பட மூலம், ifex

சட்டத்தை அமுலாக்கும் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துதல்

இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்து அகப்பட்டுக் கொண்டால் அதனை எங்களால் “சமாளித்துக் கொள்ள முடியும்.” நாங்கள் பெருமையாக அதனை “ஆசிய வழிமுறை” எனக் கூறிக் கொள்கிறோம். அதாவது, சட்டத்தை “மேலைத்தேய வழியில்” நிலைநிறுத்துவதாக நாங்கள் மறைமுகமாக சொல்கிறோம். அவ்விதம் நாங்கள் எங்களையே பாராட்டிக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் எமது ஜனநாயத்தை எமது இறந்த காலத்திற்குச் சொந்தமான மானிய முறை புதைகுழியில் புதைக்கின்றோம் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடுகின்றோம்.  தாங்கள் நிகழ்த்தும் எந்த ஒரு குற்றச் செயலையும் அவ்விதம் சமாளித்துக் கொள்ளக் கூடிய வல்லமையைக் கொண்டிருப்பவர்கள் யார்? எமது பெரியவர்கள் – ரதன தேரர் (எமது ஜனநாயத்தை சீர்குலைப்பதற்கு அவருக்கு இடமளிப்பதிலும் பார்க்க உண்ணாவிரதத்திற்கு ஊடாக உயிர் துறப்பதற்கு நாங்கள் அவருக்கு இடமளித்திருக்க முடியும்) மற்றும் ஞானசார தேரர் போன்ற மதகுருமார், பிரதமர், ஜனாதிபதி மற்றும் எமது ஆளும் வர்க்கம்.

பகிரங்கமாக இலஞ்சம் வாங்கும், எமது நண்பர்களையும், உறவினர்களையும் கொன்றுகுவிக்கும் அரசியல்வாதிகளுக்கு, அவர்கள் எமது மானிய முறை பிரபுக்களாக இருந்து வரும் ஒரே காரணத்திற்காக நாங்கள் வாக்களிக்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கின்றோம். அந்த விதத்தில் நாங்கள் எமது 71 வருட கால சுதந்திரத்தை வீணடித்துள்ளோம்.

பணையக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்கும் வாக்குரிமை

ஜூன் 01ஆம் திகதி ஆரம்பிக்கும் வாக்காளர் பதிவு செயற்பாட்டுடன் இணைந்த விதத்தில் பல கிராம சேவை அதிகாரிகள் முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தொடர்பாக புறம்பாக தகவல்களை சேகரித்து வருகின்றார்கள் என்ற விதத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாங்கள் வழங்கியிருக்கும் படிவத்துடன் மட்டும் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு கிராம சேவை உத்தியோகத்தர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது படிவத்தையும் தாம் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். அது கிராம சேவை உத்தியோகத்தர்கள் தன்னிச்சையான விதத்தில் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கும் ஒரு நிலையை காட்டுவதுடன், அதனை அவர்களால் சமாளித்துக் கொள்ளக் கூடியதாகவும் இருந்து வருகின்றது. ஏனெனில், இந்தப் படிவத்தை வடிவமைத்த ஒரு சில பெரும் புள்ளிகள் இதன் பின்னணியில் இருக்கின்றார்கள். அதற்கூடாக இப்படிக் கூறப்படுகிறது: “நீங்கள் வாக்களிக்க வேண்டுமானால் என்னைப் பின்பற்றி, இந்நாட்டு முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கும் எமது இனவாத தலைமைத்துவத்தில் சேர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் தம்மை பதிவு செய்வதற்கு எதிராக அச்சுறுத்துவதன் மூலமும், தாம் வாழ்ந்து வரும் இடத்தை கூறுவதற்கு தயங்கச் செய்வதன் மூலமும் இதனை நாங்கள் செய்கின்றோம்”.

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள்

ஊவா மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரையில் மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலம் தாமதம் அடைந்துள்ளன. கமிட்டி மட்டத்தில் சட்டத்தை மாற்றுவது தொடர்பாக சட்டமா அதிபர் (தற்போதைய பிரதம நீதியரசர்) சபாநாயகருக்கு பிழையான ஆலோசனையை வழங்கிய பின்னர் அரசாங்கம் புதிய மாகாண சபை சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அந்தச் செயற்பாடு நிலையியற் கட்டளைகளுக்கு மாறானதாகும். அதன் மூலம் அவர் அரசாங்கம் எதிர்கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகளை சமாளித்துக் கொள்வதற்கு உதவினார். எவ்வாறிருப்பினும், இந்தப் புதிய சட்டம், உள்ளூராட்சி சட்டம் தொடர்பாக இதே மாதிரியான மாற்றங்களை எடுத்து வந்திருப்பதன் மூலம் ஒரு நல்ல சட்டமாக இருந்து வருகின்றது. ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்று, முதலில் வருபவர் வெற்றியீட்டும் நிலை மற்றும் பழைய விருப்பு வாக்கு முறை என்பவற்றின் கலவையை இது வழங்குகின்றது. பெண்களுக்கான கோட்டாக்களையும் வழங்குகின்றது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆட்கள் இந்தப் புதிய சட்டத்தை விரும்பவில்லை. ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களுக்காக தமது இடங்களை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அநேகமாக அந்தக் காரணத்தினால் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தேர்தல் தொகுதி எல்லைகள் உருவாக்கப்பட்ட பொழுது, நாடாளுமன்றம் அதற்கு அனுமதி வழங்கத் தயங்கியது. அச்சந்தர்ப்பத்தில் பிரதமரின் கீழான ஒரு கமிட்டி இரண்டு மாத காலத்திற்குள் திருத்தங்களுடன் கூடிய விதத்தில் அதற்கு அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கமிட்டி இது தொடர்பாக செயற்பட்டு வருவதாக எமக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்கள் இரு தடவைகள் மட்டுமே சந்தித்திருப்பதாக எமது வட்டாரங்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. நாங்கள் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம்.

சபாநாயகர் எம்மிடம் தெரிவித்தவாறு அமைச்சர்கள் மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியுதின் ஆகியோர் ஜனாதிபதியிடம் தாம் இரண்டு விளக்கங்களை கேட்டிருக்கும் நிலையில், இதனை சற்று தாமதிக்குமாறு கமிட்டியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அந்த விளக்கங்கள் என்ன என்பதனை சபாநாயகர் அறிந்திருக்கவில்லை. அவர் தெரிவித்தவாறு அவர்கள் இப்பொழுது ஒரு முடக்க நிலையில் இருந்து வருகின்றார்கள்.

அந்த நிலையில் ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, புதிய சட்டம் இப்பொழுது அமுலில் இருந்து வருகின்றதா? அத்துடன், அவ்வாறு இல்லாவிட்டால் பழைய சட்டம், பொருள் கோடல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்னமும் செல்லுபடியாகக் கூடியதாக இருந்து வருகின்றதா? ஒரு பக்கத்தில் புதிய சட்டம் தேர்தல் தொகுதி நிர்ணயம் இல்லாத நிலையில் இடையில் நின்றிருக்கும் நிலையில் – தேர்தல்களை நடத்துவதற்கு எமக்கு தேர்தல் தொகுதிகள் தேவை – புதிய சட்டம் செயலற்றதாக உள்ளது. அதற்கு எதிரான மறுதரப்பு வாதம், இந்தச் சட்டத்தின் கீழேயே தேர்தல் நிர்ணய செயற்பாடு ஆரம்பித்தது. ஆகவே, அதுவே இப்பொழுது செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதாகும்.

தேர்தல் நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு உசிதமான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய தனது அரசியல் யாப்பு ரீதியான கடமையை நினைவூட்டி, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஆனால், அவர் அக்கடிதத்திற்குப் பதிலளிக்கவில்லை. பின்னர் நாங்கள் அவரிடம் ஒரு சந்திப்பை கோரினோம். பழைய சட்டத்தின் கீழ் எம்மால் தேர்தல்களை நடத்த முடியுமா என்ற விடயம் குறித்து அவர் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்டுப் பெற வேண்டுமென (அவரால் மட்டுமே அதனைச் செய்ய முடியும்) நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டோம். இது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவதாக ஜனாதிபதி வாக்களித்திருந்தார். ஆனால், இதுவரையில் அது குறித்து எந்தத் தகவல்களும் இல்லை. இது குறித்து நாங்கள் பிரதமருக்கும் எழுதியிருந்தோம். பழைய சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கட்சித் தலைவர்களின் ஒரு கூட்டத்தைக் கூட்டுவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அது குறித்தும் இன்னமும் எந்தத் தகவலும் இல்லை.

தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் மாகாண சபை தேர்தல்களுக்கான நியமனப் பத்திரங்களைக் கோருவதற்கு ஒன்றில் அரசாங்கம் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அப்பொழுது நாங்கள் புதிய சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த முடியும். அல்லது புதிய சட்டத்தை ஒழித்து, பழைய சட்டத்துக்கு உயிர் கொடுப்பதற்கான ஒரு சட்டத்தை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதுவரையில், அரசாங்கத்திற்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தேவை இருந்து வரவில்லை என்ற விடயத்தை நாங்கள் அனுமானிக்க வேண்டியுள்ளது. இந்த இரண்டையும் செய்வதற்கு அரசாங்கம் மறுத்து வரும் நிலையில் எம்மால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது.

ஜனாதிபதித் தேர்தல்: இலவு காத்த கிளி

ஒரு போதும் கனியாத பழத்திற்காக காத்துக் கொண்டிருந்த இலவு காத்த கிளி போல நாங்கள் இப்பொழுது மாகாண சபை தேர்தல்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். பெண்கள் மற்றும் பெண்களுக்கு வலுவூட்ட வேண்டும் என விரும்பும் நாங்கள் ஆகிய தரப்புக்களைத் தவிர எவரும் இந்தப் புதிய சட்டத்தை விரும்பவில்லை. எப்போதாவது ஒரு நாள் பழைய சட்டத்தை தொடர்ந்து பின்பற்றுவது என அரசாங்கம் முடிவு செய்வதன் மூலம்  மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நிலைமைகள் உருவானாலும் கூட, தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும். அதன் பின்னர் தயாரிப்பு வேலைகளுக்கென எமக்கு 10-12 வாரங்கள் தேவைப்படும். அந்த வேலைகள் முடிவடையும் பொழுது செப்டெம்பர் மாதம் முடிந்து விடும். எவ்வாறிருப்பினும், நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால், அதற்கான நியமனப் பத்திரங்களைக் கோரல் மற்றும் வாக்குச்சீட்டுகளை தயாரித்தல் போன்ற பணிகள் அதற்கிடையில் குறிப்பிட முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் தேர்தல் ஆணையத்தினாலேயே பிரகடனம் செய்யப்படுகின்றது. வேறு எவரும் அதனைச் செய்ய முடியாது (ஜனாதிபதித் தேர்தல் திகதி டிசம்பர் 07ஆம் திகதியாக இருந்து வருகின்றது என ஜனாதிபதி சட்ட விரோதமாக அறிவித்திருந்த போதிலும்). அந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டங்கள் ஏற்கனவே இருந்து வருகின்றன. அவை வெற்றிகரமான விதத்தில் அமுல் செய்யப்பட்டும் உள்ளன. ஒரு தாமதத்தை ஏற்படுத்துவதற்காக அந்தச் சட்டங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் முன்வரும் என நான் நினைக்கவில்லை. ஒரு தாமதம் இடம்பெற்றால், தற்போதைய ஜனாதிபதி டிசம்பர் மாதத்தில் தனது பதவியை இழந்து விடுவார். ஒரு புதிய மக்கள் ஆணை இல்லாத விதத்தில் அவர் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கான எந்தவொரு சட்டமும் இருந்து வரவில்லை. ஜனவரி 15ஆம் திகதி அவருடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர், ஜனாதிபதி ராஜினாமா செய்தால் ஜனவரி 15ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் அதற்கென ஒருவரைத் தெரிவு செய்யும். ஜனாதிபதி அதனை மேற்கொள்ள மாட்டார்.

இலவு காத்த கிளியாக இருந்து வருவதற்கு பதிலாக, தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்வோம். மிக விரைவில் மக்களுக்கு தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவோம். இனி மேலும் சமாளித்துக் கொண்டிருக்க முடியாது.

தேர்தல் சட்டங்களை நிலைநிறுத்துதல்

மக்கள் தமது கருத்தை (தமது வாக்குகளுக்கு ஊடாக) வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமானால் தேர்தல் சட்டங்களையும், அவற்றின் மீறல்களையும் மூடிமறைத்து சமாளிக்க முடியாது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாங்கள் அவதானித்த பல மீறல்களை கவனத்தில் எடுப்போம். குருணாகல் மாவட்டத்தில் மட்டுமே இதற்கு எதிராக வெற்றிகரமாக வழக்குத் தொடுக்கப்பட்டு, ஒருவருடைய சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. அதுவும் கூட மாவத்தகம தொகுதியில் தற்செயலாக இடம்பெற்றது. சுயாதீனக் குழு ஒன்றின் தலைவர் ஒருவருக்கு எதிராக ஒரு சிறு மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கான அபராதம் வெறுமனே 200 ரூபாவாக இருந்து வரும் என அவருடைய விளக்கமற்ற சட்டத்தரணி அவருக்கு தவறான விதத்தில் ஆலோசனை வழங்கியிருந்தார். நீண்டகாலம் நீதிமன்றத்தில் அலைவதைப் பார்க்கிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, இந்த அபராதத்தை செலுத்துவது எளிதானது என அவர் கூறினார். அதன் பிரகாரம், அந்தப் பிரதிநிதி அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு, தனது ஆசனத்தையும், ஐந்து வருட காலத்திற்கான சிவில் உரிமையையும் இழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் பொலிஸாரை சமாளிப்பது எப்படி என அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் அதனை செய்திருப்பது போல் தெரிகின்றது. மல்லாகத்தில் மாஜிஸ்ரேட் நீதவான் ஒருவரும் கூட இதே மாதிரியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தொடர்பாக நான் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு  தெரிவித்திருக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலை நாங்கள் சிறப்பாக நடத்த வேண்டுமானால் பணத்துக்காக அல்லது பெரும் புள்ளிகளுக்காக நாங்கள் காரியங்களை மூடி மறைத்து, சமாளிக்க முடியாது.

தேர்தல் பிணக்குகளை தீர்த்து வைப்பது தொடர்பான கருத்தரங்கு

மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றார்களா? இது தொடர்பாக சர்வதேச தேர்தல் சீர்திருத்த சம்மேளனம் (IFES),  Australian Aid மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய தரப்புக்களின் அனுசரணையுடன் ஜூன் மாதம் 12ஆம் திகதி நடத்தப்பட்ட செயலமர்வு முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்து வந்தது. அதில்  25 மாவட்ட அலுவலகங்களுக்கும் தலைமை தாங்கும் எமது அதிகாரிகளின் தலைமையில் ஓர் அமர்வு இடம்பெற்றது. அதில் அனைத்து விதமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

தேர்தல் சட்ட விதிமுறைகளை கண்காணிப்பதற்கென தொழில்நுட்பத்தின் மீது நாங்கள் செலவிட்டு வரும் பல இலட்சக்கணக்கான ரூபா நிதிகளுக்கு ஊடாக எமது அதிகாரிகளுக்கு நாங்கள் வலுவூட்டி வருகின்றோம். ஆனால், எந்தவொரு சமாளிப்பையும் மறுத்து, துணிச்சலாக எதிர்த்து நிற்கக்கூடிய எமது அதிகாரிகளின் இதயமே உண்மையான வலுவூட்டலாக இருந்து வருகின்றது. அவர்களுடைய மனக்குறைகள் பின்வருவனவற்றையும் உள்ளடக்குகின்றன:

அ. 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் போது உதவி ஆணையாளர் சஜித் வெல்கம சுகாதார அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களின் செயலாளர் அசீஸ் என்பவர் எவ்வாறு 50 தொழிலாளர் தர நியமனங்களை மேற்கொண்டிருந்தார் என்ற விடயத்தை புலன் விசாணைக்கென அனுப்பி வைத்திருந்தார். வெல்கம, அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அப்போதைய தேர்தல்  திணைக்களத்திற்கு ஒரு கோப்பில் அனுப்பி வைத்திருந்தார். அந்த விடயம் சமாளிக்கப்பட்டதாகவும், அந்தக் கோப்பு ஒன்றில் தலைமறைவாகியதாக அல்லது புதைக்கப்பட்டதாக அவர் நம்புகின்றார்.

ஆ. சட்டத்தை விட்டுக் கொடுத்தல்: நாடாளுமன்றம் அதியுயர் அமைப்பாக இருந்து வருகின்றது. அதே வேளையில், ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அவர்களின் பதவிக்காலம் தொடக்கம் கட்சித் தலைவர்களுக்கு சாதகமான விதத்தில் சட்டத்தை விட்டுக் கொடுக்கும் நடைமுறை ஒரு பொதுவான வழமையாக இருந்து வந்துள்ளது. ஆகவே, சட்டம் ஒரு விடயத்திற்கு இடமளிக்கும் அதே வேளையில், தேர்தல் திணைக்களத்தினால் கூட்டப்படும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தாம் விரும்பும் விதத்தில் சட்டத்தை தளர்த்துவதற்கான உரிமை தனக்கு இருப்பதாக தேர்தல் திணைக்களம் கூறுகின்றது. தேர்தல்களின் போது கட்டவுட்டுக்களை நிறுவுவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் இடமில்லை. ஆனால், அந்தச் சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கு கட்சித் தலைவர்கள் குழு உடன்படுகின்றது – நாங்கள் சட்டத்தை மீறி, காலத்திற்கு காலம் அளவு மாற்றங்களுடன் கூடிய குறிப்பிட்ட சில கட்டவுட்டுக்களுக்கு இடமளிக்க முடியும். அதன் பின்னர் களத்தில் இருக்கும் எமது அதிகாரிகள் ஒரு சுற்றறிக்கையை முன்வைக்கின்றார்கள். சட்டத்தை மீறும் கட்சிகள் மற்றொரு சுற்றறிக்கையை முன்வைக்கின்றன. சட்டத்தின் பிரகாரம் கட்டவுட்டுக்களுக்கு இடமில்லை. அதே விதத்தில் ஒவ்வொரு தேர்தல் பிரிவுக்கும் ஒரு கட்சி அலுவலகத்தை மட்டுமே வைத்திருக்க முடியும் என சட்டம் குறிப்பிடுகின்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சட்டவிரோதமான தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென கொழும்பு மாவட்ட உதவி ஆணையாளர் அச்சுதன் சிவசுப்பிரமணியம் கட்டளையிட்ட சந்தர்ப்பத்தில், அவ்விதம் கட்சி அலுவலகங்களை வைத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தினேஷ் குணவர்தன வாதிட்டார். அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரியான கமல் பத்மஸ்ரீக்கு அந்தத் தீர்மானம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால், பத்மஸ்ரீ அச்சுதனின் தீர்மானத்தை ஆதரித்து நின்றார்.

. இரவு 11.00 மணியின் பின்னர் ஒலிபெருக்கிகளுடன் கூடிய விதத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின் போது அப்போதைய அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பரிசுப் பொருட்களை பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார் (அந்தக் கூட்டமும் கூட இரைச்சல் சட்டத்தை மீறும் விதத்தில் கட்சித் தலைவர்களின் மீறல்களை நியாயப்படுத்தும் ஒரு கூட்டமாக இருந்து வந்தது). அச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு உதவி ஆணையாளர் ஆர். சசிலன் அவரை கையும் மெய்யுமாக பிடித்தார். பொலிஸார் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை. சசிலன் மற்றொரு பொலிஸ் குழுவினருடன் சென்று கூட்டத்தை தடுத்து நிறுத்தியதுடன், பரிசுப் பொருள் பொதி ஒன்றையும் பறிமுதல் செய்து, பொலிஸ் பொறுப்பதிகாரி வத்தேகெதரவிடம் ஒப்படைத்து, ஒரு முறைப்பாட்டையும் சமர்ப்பித்தார். அந்தப் பொலிஸ் அதிகாரி அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது ஹிஸ்புல்லாவை பிரச்சினைக்கு ஆளாக்கியிருக்க முடியும். ஒரு பொய்க் குற்றச்சாட்டை நிரூபிக்கும் பொருட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி பெறுமாறு அவர் சசிலனிடம் கேட்டுக்கொண்ட போதும், அந்த வேண்டுகோள் நிறைவேறவில்லை. பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக சாட்சிகள் எவையும் இருந்து வரவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், சசிலன் எந்தவொரு பொதியையும் தன்னிடம் தரவில்லை  என்றும் கூறியிருந்தார். அதேபோல தமிழ் காங்கிரஸ் என்னை தாக்குவதாக அச்சுறுத்திய நிலையில் நான் சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாண பொலிஸார் ஒரு வருட காலம் அந்த வழக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கத் தவறினார்கள். பின்னர் விசேட பதில் நீதவான் அந்த சாட்சியத்தை தள்ளுபடி செய்வதற்கு இது இடமளித்தது. ஆகவே, சமாளிக்கும் விடயத்தில் யார் துணை நின்றார்கள் என்ற விடயம் இங்கு அப்பட்டமாகவே தெரிகின்றது.

ஈ. 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது வறட்சி நிவாரணம் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 வழங்கப்பட்டது. இந்த விடயத்தை சமாளிப்பதற்கென, மூடிமறைப்பதற்கென முயற்சிக்கப்பட்ட பொழுது நீதிமன்றம் தலையீடு செய்ய வேண்டியிருந்தது, ஆனால், அச்சந்தர்ப்பத்தில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் அளிக்கும் விதத்தில் ஏற்கனவே பெருந்தொகையான பணம் விநியோகிக்கப்பட்டிருந்தது.

உ. உதவி ஆணையாளர் சௌமி பெர்னாண்டோ 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது  மாத்தறை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் ஒன்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் 48 மணித்தியால அமைதிகாக்கும் காலப் பிரிவு ஒழுங்குவிதியை அவர் எடுத்துக் காட்டியிருந்தார். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சந்திம ராசபுத்ர அவர் மீது கடுமையாக வசைமாரி பொழிந்தார். உதவி ஆணையாளர் பண்டார மாப்பாவின் கமரா ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பு காடையர்களினால் அடித்து நொருக்கப்பட்டது. எவரும் அவருடைய கமராவுக்கு நட்டஈடு செலுத்தவில்லை. அப்போதைய ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், இந்த விடயம் தொடர்பாக எத்தகைய செய்தி அறிக்கைகளும் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை என கண்டி பிரதி ஆணையாளர் நாமல் தலங்கம் கூறுகிறார். ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது சட்டவிரோதமான ஒரு பேரணியைத் தான் தடுத்து நிறுத்திய சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனுர விதானகமகே அவரிடம் இப்படிக் கூறியதாக நாமல் குறிப்பிடுகின்றார்: “இது மஹியங்கனை, கண்டியல்ல. எம்மால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொலை செய்ய முடியும்.” ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உத்தியோகத்தர்கள் எங்கள் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை பொலிஸில் தாக்கல் செய்திருந்தனர். அதிகாரிகளின் சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களை அவர்களுடைய நலன்புரிச் சங்கமே செலுத்த வேண்டியிருந்தது. தனியார் சட்டத்தரணி ஒருவருக்கு ரூ. 12,000 தொகையை செலுத்துவதற்கு திணைக்களம் மறுப்புத் தெரிவித்திருந்தது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிஸ்ஸங்க, மேர்வின் பெரேராவின் மகனைத் தாக்கினார். ஆனால், பொலிஸ் எந்தக் குற்றசாட்டையும் முன்வைக்கவில்லை.

ஊ. 48 மணி நேர மௌனம் காக்கும் ஒழுங்குவிதியை சமாளிக்கும் மற்றொரு முயற்சியாக 48 மணி நேரத்திற்கு முன்னர் எந்தவொரு பிரச்சாரத்தையும் நடத்துவதற்கு கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, “இன்னாருக்கு வாக்களியுங்கள்” போன்ற விதத்திலான பிரச்சாரங்கள். அதன் பின்னர் அமைதி காலத்தின் போது அதனை ஒரு செய்தியாக பிரசுரிக்க முடியும். இந்த விதமாக சட்டத்தை விட்டுக்கொடுப்பது, கட்சிகளுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு போதும் கனியாத காய்க்காக காத்திருக்கும் இலவு காத்த கிளியைப் போல நாங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. எமது சட்டத்திற்கு நாங்கள் வலிமையைக் கொடுப்போம். எவரும் செய்யும் காரியங்களை மூடிமறைத்து, சமாளிக்க வேண்டிய தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கட்டும். சட்டம் பாரபட்சமற்ற விதத்தில் அமுல் செய்யப்படுவதனையும், தேர்தல் அதிகாரிகள் உண்மையான விதத்தில் வலுவூட்டப்படுவதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நான் ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

தலங்கம இப்படி புலம்புகின்றார்: “நாங்கள் வாக்குரிமையைப் பாதுகாத்து நிற்கும் பொழுது, எம்மை பாதுகாப்பதற்கும் எவரும் முன்வருவதில்லை”.

எஸ். ரத்னஜீவன் எச் ஹூல்