பட மூலம், Selvaraja Rajasegar

இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவின் பத்தாவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது.

இன்று வெசாக் தினமாகும் – வெசாக் என்பது பௌத்தர்களின் மிகப் புனிதமான ஒரு பண்டிகையாக இருந்து வருவதுடன், இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் புத்த பெருமானின் பிறப்பு, ஞானோபதேசம் மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவு கூருகிறோம்.

இரு வாரங்களுக்கு முன்னர் (மே 05 ஆம் திகதி) புனித றமழான்  மாதம் தொடங்கியது – அது திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களுக்கு புனித திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக இருந்து வருகின்றது.

அதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் (ஏப்ரல் 21 ஆம் திகதி) உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்பட்டது – அது கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருவதுடன், யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வை அன்றைய தினம் கிறிஸ்தவ பெருமக்கள் நினைவு கூருகின்றார்கள்.

ஆகவே, கடந்த மாதத்தின் அதியுயர் சமய முக்கியத்துவம் ஆச்சரியமூட்டுவதாக இருந்து வருவதுடன், அது குறித்து சிந்தித்துப் பார்ப்பதே பிரமிப்பூட்டுவதாக உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமது தலைவிதியை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வலிமையையும், துணிச்சலையும் தம்மகத்தே கொண்டிருந்த கௌதம புத்தர், நபிகள் நாயகம் மற்றும் யேசு கிறிஸ்து ஆகிய மூன்று இளைஞர்களின் மகத்தான வாழ்வை இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் நினைவுகூருகின்றோம். இந்த மூன்று மகான்களும் தேர்ந்தெடுத்த பாதைகள் பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் மீது தாக்கத்தை எடுத்து வந்தன. அந்த மாபெரும் தாக்கத்தின் விளைவாக பல கோடி மக்கள் தத்தமது மதத் தலைவர்களின் போதனைகளின் பிரகாரம் வாழ்வதற்கும், பிறரை நேசிப்பதற்கும், குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பளிப்பதற்கும் முன்வந்தார்கள். அதே வேளையில், வேறு பல மனிதர்கள் இதே சமயங்களின் பெயரால் ஆட்களை வெறுத்தொதுக்குவதற்கும், புண்படுத்துவதற்கும், அழித்தொழிப்பதற்கும் முன்வந்தார்கள்.

இலங்கை என்ற இந்தச் சின்னஞ் சிறிய தீவு இப்பொழுது அதன் எல்லைகளுக்குள் இந்த மூன்று சமயங்களினதும் வல்லமையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக போராடி வருகின்றது. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஆரம்பித்த வன்முறை அலை ரமழான் மாதத்திற்கூடாக இப்பொழுது வெசாக் தினம் வரை வந்துள்ளது. இந்தத் துயர நிகழ்வுகள் காரணமாக கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் பௌத்த சமயங்களுக்கு மத்தியில் கொந்தளிப்புணர்வும், கடுங் கோபமும், அச்சமும் சூழ்ந்திருக்கும் ஒரு தருணத்தில் நாங்கள் இப்பொழுது நிற்கிறோம்.

இந்தக் கடும் துயரும், கசப்புணர்வும் அநேகமாக எம்மால் தாங்கிக் கொள்ள முடியாததாகவே உள்ளது.

எவ்வாறிருப்பினும், இலங்கை இன்று எதிர்கொண்டு வரும் கடுந்துயரும், கசப்புணர்வும் நிறைந்த இந்தத் தருணம், மூன்று உலக மதங்களின் புனித சடங்குகளை நினைவுகூரும் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்று வருவது மட்டுமன்றி, இந்த மூன்று சமயங்களையும் சேர்ந்த மக்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சம் என்பவற்றினால் பீடிக்கப்பட்டு, பிரிந்து, வேறுபட்டு நிற்கும் ஒரு சூழ்நிலையிலும் தோன்றியுள்ளது. இலங்கை உண்மையிலேயே உலகின் நான்கு முதன்மையான சமயங்களையும், நான்கு பிரதான இனங்களையும் கொண்ட ஒரு நாடாக இருந்து வருகின்றது என்ற பின்புலத்திலேயே முழு நாட்டையும் கவ்வியிருக்கும் இந்தத் துயரையும், கசப்புணர்வையும் நாங்கள் நோக்க வேண்டி இருக்கின்றது. இன்று வெசாக் போயா தினமான மே 18ஆம் திகதி, எமது நாட்டில் நிகழ்ந்த அழிவுகரமான உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு தினமாகவும் இருந்து வருகின்றது. அந்தப் போரின் போது நாங்கள் எல்லோரும் துன்பங்களை அனுபவித்தோம். எனினும், அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள்.

பெருந் துயரம் என்பது வெளியில் தென்படும் வன்முறையாக அல்லது நாங்கள் நினைவில் வைத்திருக்கும் வன்முறையாக எப்பொழுதும் இருந்து வருவதில்லை; நாங்கள் மறந்து விடுவதற்கு துணியும் வன்முறையும் கூட ஒரு பெரும் துயரமாக இருந்து வருகின்றது.

ஆகவே, இன்றைய தினம் நாங்கள் எல்லோரும் ஒரு கணம் நின்று நிதானித்து, எமக்கு நேர்ந்தவற்றை மறவாதிருப்பதற்காக நினைவு கூர்வோம்…

வெசாக் தினம் அனுஷ்டிக்கப்படும் இந்த நாளிலே உள்நாட்டு போரின் முடிவை நாங்கள் மறவாது நினைவில் வைத்திருப்போம்.

நாங்கள் போரின் முடிவை நினைவு கூரும் பொழுது, அந்தப் போர் எவ்வாறு முடிவடைந்தது என்பதனையும் மறவாதிருப்போம். நாங்கள் இன்னமும் முழுமையாக நிவர்த்திக்காதிருந்து வரும் வன்முறை மற்றும் அநீதி என்பவற்றையும் நாங்கள் மறவாதிருப்போம்.

நினைவு கூர வேண்டிய தேவையை நாங்கள் நினைத்துப் பார்க்கும் இந்தத் தருணத்திலே, தமது அன்புக்குரியவர்களுக்குப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் மக்கள் பிரிவினர் எமது நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போம். இது அவர்களுக்கு எந்தளவுக்கு வேதனையளிக்க முடியும் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போம்.

மேலும், போர் முடிவடைந்துள்ளது என்ற விடயத்தை நாங்கள் நினைவு கூரும் இந்தத் தருணத்திலே எவ்வாறு வெகு விரையில் அது மீண்டும் தோன்ற முடியும் என்பதனையும் நாங்கள் மறவாதிருப்போம்….

உள்நாட்டு போர் ஆரம்பித்த காலகட்டத்தில் எமது பிள்ளைப் பருவத்தின் போது நாங்கள் எதிர்கொண்ட அதிர்ச்சி, அச்சம் மற்றும் குழப்ப நிலை என்பவற்றை இந்நாட்களில் நினைவுபடுத்திப் பார்க்கின்றோம். எமது பெற்றோரை நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்த அதே விதத்தில், எமது பிள்ளைகள் இப்பொழுது எம்மையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விடயத்தை நாங்கள் மறவாதிருப்போம். மேலும், இந்தத் தருணத்தில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றோம் என்பதனை எமது பிள்ளைகள் அவர்களுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதிலும் நினைவில் வைத்துக்கொள்ளப் போகின்றார்கள் என்பதனையும் மறவாதிருப்போம்.

எமது வீட்டு மதில்களை உயர்த்திக் கட்டுவதற்கும், கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கும் நாங்கள் நினைவுபடுத்திக் கொள்ளும் பொழுது, வன்மத்திற்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு மக்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவே இருந்து வருகின்றது என்ற விடயத்தை நாங்கள் மறவாதிருப்போம். மதில்களை உடைத்தெறிவதும், கண்காணிப்புக் கமராக்களை அகற்றுவதுமே எங்களுடைய உண்மையான குறிக்கோளாக இருந்துவர வேண்டும் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போம். அந்தக் குறிக்கோளை சாதித்துக்கொள்ளும் திசையில் செயற்படுவதற்கும் நாங்கள் மறவாதிருப்போம்.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு என்பன பிரமாண்டமான அளவில் இலாபமீட்டும் ஒரு தொழிற் துறையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தையும், அது ஒருவர் மற்றவருக்கு எதிராக மதில் சுவர்களை எழுப்பிக் கொள்வதற்கென நாங்கள் மேலும் மேலும் அதிகளவு பணத் தொகைகளை செலவிடுவதற்கு எம்மை முனைப்பாக நிர்ப்பந்தித்து வரும் என்ற விடயத்தையும் நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம். எப்பொழுதுமே முக்கியமான காரியத்திற்கு பதிலாக, மிக அவசரமாக செய்ய வேண்டியிருக்கும் காரியம் எது என்பதனை நாங்கள் எப்பொழுதும் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்பதனை மறவாதிருப்போம்.

அதே போல, குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாரும், தொழில்களை அழித்தொழிக்குமாரும் கோரி, எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் அன்றி, தனிப்பட்ட பேராசையுடன் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளாக இருந்து வர முடியும் என்ற விடயத்தையும் நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம். ஆட்களை ஓர் அணியில் திரட்டும் இந்த அமைப்புக்களுக்கு ஊடாக இறுதியில் இலாபமடைபவர்கள் யார் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போம்.

உள்ளூர் ஊடகங்களுக்கு ஊடாக நாங்கள் பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான செய்திகள் உண்மையில் செய்திகளாக இருந்து வரவில்லை; மாறாக, அவை பிரச்சாரங்களாகவே  இருந்து வருகின்றன என்ற விடயத்தையும் மறவாதிருப்போம். இந்த ஊடக நிறுவனங்களின் அரசியல் நிகழ்ச்சிநிரல்களையும், வணிக நலன்களையும் நாங்கள் ஒரு போதும் மறவாதிருப்போம். ஆகவே, இந்தப் பின்புலத்தில், எமக்கு உண்மையை எடுத்துக்கூறவதற்கு முயற்சித்தமை காரணமாக முன்னர் கொல்லப்பட்ட அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த தனிப்பட்ட ஊடகவியளார்களை நாங்கள் ஒரு போதும் மறவாதிருப்போம்.

எமது அரசியல்வாதிகள் எமக்குத் துரோகமிழைத்து, எம் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்ற விடயத்தையும் நாங்கள் எப்பொழுதும் மறந்து விடுகின்றோம். அதனை ஒரு போதும் மறப்பாதிருப்பதற்கும், என்றென்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் முயற்சிப்போம். அவர்கள் எங்களை தமது சொந்த நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதனையும், எங்களை காட்டிக் கொடுப்பார்கள் என்பதனையும் நினைவில் வைத்துக் கொள்வோம். இதனை நாங்கள் மறவாதிருப்போம்; எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போம்.

இறுதியாக….

ஏனைய சமயங்களைச் சேர்ந்த எமது அயலவர்களுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்று கூடும் இந்தத் தருணத்திலே, அவர்கள் எமக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க முடியும் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போமாக!

யாரோ ஒருவரின் செயல்திட்டத்துக்கு பலியாகி, உயிர்நீத்தவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தும் இந்த தருணத்திலே, அந்த உயிர்கள் எங்களுடைய பெயரில் அழிக்கப்பட்டிருக்க முடியும் என்ற விடயத்தையும் நாங்கள் மறவாதிருப்போம். எமது பெயரின் புனிதத்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதனை நாங்கள் நினைவில் வைத்துகொள்வோம்; எந்தவொரு கொலைக்கோ, வன்மத்துடன் கூடிய செயலுக்கோ, துன்புறுத்தலுக்கோ எங்களுடைய பெயர்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளியாதிருப்போம்.

நாங்கள் இந்த உலகத்திற்கு எவ்வாறு வந்தோம் என்ற விடயத்தை நினைவில் வைத்துக்கொள்வதனை ஒரு போதும் மறவாதிருப்போம். எம்முடன் இணைந்து ஏனையவர்களும் பயணித்து வருகின்றார்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கு நாங்கள் மறவாதிருப்போம். அவர்கள் எமது உயிர்களை தமது கைகளில் வைத்திருப்பதைப் போலவே, நாங்கள் அவர்களுடைய உயிர்களை எமது கைகளில் வைத்திருக்க முடியும். என்றோ ஒரு நாள் அவர்களை எம்மை நினைவுகூரச் செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்படும் என்பதனையும் ஒரு போதும் மறவாதிருப்போமாக.

வெசாக் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுதினமான மே மாதம் 18ஆம் திகதி கலைஞர் ருவந்தி டி சிக்கேரா எழுதிய பதிவின் தமிழ் மொழிபெயர்ப்பு

 


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.