பட மூலம்,  The Atlantic

லத்தீன் அமெரிக்காவின் வரைபடம். அதனை பச்சை நிறமாக மாற்றும் அமேசன் மழைக்காடுகள்.

எல்லைப்புறங்களில் தீ நாக்குகள். அவை அதீத வேகமாய்ப் பரவுகின்றன. பச்சை நிறம் சிவப்பாகிறது.

எங்கும் புகை மண்டலம். அந்தப் புகைக்குள் எரிந்து சாம்பலான மரங்கள். தீ நாக்குகள் காவு கொண்ட உயிர்களின் உடல் எச்சங்கள்.

ஒட்டு மொத்த உலகமும் அதிர்கிறது. உலகின் நுரையீரல் கருகுகிறது என்கிறார், ஒருவர். ஒரு உயிரினமும் பூமியில் வாழும் தகுதியை இழந்துவிடலாமென ஆதங்கப்படுகிறார் மற்றொருவர்.

இதற்குள் ஆயிரம் அரசியல். இது எங்கள் பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார் பிரேசில் ஜனாதிபதி. நாம் சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டித்து விடுவோம் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கிறார்.

அமேசன் மழைக்காடுகள். சுமார் 55 இலட்சம் சதுர கிலோ மீற்றர்கள் பரந்து விரிந்த பசுமைப் பிரதேசம். உலகில் வாழும் மொத்த உயிரினங்களில் பத்து சதவீதத்திற்கு அடைக்கலம் தரும் சரணாலயம். 40,000 தாவர வகைகள் வேரூன்றிய மண். இயற்கையின் அருட்கொடையான சூழலியல் தொகுதி.

பெரு, கொலம்பியா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பொலீவியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கும் வகையில் விரவியுள்ள வனாந்தரம். இருந்தபோதிலும், அமேசன் மழைக்காடுகளில் 60 சதவீத நிலப்பரப்பு பிரேஸிலில் அமைந்துள்ளதால், பிரேசிலின் அரசியல் தலைவர்களே அதற்கு உரிமை கோருவது வழக்கம்.

இது பிரேசிலுக்கு மாத்திரமல்ல. ஒட்டுமொத்த உலகின் இருப்பிற்கும் முக்கியமானது. அடர்ந்த மரங்களைக் கொண்ட அமேசன் மழைக்காடுகள், பெருமளவு கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் செறிவு அதிகரிக்கையில், காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. உலகம் உஷ்ணம் அடைகிறது. எனவே, உலகம் உஷ்ணம் அடைவதைத் தடுப்பதற்கு அமேசன் காடுகள் முக்கியமானவை என விஞ்ஞானிகள் கூறகிறார்கள்.

பிரேசிலுள்ள அமேசன் வனாந்தரத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழமை. கடந்த சில வருடங்களாக காட்டுத் தீ சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், காட்டுத் தீ உச்சத்தைத் தொட்டுள்ளது. இவ்வாண்டு 78,000 இற்கு மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 80 சதவீதத்திற்கு மேலான அதிகரிப்பாகும். பாதிக்கு மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தக் காட்டுத் தீயின் விளைவுகள் அபாயகரமானவை. இதன் காரணமாக அமேசன் வனாந்தரத்தின் 17 சதவீத நிலப்பரப்பை இழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. வனாந்தரத்தை இழப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. எல்லையைத் தாண்டினால், இந்த அயன மண்டலக் காடுகள் மறைந்து, அது பாலைவனமாக மாறி விடும் என்று சுற்றாடல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளார்கள். காடழிவு 25 சதவீதத்தை எட்டும் பட்சத்தில் அமேசன் வனாந்தரங்கள் பாலைவனமாவதைத் தவிர்க்க முடியாது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

ஒரு வனாந்தரத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழமையானது. மின்னல் தாக்கம் போன்றவற்றால் இயற்கையாக தீ பரவலாம். மனிதர்களும் தீ வைக்கலாம். அமேசன் காடுகளை மனிதர்களே எரிய வைத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. இதன் பின்னணியில் முதலாளித்துவ சக்திகளின் சுயநல நோக்கமும், அதிகாரவர்க்கத்தின் அடாவடித்தனங்களும் மறைந்திருக்கின்றன. தீவிர வலதுசாரியான பிரேசில் ஜனாதிபதி ஜயிர் பொல்சனரோவின் தான்தோன்றித்தனமான கொள்கைகளும், அவரது அடிவருடிகளாக செயற்படும் மாநில ஆளுநர்களின் அசிரத்தைப் போக்கும் பிரதான காரணங்கள் என்பதை சமீபத்திய மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரேசிலைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால், விவசாய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு. இதற்கொரு காரணம் உண்டு. கடந்த சில வருடங்களாக பிரேசிலின் பொருளாதாரத்திற்கு விவசாயம் வழங்கிய பங்களிப்பு அதிகம். அது தவிர, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போட்டியைத் தொடர்ந்து, உலக அளவில் அதிகளவு சோயாவை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேசில் மாறியது. அமெரிக்கா பின்னுக்குத் தள்ளப்பட்டது. கூடுதலாக சோயா அவரையை உற்பத்தி செய்தால் அதிகளவு இலாபம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் ஜனாதிபதி பொல்சனரோ காய்களை நகர்த்தினார்.

அரச இயந்திரத்தில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சுற்றாடலைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு வழங்கப்படவில்லை. எவரெல்லாம் ஆகக்கூடுதலாக விவசாயம் செய்கிறார்களோ, அவரெல்லாம் ஜனாதிபதியின் விசுவாசி என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. பிரேசிலின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் ஜனாதிபதியின் கொள்கையை ஆதரிக்கும் மாநில ஆளுநர்களும் கட்டற்ற விவசாயத்தை ஊக்குவித்தார்கள். தத்தமது மாநிலத்தில் ஆகக்கூடுதலான விளைநிலங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி மீதான விசுவாசத்தை நிரூபிக்க முனைந்தார்கள்.

இத்தகைய அரசியல் சிந்தனைப் போக்கிற்குள் பிரேசிலின் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிக்கினார்கள். பயிர்களை விதைக்கும் விளைநிலங்களை ஏற்படுத்த மரங்களை வெட்டினார்கள். மரங்கள் வெட்டப்பட்ட காணிகளில் பற்றைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தத் தீ காடுகளிலும் பரவியது. அமேசன் வனாந்தரத்தின் தென்கோடியில் அமைந்துள்ள பரா என்ற மாநிலத்தில் நிகழ்ந்தவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இங்கு கடந்த பத்தாம் திகதி தீயின் தினம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் காடுகளுக்குத் தீ வைத்து, வனாந்தரத்தை வெட்ட வெளியாக்கினார்கள். தமது பிராந்தியத்தில் தாம் வேலை செய்கிறோம் என்பதை ஜனாதிபதிக்குக் காட்டும் முயற்சியே அது. இங்கு 48 மணி நேரத்திற்குள் காட்டுத் தீ சடுதியாக பரவி, அமேசன் வனாந்தரத்தில் தாவரங்களையும் உயிர்களையும் காவு கொண்டதை பிரேசிலின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த சராசரி அரசியல் தலைவர்களைப் போன்றே பிரேசிலின் ஜனாதிபதிமாரும் செயற்பட்டார்கள். தமது கொள்கைகளை அடைவதற்கு தொலைநோக்கற்ற திட்டங்களை நிறைவேற்றினார்கள். இதற்கு சிறப்பான உதாரணமொன்று உண்டு.

சோயா ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி மிஷெல் ரெமரின் கண்களைக் கட்டிப் போட்டது. அவர் விவசாயத்தை நிலைபேறானதாக மாற்றுவதற்குப் பொறுப்பான அதிகாரங்களைக் குறைத்தார். சுற்றாடல் பாதுகாப்பிற்குரிய நிதியொதுக்கீடுகளில் கை வைத்தார்.

குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பொறுப்பான இபாமா என்ற நிறுவனத்தின் நிதியொதுக்கீடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. ரெமரைத் தொடர்ந்து, பொல்சனரோவும் அதையே செய்தார். இதன் காரணமாக, காடழிப்பைத் தடுப்பது முதலான காரியங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

தாம் செய்வதெல்லாம் சரியே என்ற பிடிவாதம், பிரேசில் ஜனாதிபதிக்கு இருக்கிறது. இதற்கு அமேசன் காட்டுத் தீயின் தீவிரத்தை முதற்தடவையாக உலகறியச் செய்த பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பற்றிய பிரச்சினையை உதாரணம் காட்டலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை காடழிப்பு 278 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்பதை அந்நிறுவனத்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்தது. ஆனால், அதன் தலைவரை பொல்சனாரோ பதவி நீக்கம் செய்தார். தகவல்களைத் திரிபுபடுத்தி தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்பது ஜனாதிபதியின் குற்றச்சாட்டாக இருந்தது. தேசப்பற்று கயவனின் கடைசி புகலிடம் என்பதற்கு ஒப்ப, தமது கொள்கைளுக்கு எதிராக செயற்பட்டவர்களை தேசத்துரோகிகள் என அவர் சித்தரிக்க முனைந்தார்.

பிரேசில் அரசாங்கத்தின் சுற்றாடல் கொள்கைகளை எவரேனும் விமர்சித்தால், அதற்கு சவால் விடுப்பது ஜனாதிபதியின் சமீபத்திய போக்காக இருந்தது. அமேசன் காடு எங்களுடையது என்ற தொனி அவரது பதிலில் இருக்கும். தமது தேசமே ஆகக்கூடுதலான மழைக்காடுகளைப் பாதுகாப்பதாகவும், அமேசன் வனாந்தரத்தைப் பற்றிப் பேச எந்தவொரு நாட்டுக்கும் அருகதை கிடையாது எனவும் கடந்த ஜூலை மாதம் பொல்சனரோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமேசன் விவகாரம் உச்சத்தைத் தொட்டிருந்த சமயத்தில், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதே பிடிவாதத் தொனி தென்பட்டது. சுற்றாடலைப் பாதிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சகித்துக் கொள்ளப் போவதில்லையென பொல்சனாரோ கூறினாலும், அமேசன் பிராந்தியத்தில் வாழும் மக்களது பொருளாதார வாய்ப்புக்களை இல்லாதொழிக்கப் போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.

அமேசன் காடுகளை உலகின் நுரையீரலாக வர்ணித்து, இந்தப் பிரச்சினைக்காக தீவிரமாகக் குரல் கொடுத்து வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை அவர் விமர்சித்த விதமும் குறிப்பிடத்தக்கது. மெக்ரோன் காலனித்துவ சிந்தனைப் போக்கில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என அவர் சாடினார். பிரேசில் காட்டுத் தீயை அணைப்பதற்கு கைத்தொழில்மய நாடுகள் வழங்க முன்வரும் உதவியை ஏற்பதற்கு நிபந்தனைகளை விதிக்கும் அளவிற்கு அவரது பிடிவாதம் தீவிரமாக இருக்கிறது.

அமேசன் காட்டுத் தீயை மையமாகக் கொண்ட அரசியல், அதிகார வர்க்கம் கோலோச்சும் ஜனநாயகத்தின் போலித் தன்மையை உலகறியச் செய்துள்ளது என்றே கூற வேண்டும். இன்று நெற்றிப் பொட்டில் அறையும் உண்மைகள் காரணமாகவோ, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் காரணமாகவோ ஒட்டுமொத்த உலகினதும் கவனம் பிரேசில் மீது திரும்பியிருக்கிறது. இது பிரேசிலுக்கு மாத்திரம் பொதுவான விடயம் அல்ல என்பதை உலகின் ஏனைய பாகங்களில் நிகழும் காடழிப்புக்கள் மூலம் உணரக் கூடியதாக இருக்கும். நீர்மின்வலு உற்பத்தி நிலையங்களுக்காக அணைக்கட்டுக்கள் கட்டியும், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்காக மலைகளைக் குடைந்தும், கட்டடங்களைக் கட்டுவதற்காக நீர்த்தேக்கங்களை நிரப்பியும் துரித அபிவிருத்தியை சாத்தியமாக்கி விடுவதற்கு நினைக்கும் எத்தனையோ நாடுகள் உள்ளன; எத்தனையோ அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழலைக் காவு கொடுத்து, அதன்மூலம் நிலைபேறு இல்லாத அபிவிருத்தி அடைய நினைக்கும் நாடுகளில் பிரேசில் மாத்திரமல்ல. ஆபிரிக்காவைச் சேர்ந்த கொங்கோவும் உண்டு. ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இந்தியாவும் இருக்கிறது. இலங்கையையும் தவிர்க்க முடியாது. இந்த நாடுகளில் போலி அபிவிருத்தி முயற்சிகளுக்குள் தலைவிரித்தாடும் ஊழல் ஒரு பிரச்சினை என்றால், இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாகக் காத்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னொரு பிரச்சினை. இவற்றின் மையமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களுக்கு எப்படியாவது கொழுத்த பணக்காரராகி விட வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை வாரியிறைப்பார்கள். அந்தப் பணத்தை அபிவிருத்தித் திட்டங்கள் மூலமே சுருட்டிக் கொள்ள முடியும்.

அத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டுக்கு கேடு விளைவித்தாலென்ன, அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமே அழிந்தாலென்ன, அவர்களுக்கு கவலை கிடையாது. உள்ளூர் அரசியல்வாதியின் நிலை இதுவென்றால், அரசியல் பெருந்தலைவர்களின் நிலையைக் கேட்கவே அவசியம் கிடையாது. அவர்களே அபிவிருத்திக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இன்று அமேசன் தீயின் ஊடாக பிரேசிலின் அரசியல் மேடை இதையே அம்பலப்படுத்தி இருக்கிறது.

இன்றைய உலகில் பொருளாதார அபிவிருத்தியே முக்கியமானது என்ற சிந்தனையே மேலோங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் ஏறத்தாழ எல்லா அரசுகளும் பொருளாதார நலனுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றன. இதன் அடிப்படையில், நீண்ட நெடுஞ்சாலைகளும், உயரமான கட்டடங்களும், சகலவற்றையும் விற்றுத் தீர்ப்பதுவுமே அபிவிருத்தி என்ற தோற்றப்பாட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தை சடுதியாக சரிகையில் கவலைப்படும் அரசியல்வாதிகள், நாம் சுவாசிக்கும் காற்றோ, நாம் அருந்தும் நீரோ மாசுபடுவது பற்றி கரிசனை கொள்வது கிடையாது.

இந்தப் பிரச்சனையின் அரசியல் பரிணாமத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இது பொருளாதார வளர்ச்சி, தேசியவாதம் என்ற இரட்டைத் தூண்களில் நிற்கின்றது. இந்த அரசியலானது மனிதகுலத்தின் ஒட்டுமொத்த சக்தியையும் உயரமான கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக ஒன்று திரட்டுகிறது. இந்தக் கட்டடங்கள் மூலம் ஒரு சாதாரண மனிதனுக்கு சிறந்ததொரு வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறதா என்பது பற்றி கரிசனை செலுத்துவது கிடையாது. இதனை அமேசன் காட்டுத் தீ விவகாரம் உலகில் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்பதே உண்மை.

இது பிரேசிலின் உள்நாட்டுப் பிரச்சினை என்று பொல்சனரோ கூறினாலும், அமேசன் காட்டுத் தீ ஒட்டுமொத்த உலகின் மீதும் தீவிர பாதிப்பை செலுத்துகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமேசன் என்பது உலகின் நுரையீரல் என்று மெக்ரோன் கூறிய கருத்து தர்க்க ரீதியாக மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், உலக வளங்களைப் பாதுகாப்பது சகலரதும் கூட்டுப் பொறுப்பு என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

சதீஸ் கிருஸ்ணப்பிள்ளை