பட மூலம், Vincent Van Gogh, WikiMedia
ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாள் அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இது கடந்த மே மாதம் கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் தத்தமது அன்னையரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தனர். இதில் அதிகமானவை ஆண்களால் பகிரப்பட்டிருந்தன. பால், பால்நிலை பல்வகைமையினைக் கொண்டவர்களும் தங்களுடைய தாய்மை உணர்வினை வெளிப்படுத்தியிருந்தனர். அதேசமயம் பல பெண்கள் தமது செல்லப்பிராணிகள் மீது தாம் தாய்மை உணர்வைக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தமையினையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
சில சமூகங்களில் தாயைக் கடவுளாகவும், இன்னும் சில சமூகங்களில் கடவுளுக்கு அடுத்த தரத்திலும் வைத்துப் போற்றுகின்றனர். ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுப்பதனை பெண் என்ற பிறப்பு ‘பூரணமடைவதாக’ சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது. இக்கட்டுரை அன்னையர் தினம், தாய், தாய்மை தொடர்பாகவுள்ள தற்போதைய சமூக வெளிப்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகளையும், அவற்றுக்கு பின்னால் மறைந்துள்ள அடக்குமுறை மற்றும் வன்முறையான அரசியல் பற்றிப் பேசுகிறது.
அன்னையர் தினம் – போருக்கெதிரானது
ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், இன்னும் பல பெண்களுடன் சேர்ந்து பெண்களதும், சிறார்களதும் மேம்பட்ட சுகாதார நலனுக்காகவும், அமெரிக்க சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு போராட்ட வீரர்களதும் தாய்மாரை ஒன்றுசேர்த்து போருக்கு எதிராகவும், சர்வதேச ஒற்றுமையை முன்வைத்தும் செயற்பட்டு வந்தார்.
1905இல் இவரின் மறைவுக்குப் பின்னர், இவரது மகளான அன்னா ஜார்விஸினால் சமூக உருவாக்கத்தில் பெண்களது பங்களிப்பையும், போர்களின் போது தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுக்கும் தியாகத்தையும், அக்கொடுமையான போர்களுக்கு எதிரான குரல்களையும் நினைவூட்டும், கொண்டாடும், அன்னையரது செயற்பாடுகளை கௌரவிக்குமுகமாக ஒரு தினத்தை அன்னையர் தினம் என அரச அங்கீகாரத்துடனான விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்து வந்தமையைத் தொடர்ந்து ஒவ்வொரு மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு தினத்தை அன்னையர் தின விடுமுறை நாளாக அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலங்களும் படிப்படியாக அறிவித்தன.
அன்னையர் தினம் என்பது போருக்கு எதிரான இயக்கமாகும். ஒரு தாய், தனிப்பட்ட அத்தாயுடைய தாய்மையுணர்வு என்பதன்றி சமூக மாற்றத்துக்கான ஒன்றிணைவின் வரலாறே இந்த அன்னையர் தினம். ஆனால், ஆழமான பெண்ணிலைவாத அரசியல் கொண்ட இந்நாளின் பின்னணி முற்றாக மறக்கடிக்கப்பட்டு, இன்றைய காலகட்டத்தில் வெறும் வர்த்தக நோக்கிலானதாக திரிபுபடுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஏனைய கொண்டாட்ட நாட்களைப் போன்று இத்தினத்தையும் அன்பளிப்புகளாலும், அன்னையரை புனிதராக்கும் வாழ்த்தட்டைகளாலும் நிரப்பும் நாளாக மாற்றப்பட்டுள்ளமையைக் காணலாம்.
இத்தினத்தை உருவாக்கப் பாடுபட்ட அன்னா 1920ஆம் ஆண்டிலேயே பின்வருமாறு கூறியிருந்தார், “கிறிஸ்துமஸ் மற்றும் ஏனைய கொண்டாட்ட தினங்களைப் போன்று சுமையான, வீணான, பெருஞ்செலவில் அன்பளிப்பினை வழங்குவதான ஒரு நாளாக அன்னையர் தினம் வருவதில் எங்களுக்கு எதுவித மகிழ்ச்சியும் இல்லை.” இதனை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது.
கருவுறுதல் என்பது எப்போதும் கொண்டாடப்படுகின்றதா?
சமூக இயைபாக்கத்தில் கருவுறுதல் என்பது புனிதமாகவும், பேறாகவும் கருதப்படுகின்றது. இதனையே ‘தாய்மை’ என அழைக்கின்றனர். கருவுறுதல் என்பது திருமணமான பெண்களுக்கு மட்டுமே உரியதொரு விடயம் என நோக்கப்படுகின்றது. இதனால் திருமணமாகி, கணவன் உடனிருக்கும் பெண்களுக்கு கருவுறுதல் ஒரு கட்டாய தகுதியாகக் கருதப்படுகின்றது. அதேவேளை திருணமாகாத, ‘சமூக ஏற்பின்’ அடிப்படையில் கணவன் இல்லாத பெண்கள் கருவுறும் போது அது ஒரு நடத்தைப் பிறழ்வாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
மேலும், திருமணமான பெண் சுயதெரிவின் மூலமாகவோ அல்லது மருத்துவ காரணங்களினாலோ கருவுறா விட்டால் அதனை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. அது மட்டுமன்றி எப்போதும் ‘குறை’ பெண்ணின் மீதுதான் என்பது போல நடந்து கொள்வதோடு, குறித்த பெண்ணை சமூகத்தில் சுப காரியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிகழ்வுகளில் இருந்தும் தள்ளிவைக்கிறது. அதேநேரம் பாலியல் வன்கொடுமையின் காரணமாக அல்லது இரத்த உறவின் பலாத்காரத்தினால் ஒரு பெண் கருவுற்றால் குறித்த பெண்ணை மட்டுமன்றி குழந்தையையும் இழிவாக நோக்கும் நிலை சமூகத்தில் இருப்பதனைக் காணலாம்.
கருவுறலில் பால், பால்நிலை
தாய், தாய்மையுணர்வு, கருவுறுதல் என்பதனை பிறப்பில் பெண்ணாகப் பிறந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் மட்டுமே தொடர்புறுத்தி பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமன்றி பால் பல்வகைமைப் பண்புகள் கொண்டவர்கள் மற்றும் சில திருநம்பிகள் (பிறப்பில் பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு தம்மை ஆண் என உணர்பவர்கள்) கூட கருவுற்று, பிள்ளைகளைப் பிரசவிக்கின்றமை பற்றி எமது சமூகத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாகத் தெரிய வருகின்றன.
‘தாய்மை என்பது ஒரு நடத்தையே! அதற்கும் ஒரு நபரின் பால்நிலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை’ என்கிறார் திருநர்களுக்கான செயற்பாட்டாளரான கௌரி சவந்த். இவர் நன்கறியப்பட்ட செயற்பாட்டாளர் என்பதோடு, ஒரு குழந்தையை தான் மகவேற்றுக் கொண்டது மட்டுமன்றி பல குழந்தைகளின் நலனுக்கான ஒரு சமுதாயத்தையே உருவாக்கி அச்சிறார்களுக்காக தொடர்ச்சியாகச் செயற்பட்டும் வருகின்றார்.
அடக்குமுறையற்றவர்களாக நாம் வாழ்வதற்கு ‘வழமையான’ தாய்மை, தாய் என்று அடையாளப்படுத்தப்பட்டவற்றைத் தாண்டி கூருணர்வுடன் சிந்திக்க வேண்டியுள்ளது.
சமூகத்தில் பெண் என்பதைத் தாண்டிய பால், பால்நிலை அடையாளங்களுடன் இருப்பவர்களது தாய்மை உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை. அவர்களது உணர்வுகள் தேவையற்ற ஒன்றாகவும், வெறுக்கத்தக்கதாகவும் நோக்கப்படுகின்றது. தாய்மை உணர்வை பெண்களுக்கே உரிய ஒரு பண்பாகவும், உணர்வு நிலையாகவும் பார்ப்பதனால், ஏனைய பால், பால்நிலையை உடையவர்களின் தாய்மை உணர்வை சமூகம் நிராகரித்து ஒடுக்குமுறைக்குள்ளாக்கின்றது. இதற்கு தந்தைகளும் அல்லது ஆண்களும் கூட விதிவிலக்கல்ல. தாய்மை உணர்வை கொண்டாடுகையில் பால், பால்நிலை பல்வகைமை உடையவர்களது தாய்மை உணர்வையொட்டிய சமூகத்தின் பார்வையையும், நடத்துகையையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
‘தாய்மை’ தொடர்பான கற்பிதங்கள்
தாய்மை என்பது பெண்ணுக்குரியது, அதிலும் குறிப்பாக பிள்ளை பெற்ற பெண்ணுக்குரியது, தாய் அன்பின் வடிவம், தாய் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் காட்ட மாட்டார், தாய் தியாகத்தின் இருப்பிடம் என்றெல்லாம் மனப்பாங்குகள் சமூகத்தில் காணப்படுகின்றன. இந்த மனப்பாங்குகள் திருநர்கள் அல்லது ஆண்கள் தாய்மையுணர்வுடன் இருப்பதனை அங்கீகரிக்க மறுப்பது மட்டுமன்றி மழுங்கடிக்கவும் செய்கின்றன. பல்விதமான குடும்ப அமைப்புகளில் தந்தையாக அறியப்படும் ஆண்களிலும் எத்தனையோ பேர் குழந்தையை அன்பு செலுத்தி, பராமரிப்பவர்களாக உள்ளனர். சில திருநர்கள் தாமே குழந்தைகளைப் பெற்றெடுத்தோ அல்லது மகவேற்புச் செய்வதன் மூலமோ அன்பு காட்டி வளர்க்கின்றனர். தத்தமது பிள்ளைகளுடன் மட்டுமன்றி உறவுக்கார, உறவுகளற்ற பிள்ளைகளுடனும் பலர் தாய்மையுணர்வுடன் நடந்து கொள்கின்றனர்.
இங்கு தாய்மை என்ற உணர்வு நிலை தொடர்பான கலந்துரையாடல் அதிகம் பேசப்படும் அதேநேரம், தந்தைமை அடிப்படையிலான நோக்குகள் கதைக்கப்படுவதில்லை. தந்தைமை என்பது இறுக்கமான வன்முறையின் வடிவமாகவும், தாய்மை என்பது தளர்ந்த அதேவேளை அன்பின் வடிவமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். குழந்தை வளர்ப்பு, அரவணைப்பு, பாசம், விட்டுக்கொடுப்பு, தியாகம், பாரபட்சமின்மை, பொறுமை என்பவற்றின் குறியீடாக பெண் அடையாளப்படுத்தப்படுகின்றார். அதேவேளை கண்டிப்பு , மிரட்டல், பாதுகாப்பு, கோபம், என்பவற்றின் குறியீடாக தந்தை முன்நிறுத்தப்படுகின்றார். இவை மென்மேலும் தாய்மை சார்ந்த பால்நிலைப்படுத்தப்பட்ட மனப்பாங்கினை விதைக்கின்றன.
எந்தவொரு சிந்தனையும் இன்றி, ஒரு குழந்தையிடம் ‘உனக்கு அம்மாவை அதிகம் பிடிக்குமா’, ‘அப்பாவை அதிகம் பிடிக்குமா’ , எனக் கேள்வி கேட்கும் சமூகம் ஒரு தாயிடம் மட்டும் நீ எல்லாக் குழந்தைகள் மீதும் சம பாசம் காட்டவேண்டும் என எதிர்பார்க்கிறது. ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ போன்ற பழமொழிகளின் ஊடாகவும் தாய்மையின் இலக்கணம் கட்டமைக்கப்படுகின்றது. இது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகியும் எவ்வளவுதான் பாதகமான செயல்களைச் செய்தாலும், தாய் பிள்ளையின் பக்கமே நிற்பார் அல்லது நிற்க வேண்டும், பிள்ளையை மனதளவில் வெறுத்தாலும் எவ்வளவு தவறுகள் செய்தாலும், அக்குழந்தையை தாயானவர் வெளிப்படையாக நேசித்தே ஆக வேண்டும் என்ற கற்பிதங்களை விதைக்கிறது.
உயிர்கள் என்ற அடிப்படையில் உணர்வுகள் ஆளுக்காள் வேறுபடும். ஆனால், தன் குழந்தைகளை வெறுப்பதும், பாரபட்சம் காட்டுவதும் ஒரு தாயின் பிறழ்வாகச் சித்தரிக்கப்படுகின்றது. என்னதான் இருந்தாலும் ஒரு தாய் என்பவர் அனைத்துக் குழந்தைகளையும் சமமான பாசத்துடன் அணுக வேண்டும் என்று சமூகம் திணிக்கிறது. பிள்ளை பெற்றுக் கொண்ட அனைவரும் தமது பிள்ளைகள் சார்ந்து மிகவும் அன்பாக இருப்பார்கள் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட எடுகோள் பிரச்சினைக்குரியதே. பிள்ளையின் பிறப்பிலிருந்தே குறித்த பிள்ளையை மட்டும் வெறுக்கும் மனநிலை சில தாய்களுக்கு இருக்கின்றது. அது மட்டுமன்றி சில குழந்தைகள் மீது தாய்மையுணர்வு வரப் பெறாத தாய்மாரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதனை நாம் ஏற்றுக் கொள்ள மறுத்து தாய்மையை ஒரு கற்பனாவாதத்துக்குள் தள்ளுவதனால் யதார்த்தத்தில் இப்படியான சூழ்நிலைகளுக்கு ஆளாகும் தாய்களதும், குழந்தைகளதும் மனநிலை பற்றி கவனஞ் செலுத்தத் தவறுகிறோம். பிரச்சினைகளை முதலில் அடையாளப்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காணமுடியும். இவ்வாறான தாய்மார்கள் இருக்கிறார்கள் என்பதனை அடையாளப்படுத்தத் தவறுவது தொடர்ந்தும் குறித்த தாயினதும், குழந்தையினதும் உடல், உள நலனைப் பாதிப்பதாகவே முடியும்.
உதாரணமாக, பெற்ற குழந்தையைக் கொலை செய்யும் தாய்மார்கள், குப்பைத் தொட்டியில் அல்லது வேறு இடங்களில் கைவிட்டுச் செல்லும் தாய்மார்கள் தொடர்பான சமூகத்தின் பார்வை மிக மோசமாக உள்ளது. கருவுற்றிருக்கும் போதும், அதன் பின்னரான காலத்திலும் மனநிலைப் பிறழ்வுகள் ஏற்படலாம் என்பது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயம் என்பதுடன் அந்த மருத்துவ அடிப்படையினைக் கொண்டு சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது.
இலங்கையின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கொலைக் குற்றத்திற்கான பிரிவு 294 இன் 5ஆவது விதிவிலக்கானது ஒரு குழந்தையின் தாய் தனது பிரசவத்தின் விளைவிலிருந்து முற்றாக பழைய நிலைக்குத் திரும்பாத காரணத்தினால் அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதன் விளைவினால் அவரது மனநிலை குழப்பமடைந்த நிலையில் தன் குழந்தையின் வயது 12 மாதங்களுக்கு உட்பட்ட நிலையில் இருக்கையில், அக்குழந்தையைக் கொலை செய்வாராயின் அது படுகொலைக்கான விதிவிலக்குகளுள் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பல சட்டங்கள் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பாதிப்பானவையாக இருக்கும் அதேவேளை இவ்வாறான சில சட்ட ஏற்பாடுகள் பெண்களது உளநலன் பற்றிய கரிசனையையும் கொண்டுள்ளன. ஆனாலும், இவை பற்றி சமூகத்தில் பேசப்படுவதோ, அறியப்பட்டிருப்பதோ இல்லை என்றே சொல்லலாம். இவ்வாறான அறியாமைகள், ஆணாதிக்க சிந்தனைகள், பால்நிலைப்படுத்தப்பட்ட தாய்மை என்பன கூட்டுச் சேர்ந்து இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுகின்ற தாய்மாரினை வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகின்றன.
அதேசமயம் ஒரு தாய் தான் பெற்றெடுத்த குழந்தையை வளர்க்க விரும்பினாலும், அதற்கான சூழ்நிலை இல்லாததன் காரணமாக குழந்தையை கொல்லவோ, கையுதிர்க்கவோ நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும் சமூக புறக் காரணிகளை ஆராயவோ, அவற்றைத் திருத்தியமைக்கவோ அத்தாய்மார்களைத் தூற்றுபவர்கள் எவரும் முன்வருவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். குழந்தையை சுமந்து பெற்ற காரணத்துக்காக மொத்த பழியையும் குறித்த தாயின் மீது சாட்டிவிடும் ஆணாதிக்க சிந்தனையை இங்கு யாரும் ஏன் கேள்வி கேட்பதில்லை?
காகம் தன் கூட்டில் வளர்ந்த குயிலை கொத்தித் துரத்தும் என கற்பிதம் இருந்தாலும், சில காகங்கள் தன் குஞ்சு போல வளர்ப்பது, ஆடுகள் தம் குட்டிகளில் ஒன்றை நேசித்து பாலூட்டுவதும் அதேசமயம் இன்னொன்றை வெறுத்து பாலூட்ட மறுப்பதும், நாய் முதல் தடவை குட்டி ஈன்றவுடன் சில குட்டிகளை தான் உண்பது, ஆட்டுக்குட்டிக்கு மாடு பால் தருவது, நாய் பூனைக்குட்டிக்கு பால் கொடுப்பது, நாய்குட்டிகள் ஆட்டிடம் பால் குடிப்பது, மானை புலி வளர்ப்பது என தன் குட்டி அல்லாத பிற உயிரினங்களின் குட்டிகளுக்குப் பாலூட்டி, உணவூட்டி வளர்க்கும் உயிரினங்கள் என எமக்கு கற்பிக்கப்பட்ட சமூக உண்மைகளில் இருந்து விலகிய உயிரியல் செய்முறைகளும், யதார்த்தங்களும் பல உள்ளன. மனிதர்களிலும் தாய்மை என்பதற்கான கற்பிதங்களும் கூட உயிரியல் மற்றும் உணர்வு சார்ந்த விடயங்களில் இருந்து விலகியிருப்பதனை அறிந்து கொள்ளலாம். இங்கு ‘தாய்மை’ என்பதனை ஒப்பீடு செய்வதோ அல்லது பொதுமைப்படுத்துவதோ பிரச்சினைக்குரியதாகின்றது.
‘தாய்மை’ என்பதன் ஊடாக பரப்பப்படும் வன்முறை
‘தாய்மை’ என்ற அடிப்படையில் குறிப்பாக பெண்கள் பல காலமாகவே அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வெவ்வேறு தளங்களில் பெண்கள் மீதான அடக்குமுறைகளாக கட்டமைக்கப்படுகின்றன.
திருமணமான அனைத்து பெண்களும் கட்டாயம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அதிலும் குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எமது சமூகங்களில் வலுவாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக தாமாக விரும்பி குழந்தை பெறாமலிருக்கும் பெண்கள் என்றாலும் அல்லது பலவித காரணங்களுக்காகக் குழந்தைளை பெற்றுக் கொள்ள முடியாத சூழலில் இருக்கும் பெண்கள் அனைவரும் இழிவான சொற்பிரயோகங்களுக்கும், இழிவான பார்வைக்கும், நடாத்துகைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக திருமணமாகி ஒருசில மாதங்களில் கர்ப்பந்தரிக்காவிட்டால் உடலில் ஏதும் பிரச்சினையோ என்ற கேள்விகள் எழுப்பப்படுவதனால் பெரும் மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக நேரிடுகின்றது. எத்தனை வயதானாலும், குறித்த உடல்பற்றிய மருத்துவ கரிசனைகள் இன்றியும் எப்படியாவது ஒரு குழந்தையைப் பெற்றுவிட வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு திருமணமான பல பெண்கள் ஆட்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆண் பிள்ளைகளை விரும்பும் ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வது மட்டுமன்றி அந்தத் தாய்க்கு இழைக்கப்படும் கொடுமைகளும் ஏராளம். மேலும் கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் கருவினைக் கலைத்து விடும்படி அழுத்தங்களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக வேண்டியுமுள்ளது. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வன்முறைக்கு முகங்கொடுக்கும் கருவினைச் சுமக்கும் தாய்களின் தாய்மையுணர்வைப் பற்றி இச்சமூகம் சிந்திப்பதில்லை.
பெற்றால்தான் தாயா?
பெற்றால்தான் தாய் எனும் கோட்பாட்டிலிருந்து விலகி உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலர் தாமே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். சிலர் தம்மால் பிள்ளைகளைப் பெற முடியாத நிலையில் மகவேற்கின்றனர். இன்னும் சிலர் தாம் பிள்ளைகளைப் பெறப் போவதில்லை, எமது அன்பையும், வளங்களையும் கொண்டு ஆதரவற்றிருக்கும் பிள்ளைகளை மகவேற்கப் போகிறோம் என்ற கொள்கையோடு மகவேற்கின்றனர். இன்னும் சிலர் எத்தனையோ அனர்த்தங்களின் போது அநாதரவான பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் நீதிமன்றங்களின் அவதானிப்பின் கீழ் வரும் சிறுவர் இல்லங்களில் சேவையாக சிறுவர்களை அன்பு காட்டி பராமரித்து வருகின்றனர்.
இவற்றை விடவும் குறிப்பிட்டுச் சொல்லப்படத் தக்க ஒரு முறை பெண்கள் சேர்ந்து சமுதாயமாக குழந்தைகளை வளர்த்தெடுப்பதாகும். இங்கு பலர் குறித்த குழந்தைக்கு தாய் என்றரீதியில் செயற்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களது ‘பாதுகாப்பு இல்லங்களில்’ வளரும் பிள்ளைகளையும் ஒன்று சேர்ந்து வளர்ப்பவர்களும் உண்டு. நண்பர்களது பிள்ளைகளை தாய்மையுணர்வுடன் வளர்ப்பவர்களும் இருக்கின்றனர். இந்தப் பட்டியல் நிச்சயமாக இன்னும் தொடரக் கூடியதே.
தாம் பெறாவிட்டாலும் அன்போடும், அரவணைப்போடும் குழந்தைகளை பராமரிக்கும் பலர் காணப்படுகின்றனர். இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம் ‘பெற்றால்தான் தாய் அல்லது தாய்மை உணர்வு எழும் என்பது மீள் சிந்தனைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் என்பதாகும். தாய்மை என்பது ஒரு உணர்வு நிலை, அந்நிலை யாருக்கும் வரலாம், வராதும் போகலாம் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
கருவுறுவதனை ஊக்குவிக்கும் முதலாளித்துவ மருத்துவம்
கலாசார ரீதியாக தாய்மை பெண்களுக்கானது என திணிக்கப்பட்ட ஒரு விஷயத்தை முதலாளித்துவம் கருவியாக தன் கையில் எடுக்கும் போது அது அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி பெறுகின்றது. முதலாளித்துவ தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் கலாசார ரீதியான அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன என்ற போர்வையில் அவை பெண்கள் மற்றும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் அனைத்து தரப்பையும் தொடர்ந்தும் அதே நிலையில் வைத்திருக்கும் வகையில் மீளக் கட்டமைக்கப்படுகின்றன.
திருமணமாகி குழந்தை இல்லாது இருக்கும் தம்பதிகள் சமூக ரீதியாக அதிகமான எதிர்வினைகளை எதிர்நோக்குகின்றனர். இதில் ஒப்பீட்டு ரீதியில் ஆண்களை விட பெண்கள் அதிகமான எதிர்வினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக சில சொற்கள் மூலம் இழிவாக அடையாளப்படுத்தப்படுவது தொடங்கி சமூக சடங்கு கலாசார நிகழ்வுகளில் ஒதுக்கிவைக்கும் நிலை வரை இது செல்கின்றது. சமூக ரீதியான இழிவான அடையாளப்படுத்தல் மற்றும் புறமொதுக்குதலால் உடைந்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து முதலாளித்துவம் தன் அடக்குமுறைகளை மேலும் கட்டவிழ்த்து விடுகின்றது.
தனியார் வைத்தியசாலைகளில் செயற்கை முறையிலான குழந்தை பெறுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. இது அதிகரித்த விளம்பரப்படுத்தல் மற்றும் நம்பிக்கையூட்டல் கட்டியெப்பப்படுகின்றது. ஏற்கனவே சமூக புறமொதுக்குதலுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குடும்ப கட்டமைப்பு இதனை வலிந்து ஏற்கின்றது. கருவுறவே வேண்டும் என்ற ஆசை, நிர்ப்பந்தம், குடும்ப மற்றும் சமூக அடக்குமுறைகளின் வடிவங்களை முதலாளித்துவ சிந்தனைகளைக் கொண்ட தனியார் கம்பனிகள் தமது முதலீட்டாக ஆக்கி கோடி கோடியாக இலாபம் பார்த்து வருகின்றன. குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இதனை ஒரு அருளாகப் பார்த்தாலும் இதன் பின்னால் கருவுறுதல் தொடர்பாகவுள்ள அடக்குமுறையினை நாம் மறந்து விடலாகாது.
கருவுறுதலின் பின்னுள்ள ஆணாதிக்க அடக்குமுறைகள்
ஒரு பெண் கர்ப்பம் அடைவதன் மூலமாக அவள் மீது ‘புனிதமான தாய்மை’ என்ற போர்வையை போர்த்தி குடும்பம் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. வைத்தியசாலை மற்றும் சுகாதார நிறுவனங்கள் இதில் அதிகளவான பங்கை எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் உடுத்த வேண்டிய ஆடை, அதன் நிறம், காலுக்கு அணிய வேண்டிய செருப்பு தொடங்கி அவர்களது உணவு, மாத்திரை, தூங்கும் முறை வரை முதலாளித்துவ தெரிவின் அடிப்படையில் வைத்தியசாலைகள் முடிவு செய்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கான பொருட்கள் கடை, குழந்தைக்கான பொருட்கள் கடைகள் இதன் இன்னுமொரு வடிவம். தாய் குறித்த குடும்பத்தின் வாரிசினை வைத்துள்ளார் எனும் உடமைச் சொத்தின் அடிப்படையில் புனிதமானவராகக் கட்டமைக்கப்பட்டு அவர் மீதான அடக்குமுறைகள் குடும்பத்தாலும், கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
அதேசமயம் பெண்களை எடுத்துக் கொண்டால், அநேகமாக இலங்கையில் இவர்கள் மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகையில் எத்தனை குழந்தைகள் என்பதனைப் பொறுத்துக் கருத்தடை செய்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கவும் படுகின்றனர். இங்கு கருத்தடை அவசியமா, கருத்தடைகளின் வகைகள் என்ன, தற்காலிகமானவை எவை, நிரந்தரமானவை எவை, கருத்தடைகள் செய்வதன் மூலமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகள், பக்க விளைவுகள் என்ன, பெண் மட்டும்தான் செய்யலாமா, ஆணும் செய்யலாமா என்பது பற்றிய தகவல்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதில்லை. பிரசவ வலியிலிருக்கும் பெண்ணிடம் கடைசி நேரத்தில் கேட்கப்படும் அல்லது நிர்ப்பந்திக்கப்படும் விடயமாகவே இது இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் குறித்த உடல்சார்ந்து தீர்மானம் எடுக்கும் உரிமை குறித்த உடலை உடையவருக்கு இருப்பதில்லை.
பெண்ணிலைவாத நோக்கில் பெண்கள் தம் உடல் மீதான உரிமையினை மீளப் பெற்றுக் கொள்வதாகவும், பெண் விடுதலை என்பதாகவும் கோசமிட்டே மருத்துவ மாபியாக்கள் இந்த கருத்தடை தொடர்பான மருந்துகளை விளம்பரப்படுத்தியும், விற்பனைப்படுத்தியும் வந்து கொண்டிருக்கின்றன. இம்மருந்து மாத்திரைகள், கருத்தடை முறைகள் குறித்த உடல்களில் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் தொடர்பாக, குறிப்பாக பெண்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததில் இருந்தும், அக்கறையுள்ள பெண் மருத்துவர்கள் அது பற்றிப் பேசத் தொடங்கியதில் இருந்தும்தான் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பது வெளிப்படத் தொடங்கியது. ஆனால், இலங்கையில் வாழ்வின் ஒரு பகுதியைப் பற்றிய பாலியல் கல்வி, மகப்பேற்று சுகாதாரம், கருத்தடை போன்ற விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதே கலாசார இழுக்காக இன்றளவும் பார்க்கப்படும் நிலையில் இது பற்றிய கருத்தாடல்கள் இன்னும் ஆழமாக வெளிவரத் தொடங்கவில்லை என்பது மிகவும் கரிசனைக்குரிய விடயமாகும்.
பெண்களது உரிமைகள், பால், பால்நிலை ரீதியாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்களின் உரிமைகள் பற்றிய கருத்தியலினை கருக்கட்டலாகவோ அல்லது கருத்தடையாகவோ எவ்வாறு தமது வியாபாரத்திற்கான தந்திரமாக மருத்துவ மாபியா அல்லது முதலாளித்துவ கம்பனிகள் பாவிக்கின்றன என்ற பின்னணி அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘தாய்மை’யின் பெயரிலான ஆளுமை அழிப்பும், ஊழியச் சுரண்டலும்
குழந்தை பெற்ற பின்னர் பொறுப்புக்கள் , மற்றும் நடத்தை சார்ந்த திணிப்புக்கள் அதிகளவாக இடம்பெறுகின்றன. குழந்தையைப் பராமரிக்க வேண்டும், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, கட்டாயத் தாய்ப்பால் மற்றும் தாயின் அரவணைப்பு, ஒழுக்க கல்வியின் அடிப்படை என இப்பட்டியல் நீளும். வீட்டு விடயங்கள் என்பது மட்டுமன்றி குழந்தை வளர்ப்பு என்பதில் கூட கூட்டுப்பொறுப்பு என்ற விடயத்தை எமது சமூகத்தில் காணமுடியாதுள்ளதுடன் அது முற்றுமுழுதாக தாயின் பொறுப்பு என்பது மிக ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. ஊதியமற்று வீட்டுக்குள்ளேயே வைத்து அத்தாயின் உழைப்பினை தியாகம் என்ற பெயரில் ஆணாதிக்கம் சுரண்டுவதனை உணர வேண்டும்.
நேரடியான மற்றும் மறைமுகமான இந்த அழுத்தங்களால் இத்தாய்களால் தமது முன்னேற்றம் சார்ந்து சிந்திக்க முடியாதிருப்பதுடன், தாமாகவே வேலையினை விட்டு நின்று விடும் முடிவுகளையும் எடுக்கத் தூண்டப்படுகின்றனர். குழந்தைப் பராமரிப்பு பொறுப்பினைக் கொண்ட இவர்களுக்கான சாதகமான நடைமுறைகளும் சமூகத்தில் இல்லை. உதாரணமாக குழந்தை பிறந்து வளர்ந்து 5 வயதாகும் வரை தாய் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்ல முடியாது என்பது ‘தாய்மை’ என்பதனை மேலும் மேலும் பால்நிலைப்படுத்தப்பட்ட சிந்தனையின் விளைவாகவே காணமுடியும்.
பெண்களது உத்தியோக உயர்வு பெரும்பாலும் தாய் ஆவதனைக் காரணம் காட்டி மறுக்கப்படுகின்றமையும், உயர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவு காணப்படுகின்றதற்கான காரணமாகவும் இதனை சுட்டிக் காட்டலாம். பல இடங்களில் உயர்பதவிகள் இடமாற்றத்துடனானது என்கையில் பிள்ளைகள் சார்ந்த பொறுப்பினால் ஒரு தாய் குறித்த பதவி உயர்வினை ஏற்பதில்லை என்பதனை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒருபுறம் தாய் ஆவதனைக் கொண்டாடுவதாகக் காட்டும் ஆணாதிக்க சமூகம், மறுபுறம் அதனையே காரணமாக்கி பெண்களை அடக்குமுறை செய்வதனைக் காணலாம்.
வாடகைத் தாய் முறைமை சிதறடிக்கும் ‘தாய்மை’யின் கற்பிதங்கள்
இன்றைய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் மற்றுமொரு விடயம் வாடகைத்தாய் என்பதாகும். குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் வாடகைக்கு ஒருவரை அமர்த்திக் கொள்வதாகும். இது சட்டப்படியான ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாடகைத் தாய் முறை இரண்டு வழிகளில் செயற்படுத்தப்படுகிறது. ஒன்றில் கருமுட்டையையும், விந்தணுவினையும் தானமாகப் பெற்று ஒருவருடைய உடலில் கருக்கட்ட வைப்பதாகவோ அல்லது விந்தணுவை மட்டும் தானமாகப் பெற்று வாடகைக்கு அமர்த்தப்பட்டவருடைய உடலில் உள்ள கருமுட்டையுடன் சேர்த்து கருக்கட்ட வைப்பதாகவோ அமையலாம்.
ஒன்றுமாறி ஒன்றாக தமக்கு முடியுமானளவு வாடகைத் தாயாக இவர்கள் இருக்கிறார்கள். தத்தமக்கென்று ஒரு பிள்ளையை உருவாக்கி, பெற்றெடுத்து, வளர்க்கும் ஆணாதிக்கக் கட்டமைப்பு சார்ந்த நோக்கமே இந்த வாடகைத்தாய்மார் எனும் வியாபாரம்; உருவாவதற்குப் பின்னால் இருக்கின்றமையையும் நாம் அவதானிக்கத் தவறக் கூடாது. வாடகைத் தாய் முறைமையின் பின்னாலுள்ள முதலாளித்துவ பொருளாதார சிந்தனையும், அடக்குமுறையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு அரசியல் என்ற போதும் இந்நிலை பிள்ளையைப் பிரிய முடியாது, பெற்ற மனம் பித்து போன்ற கற்பிதங்களை இவை தகர்க்கின்றன என்பதனை மறுக்க முடியாது.
தாய்மை என்பதனை உணர்வு மற்றும் நடத்தை சார்ந்த விடயமாகப் புரிந்து கொள்வதன் ஊடாகவே தாய்மை என்ற பெயரில் இடம்பெற்று வருகின்ற அடக்குமுறையினையும், வன்முறையினையும் நாம் அடையாளப்படுத்த முடியுமாக இருக்கும். மேலும் இதன் மூலமாகவே தாயாக இருந்தாலும் அவரும் ஒரு தனிநபர் என்ற அடிப்படையில் குறித்த நபருக்குள்ள உரிமைகளையும், விருப்பு, வெறுப்புகளையும் நாம் மதிக்கக் கூடியதாக இருக்கும்.
ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா