பட மூலம், Thyagi Ruwanpathirana (2014ஆம் ஆண்டு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின்போது தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்கள்).

இலங்கையில் (அப்போது சிலோன்) இடம்பெற்ற 1915 ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான  கலவரங்கள் வழக்கமாக  இன, மத அல்லது வர்க்கக் கண்ணாடியினூடாகவே அலசப்படுகிறது.  பால்நிலை – குறிப்பாக பெண் பால்நிலை –  இக் குடியேற்றவாத யுகத்தில் இடம்பெற்ற முரண்பாடு பற்றிய கட்டுரைகளில் இருப்பதாகத் தென்படவில்லை.  பால்நிலை மீது கவனத்தைக் குவிப்பது  வரலாற்று நிகழ்வுகளை அலசி ஆராய்வதற்கு ஒரு மாற்றுக் கண்ணாடியை வழங்கும்; வழமையான விபரிப்புகளுக்கு அது  சவால் விடுக்கவும் முடியும். 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் பற்றிய வரலாற்று ஏடுகளில் பெண்கள் பரிந்துபேசும் முகவரற்ற அல்லது வெறும் புள்ளி விபரங்களுக்கு குறைக்கப்பட்ட பாதிக்கப்படடவர்களாகவே தோன்றுகின்றனர்.  எனினும்,  முரண்பாடுகளில்  அடிக்கடி பெண்கள் – சிலவேளைகளில் வன்முறைகளுக்கு துணைபோகிறவர்களாகவும் அவற்றைத் தூண்டுபவர்களாகவும்கூட – ஆற்றுகின்ற  பல் அம்ச வகிபாகங்கள்  பற்றிய மேலும் கூடிய புரிந்துணர்விற்கு  இடம் உண்டு.  1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் பெண்களின் வகிபாகத்தை ஆராயும்பொருட்டு இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாத பழைய ஆவணங்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களாக

1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கொதிரான கலவரங்கள் பற்றிய வரலாற்று ஏடுகளில் பெண்கள் பொதுவாக “பாதிக்கப்பட்டவர்களாக” சித்திரிக்கப்படுகின்றனர். இக்கலவரங்களின்போது நான்கு மூர் இனத்துப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டது பற்றிய புள்ளி விபரங்கள்தான் இக்கலவரங்களின்போது பெண்களின் அனுபவம் தொடர்பாக  வழங்கப்படும் ஒரேயொரு தகவலாகும்.

எனினும், பழைய ஆவணங்களைச் சற்று ஆழமாக ஆராய்கின்றபோது, இக்கலவரங்களின்போது மூர் இனத்துப் பெண்களின் அனுபவம் பற்றி  நாம் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளமுடியும். உதாரணமாக, தேசாதிபதி றொபர்ட் சாமருக்கு மொஹமட் மக்கான் மாக்கார் 1915 ஜூன் 19ஆம் திகதியிட்டு எழுதிய ஒரு கடிதத்தில் வெயக்கடவில் “மூர் இனப் பெண்களும் பிள்ளைகளும் காட்டிற்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று நாட்கள் உதவிகளேதுமின்றி கையறு நிலையில்  தங்கியிருந்தனர்” என்று குறிப்பிட்டார். அச்சத்தினால் தமது வீடுகளை விட்டு ஓடியவர்கள் வெறும் மூர் இனப் பெண்கள் மாத்திரமல்ல, கேகாலை மாவட்டத்தில் வாழ்ந்த  ஐரோப்பியப் பெண்களும் பிள்ளைகளும் அவர்களது பாதுகாப்பிற்காக கொழும்பிற்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்று கூறி, தேசாதிபதி எண்டர்சன் இக்கலவரங்களின்போது ஐரோப்பிய சமூகத்தின்  கவலையை விபரித்தார். இது முற்றிலும் ஒரு முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல் என்பதற்குப் பதிலாக, பரந்த ஒரு காலனித்துவ எதிர்ப்பு எழுச்சி என்று (பிழையாக) அவர்கள்  கருதிய இக்கலவரத்தில் தாங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்று பிரிட்டிஷார் மத்தியில் நிலவிய அதிகரித்த அச்சத்தின் காரணமாகவே இவ்வப்புறப்படுத்தல் இடம்பெற்றது.

நாம் இனங்காணக்கூடிய கடைசி பெண் “பாதிக்கப்பட்டவர்” குழு, இக்கலவரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அரச இராணுவத்தின் பிரதிநிதிகளினால் தமது கணவன்மார் அப்புறப்படுத்தப்பட்ட சிங்களப் பெண்களாவர். இப்பெண்கள் கலவரங்களின் நேரடி பாதிப்புற்றோர்​ அல்லர். எனினும், தமது கணவன்மார்களின் அறிவிக்கப்பட்ட செயல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள். ஒரு சமகால அவதானியாக 1919 இல்  எழுதும் ஆமந் டீ சூசா இவ்வாண்களின் வீடுகள் சோதனையிடப்பபட்டபோது அதிகாரிகள் அவர்களது மனைவிமாரை உடல்ரீதியாக  துன்புறுத்தியதாகவும் நகை மற்றும் பணத்தைத் திருடியதாகவும்கூட கூறப்படுவதாகக் குறிப்பிடுகிறார். 1915ஆம் அண்டு கலவரங்கள் தொடர்பாக தற்போதுள்ள வரலாற்று ஏடுகளில் இப்பெண்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும், காலனித்துவ ஆவணப் பதிவுகளில் அவர்களுடைய துயரங்கள் தொடர்பாக  கணிசமானளவு  விபரங்கள் உள்ளன.

சட்டத்திற்குப் புறம்பாக தூக்கிலிடப்பட்ட பத்து சிங்களவர்களின் மனைவிமாரின்  வாக்குமூலங்கள் ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சான்றுக் குறிப்பில்  இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் கண்டுகொள்ளப்படாத இச்சாட்சியங்கள் இக்கலவரங்களையடுத்து இப்பெண்கள் அனுபவித்த துயரங்களைப் பற்றிய ஒரு புலக்காட்சியை வழங்குகின்றன: இக்கலவரங்களில் தமது கணவன்மாரின் ஈடுபாட்டிற்காக அவர்கள் எதிர்நோக்கிய  வன்முறை தண்டனை மற்றும் அதன் பின்னரான அவர்களது மோசமான பொருளாதார நிலைமை.

எடுத்துக்காட்டாக, பொல்வத்தகே பொடிஹாமியின் வாக்குமூலத்தில் அவர் அரச அதிகாரிகளின் சித்திரவதையிலிருந்து தப்புவதற்காக காட்டிற்கு ஓடிச்சென்றதை (ஒரு சில மூர் இனத்துப் பெண்களின் அனுபவங்களுக்கு நிகரானது) விபரிக்கின்றார். “நாங்கள் காட்டைச் சென்றடைந்தபோது, ஏறக்குறைய உணர்வற்றிருந்தோம். உண்பதற்கு ஏதுமின்றி மூன்று நாட்கள் அங்கே இருந்தோம். மூன்று நாட்களின் பின்னர் நாங்கள்  காட்டிலிருந்து ஒரு தொலைதூரக் கிராமத்திற்கு வந்தோம்” என்று அவர் கூறினார். நோனி ஜயசிங்க ஹாமினி தனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், தான் ஒரு தேநீர் கடையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது என்றும் அங்கு அவர் ‘ஒரு கொத்து அரிசியில் இடியப்பம் அவித்து’ விற்றதாகவும்  கூறினார். லெல்லோபிட்டியகே  சொபிஹாமியும் ஒரு தேநீர் கடை நடத்தினார். ஆனால், அவருக்கு ‘ஒரு நாளைக்கு ஒரு வேளை  சாப்பாட்டையே” உட்கொள்ள முடிந்தது.

துணைபோனவர்களாகவும் தூண்டியவர்களாகவும்

1915ஆம் ஆண்டு கலவரங்களில் சந்தேகமின்றி பல இனங்களைச் சார்ந்த பெண்களும்   பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனரெனினும், சில பெண்கள் இக்கலவரங்களில் அதிக முனைப்பான பாகங்கள் வகித்தனர். உண்மையில்,  1915 கலவரங்களில் சிலர் அதற்குத் துணைபோனவர்களாக இருந்தனர். கொழும்பில் மூர் இனத்தவர்களின்  கடைகள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் பல பெண்கள் சில வேளைகளில் பிள்ளைகளோடு தோன்றியதை டீ சூசா குறிப்பிடுகிறார். பல கடைகள் டைனமைட் வைத்து எறியூட்டப்பட்டன. எனினும், பல கடைகள் எறிக்கப்படுவதற்கு முன்னர் முதலில் வெறுமையாக்கப்பட்டன (சூறையாடப்பட்டன). அக்கடைகள் பின்னணியில் எறிந்துகொண்டிருந்தபோது, பெண்கள் கொள்ளையிட்டனர் – கடைகளுக்கு வெளியே நிலத்தில் வீசப்பட்டுக்கிடந்த  பொருட்களை பொறுக்கிக் கொண்டும் எடுத்துச் சென்றுகொண்டும்  இருந்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மத்திய மாகாணத்திலுள்ள கண்டியிலிருந்து ஒரு வாரத்திற்குள் மேலும் நான்கு மாகாணங்களுக்குப் பரவியது. குருணாகல் மாவட்டத்திற்கு வடக்கேயிருந்து தெற்கே காலி மாவட்டம் வரையில் 160 மைல்கள் இடைவெளியில் இருந்த நகரங்கள் பாதிக்கப்பட்டன. இக்கலவரங்கள் பரந்தளவிலான தொலைபேசிப் பாவனைக்கு முந்திய காலப்பகுதியில் இடம்பெற்றன. எனவே, வாய்வழிக் கதைகள்  இத்துரிதமான தகவல் பரவலுக்குப் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.

ஏ.பி கண்ணங்கரவின் கூற்றுப்படி, பௌத்த கோயில்களை அழித்தொழிப்பதற்கும், கொலை மற்றும் வன்புணர்வு செய்வதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு மூர்கள் சிங்களவர்களை நோக்கி முன்னேறி வருகின்றனார் என்பதுதான் மிகப் பொதுவான வதந்தியாக இருந்தது. இவ்வதந்திகளின் வியாபிக்கும்தன்மையும் இணங்கவைக்கும் தன்மையும் இக்கலவரங்களின்போதும் அதற்குப் பின்னரும் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த அறிக்கைகளிலும் பல சாட்சிகளினாலும் உறுதிப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, முஸ்லிம்கள் தலதா மாளிகையைத் தாக்கிவிட்டனர் அல்லது தாக்கப்போகின்றனர் என்ற ஒரு வதந்தி தொடர்பாக கண்டியிலிருந்த மாவட்ட அரசாங்க அதிபரின் ஓர் ஆலோசகர், கண்டியிலிருந்த கோயில்களின் புத்த பிக்குகள், அதிகாரிகள் மற்றும் கம்பளையிலிருந்த ஒரு பொலிஸ் நீதவான் ஆகியோர் சாட்சியமளித்ததாக திரு கண்ணங்கர குறிப்பிடுகின்றார்.

இக்கலவரங்களை யார் தூண்டினார்கள் என்பதற்கு குறைவான சான்றுகளே உள்ளன. வெறியூட்டும் வதந்திகளை உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் ஆண்களும் பெண்களும் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும். கண்டி மாநகர சபை உறுப்பினர் ஈ.எல் விஜயகுணவர்தனவின் கூற்றுப்படி, தலதா மாளிகை மூர் இனத்தவரினால் உடைக்கப்படுவதாக 1915ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ஒரு வதந்தி வந்தது, மாளிகையைப் பாதுகாப்பதற்காக சிங்களவர்களின் பெரும் கும்பலொன்றை (இது ஈர்த்தது). இது பித்துப்பிடித்த ஒரு சில பெண்களினால் எழுப்பப்பட்ட ஒரு பொய்யான எச்சரிக்கை என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே, 1915இல் மூர் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதில் பெண்கள் ஏதோவொரு பங்கு வகித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது சாத்தியமாகும். பெண்கள் மூர் இனத்தவர்களுக்கெதிரான உடல்ரீதியான வன்முறைகளில் அல்லது கலவரங்களில் முனைப்பாக ஈடுபடவில்லை என்பது எமக்குத் தெரியும். எனினும், தூண்டுபவர்களாக –  வன்முறைக்குத் தூபமிட்ட வதந்திகளைப் பரப்புபவர்களாக – அவர்களது வகிபாகத்தைப் புறந்தள்ளமுடியாது. அவ்வாறு விபரிப்பது இவ்வின அழிப்பின்போது பெண்கள்  வெறும் “பாதிக்கப்பட்டோராக” மட்டும் இருந்தனர் என்ற மரபுவழி விபரிப்பைப் பொய்ப்பிக்கிறது.

பெண்களைப் புரிந்துபேசுவதற்கான முகவரற்ற பாதிக்கப்பட்டோர் என்ற நிலைக்கு மட்டுப்படுத்துவதைவிட, பழமைவாய்ந்த ஆவணங்கள் பற்றி சற்று ஆழமாக ஆராய்வது இக்கலவரங்களின்போது பெண்கள் வகித்திருக்கக்கூடிய மிக முனைப்பான பாகத்தை  வெளிப்படுத்தும். நாம் பெண்களை ஒன்றில் தமது ஆண் சகாக்களின் குற்றச்செயல்களை ஆதரிக்கும் இரண்டாம் நிலை செயற்பாட்டாளர்களாக அல்லது வதந்திகள் வாயிலாக மோதலுக்கும் வன்முறைக்கும் தூபமிடுபவர்களாக இனங்காண முடியும்.

ஷமாரா வெத்திமுனி