பட மூலம், Reuters/ TheAtlantic
ஒரு மருத்துவமனை. தனிமைப்படுத்தப்பட்ட அறை. மூச்சுத்திணறல் உச்சத்தை எட்டுகிறது. அன்பான கணவன் அருகில் வந்து ஆறுதல் சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி. இரு நுரையீரல்களிலும் நச்சுயிரி ஏற்படுத்திய கபம். மரணபயம் இருளாகக் கவிழ்கிறது. குடும்பத்தை நினைக்கிறாள். மூன்று பிள்ளைகள். மேடிட்ட வயிற்றைத் தடவுகிறாள். ஆறு மாத சிசு. நான் மூச்சுவிட வேண்டுமென மனவுறுதி கொள்கிறாள். தனக்காக அன்றி, தன் பிள்ளைகளுக்காக. தனது மூச்சு, தன் வயிற்றில் வளரும் சிசுவை உயிருடன் வைத்திருக்கும் என்பதற்காக அவள் மூச்சு விடுகிறாள். அவளது தாய்மை வெல்கிறது. நச்சுயிரி தோற்கிறது.
இன்னொரு மருத்துவமனை. நச்சுயிரி தொற்றிய வைத்தியசாலையில் நோயாளிகள் குவிகின்றனர். போதிய வசதிகள் இல்லை. சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை. அவள் சளைக்கவில்லை. தைரியத்துடன் சிகிச்சை அளிக்கிறாள். ஒரு வித்தியாசம். அவள் கையிலும் சேலைன் ஊசி செருகியிருக்கிறது. அவளைத் தொற்றிய நச்சுயிரி சில நாட்களில் அவளது உயிரிப் பறிக்க முடிகிறது. கடமை உணர்வைத் தாண்டி, நோயாளிகளைப் பராமரித்த பெண்மையின் பரிவை, பாசத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.
இவை கதைகள் அல்ல, நிஜம். ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த காரென் மெனரிங். 39 வயதுடைய தாய். மற்றவர் ஈரானைச் சேர்ந்த மருத்துவர், பெயர் ஷிரின் ரவ்ஹானி. தன் பிள்ளைகளுக்காக உயிர் வாழவும், நோயாளிகளைக் காப்பாற்ற உயிர் விடவும் துணிந்த இரு பெண்களின் கதை.
கொரோனா வைரஸ் புரட்டிப் போட்ட உலகம், அது பெண்களின் அன்பாலும், அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் சுழல்கிறது என்பதை நிரூபிக்கும் கதைகள்.
பெண்களை அச்சாணியாகக் கொண்ட குடும்பத்தை விடுவோம், ஒட்டுமொத்த உலகிலும் 75 சதவீதம் பெண்கள் கோலோச்சும் சுகாதாரத் துறையை தற்காலிகமாக மறப்போம். இன்று அரசியல் உலகிலும் ஆணாதிக்க அகம்பாவம் தோல்வி கண்டுள்ளது. ஆண்மனத்தின் விட்டேத்தித்தனம் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நுண்ணறிவால் தீர்மானம் எடுக்கும் பெண் தலைவர்களால் பல நாடுகள் பாதுகாப்பாக இருக்கின்றன.
இரு உதாரணங்கள் மூலம் காண்போம்.
கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியிருந்த சமயம். வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் டொனல்ட் ட்ரம்ப். இந்த வைரஸ் பற்றிய கேலி தொனிக்கிறது. இது அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சி பரப்பி விடும் பயப்பீதி என்கிறார்.
அடுத்து நோர்வேயின் பிரதமர் எல்னா சொல்பேர்க். இரு பிள்ளைகளின் தாய். ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்துகிறார். வித்தியாசமான செய்தியாளர் மாநாடு. பிள்ளைகளுக்கானது. நீங்கள் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது என்கிறார். கேள்விகளுக்குப் பதில் அளித்து நிலைமையை விபரிக்கிறார். பிள்ளைகளின் உள்ளம் அறிந்து ஆற்றுப்படுத்துகிறார். பெரியவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆறுதல் அடைகின்றனர்.
இன்று அமெரிக்கா கொரொனா வியாபகத்தின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. ஆகக்கூடுதலான தொற்றுகள். அதிகளவிலான மரணங்கள். மாறாக, நோர்வேயில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இதேபோன்று தான், பொரிஸ் ஜொன்சன், பிரிட்டன் பிரதமர். ஐரோப்பா முழுவதும் கொவிட்-19 பரவத் தொடங்கிய சமயம். இதுவொன்றும் பாரிய சுகாதார நெருக்கடியாக இருக்கப் போவதில்லை என்ற விட்டேத்தி மனப்பான்மை. எதற்கு பிரிட்டனை முடக்க வேண்டும் என்கிறார். ஒரு வைரஸ் காரணமாக ஆட்களுடன் கை குலுக்குவதை நிறுத்த மாட்டேன் என அகம்பாவம் பேசுகிறார். அந்த அகம்பாவம் அவரை கிருமித்தொற்றுடன் வைத்தியசாலையில் கொண்டு சென்று நிறுத்துகிறது. பிரிட்டனை கொரோனா மரணங்களின் கூடாரமாக மாற்றுகிறது.
இவருடன் நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அம்மையாரை ஒப்பிடலாம். நோய்த்தொற்றை தாய்மைக்கே உரிய நிதானத்துடன் எதிர்கொள்கிறார். முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும், விரைவாக செயற்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார். இன்று நியூசிலாந்தில் நிலைமை கட்டுப்பாடாக இருக்கிறது. சுகாதார சேவையால் பராமரிக்க முடியாத அளவு நோயாளிகள் இல்லாததால் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
“முகக் கவசம் அணிய மாட்டேன்” எனும் டொனல்ட் ட்ரம்ப், “நான் கை குலுக்குவேன்” என்ற பொரிஸ் ஜொன்சனும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மாத்திரமன்றி, ஆட்சி நிர்வாகத்திலும் ஆணாதிக்கத்தின் மிகவும் மோசமான குணாதிசயங்களை வெளிப்படுத்தி நின்ற இரு தலைவர்கள். இவர்களுக்கு தாய்வான், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் தலைவிகள் பாடம் புகட்டியுள்ளார்கள்.
தாய்வானின் தலைவி த்சாய் இங்-வென். பல்கலைக்கழகங்களில் சட்டம் போதித்த பேராசிரியை. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய வேளையில் விரைந்து செயற்பட்டார். அந்நகரில் இருந்து விமானங்களை வர விடவில்லை. கூடுதலான முகக் கவசங்களைத் தயாரிக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக, இன்று தாய்வானில் கொவிட்-19 முழு அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இங்கிருந்து ஐரோப்பாவிற்கு முகக் கவசங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவிற்கும், தாய்வானுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினைகளை அறிந்தவர்களுக்கு, தாய்வானின் தலைவி எந்தளவு புத்திசாதுர்யமாக செயற்பட்டுள்ளார் என்பது விளங்கும்.
ஜெர்மனியின் அதிபர் அஞ்சலர மேர்க்கல் அம்மையாரும் அப்படித்தான். அயல்நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவாடும் சமயத்தில், ஜெர்மனியில் வைரஸ் தொற்றி மரணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. நோய்த்தொற்றை குறைக்க வேண்டுமாயின் தீவிர பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்பதை அஞ்சலா மேர்க்கல் அம்மையார் உணர்ந்திருந்தார். அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார். இந்தப் பெண்மணி இரசாயனவியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்பதால் விஞ்ஞான ரீதியாக சிந்தித்தார். இவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கு 34 வயது. அவரது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் நான்கு பேரும் பெண்களே. தமது சுகாதாரத் துறையை மிகவும் தயார் நிலையில் வைத்திருந்த காரணத்தால், ஒப்பீட்டு ரீதியில் பின்லாந்து தீவிர தாக்கத்தில் இருந்து தப்பியது.
ஐஸ்லாந்து பிரதமரும் பெண் தான். இங்கு சனத்தொகை குறைவென்றபோதிலும் பரந்த அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பேருக்கு அதற்குரிய அறிகுறிகள் இருக்கவில்லை. இருந்தபோதிலும், தொற்றுக்களின் மூலத்தைக் கண்டறிந்து, நோயாளிகளை துரிதமாக தொற்றொதுக்கல் செய்ததால் பாரிய விளைவுகள் தவிர்க்கப்பட்டன.
இப்போது கதையின் தொடக்கத்திற்கு வருவோம். ஒரு தாய் தன்பிள்ளையும் உயிர் வாழ வேண்டும் என்பதால், தமது திடசங்கற்பத்தின் மூலம் வைரஸை ஜெயிக்கிறாள். அது பெண்மையின் அல்லது தாய்மையின் சிறப்பு. அதன்மூலம் குடும்பம் பாதுகாக்கப்படுகிறது. ஒரு மருத்துவர் தாம் மரணத்தின் பிடியில் இருந்தாலும், ஊசி ஏற்றிக் கொண்டு நோயாளிகளைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் மருத்துவர். அவரது பரிவை மனிதநேயத்தைத் தாண்டிய பெண்மையின் சிறப்பெனலாம்.
அவ்வாறாயின், டொனல்ட் ட்ரம்ப், பொரிஸ் ஜொன்சன் ஆகியோரது தவறுகளை அவர்கள் ஆண்களாக இருப்பதால் விட்ட தவறுகள் என்றும், ஜெசிந்தா ஆர்டென் போன்றவர்களது நற்காரியங்களை அவர்களது பெண்மையின் சிறப்பம்சங்கள் என்றும் பொதுமைப்படுத்த முடியுமா?
ஒருவர் வெறுமனே பெண்ணாக இருப்பதால் மாத்திரம், அவர் சிறந்த தலைவராக இருக்க முடியாது. எனினும், சமகால உலகம் பெண்களை பாரபட்சம் காட்டி கீழ்மட்டத்தில் வைத்திருப்பதால், அரசியல் தலைமைத்துவம் வரை உயர பெண்கள் அதிகமாக கற்க வேண்டியிருக்கிறது. அதிகமாக கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. ஆண்களை விடவும் இருமடங்கு திறமைசாலிகளாக இருப்பதும், பல மடங்கு கஷ்டப்படுவதும் அவசியமாகிறது. இந்தக் கஷ்டங்களில் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக சிறந்த தலைவிகளாகவும் பரிணமிக்கிறார்கள்.
இங்கு மற்ற உயிர்கள் மீது பரிவு காட்டுதல் என்பது முக்கியமானது. இது சமூக, கலாசார கட்டமைப்புக்கள் மூலம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் பிரக்ஞையாகும். ஒரு ஆபத்து வந்தால் உயிர்கள் பலியாகும் என்ற பிரக்ஞை இருந்ததால், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவிகள் சீக்கிரமாக முடக்கநிலையை பிரகடனம் செய்தார்கள். இதன்மூலம் பலன் கிடைத்தது.
ஒரு நிலப்பரப்பில் கொரோனா பரவியிருக்கிறது என்றால், அதன் சனத்தொகை அடர்த்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசியல் தலைவருக்கு இல்லை. தொற்று ஏற்பட்டவர்கள் எங்கெல்லாம் சென்றிருந்தார்கள் என்பதையும் ஆட்சியாளாரால் தீர்மானிக்க முடியாது. உகந்த நேரத்தில் முடக்கநிலையை பிரகடனப்படுத்தலும், சோதனைகளை தீவிரப்படுத்துவதும் மாத்திரமே அவரால் முடிந்த காரியங்கள்.
இதனைப் பெண்கள் சரியாக செய்திருக்கிறார்கள் என்றால், உணர்வுபூர்வமான நுண்ணறிவு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த உணர்வு பெண்களுக்கு மிகவும் இயல்பானது. மிகவும் கஷ்டமான நேரங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க உதவுகிறது. வீட்டிலுள்ள பிள்ளைகளுக்காகவும், வயிற்றில் உள்ள பிள்ளைகளுக்காகவும் மூச்சுவிடத்தான் வேண்டும் என்பதும், சனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் வூஹான் நகரில் இருந்து வரும் விமானங்களை நிறுத்தத்தான் வேண்டும் என்பதும் இத்தகை பிரக்ஞையுடன் கூடிய நுண்ணறிவே.
தலைமைப் பீடத்திலுள்ள பெண்கள் அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆண்கள் இருப்பதில்லை. அவர்கள் செவிமடுக்கிறார்கள். இதுவரை பெண் ஜனாதிபதியைக் காணாத அமெரிக்காவில், ட்ரம்பின் இடத்தில் ஹிலரி கிளின்டன் இருந்திருப்பாராயின், பிரச்சினையை நிதானமாகக் கையாண்டிருக்கக் கூடும்.
குடும்பங்களிலும், சமூகங்களிலும், தேசங்களிலும் கொரோனா வைரஸ் தலைகீழாக புரட்டிப் போட்ட கருத்துக்களும், நம்பிக்கைகளும் ஏராளம். வெளியே செல்தல் ஆண்மை என்று நம்பிய ஆண், இன்று மரணபயத்தால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறான். பெண்களின் அன்பான பரிவும் பாசமும் இல்லையென்றால், சுகாதாரத்துறை பூச்சியம் என்ற உண்மையை சகலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோன்று, ஆண்களை விடவும் ஆட்சிபீடத்தில் இருக்கும் இடர்களை சரியாகக் கையாள்கிறார்கள் என்ற நம்பிக்கை வலுப்பெறுவதற்கு இன்று வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.
எத்தனை கொடுமைகள் புரிந்தாலும், அத்தனையையும் சகித்துக் கொண்டு உயிர்களைக் காக்கும் இயற்கையையும், பூமியையும் தாயாக கௌரவிக்கும் உலகில் வாழ்கிறோம். இரண்டிற்கும் ஒப்பான குணாதிசயங்களையும், ஆற்றல்களையும் கொண்ட பெண்ணை அரசியல் உலகில் ஆராதிக்க வேண்டியது எமது தார்மீக கடமையல்லவா.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை