பட மூலம், The Sun

வணக்கத்துக்குரிய பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி அடிகளார் அவர்களே,

இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகின்ற நான் ஒரு கிறிஸ்த்தவன் அல்ல என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். அவ்வாறே என்னைப் போலவே, முழு வாழ்க்கையையும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய, மேலும் பலரின் கருத்துக்களே இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது என்பதையும்  நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

தயைகூர்ந்து இவ்வேண்டுகோளை கவனமாக வாசியுங்கள்.

ஆகஸ்ட் மாத இறுதி நாட்களில் தாங்கள் இந்நாட்டுக்கு வருகை தர உள்ளீர்கள். உயிர்த்த ஞாயிறன்று நிகழ்ந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வழங்குவதற்காகவே நீங்கள் வருகை தருகிறீர்கள் என நாம் நம்புகின்றோம். பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் இன மத பேதமின்றி, உங்களுடைய ஆசிகளை வழங்குவீர்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களாலும், அதன் பின்னர் பழிவாங்குவதற்காக இந்நாட்டின் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான தாக்குதல்களாலும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவு மிகமோசமான துருவப்படுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு நாடு என்ற வகையிலும் மக்கள் என்ற வகையிலும் இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பரஸ்பர நம்பிக்கையையும் சகவாழ்வையும்  கட்டியெழுப்புவதே இன்று நாம் முகம்கொடுக்கும் பிரதான சவாலாகும்.

நீங்கள் அங்கிலிக்கன் கிறிஸ்த்தவ சபையின் உலகத் தலைவராவீர்கள். அதுவே தங்களது வருகையின் பெறுமதிமிக்க அடையாளம். தங்களது இலங்கை விஜயத்தின்போது குருணாகல் மறைமாவட்டத்திற்கும் வருகை தரலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. குருணாகல் விஜயமானது தங்களது விஜயத்தின் ஒரு கரும்புள்ளியாக அமையுமோ என நாம் அஞ்சுகின்றோம். ஏனெனில், குருணாகல் மறைமாவட்டத்தின் ஆயர், இறை வாசகத்திற்குப் பதிலாக சாத்தானின் பயன்பாட்டைப் பின்பற்றுகின்றார் என்பதே அதற்கான காரணம். இவ் ஆயரும் அவரைப் பின்பற்றுவோரும், அங்கிலிக்கன் திருச்சபையை இகழ்ச்சிக்குள்ளாக்கும் கொடிய செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.

கதைச் சுருக்கம்:

இற்றைக்கு ஐம்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் கல்வி பயின்று மீண்டும் நாடு திரும்பிய ‘ஜோன் குரே’ எனப்படும் சிங்கள இளைஞரொருவர் தங்களது திருச்சபையில் இறை ஊழியரானார். அவர், பிரித்தானியர் காலத்தில் இந்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக பெரும் சேவையாற்றிய சேர் ஜேம்ஸ் பீரிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோன் குரே, ஜேம்ஸ் பீரிஸ் அவர்களுடைய மூத்த மகளின் புதல்வராவார். அவர்கள் அக்கால செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வணக்கத்துக்குரியவராக மாறிய ஜோன் குரே, யொஹான் தேவானந்த என தனது பெயரை மாற்றிக் கொண்டார். காற்சட்டை மற்றும் மேற்சட்டைக்குப் பதிலாக சிங்கள, தமிழ் மரபிற்குப் பொருத்தமான வெள்ளைச் சாரத்துடனான ‘பகுதி தேசிய உடைக்கு’ மாறினார். அவர் ஊழியா(சேவக்க) யொஹான் தேவானந்த எனத் தன்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருக்குப் பாரம்பரியமாகக் கிடைத்த அனைத்து செல்வங்களையும், காணி பூமிகளையும் பணத்தையும் கைவிட்டார். இந்த நாட்டின் கிராமிய சமூகத்துக்குப் பொருத்தமான வாழ்க்கையை வாழ்ந்து, தேவ தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு, மதரீதியான, அரசியல் மற்றும் கலாசார நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. சேவக்க யொஹான் ஒட்டுமொத்தமான ரீதியில் கிறிஸ்த்தவ மக்கள் வாழும் கண்டி ‘ஹேவாதிவெல’ என்னும் பிரதேசத்தில் முதலில் நியமனம் பெற்றார். எனினும், தாம் விரும்பும் பன்மத ரீதியிலான, குறிப்பாக பௌத்த கிராமியச் சூழலொன்றில் தமது மதச் சமூகப் பணியை மேற்கொள்வது அவரது தேவையாக இருந்தது.

யொஹான் தேவானந்த (நடுவில் இருப்பவர்).

அச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் புகழ்பெற்ற ஆயரான அப்போது குருணாகல் மறைமாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த ‘லக்தாஸ் த மெல்’ பாதிரியார் அவருக்கு உதவியாக இருந்தார். அவர் தமக்குரித்தான குருணாகல், ‘இப்பாகமுவ, யக்கல்லேவில்’ அமைந்திருந்த 14 ஏக்கர் அளவிலான தென்னங் காணியை பாவனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு யொஹான் தேவானந்தவுக்குக் கூறினார். அவ்வாறே அக்காணியை யொஹானின் பெயருக்கு எழுதிக் கொள்ளுமாறும் கூறியிருந்தார். எனினும், இவை அனைத்தையும் கைவிட்டு விட்டு தாம் துறவு வாழ்க்கையை ஏற்றுள்ளமையால், அக்காணியை, குருணாகல் மறைமாவட்டத்துக்குக் கையளிக்குமாறு சேவக்க யொஹான் தேவானந்த கூறினார். அவ்வுயர் பண்புமிக்க இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே அக்காணி மறைமாவட்டப் பிரதானிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

நாட்டின் பெருஞ் செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து சமூக சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அக்கிறிஸ்த்தவர் தற்போது உங்களுடைய குருணாகல் மறைமாவட்டத்தால் கொலை செய்யப்பட்டு வருகிறார்.

‘லக்தாஸ் த மெல்’ ஆயரின் பின்னர், குருணாகல் மறைமாவட்டத்தைப் பொறுப்பேற்ற ஆயர் ‘லக்ஸ்மன் விக்ரமசிங்க’ மனித நேயத்தினதும், கருணையினதும் பிரதிபிம்பமாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே பாதிரியார் மட்டுமன்றி, சமூக நீதிக்கான போராளியுமாவார். அவரும், அதன் பின்னர் வந்த ஆயர்களும் தேவசரண அபிவிருத்தி நிலையத்தின் மீது அபிமானம் கொண்டிருந்தனர்.

எனவே, ஊழியர் யொஹான் தேவானந்த 2016ஆம் ஆண்டில் மீளாத் துயில் கொள்ளும் வரை இக்காணியும் அதனோடு தொடர்புடைய கட்டடத் தொகுதியும் முழுமையான மக்கள் அமைப்பாக மாறிய ‘தேவசரண அபிவிருத்தி நிலையத்தின்’ கீழ்தான் நிருவகிக்கப்பட்டது. அவர் இறந்து இரு மாதங்கள்தான் கடந்தன. குருணாகல் மறைமாவட்டத்தின் பாதிரிமார்கள் அங்கு வந்து காணியின் உரிமையைக் கோரினார்கள். சட்டவிரோதமாக காணியில் தேங்காய் பறித்து விற்றுத் தின்னத் தொடங்கினார்கள். தவறான முறையில் தம்முடைய காவலாளிகளை இட்டு அந்த வாயிற் கதவுகளுக்கும் தாழிட்டுக் கொண்டார்கள். தேங்காய் பறிப்பதற்கு, தேங்காய்த் திருடனொருவனை நியமித்தனர். ஒவ்வொரு சம்பவத்தின் போதும், தேவசரண செயற்பாட்டாளர்களை பொலிஸுக்கு வரவழைத்தனர். இவை ஐந்து தசாப்தங்களாக ஒருபோதும் இடம்பெறாத விடயங்களாகும்.

முக்கியமான விடயம், மதச் சகவாழ்வையும் மக்களை வலுப்படுத்தலையும் மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிலைப்பாடா இது? அந்நிறுவனத்துக்கு வருமானமாக அமையும் தேங்காய்களைப் பறித்து விற்றுத் தின்பது நல்லதா? என்பதைத் தயவு செய்து உங்களுடைய குருணாகல் பாதிரிமாருக்குச் சொல்லிக்கொடுங்கள்.

தேவசரண அபிவிருத்தி நிலையம், கிறிஸ்த்தவ திருச்சபை மீது காட்டுகின்ற நல்லெண்ணத்தை வேட்டையாடிக் கொண்டுதான் இவ்வனைத்துத் தீங்கான செயல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களது கபடங்களுக்கு எல்லையிருக்கவில்லை. மோதிக் கொள்வதற்கான தேவை எம்மில் யாருக்கும் இருக்கவில்லை. இன்னமும் இல்லை.

சேவக்க யொஹான் ஆரம்ப காலத்திலேயே கிறிஸ்த்தவ தர்மத்திற்கும், புத்த தர்மத்திற்கும், இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்குமிடையேயான சகவாழ்வை நோக்காகக் கொண்ட ‘புதிய உலக வழிபாடு’ (நவ லொவ வந்தனாவ) எனப்படும் ஒரு கொள்கையைக் கட்டியெழுப்பினார். அதில் மாக்சியவாத மனிதப் பண்புகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இப்புதிய உலக வணக்கத்தை நடத்திச் சென்ற மண்டபம் இன்று தங்களது பாதிரியார்களால் மூடப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அதுவும் முறையற்ற விதத்தில். அதனை அண்டியிருந்த பொது நூலகமும் மறைமாவட்டப் பிரதானிகளால் தாழிடப்பட்டுள்ளது. மதரீதியான கலாசார செயற்பாடுகளை மேற்கொள்ளும் மண்டபத்தைக் கம்பி வேலியிட்டு தாழிட்டு மூடிக் கொள்வது தங்களது அங்கிலிக்க தேவ தர்மமா? என்பதைத் தயவு செய்து எமக்குச் சொல்லுங்கள்.

முதலில் ‘தேவசரணாராமய’ எனவும் பின்னர் தேவசரண அபிவிருத்தி நிலையம் எனவும் சேவக்க யொஹான் தேவானந்தவினதும் பௌத்த பிக்குகளினதும் இணைப் பங்களிப்புடன், பல்வேறு மக்கள் அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய மக்கள் சேவை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அவ்வரலாற்றை யாராலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட முடியாது.

1971ஆம் ஆண்டில், இந்நாட்டில் இளைஞர்களால் கிளர்ச்சியொன்று உருவானது. சேவக்க யொஹானும் தேவசரண அமைப்பும் ஏப்ரல் கிளர்ச்சி   தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியிருந்த இளைஞர் யுவதிகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கும் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உதவி புரிந்தது.

பிற்காலத்தில் இந்நாட்டு மக்களால் அமுல்படுத்தப்பட்ட நீர்வரிக்கு எதிரான போராட்டங்களில், மக்களின் காணிகளைக் காப்பாற்றும் போராட்டங்களில், விவசாய மற்றும் மகளிர் அமைப்புகளுக்கு தேவசரண அமைப்பினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மதிப்பிட முடியாதது. மேலும் இலங்கையில் பற்றியெரிந்த இனரீதியான யுத்தத்தின் முன்னிலையில், தேவசரண அமைப்பும் தேவசரண அபிவிருத்தி நிலையமும் இயைந்து சமாதானத்திற்கும் சகவாழ்விற்கும் அமுல்படுத்திய பல செயற்பாடுகள் உள்ளன. இந்நாட்டின் ‘விடுதலை இறைக் கோட்பாடுகள்’ பற்றிய கலந்துரையாடலை ஆழமாக்குவதற்கும் அவை பங்களிப்புச் செய்தன.

பல்வேறு நிலைமைகளின் கீழ் தேவசரண அபிவிருத்தி நிலையத்தின் நிழலைப் பெற்றவர்களிடையே நூற்றுக்கணக்கான சமூக செயற்பாட்டாளர்களைப் போன்றே உயர் மட்ட அரசியற் தலைவர்களும் தலைவிகளும் உள்ளனர்.

கடந்த மே மாதத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள் பரவியபோது தேவசரண அபிவிருத்தி நிலையம் தலைமை வகித்து அயலில் வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் இயைந்து சமாதானக் குழுக்களை அமைத்தது. மன்னாரில் வறிய முஸ்லிம், தமிழ் மக்களை வலுப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது. அதனை பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்தவாறே மேற்கொண்டு வந்தது.

பேராயர் அவர்களே, இதற்கிடையே குருணாகலில் தங்களது பாதிரிமார் என்ன செய்தார்கள்? என்பதை அறிந்தால் நிச்சயமாக நீங்கள் வெட்கப்படக் கூடும். அவர்கள் கடந்த ஐம்பது வருடகாலத்திற்குள் செய்யாத ஒரு விடயத்தை தேவசரண அபிவிருத்தி நிலைய வளாகத்தில் செய்தார்கள். அதாவது, கிறிஸ்த்தவர்களுக்கு மாத்திரம் உரிய ஒரு விழாவை தோரணங்கள் கட்டி அங்கு கொண்டாடினார்கள். அதற்கென வெளியூர்களிலிருந்து கிறிஸ்த்தவர்களை அழைத்து வந்தார்கள். இதுவரை காலமும் தேவசரண அமைவிடத்தில், ஒரு மதத்தை மாத்திரம் அடையாளப்படுத்தும் தனியான மதச் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை. நாட்டில் மத ரீதியான அழுத்தங்கள் உச்சத்தை எட்டியிருந்தவொரு சந்தர்ப்பத்தில், மத ரீதியான மோதலுக்குக் கையசைப்பதை ஒத்த செயலாக இது அமைந்தது. இப்போது பிரதேசத்தில் பௌத்த மதத் தலைமைத்துவம் தங்களது பாதிரிமார்களின் இத்தீய போக்கினை கண்டிப்பதற்கு முன்வந்து கொண்டிருக்கின்றது. இப்பிரிவினை இடம்பெறாது இருந்திருக்க வேண்டிய ஒன்று.

அதுமட்டுமல்ல, தங்களது குருணாகல் பாதிரிமார்களின் குழு 200 இலட்சம் ரூபா அளவிலான உதவியுடன் இங்கு நடத்திச் செல்லப்படவிருந்த ‘நஞ்சற்ற விவசாயத்திற்கான விவசாயக் கல்லூரிக்கு” தடை விதித்தது. பேராசைக்காக விவசாயிகளுக்குக் கிடைக்கவிருந்த கல்வியையும் சிறைப்படுத்தினர். நஞ்சற்ற விவசாயத்திற்காகப் பசளையாகப் பயன்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டிருந்த ‘கினிசீலியா’ மரங்களை முற்றாக வெட்டி அகற்றினார்கள்.

இவ்வன்முறைகள் ஏழைகளின் மீட்பராகிய யேசுவின் பெயரால் செய்யப்படுவது, வரலாற்றை மீளக் கொண்டுவருகிறதா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். இந்நாட்டு கிராமிய மக்களின் காணிகள் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் அதிகாரத்தைக் கொண்டும் சூழ்ச்சிகளினாலும் கைப்பற்றப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள் என நாம் எண்ணுகின்றோம்.

தங்களது பாதிரிமார்கள் அங்கியினதும் பணத்தினதும் பலத்தைக் கொண்டுதான் இந்த முறைகேடுகளை செய்கின்றார்கள். எம்மிடம் அங்கியோ பண பலமோ இல்லை. ஆனால், வரலாறும் உண்மையும் நம் பக்கமே உள்ளது. மக்கள் பலமும் எம்மிடமே.

தயவுசெய்து இத்தீய செயல்களை நிறுத்துமாறு குருணாகலிலுள்ள தங்களது பாதிரிமார்களுக்குச் சொல்லுங்கள். அவர்களின் பாவத்தில் நீங்கள் பங்கெடுக்காதிருப்பீர்கள் என்பது எமது விருப்பம்.

வணக்கத்துக்குரிய பேராயர் அவர்களே, தங்களது இலங்கை விஜயம் எல்லாவகையிலும் வெற்றிபெறட்டும் என விரும்புகிறோம். உங்கள் ஆசிகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும் விரும்புகின்றோம்.

இப்படிக்கு

சுனந்த தேசப்பிரிய