பட மூலம், Theinterpreter
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் நடாத்தப்பட்ட தாக்குதல் வரையிலான காலப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் மூலமாக உயிர்ச்சேதங்களோ பொருட்சேதங்களோ இலங்கையில் ஏற்படவில்லை. எனினும், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இரத்த ஆறுகள் ஓடிக்கொண்டிருந்த காலப்பகுதில் இருந்த அதே பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கிவருகின்றது. தீவிரவாத கெடுபிடிகள் காணப்பட்ட காலத்தில் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்டிருந்த பாதிப்புக்கள் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளில் செல்வாக்குச் செலுத்துவதாக காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைகளை வெற்றிகொள்வதாயின் சமூக அரசியல் பொருளாதார முறைகளில் சிறந்த மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பு மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமானதாகும்.
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் சில பல காரணங்களின் அடிப்படையில் மோசமான நிலையை அடைந்திருந்த சமூக, அரசியல், பொருளாதார முறைகளை மீள்கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொருளாதார ரீதியாக நாடு வங்குரோத்து நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதும் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது நாட்டில் இதுவரை காலமும் இருந்து வந்ந வாழ்கைத் தரத்தினைப் பேணுவதற்காக வெளிநாட்டுக் கடன்களின் அளவினை அதிகரிப்பதன் ஊடாக மேற்கொண்ட முயற்சியானது நாடு முழுமையான வங்குரோத்து நிலையை அடைவதற்கு காரணமாக அமைந்தது என்பதாக குறிப்பிடலாம்.
நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமானதொரு நிலையை அடைந்து தொடர்ந்தும் வங்குரோத்து நிலையை எட்டியிருந்த சந்தர்ப்பத்திலேயே கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடன் சுமையானது நாட்டின் ஒரே பிரச்சினையாகக் கருத முடியாத போதிலும் நாடு முகம்கொடுக்கின்ற பல பிரச்சினைகளுக்கு கடன் சுமையானது பாரிய பங்குவகிப்பதாக அமைந்திருக்கின்றது.
கடன் பிரச்சினை
கோட்டபாய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் பெறும்போது 52,313 மில்லியன் டொலர்கள் செலுத்துவதற்காக மீதமிருந்த வெளிநாட்டுக் கடன்களின் தொகையாக காணப்பட்டது. மொத்தக் கடன் தொகையில் 50% வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவைகளாகும். 2017ஆம் ஆண்டில் 3,167 மில்லியன் டொலர்களும் 2018 ஆண்டு 4,188 மில்லியன் டொலர்களும் என்ற அடிப்படையில் வெளிநாட்டுக் கடன்களுக்கான தவணைக்கட்டணமும் அவற்றுக்கான வட்டித் தவணை கொடுப்பனவுகளாக செலுத்தவேண்டி இருந்திருக்கின்றது. 2019 ஆண்டிற்காக செலுத்த வேண்டிய தொகை 4,500 மில்லியன் டொலர்களாகும். வெளிநாட்டுக்கடன்களுக்காக வருடாந்த வருமானத்தில் 115 வீதம் அளவில் செலுத்தப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட கடன்களுக்குரிய ஒரு தவணைக் கொடுப்பனவையேனும் செலுத்த முடியாமல் போகுமிடத்து இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்படுவதற்கு அது காரணமாக அமையும்.
இலங்கையின் பிரச்சினைகள் சிறந்த முறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாக காணப்பட்ட போதிலும் மஹிந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் அந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டன. சர்வதேச கடன் தரப்படுத்தலுக்கான அமைப்பானது (FITCH) நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் தரத்தினை டீ-(D) என்பதாக ஒரு படி கீழிறக்கி அறிவித்திருக்கின்றது. இந்தத் தரப்படுத்தலின் விளைவாக வேறு நாடுகளிலிருந்து சலுகைக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதுடன் கடன் பெறவேண்டுமாயின் அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு பொருளாதர வருமானங்களின் ஊடாக வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டிகளுக்கான தவணைக் கட்டணங்களைச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அதற்கான செலவுகளின் பெரும் பகுதியினை வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால், சாதாரண வட்டிவீதத்திலும் பார்க்க அதிக வட்டி வீதத்தினை அந்தக் கடன்களுக்காக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமாயின் நாடு தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அது பல மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையமுடியும். எனினும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. அதற்கான ஓர் பலமான இலக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் மக்களினதும் கவனம் நாடாளுமன்ற தேர்தல் மீதே குவிந்திருக்கின்றது. மில்லியன் டொலர் அளவிலான கடன்கள் பெறும்போது அவற்றுக்கான வட்டியானது தசமம் ஒன்றினால் அதிகரிக்குமாயினும் அதன் ஊடாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் விசாலமானதாகும். இந்தப் பிரச்சினையின் பாதக நிலை உணரப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது இந்தத் தரப்படுத்தலின் ஆகக் குறைந்த நிலையாகிய DCCC எனும் நிலையை நாடு அடையுமாயின் இலங்கை முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்துவிடுவதனை தடுக்க முடியாமலேயே போய்விடலாம்.
தற்போது நாடு மிகவுமே பாரதூரமான நிலையிலேயே காணப்படுகின்றது. நாட்டின் மக்களும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியின் போதையில் அல்லது தோல்வியின் விரக்தியில் குழம்பிப் போயுள்ள நிலையிலேயே காணப்படுகின்றனர். நாடு தற்போதிருக்கும் நிலை குறித்து அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் அனைவரது முழுமையான கவனமும் எதிர்நோக்கவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் கலியாட்டத்தின் மீதே குவிந்திருக்கின்றன.
நாட்டில் இதுவரை காலமும் அனுபவித்து வந்த இலகுவான வாழ்க்கை முறையினை கைவிட்டு விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்படவேண்டிய விதத்திலாக குறைபாடுகள் பலவற்றை உள்ளடக்கிய இறுக்கமானதொரு வாழ்க்கை முறை ஒன்றிற்காக மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். மாயாஜால முறையொன்றினால் அரசாங்கத்தினால் இந்த நிலையை சரிசெய்துவிட முடியாது. எனினும், அரசாங்கம் விரும்புமிடத்து இந்தச் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படாமலிருப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்களை குறைப்பதற்கான இயலுமை அதிக அளவில் கிராமிய விவசாயிகள் வசமே காணப்படுகின்றது. கிராமிய விவசாயப் பொருளாதாரத்தில் பாரிய அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலை நாட்டில் உருவாக்கப்படவேண்டும். விவசாயத்திற்காக வன விலங்குகளால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புக்களின் அளவைக் குறைப்பதானது கிராமிய பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமையலாம்.
அதற்காக அரசாங்கம் இரண்டு படிமுறைகளில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நாட்டில் இருக்கின்ற குரங்குகளின் தொகையின் 80% இனால் குறைப்பது முதலாவது படிமுறையாகும். இந்தச் செயன்முறை ஊடாக மாத்திரம் கிராமிய விவசாயம், வீட்டுத் தோட்ட விவசாயம் என்பவற்றில் பாரிய அபிவிருத்தியினை ஏற்படுத்தலாம். அடுத்த படிமுறையாக விவசாயத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற பன்றி, முள்ளம்பன்றி, மயில் போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் அதன் இறைச்சிகளை எடுத்துச்செல்வதற்கும் தன்வசம் வைத்துக்கொள்வதற்காகவுமான அனுமதியினை வேட்டையாடுபவர்களுக்கு வழங்குவதற்காக விதிமுறைகள் அமைக்கப்படல் வேண்டும். இந்தச் செயன்முறையும் விவசாயத்தில் பாரிய அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்தக் காரணமாக அமையும்.
பருப்பு, மிளகாய், பால்
உணவுகளில் பருப்பு என்பதற்கு இலங்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. காதல் இல்லாத வாழ்க்கை பருப்பு இல்லாத ஹோட்டல் போல என்று கூறுவார்கள். ஆண்டொன்றிற்கு பருப்பு இறக்குமதிக்காக செலவாகின்ற தொகை 1,600 மில்லியன் டொலர்களாகும். இலங்கையில் இந்த வகைப் பருப்பு பயிரிட முடியாது என்ற போதிலும் தோர எனும் வகை பருப்பு இலங்கையில் பயிரிடமுடியும். உலறச் செய்த பயறினால் உருவாக்கப்பட்ட பருப்பானது இறக்குமதி செய்யும் பருப்பைவிட சுவையானதாகும். பயறு மற்றும் தோர வகையான பருப்பைப் பயிரிட்டு பருப்பு இறக்குமதியினை முற்றாக நிறுத்திவிட முடியுமாயின் ஆண்டொன்றிற்கு 1600 மில்லியன் ரூபாவினை மீதப்படுத்தலாம்.
இலங்கையின் மிளகாய் தேவையில் 15 வீதமான அளவே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆண்டொன்றிற்கு செத்தல் மிளகாய் 50,000 மெட்ரிக் தொன்கள் அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது என்பதுடன் அதற்கான செலவு 10,000 மில்லியன் ரூபா ஆகும். விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின் படி ஒரு ஏக்கர் வயல் காணியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான வருமானம் 40,000 ஆகும். ஆனால், ஒரு ஏக்கர் மிளகாய் செய்கையிலிருந்து 333,373 ரூபா வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மிளகாய் விதைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகள் பாரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் பச்சை மிளகாய் போன்று வற்றல் மிளகாய்க்கான சிறந்த பயிர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றது.
மரபணு தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி இலை சுருண்டுவிடும் நோய்களுக்கு தாக்குப் பிடிக்கும் அமைப்பிலான நான்கு கிலோகிராம் பச்சை மிளகாய் மூலமாக ஒரு கிலோ செத்தல் மிளகாய் பெற்றுக்கொள்ளும் அடிப்படையிலான பயிர் ஒன்றினை குறைந்த காலத்தில் அறுவடை பெற்றும் கொள்ளும் அமைப்பில் உருவாக்கிக்கொள்வது இலங்கையைப் பொறுத்தவரை முடியாத காரியமொன்றல்ல. மிளகாய்ச் செய்கையின் சம்பிரதாய முறையிலிருந்து Green House எனும் முறைக்கு மாற்றமுடியுமாயின் ஆரம்பத்தில் செலவு கூடியதாக இருந்தபோதிலும் அதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமான வருமானம் பாரிய அளவில் வளர்ச்சியடையும். இதன் ஊடாக தேக்க நிலையில் இருக்கின்ற இலங்கையின் விவசாயத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முடியுமாக அமையும்.
இலங்கையின் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படுகின்ற தொகை 400 மில்லியன் டொலர்களாகும். இலங்கையின் பால் தேவையில் 40% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற நாடு என்பதால் பால் மா இறக்குமதியினை முழுமையாகவே நிறுத்தப்படினும் அதனை இலங்கையினால் ஈடுசெய்து கொள்ள முடியும். மாடுகள் தொடர்பில் நிலையான தேசிய கொள்கை ஒன்று அமைக்கப்படுமானால் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவது இயலாத காரியமன்று. பால் மற்றும் இறைச்சி என்பவற்றை நோக்காக கொண்டல்லாது பால் உற்பத்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு மாடுகள் வளர்க்கப்படுவது பொருளாதார ரீதியில் நன்மை பெற்றுத் தருவதாக இருக்கப்போவதில்லை. இந்தியா மாட்டிறைச்சி உற்கொள்ளாத நாடு என்ற போதிலும் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்றது. இலங்கையில் மாட்டிறைச்சி உண்ணாத போதிலும் அதனை ஏற்றுமதிப் பண்டம் ஒன்றாக அனுமதிக்கும் நிலை உருவாக வேண்டும். மாடு வளர்ப்பானது இலாபம் ஈட்டக் கூடிய ஒன்றாக மாற்றமடைவதும் பால்மா உற்பத்தியில் தன்னிறைவு அடைவதும் இந்த நிலை உருவானால் மாத்திரமே சாத்தியமானதாக அமையும்
எரிபொருள் மற்றும் வாகனங்கள்
இலங்கையின் வாகன இறக்குமதிக்காக வருடாந்தம் 1573.5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றது. அனைத்து வாகன இறக்குமதிகளையும் 5 வருடங்களுக்கு தடை செய்துவிடலாம். இறக்குமதி தடை விதித்தல் ஊடாக அரசுக்கு கிடைக்கின்ற வரி வருமானத்தின் அளவில் குறைவு ஏற்பட்ட போதிலும் அதன் ஊடாக கொடுப்பனவுகளின் அளவில் குறைவு ஏற்படுவது நலன்களைப் பெற்றுத் தருவதாக அமையும். எரிபொருள் இறக்குமதிக்கான செலவினையும் அதன் ஊடாக கட்டுப்படுத்த முடியும். நாட்டில் தேவைக்கு அதிகமாகவே வாகனங்கள் காணப்படுவதுடன் இவ்வாறான கொள்கைகள் ஊடாக இருக்கின்ற வாகனங்களின் உச்ச பயன்பாட்டினை நாடு பெற்றுக்கொள்வதற்கு இது காரணமாக அமையும். அத்துடன் மோட்டார் வாகன தொழிநுட்பமும் வளர்ச்சியடையும் நிலை ஏற்படும்.
எரிபொருள் செலவு என்பது இறக்குமதிச் செலவினங்களில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. வருடாந்த எரிபொருள் இறக்குமதி செலவு 4,151 மில்லியன் டொலர்களாகும் ஆகும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோலுடன் 10 முதல் 15 வீதம் எதனோல் அல்லது அல்கஹோல் கலந்து பயன்படுத்துகின்றன. இவ்வாறு கலந்து பயன்படுத்தப்படும் எரிபொருள் சுற்றாடலுக்கு பாதிப்பற்றதாகக் கருதப்படுகின்றது. பிரேசில் எதனோல் மூலமாக மாத்திரம் செயற்படக்கூடிய வாகன வகைகள் இரண்டினை உற்பத்தி செய்துள்ளது. இலங்கைக்கு இவ்வாறான கொள்கை ஒன்றை உருவாக்க முடியாதது ஏன்? வீடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற கசிப்பு வகை மதுபானத்தினை அதற்காகப் பயன்படுத்த முடியுமல்லவா? அவ்வாறு முடியும் என்பதாகவே நான் கருதுகின்றேன். இதற்காக ஏனைய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு வீடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற கசிப்பு எனும் வகை மதுபான உற்பத்தியில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதனை கண்டறிவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பெற்றோலுடன் கலப்பதற்காக கசிப்பு வகை மதுபானத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் உற்பத்திகளை மேற்கொள்ளமுடியுமாயின் எரிபொருளுக்காக செலவிடப்படுகின்ற தொகையில் 650 மில்லியன் டொலர்களை மீதப்படுத்தலாம். சட்டவிரோதமாக வீடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்திகளை உரிய நியதிகளின் அடிப்படையில் நெறிப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்யும் அடிப்படையில் மாற்றியமைக்கலாம். நெல் உற்பத்தியின் ஊடாக நாட்டுக்கு கிடைக்கின்ற பொருளாதார ரீதியிலான பங்களிப்பை விட அதிக பங்களிப்பினை மேற்படி துறை ஊடாக நாட்டுக்கு பெற்றுக்கொள்ளமுடியும். இந்த உற்பத்தியின் ஊடாக சேமிக்கப்படுகின்ற கடன் தொகை 650 மில்லியன் டொலர்களாகும். அதனை ரூபாவில் குறிப்பிடுவதாயின் 117,500 மில்லியன்களாகும். இதன் ஊடாக 117,500 மில்லியன் ரூபா கிராமிய விவசாயிகள் வருமானமாக பெற்றுக்கொள்ளலாம்.
பாதகங்களை சாதகமாக மாற்றியமைத்தல்
கிராமிய விவசாயத்தினை நெற்செய்கைக்கும் உள்நாட்டு சந்தையினை நோக்காகக் கொண்ட பயிர்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தாது ஏற்றுமதிக்கான பயிர்களையும் உற்பத்திசெய்வதற்காக்க பயன்படுத்தப்படவேண்டும். அதற்காக பயன்படுத்த முடியுமான வழிமுறைகள் குறித்து நான் தனியாக குறிப்பிடுவதற்கு எண்ணியுள்ளேன். மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் ஊடாக மாத்திரம் சேமிக்க முடியுமான அந்நியச் செலாவணி 4,250 மில்லியன் டொலர்களாகும். இது நாம் வருடாந்தம் செலுத்த வேண்டிய கடன் தொகைக்குச் சமமான தொகையாகும். முகம்கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக முகம் கொடுக்க முடியுமாயின் பாரிய பாதகங்களை சாதகமானவைகளாக மாற்றியமைக்கலாம். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டிருக்கின்ற வீழ்ச்சியினை நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம்.
நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்ற விடயங்கள் தொடர்பில் முறையாக ஆராயப்படுகின்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே இவவாறான மாற்றம் ஒன்றை நோக்கிச் செல்வது சாத்தியமானதாக அமையும். சுதந்திரம் கிடைக்கும் போது ஆசிய நாடுகளிலேயே இலங்கை நல்ல நிலையில் இருக்கின்ற நாடாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்தி அடைந்த நாடுகளாகக் குறிப்பிடப்படுகின்ற பல நாடுகள் அப்போது எமது நாட்டை விட பின்தங்கிய நிலையில் காணப்பட்டவையே. அந்த நாடுகளை முந்திச் செல்வதற்கான அனைத்து விதமான வளங்களும் இருந்த போதிலும் ஓரிடத்தில் தேங்கிநிற்கின்ற நாடாகவும் முடிவின்றி இரத்தம் ஓட்டப்படுகின்ற நாடாகவும் செயற்திறன் அற்ற ஊழல் அதிகரித்துள்ள நாடாகவும் இருந்துவருகின்றது. அவ்வாறு ஏற்படுவதற்கான காரணம் சாதி, இன, மத பேதங்கள் அடிப்படையில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நாட்டு மக்களை ஒன்றாக உருவாக்க தவறியமையாகும்.
நாடொன்று இவ்வாறானதொரு பாதகமான நிலைக்கு தள்ளப்படும்போது அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொறுத்தமான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்குவதற்காக மேற்கொள்கின்ற மக்கள் யாப்பு முறை ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் முறை ஒன்றினை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.
இந்தச் செயன்முறை ஊடாக நாட்டை தோல்வியின் பாதையில் இட்டுச்செல்வதற்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளின் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பாரிய அளவிலான பகுதி மட்டுப்படுத்தப்பட்டு அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டு முழு கட்டமைப்பையும் மாற்றமடையச் செய்வதற்கான அதிகாரத்தினை ஜனநாயக அடிப்படையில் பயன்படுத்துகின்ற தன்மையினை உருவாக்குகின்றது. இந்த செயன்முறையில் சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்பு மாற்றத்தினை ஏற்படுத்த முன்னின்று செயற்படுபவர்கள் நாட்டின் பொதுமக்களாக இருப்பர். இந்த முறையின் ஊடாக பொதுமக்களும் நவீன தேவைப்பாடுகளுக்கேற்ப தன்னிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வர்
விகடர் ஐவன்
“විපත සැපතක් බවට හරවා ගැනීම” என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் ராஃபி சரிப்தீன்.