பட மூலம், Nikkei Asia
ஜே.ஆர். ஜெயவர்தனவின் 1978 அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கோட்டபாய ராஜபக்ஷ – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மிகவும் சௌகரியமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை சபையில் பெறக்கூடியதாக இருந்தது.
2019 நவம்பரில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்ட பிறகு 20ஆவது திருத்தத்தைப் போன்று வேறு எந்தவொரு விவகாரமும் பெரிய சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. நாடும் மக்களும் இன்று எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான கொவிட் – 19 சவாலுக்கு மத்தியிலும் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிவிடுவதிலேயே அரசாங்கம் குறியாக இருந்தது. தேசிய முன்னுரிமைக்குரிய விவகாரங்களில் இந்தத் திருத்தத்தை விடவும் கொவிட் – 19 நெருக்கடிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.
20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான மாபெரும் ஆணை ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்று நியாயம் கற்பிப்பதற்கு அரசாங்கத் தரப்பினர் கடுமையாக பாடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. 1978 அரசியலமைப்பை வரைந்த ஜெயவர்தன நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியினாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றுவது சாத்தியமில்லை என்று கணிப்பிட்டார்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமாக ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. இரு தேசிய தேர்தல்களிலும் மக்கள் முன்னால் வைக்கப்பட்ட விஞ்ஞாபனங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷவோ அல்லது அவரது அரசாங்கமோ 20ஆவது திருத்தத்தைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இந்த உண்மையை அவர்கள் அலட்சியம் செய்துவிட்டார்கள். இப்போது பதவியில் இருப்பவர்களில் ஒருவரைத்தவிர ஏனையவர்கள் 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தார்கள் என்றபோதிலும் அவர்கள் அந்தத் திருத்தத்துக்கான தங்களது எதிர்ப்பில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் புதியதொரு அரசியலமைப்பை கொண்டுவருவார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டது என்கிற அதேவேளை, ஒரு 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் என்று வாக்காளர்களுக்கு ஒருபோதும் கூறப்பட்டதில்லை. கடந்தவாரம் நிறைவேற்றி முடிக்கப்பட்ட காரியத்துக்கு மாபெரும் மக்கள் ஆணை இருந்தது என்று உரிமைகோருவது சரியான ஒன்றல்ல என்பது தெளிவானது.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைக்கு பதிலாக 1978 அரசியலமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்துவருகின்ற விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் கட்சித்தாவலைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை புகுத்துவதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது பயனளிக்கவில்லை. ஒரு கட்சியின் பட்டியலில் இருந்து தெரிவான எம்.பி. இன்னொரு கட்சிக்கு தாவினால் அவர் பதவி இழப்பதை உறுதிசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி படுதோல்வியிலேயே முடிந்தது. அதற்குப் பிறகு பெருவாரியான கட்சித்தாவல்களை நாம் பார்த்துவிட்டோம். கடந்தவாரமும் கட்சித்தாவல்களைக் கண்டோம்.
ஆனால், தனது பக்கத்தை மாற்றிக்கொண்ட எந்தவொரு எம்.பியாவது நாடாளுமன்றத்தில் தனது ஆசனத்தை இழந்ததை நாம் கண்டதில்லை. விசுவாசத்தை மாற்றிக்கொள்வதற்கு கொடுக்கப்படுகின்ற ஊக்குவிப்புகள் பற்றி பேசத்தேவையில்லை. எவருமே இலவசமாக எதையும் செய்வதில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். கட்சி மாறுபவர்கள் நன்கு போசிக்கப்படுகிறார்கள்.
தான் செய்த காரியத்துக்காக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை என்று 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சபையில் வாக்களித்த சமகி ஜன பலவேகயவின் எம்.பி. ஒருவர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. வெள்ளிக்கிழமை சபையில் விளக்கமளித்த அந்த தேசியப்பட்டியல் பெண் எம்.பி. “நான் ஒரு சதத்தையேனும் வாங்கவில்லை. முடிந்தால் நிரூபியுங்கள். எனது கட்சியையும் விட நாட்டைக் கூடுதலாக நேசிக்கிறேன்” என்று சொன்னார்.
அரசியலுக்கு புதியவரான அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளில் ஒன்றான சமகி ஜன பலவேகயவின் ‘சொந்தக்காரர்’ என்று கூறப்படுகிறது. சஜித் பிரேமதாசவும் அவரது ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறியபோது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பிப்பதற்காக சமகி ஜனபல வேகயவின் பெயரை தமதாக்கிக்கொண்டார்கள். அவ்வாறு செய்துகொண்டபோது எத்தகைய ஏற்பாடுகளுக்கு இணங்கிக்கொண்டார்கள் என்பது எமக்கு தெரியவில்லை. ஆனால், டயானா கமகே தேர்தலுக்குப் பின்னரே தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற பெருவாரியான கட்சிகளை அரசியல் அனுகூலத்துக்காக மற்றவர்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதை இல்லாமல் செய்வதற்காக இத்தகைய கட்சிகளை பதிவில் இருந்து ஆணைக்குழு நீக்கிவிடவேண்டும் என்பது எமது ஒரு யோசனை.
புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கும் புதிய தேர்தல் முறை 2021 நவம்பர் மட்டில் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். தனது பதவிக்காலத்தின் முதலாவது வருட நிறைவில் அதை ஜனாதிபதி உறுதிசெய்யவேண்டும்.
20ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டைக்குடியுரிமை தொடர்பான ஏற்பாடு முக்கியமாக கவனத்திற்கு எடுக்கவேண்டியதாகும். இலங்கையினதும் அமெரிக்காவினதும் குடியுரிமைகளைக் கொண்டிருந்த கோட்டபாயவையும் பசிலையும் இலக்குவைத்தே குறிப்பிட்ட ஏற்பாடு 19ஆவது திருத்தத்தில் புகுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டபாய தனது அமெரிக்க குடியரிமையை துறந்த போதிலும் பசில் ராஜபக்ஷ அவ்வாறு செய்யவில்லை. இரட்டைக்குடியுரிமை தொடர்பாக 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகள் நீக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களில் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முக்கியமானவர்கள். 2021 நவம்பரில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்போது இரட்டைக்குடியுரிமை தொடர்பாக 19ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடு மீண்டும் புகுத்தப்படும் என்று ஜனாதிபதி அளித்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே தாங்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர்கள் இப்போது கூறுகிறார்கள்.
இரட்டைக்குடியுரிமை தொடர்பான 19ஆவது திருத்த ஏற்பாடு மீண்டும் புகுத்தப்படுமானால், எதற்காக தற்போது 20ஆவது திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஏற்பாடு ஒரு வருடத்துக்கு விட்டுவைக்கப்படவேண்டும்? பதிலளிக்கப்படாமல் இருக்கும் கேள்வி இது. இந்த ஏற்பாடு பயன்படுத்தப்படமாட்டாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறதா? 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக இல்லை.
இரட்டைக்குடியுரிமையுடையவர்களை ஜனாதிபதி தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ போடியிடவிடாமல் தடுப்பது மாத்திரமல்ல, அவர்கள் இந்த நாட்டின் உயர்பதவிகளிலும் அமர்த்தப்படக்கடாது என்பது எமது நம்பிக்கை. முன்னைய அரசாங்கத்தில் 19ஆவது திருத்தத்தை வரைந்தவர்கள் இரட்டைக்குடியுரிமையுடையவர்களை வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக நியமித்து சீரழிவை அவர்களாகவே தொடக்கிவைத்தார்கள் என்பது பெரிய வெட்கக்கேடு. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் குடிமகன் நியமிக்கப்பட்டார். அவர் இப்போது பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு அகப்படாமல் தலைமறைவாக இருக்கும் ஒரு நபர்.
25.10.2020 சண்டே ஐலண்ட், ஆசிரியர் தலையங்கத்தின் தமிழாக்கம்.