பட மூலம், counterpoint.lk
எமது எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் தன்மையானது பழங்குடியினர்களிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற பழக்கமொன்றாகக் குறிப்பிடலாம். அது இலங்கை அரசியலில் ஆழமாக பதிந்திருக்கிக்கும் ஒன்றாகவும் குறிப்பிடலாம். இலங்கையானது ஜனநாயக நாடாக இருப்பது அதன் வெளித்தோற்றத்தில் மாத்திரமே என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. இலங்கையில் தொடராக தேர்தல்கள் நடாத்தப்படுகின்றபோதிலும் ஜனநாயகம் குறித்த ஆழமான புரிதல் இருக்கின்ற நாடொன்றாக குறிப்பிட முடியாமலுள்ளது. இலங்கையில் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற லிபரல் முறையிலான அமைப்புக்கள் எந்தக் காலப்பகுதியிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்பதுடன் இலங்கையின் அரசியல் தலைவர்களிலும் லிபரல் சிந்தனையுடைய எவருமே இருக்கவில்லை. பொன்னம்பலம் அருணாச்சலம், ஈ. டபிள்யூ. பெரேரா, டீ.பீ.ஜயதிலக போன்ற எமது ஆரம்ப காலத் தலைவர்கள் எவரையுமே லிபரல் குறித்த தெளிவுள்ள அரசியல் தலைவர்களாகக் கருத முடிவதில்லை.
இலங்கையில் இருந்து வந்த தேசப்பற்று குறித்த சிறந்த விளக்கவுரை ஒன்று டொனமூர் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையின் தேசப்பற்றானது நாட்டின் அனைத்து மக்கள் தொகுதியினரையும் உள்ளடக்கியதும் நாட்டை முதன்மைப்படுத்தியதாகவும் இருக்கவில்லை. மாறாக சாதி, இன, மதங்களை முதன்மைப்படுத்திய அமைப்பிலான தேசப்பாற்றாகவே அது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு 90 வருடங்கள் அளவில் கழிந்துவிட்ட போதிலும் இலங்கையின் தேசப்பற்று என்பதானது எந்தவிதமான மாற்றமுமின்றி அன்றிருந்த அதே நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றது.
பழங்குடி அரசியல்
எதிர்தரப்பினரிடமிருந்து பழி தீர்த்துக்கொள்ளுகின்ற நடைமுறை இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்ட காலப்பகுதியிலிருந்தே இருந்து வருகின்ற ஒரு ஜனாநாயக முறைக்கு மாற்றமான முறையாக குறிப்பிடலாம். அரசாங்கங்கள் மாற்றம்பெறும் போது எதிர்க்கட்சிகள் சார்ந்த தலைவர்களிடம் மாத்திரமன்றி எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடமும் பழி தீர்த்துக்கொள்ளப்படுகின்றது. அரசியல்வாதிகள் கூட நாட்டின் நலன்களை முன்னிறுத்தி செயலாற்றாது தமது கட்சி ஆதரவாளர்களின் நலன்களை முன்னிருத்தியே செயற்பட்டு வருகின்றனர். கட்சிகளின் ஆதரவாளர்கள் தவறு என்பதாக கருதுவது எதிர்த்தரப்பினரால் செய்யப்படுகின்ற தவறுகளை மாத்திரமாகும். தமது தலைவர்கள் மூலமாக நிகழ்கின்ற தவறுகளை அவர்கள் தவறு என்பதாக கருதுவதில்லை. தான் ஒரு வெற்றியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களின் பழிவாங்கல்களுக்கு இலக்கான தமது கட்சி ஆதரவாளர்களுக்கு தாராளமாக நட்டஈடு வழங்கும் செயன்முறைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பழக்கமாக கொண்டிருக்கின்றன. அதற்காக இலங்கை நாடு செலுத்தியிருக்கும் நட்டஈடுகளை கணக்கிடுமிடத்து அது பாரிய தொகையாக அமையக்கூடும்.
இலங்கையின் கட்சிகளுக்கு ஏதோ ஒரு அடிப்படையில் குடும்ப பின்னணிகள் காணப்படுவதுடன் அவற்றுக்கு உரிமை கோருகின்ற குடும்பங்களோ அல்லது குடும்பங்களின் தொகுதிகளோ காணப்படுவதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழுவொன்றிடமே காணப்படுகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உரிமை ஒரு குடும்பத்திடம் காணப்பட்டது. தற்போது பொது ஜன பெரமுனவின் உரிமையும் ஒரு குடும்பத்திடமே இருக்கின்றது.
தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் கட்சியின் நிர்வாகத்தினால் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றபோதிலும் கட்சியின் உரிமையாளர்களினாலேயே வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அங்கத்துவக் கட்டணம் செலுத்துகின்ற அமைப்பிலான எந்த அங்கத்தவர்களும் இலங்கையிலிருக்கின்ற கட்சிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளும் கருப்புப் பணத்திலேயே இயங்கிவருகின்றன. கட்சிகளுக்கு நிதி கிடைக்கும் முறைகள் குறித்தோ, கிடைக்கப்பெறுகின்ற நிதியின் அளவு குறித்தோ அல்லது அவை செலவிடப்படுகின்ற முறை குறித்தோ கட்சித் தொண்டர்கள் அறிவதில்லை.
பழிவாங்கும் கலாச்சாரம்
முதலாவது பிரதமரான டீ.எஸ். சேனாநாயக்க இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை நீக்கிவிட்டார். தோட்டப் பகுதிகளில் அவர்களது வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் சமசமாஜ கட்சிக்கு வாக்குகளை வழங்கிய காரணத்தினாலும் தோட்டத் தொழிலாளர்களின் கட்சிகளிலிருந்து தெரிவானவர்கள் தனக்கு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஆதரவளிக்கவில்லை என்பது இதற்கான காணமாகும். 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தமிழ் மக்களின் மொழி உரிமையை இல்லாமலாக்கியது தனக்கு ஆதரவளித்த சிங்கள பௌத்தர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவாகும். இந்த அடிப்படையில் எதிர்த்தரப்பினரிடம் உச்ச அளவில் பழிதீர்த்துக்கொண்ட தலைவராக ஜனாதிபதி ஜயவர்தனவை குறிப்பிடலாம். தான் ஆட்சிக்கு வந்ததும் பொலிஸாருக்கு ஒரு வாரகாலம் விடுமுறை வழங்குவதாக 77ஆம் ஆண்டில் தேர்தல் கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். சிறிமாவின் சமகி பெரமுன ஆட்சிக் காலத்தில் யூ.என்.பி. ஆதரவாளர்கள் கடுமையாகப் பழிவாங்கப்பட்டிருந்தனால் அதற்காக பழிதீர்த்துக்கொள்வதற்கான சந்தரப்பம் வழங்குவதற்காகவே பொலிஸ் படையினருக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்குவதாக தனது கட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வெற்றி பெற்றதன் பின்னர் பழிதீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் தமது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்திருந்தது.
இந்தப் படலம் அத்துடன் நின்றுவிடவில்லை. நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஜயவர்தன தனது எதிர்த்தரப்புவாதியினால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத அடிப்படையில் அவரது குடியுரிமையை இல்லாமலாக்கினார். விஜேவீரவின் மக்கள் விடுதலை முன்னனி அம்மையாரின் குடியுரிமையை நீக்குவதில் பிரதான பங்காளராக செயற்பட்டது.
ஜே.வி.பியின் இரண்டாவது கலவரக் காலப்பகுதியில் தமது பாதுகாப்புக்காக பிரத்தியேக பாதுகாப்புப் படையினை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்த்தரப்பினரை ஜே.வி.பி. அங்கத்தவர்கள் என்பதாக குறிப்பிட்டு கொலை செய்தனர். ஜே.வி.பியினரும் தமது முதல் சுற்றில் ஆளும் கட்சி ஆதரவாளர்களையும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்களையும் கொலைசெய்தததுடன் இரண்டாவது சுற்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களையும் கொலைசெய்தனர்.
பழிவாங்கும் செயன்முறையில் மாற்றம் உருவாதல்
ஐ.தே.கவின் 17 வருட ஆட்சியின் பின்னரான சந்திரிக்கா ஆட்சிக்காலம் பழிவாங்கும் செயன்முறையில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்ட காலமாக குறிப்பிடலாம். குறித்த மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் எனது பங்களிப்பும் காரணமாக அமைந்ததுடன் இன்னும் சில காரணங்களும் அந்த மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தின. 94ஆம் ஆண்டு தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு பொறுப்பான குழுவுக்குத் தலைவராக நான் செயறலாற்றினேன். வாத பிரதிவாதங்களுக்கு மத்தியிலாயினும் பிரச்சாரப் பணிகளில் சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதற்கு குழுவினரை உடன்படச் செய்வதற்கு என்னால் முடியுமாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய இறுதித்தினத்தின் பின்னர் அனைத்து பிரதான செய்தித்தாள்களிலும் இரண்டு பக்கங்களுக்கான அறிவித்தல் ஒன்றினைப் பிரசுரிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். வருகின்ற தேர்தல் வெற்றியின் பின்னர் எதிர்த்தரப்பினருக்கு சங்கடங்கள் ஏற்படுத்தக் கூடாது என்பதாக அந்த அறிவித்தல் ஊடாக வேண்டுகோள் விடுத்தோம். செயற்பாடுகள் மூலமாக மாத்திரமன்றி வார்த்தைகள் ஊடாகவும் சங்கடங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதாக வேண்டினோம். அது சந்திரக்காவினால் வேண்டப்பட்ட ஒன்றல்லாத போதிலும் குறித்த அறிவித்தலைப் பிரசுரிப்பதற்கான அனுமதியினை சந்திரிக்கா வழங்கினார்.
கடுமையான போட்டியாக இருப்பினும் இறுதியில் வெற்றி கிட்டும் என்ற நிலை இருந்தாலும் பிரதமரைத் தெரிவு செய்யும் உரிமை ஜனாதிபதி விஜேதுங்க வசமே இருந்தது. சந்திரிக்கா பொது ஜன முன்னனியின் பிரபலமான நட்சத்திரமாக இருந்தபோதிலும் கட்சியின் தலைவராக அப்போது அவர் இருக்கவில்லை. கட்சியின் தலைமை அவரது தாயார் வசமே இருந்துவந்தது. ஜனாதிபதியினால் தவறுதலாகவேனும் பிரதமர் பதவிக்காக சந்திரிக்காவைத் தெரிவு செய்யாது அவரது தாயார் தெரிவு செய்யப்படுவாரானல் அதற்காக மேற்கொள்வதற்கான எந்தவிதமான மாற்று நடவடிக்கையும் இல்லாமல் போய்விடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பாடாமலிருப்பதற்காக முன்னேற்பாடு நடவடிக்கையொன்று இறுதித் தருவாயில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஓய்வு பெற்றிருந்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை சந்திரிக்கா சந்தித்தார். தனது தாயார் பிரதமராக தெரிவு செய்யப்படுவாரானால் அவர் ஜே.ஆர். உட்பட ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்தும் பழி தீர்த்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்பதாக கூறி அவ்வாறான ஒரு நிலை ஏற்படாதிருப்பதற்காக பிரதமர் பதவியை தன்னிடம் வழங்குமாறு ஜே. ஆர். இடம் கேட்டுக்கொண்டார். ஜே.ஆர். ஜனாதிபதி விஜேதுங்கவைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். அதன் பின்னர் ஜனாதிபதியின் அழைப்பின்றியே சந்திரிக்கா அவரைச் சந்திக்கச் சென்றார்.
தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இடம்மாற்றி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் காமினி திசாநாயக்க ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு அலரி மாளிகையிலிருந்து வெளியானது காமினி திசாநாயக்கவின் முயற்சியை பலவீனப்படும் திட்டத்தின் ஓர் அங்கமாகவாகும். இந்த நடவடிக்கையானது ரணில் சந்திரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும் முறையின் உருவாக்கம்
அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் ஏதேதோ காரணங்களுக்காகவேனும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, ஜனாதிபதி டீ.பீ விஜேதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்திரிக்காவுக்கு உதவி புரிந்தனர். இதன் விளைவாக அதிகாரம் கிடைத்த பின்னர் நாட்டின் அரசியல் கலாச்சாரத்துடன் புதியதொரு அங்கம் இணைந்துகொண்டதாகக் குறிப்பிடலாம். எதிர்க்கட்சியாக செயற்படும்போது ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்வதற்காக ஆட்சியில் இருக்கின்ற கட்சி தொடர்பிலும் அதன் தலைவர்கள் தொடர்பிலும் எப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காக முற்படுகின்றபோதிலும் அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொண்டதன் பின்னர் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமலிருப்பதற்காக பிரதான கட்சிகள் இரண்டுக்குமிடையே அமைதியானதொரு இணக்கப்பாடு அமைத்துக்கொள்வதானது அரசியல் கலாச்சாரத்தில் புதிதாக இணைக்கப்பட்ட அங்கம் ஒன்று என்பதாகக் குறிப்பிடலாம்.
அதன் காரணமாக சந்திரிக்கா குமாரதுங்கவிடம் பலவகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சந்திரிக்கா ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது நாடாளுமன்ற அதிகாரத்தினை ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றிக்கொண்ட போதிலும் சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக முற்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த அரசாங்கம் கூட சந்திரிக்காவுடன் பிணக்குகள் இருந்த போதிலும் அவரது ஆட்சிக் காலத்திலோ அல்லது நாடாளுமன்ற அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வசம் இருந்த காலப்பகுதியிலோ ஏற்பட்ட ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கு அந்தக் காலப்பகுதியில் முடிந்த அளவு சொத்துக்களை ஈட்டிக்கொள்ளும் உரிமை வழங்கும் அடிப்படையிலேயே ஆட்ட விதிமுறைகளே ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது தொடர்பில் பேசுவதற்கான உரிமை எதிர்க்கட்சிக்கு இருந்த போதிலும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் முன்னர் ஆட்சியில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் குறித்து தேடிப்பார்ப்பதிலிருந்து தவிர்த்துகொள்வதற்காக இரண்டு கட்சிகளிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அமைதியானதொரு இணக்கப்பாடு காணப்பட்டது.
அவ்வாறானதொரு நடைமுறை காணப்பட்டது என்பதனை நிரூபிப்பதற்கான பலமான இரண்டு எடுத்துக்காட்டுகள் வருமாறு,
ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் பட்டலந்த வதைமுகாம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மூன்றுபேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்த முக்கியமான தகவல்கள் அடங்கிய அத்தியாயமொன்று அச்சிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படாமலிருந்ததாக குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓருவரிடமிருந்து எனக்கு அறியக்கிடைத்தது. நான் அது குறித்து முன்னர் எழுதியிருக்கின்றேன். அது உண்மையாயின் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருக்கும்போது முக்கியமானதொரு பிரச்சினையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை பாதுகாப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றார். வங்கிகளில் தனியார் காப்பகங்கள் வைத்திருக்கின்ற அரசியல்வாதிகளின் தகவல்கள் அறிந்த ஒருவர் ஊடாக பிரதமருக்கு அவை ஒவ்வொன்றாக வழங்கப்பட்டிருந்தது. காப்பகங்கள் இருக்கின்ற வங்கிகள் மற்றும் அவற்றில் இருக்கின்ற பணப்பெறுமதி என்பன ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. சொந்த நலன்களுக்காகவன்றி பொது நலன் கருதியே குறித்த தகவல்களை அவர் வழங்கியிருந்தார். முதலாவது, இரண்டாவது தகவல்கள் குறித்து சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டன. அவரது மூன்றாவது தகவல் சந்திரிக்காவின் காப்பகம் குறித்ததாக இருந்தது. எனினும், பிரதமர் முன்னைய இருவர் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கையினை இதற்காக மேற்கொள்ளவில்லை. இது தொடர்பான விபரங்களை எனது “சவ்ர ரெஜின” எனும் நூலில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
மஹிந்த ராஜாபக்ஷ ஜனாதிபதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட முன்னர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து தனது பதவியை விட்டுச் சென்றது கூட அதுவரை காலமும் நடந்து வந்த நடைமுறைக்கு ஏற்ப தனது விடயங்களையும் மேற்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதி மொழி வாங்குவதற்காக இருக்கலாம்.
நல்லாட்சியின் முட்டாள்தனமான நடைமுறை
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஊழல்களை சீரானமுறையில் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தை மாத்திரம் இலக்கு வைத்து செயற்பட்டதானது அரசாங்கம் தூக்கியெறியப்படும் நிலை உருவாகக் காரணமாக அமைந்தது. ஊழலின் அளவுகளில் வித்தியாசங்கள் இருந்த போதிலும் ஊழல் என்பது ராஜபக்ஷ காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்பதாகவே குறிப்பிடவேண்டும். அதற்கு முன்னரான சந்திரிக்கா காலத்திலும் அதற்கும் முன்னரான யூ.என்.பி. ஆட்சிக்காலத்திலும் காணப்பட்டே வந்திருக்கினறது.
மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்வதற்காக ஒன்றிணைந்திருந்த பழைய அரசியல்வாதிகளில் அதிகமானோருக்கு ஊழல் சார்ந்த வரலாறு காணப்படுகின்றது. ஆட்சியைப் பெற்று நாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்வது அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. மீண்டும் பொருள் ஈட்டுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது. ஊழலுக்கு எதிராக செயற்படும் அரசாங்கம் ஒன்றாயின் அது ஊழலற்ற ஒன்றாகவே இருக்கவேண்டும். அது மக்களுக்கு தெரியும் விதமாகவும் இருக்கவேண்டும். எனினும், நல்லாட்சி அரசாங்கத்திடம் அத்தகைய தன்மை இருந்ததாக கருதமுடியவில்லை.
ஊழல் விசாரணைகள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு மட்டும் வரையறுக்கப்படும்போது அது அரசியல் பழிவாங்கலாகவே மஹிந்த ஆதரவாளர்களால் நோக்கப்படும். 1977ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தோல்வியடைந்தது போன்று படுதோல்வியாக மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி அமையவில்லை. சிங்கள பகுதிகளின் வாக்குகள், வெற்றியடைந்தவரை விட தோல்வியடைந்தவருக்காகவே அதிகமாக கிடைத்திருந்தது. இந்த விடயம் நல்லாட்சி அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
அத்துடன், ஊழல் என்பது அரசவியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமொன்றல்ல என்பதுடன் அது முழு நாட்டு மக்களையும் சூழ்ந்திருக்கின்ற கொடிய புற்றுநோயாகவே கருதவேண்டும். அவ்வாறான சூழ்நிலையொன்றில் ஊழலை ஒழிக்க வேண்டுமாயின் கவனமாக ஆராய்ந்து மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலான ஒரு செயற்திட்டத்தின் ஊடாகவே நடவடிக்கை மேற்கொண்டிருக்கவேண்டும். ஊழல் விசாரணைகளை ராஜபக்ஷ ஆட்சிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது அனைத்து ஆட்சிக் காலங்களிலும் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது மக்களால் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது. ஏதாவது காரணங்களினால் அவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்திருப்பின் இதன் பின்னர் ஊழல் ஏற்படாத விதத்திலான சட்ட ஒழுங்குகளை மீள்கட்டமைத்திருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்துக்கு முரணாக அரசாங்கத்துடன் வியாபாரங்கள் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இல்லாமலாக்கி கட்சி பேதங்கள் பாராமல் குறித்த தவறுகளை செய்திருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கம் செய்திருக்கலாம். ஹொங்கொங் அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருக்கின்ற ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் போன்று இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மீள் கட்டமைத்திருக்கலாம். இவ்வாறான வழிமுறைகள இருந்தபோதிலும் நல்லாட்சி அரசு சிக்கலான முறைகளைத் தெரிவுசெய்திருந்தது. அதன் ஊடாக மஹிந்த தரப்பு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதறகாக போராடும் நிலையொன்றை உருவாக்கிவிட்டது. அதன் விளைவாக நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்து ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் உருவானது.
மறுபக்கம் சுழலுதல்
புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பழிவாங்கலானது நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட மஹிந்தவுக்கு எதிரான ஊழல் விசாரைண செயற்பாடுகளை அடிப்படையாக் கொண்டதாகக் குறிப்பிடலாம். அந்த முட்டாள் தனமான செயற்பாடுகள் மூலமாக அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்காகும். அனைத்துக் குற்றங்களும் அவர்கள் மீதே சுமத்தப்பட்டன. அதன் ஊடாக நீதித்துறைக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து அரசியல்வாதிகளும் குற்றமற்றவர்கள் என்பதாக குறிப்பிட முடியாது. அவர்களுக்குள்ளும் அசிங்கமான இரகசியங்களை ஒழித்து வைத்திருப்பவர்கள் இருக்கலாம். நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் மூலமாக ஒழித்து வைத்திருந்த பல இரகசியங்கள் வெளிவந்ததுடன் புதிய அரசாங்கத்தின் புலனாய்வு நடவடிக்கைகள் ஊடாகவும் அவ்வாறான இரகசியங்கள் வெளிவர வாய்ப்பிருக்கின்றது. நல்லாட்சியின் புலனாய்வு ஊடாக நாணயத்தின் ஒருபக்கத்தை கண்டுகொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்தது போன்று புதிய அரசாங்கத்தின் புலனாய்வுகள் ஊடாக நாணயத்தின் மறுபக்கத்தையும் கண்டுகொள்ள சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது வேட்டையாக சம்பிக ரணவகவின் கைது அமைந்திருக்கின்றது. இது இன்றளவில் பொதுமக்களின் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் அவரது உயிரைப் பாதுகாப்பதற்கு நானும் உதவியிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கையிலிருக்கின்ற சிங்கள பௌத்த கொடியினை மீண்டும் பறித்தெடுக்கத்தக்க ஒரு தலைவராக அவர் இருப்பதானது ஏனையவர்களை விட அவர் இலக்கு வைக்கப்பட காரணமாக அமையலாம். சிங்கள பௌத்ததினை முற்படுத்தி விடுதலைக்காக போராடுவது என்பது எண்ணக்கரு ஒன்றாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலங்களில் அந்த சிந்தனையை விதைத்தவர் அவராவார். 1956 ஆண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர் பிக்குகளை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தவரும் அவராவார்.
தற்போது அவர் முகம்கொடுக்கின்ற விடயங்கள் சங்கடங்கள் நிறைந்ததாக இருந்தபோதிலும் எதிர்கலத்தில் பலம் வாய்ந்த தலைவராவதற்கான வாய்ப்புக்கள் உள்ளவர் என்ற அடிப்படையில் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்துவது அவருக்கு சிறந்தாகவே அமையப் போகின்றது. அவரிடம் மறைக்க வேண்டிய விதத்திலான அசிங்கமான இரகசியங்கள் இல்லாதிருப்பின் தற்போது நடைபெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக அவர் ஒரு பிரகாசமான தலைவராக மிளிரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறில்லையெனில் கடந்த கால தலைவர்கள் போன்று வரலாற்றின் குப்பைகளுடன் இணைந்துவிடுவார்.
பழிவாங்குவது என்பது வெற்றி பெற்ற கட்சிக்கு மகிழ்சியைப் பெற்றுத்தரும் ஒரு விடயம் என்றாலும் இலங்கை முகம்கொடுத்திருக்கின்ற பாரிய பிரச்சினைகளுக்கு அது ஒரு சிறந்த தீர்வாக ஒரு போதுமே அமையப் போவதில்லை. கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவருக்கு கப்பலில் ஏற்படும் கோளாறுகளை திருத்திக்கொள்ளும் திறன் இருக்கலாம். எனினும், கப்பலின் அடியில் ஓட்டை விழுந்து நீர் நிரம்பி கப்பல் அமிழ்ந்து கொண்டிருக்குமாயின் அந்த நிலையை அவரால் தனியாக நின்று திருத்தியமைப்பது சாத்தியமான விடயமாகாது. அந்தப் பணிக்காக கப்பலின் ஊழியர்களிடம் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதுடன் அந்த கப்பலில் பயணிக்கின்ற பயணிகளிடத்திலிருந்தும் அதிக பட்ச உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விக்டர் ஐவன்
පලිගැනීමේ විසම චක්රය என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் ராஃபி சரிப்தீன்.