அரசாங்கத்தின் கட்சிக்கு சார்பாக துமிந்த சில்வா அவர்களின் குடும்ப ஊடக நிறுவனமான ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ஹிரு/ சூரியன்/ கோல்ட்) செயற்பட்டது.
எனவே, எப்படியோ நிறைவேறப் போகிற விடயம் ஒன்றில் தாங்களும் பங்காளி ஆகிவிடுவதன் மூலம் தமது அரசியலுக்குத் தேவையான விளம்பரத்தை அந்த ஊடக நிறுவனத்தின் ஊடகங்களில் பெற்றுக் கொள்வதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அதனை வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடியாது. ஆகையால் வேறு காரணங்களை ச் சொல்லப்போய் அவை பிசுபிசுத்துப் போனது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி மூன்று கட்சிகளின் ஒன்றணைந்த புரிந்துணர்வு கூட்டணி ஒன்றாகும். கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களிலும் ஆறு உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட கூட்டணி இலங்கை அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பது என்ற தீர்மானத்தை 20ஆம் திகதி எடுத்தபோதும் அது முழுமனதுடன் எடுக்கப்பட்ட தீர்மானமல்ல என்பதையே இந்த துமிந்த விவகாரம் எடுத்துக் காட்டுகின்றது.
ஏனெனில், இருபதாவது திருத்தம் 22ஆம் திகதிதான் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிலையில் 20ஆம் திகதியே அது தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு கோரும் மனுவில் உறுப்பினர்களிடத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பொது மனுவில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்தத் தமிழர் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் கையொப்பம் எப்படி உள்வாங்கப்பட்டது என்பதே இங்கு சந்தேகத்துக்கு உரிய புள்ளியாகும்.
இதனையும் கடந்து தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்து வாக்களித்ததுடன் 23ஆம் திகதி காலையிலேயே அவருக்கு எதிராக கூட்டணியின் உயர்பீட குழு கூடி அவரை கூட்டணியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவசர அவசரமாக எடுத்தது. அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாத அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமே தான் பதில் அளிப்பேன் என கன்னத்தில் அறைந்தால் போல பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில் ஒரு பிடி இருப்பதுபோல் இருந்தது.
இந்த நிலையில் ஒரு ஊடகவியலாளர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கை மனுவில் நீங்கள் கையொப்பம் இட்டீர்களா எனக் கேட்டபோது ‘ நீங்களும்’ என்று கேளுங்கள் என்று பதில் கூறி இருக்கிறார் அரவிந்தகுமார். இதன்போதே அரவிந்தகுமார் அல்லாத தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கையொப்பம் இட்டுள்ளார்கள் எனும் சந்தேகம் ஊடகவியலாளருக்கு எழுந்தது.
மறுபுறத்தில் ஆங்கில ஊடகங்கள் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையொப்பம் இட்டுள்ளது என செய்தி வெளியிட்டது. மேலும் அதற்கான கூட்டணி தலைவரின் விளக்கத்தையும் பதிவு செய்தது. அதன் பின்னர் தமிழ் ஊடகங்களும் அவரது குரலிலேயே அவரது நியாயங்களைப் பெற்று ஒளிபரப்பின. அந்த விளக்கங்கள் மனோ கணேசன் அவர்களது பேஸ்புக்கிலும் பதிவிடப்பட்டிருந்தன.
அவரது நியாயப்பாடுகள் தொடர்பில் தமிழ் ஆங்கில சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாவதை அவதானித்த மனோ கணேசன் முதலாவதாக தனது பேஸ்புக்கில் பதிவை அகற்றினார். அப்போதே அவரது தடுமாற்றம் ஆரம்பித்துவிட்டது எனலாம். அதன்பிறகு இன்னும் கொஞ்சம் சோடனைகளுடன் தனக்கு எதிராக வரையப்பட்ட கருத்துப்படத்தையும் இட்டு தமது கருத்தை நியாயப்படுத்த முயன்று தோற்றுப்போனார்.
இந்த நிலையிலேயே இன்று (29) ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி தாம் கையெழுத்து இட்டதை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். எழுத்து மூலமாக கையொப்பம் இட்டு அதனை ஜனாதிபதிக்கு அறிவித்து விட்டு வெறுமனே ஊடக சந்திப்பில் மீளப்பெறுவது வேடிக்கையானதுதான். எனினும் அந்த நாடகத்தை நடாத்தி முடித்துள்ளார்.
இந்த நாடகத்தின் அடுத்த கட்ட காட்சிகளே இனி சுவாரஷ்யம் நிறைந்தவை.
ஏனெனில், மனுவில் கைச்சாத்திடும்போது ‘கூட்டணி’ யாக இட்டவர்கள், வாபஸ் பெறும்போது தனி மனோகணேசன் மாத்திரம் வாபஸ் பெறுவதாகவே அறிவித்து உள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான தான் தலைமை வகிக்கும் ‘ஜனநாயக மக்கள் முன்னணி’ உறுப்பினர்கள் மாத்திரமே அமர்ந்து இருந்ததை அவதானிக்க முடிந்தது. அதில் அமர்ந்திருந்த அவரது கட்சியின் பிரதித் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எவ்வித பதற்றமும் இல்லாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஏனெனில், அவர் குறித்த கோரிக்கை மனுவில் கையொப்பம் இட்டு இருக்கவில்லை. எனவே, வாபஸ் பெறும் விடயத்தில் அவருக்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் 20ஆவது திருத்தத்தை எதிர்த்தபோது உறுப்பினர்கள் ஆதரித்த நிலைக்கு மாறாக தனது தலைவர் ஒப்பமிட்ட கோரிக்கை மனுவில் தான் ஒப்பமிடாமல் மறுத்து இருந்ததன் மூலம் தனது தீர்மானம் தொடர்பில் புன்னகைபூத்த முகத்துடன் அவரால் அமர்ந்திருக்க முடிந்தது. தவிரவும் தான் கையொப்பம் இடவில்லை என மறுப்பு அறிக்கை விடாமல் ஒரு கூட்டுப் பொறுப்பினையும் கடைபிடித்து இருந்தார்.
ஆனால், கையொப்பம் இட்டு வாபஸ் பெற்ற கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இந்தக் கூட்டுப் பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. தான் மட்டும் வாபஸ் பெறுவதாக அறிவித்து கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்திவிட்டார்.
மலையக மக்கள் முன்னணியின உறுப்பினரான அரவிந்தகுமார் இருபதாவது திருத்தத்தை ஆதரித்ததன் காரணமாக ஆளுங்கட்சியின் உறுப்பினராக மாறியதால் அவர் இது தொடர்பில் அலட்டல் கொள்ளத் தேவை இல்லை. ஆனால், கூட்டணி தீர்மானத்தின்படிதான் இந்த வாபஸ் தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்குமானால் இப்போது கோரிக்கை மனுவில் கையொப்பமிட்ட பிரதித் தலைவர்களான இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோருடன் கையொப்பமிட்ட இன்னுமொரு உறுப்பினரான உதயகுமாரும் வாபஸ் பெறவேண்டும்.
அவர்கள் மூவரும் வாபஸ் பெற மறுத்தால் கூட்டணி தீர்மானத்தை மீறியதாகவே கருத இடமுண்டு. கூட்டணி தலைவரே வாபஸ் பெற்றதன் பின்னர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெறாமல் விட்டால் அது கூட்டணியின் தலைமையின் பலவீனம். இந்த பலவீனம் தெரிந்துதான் அரவிந்தகுமார் எகத்தாளமாக பதில் அளித்திருக்கக்கூடும். அதேநேரம் அரவிந்தகுமாருக்கு எதிராக அவசர அவசரமாக தானே தீர்மானம் எடுத்து அவரை கூட்டணியில் இருந்து நீக்கி அதனை நாடாளுமன்ற குழுவிலும் அரசியல் குழுவிலும் அங்கீகரித்தது போல மனுவில் இட்ட கையொப்பத்தை வாபஸ் பெறாத உறுப்பினர்கள் மீதும் கூட்டணி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுக்க அங்கே நாடாளுமன்ற குழு கூடும் சாத்தியமே இல்லை. குழுவின் அழைப்பாளர் அரவிந்தகுமார் அணிமாறி சென்றுவிட்டார். எஞ்சியோரில் வேலுகுமார் தவிர ஏனையோர் கையொப்பம் இட்டவர்கள். இந்த ஐவரையும் தாண்டி அங்கே அரசியல் குழுவும் கூட முடியாது.
ஆக துமிந்தவை விடுதலை செய்யக் கோரும் மனு விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தடுமாறும் முற்போக்கு கூட்டணியாகவே ஆகி நிற்கிறது.
மயில்வாகனம் திலகராஜா