பட மூலம், The New York Times

ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌? ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன? ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன? ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது? எதற்காக? இவ்வாறான கேள்விகள் ஒவ்வொருவரினது மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும்.

நாம் எதிர்கொண்ட போரினதும், முரண்பாடுகளினதும், துருவப்பட்டு போதலினதும் வேதனையான வரலாறு இன்றைய நிலையில் மீண்டும் எங்களை ஒரு நிச்சயமற்ற நிலையினை நோக்கித் தள்ளியிருக்கிறது. இந்த நிலையானது எமது வரலாற்றில் ஒரு துன்பகரமான திருப்பமாகவும் கூட அமையலாம். கடந்த காலத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அவற்றினால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிய ஞாபகங்கள் மீண்டும் ஒரு முறை கிளறப்படக் கூடும். சமூகங்களை ஒன்றில் இருந்து ஒன்று துருவப்படுத்தும் வகையிலான அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் பலம்பெறக் கூடும்.

ஈஸ்டர் தினத்திலே இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களின் பயங்கரம், தாக்குதல்களினால் ஏற்பட்ட மரணங்கள், காயங்கள், மன வேதனைகள், பயங்கள் யாவும் எமது எதிர்காலத்தின் போக்கினை தீர்மானிப்பதிலே பங்குபற்றும் விடயங்களாக அமையப் போகின்றன‌. அதேநேரத்திலே எமது வேதனையினை, சமூகங்களாக நாம் கூடி வாழ்வதற்கான ஒரு எதிர்காலமாக நாம் எவ்வாறு மாற்றப் போகின்றோம் என்ற‌ சவாலும் இன்று எம் முன்னால் தோன்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு

கடந்து போன உயிர்த்த ஞாயிறு பற்றி எம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். இந்தப் பாரிய வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது நாம் எங்கே இருந்தோம், என்ன செய்து கொண்டிருந்தோம் என நாம் எதிர்காலத்திலே நினைத்துப் பார்க்கக் கூடும். கிறிஸ்தவ சமூகத்தினரைப் பொறுத்த வரையிலே, ஈஸ்டருக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு, தவக் காலத்தினைத் தொடர்ந்து ஈஸ்டரினை அனுஷ்டித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்தப் பாரிய அழிவுகரமான குழப்பம் மிகவும் மனச்சோர்வினையும், நம்பிக்கையீனத்தினையும் அவர்கள் மத்தியிலே ஏற்படுத்தியிருக்கும். வாழ்வினைக் கொண்டாடும் வழிபாட்டு நிகழ்வுகளிலே ஈடுபட்டிருந்த இந்தச் சமூகத்தினருக்கு ஈஸ்டர் தினத்திலே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் அதிர்ச்சி கடுமையான‌ மன வேதனையினை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்திலே இருக்கும் எனது வீட்டிலே, முதுமை மறதியினாலும், பாரிசவாதத்தினாலும் பாதிக்கப்பட்டு நடமாடும் ஆற்றல் குறைவான நிலையில் இருக்கும் எனது தாயாருக்கு திருவிருந்து வழங்குவதற்காக அங்கிலிக்கன் திருச்சபையின் மதகுருவானவரின் வருகையினை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வேளையிலே தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தொலைபேசி ஊடாக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எம்மை வந்தடைந்தன.

பேசுவதற்கோ, நடப்பதற்கோ மிகவும் இயலாத நிலையில் இருக்கும் எனது தாயார் குருவானவரினைக் கண்டதும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்ல முற்பட்டார். ஈஸ்டர் தினத்திலே குருவானவர் வருகையினதும், அவரிடம் இருந்து திருவிருந்தினைப் பெறுவதினதும் முக்கியத்துவமானது எனது தாயாரிடம் ஆழமாக உறைந்து போயிருக்கிற விடயங்கள். ஒரு குறுகிய வழிபாட்டு நிகழ்வின் பின்னர், எமது உரையாடல் நடந்து முடிந்த துன்பியல் சம்பவத்தினை நோக்கித் திரும்பியது. பயம் பற்றியும், இழப்புப் பற்றியும், 1983 ஜூலைக் கலவரம் பற்றியும், ஏனைய வன்செயல்கள் பற்றியும் எம் ஒவ்வொருவருக்கும் இருந்த அனுபவங்களைப் பற்றியும் நாம் பேசினோம்.

பெரிய வெள்ளி

ஈஸ்டருக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், பெரிய வெள்ளி நாளன்று யாழ்ப்பாணத்தின் முவர்த் தெருவில் அமைந்துள்ள பச்சைப் பள்ளிவாசலிலே இடம்பெற்ற ஒரு கூட்டத்திலே நான் பங்குபற்றியிருந்தேன். நான் கடந்த ஏழு வருடங்களாக இணைந்து பணியாற்றி வரும் தமிழ்-முஸ்லிம் உறவுகளுக்கான அமைப்பின் நண்பர்கள் எம்மிலே சிலருடன் கூடி இருந்து வடக்கிலே முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரையாடினர். வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களினைப் பொறுத்தவரை அவர்களின் மீள்திரும்பலுடனும், மீள்குடியேற்றத்துடனும் தொடர்பான செயன்முறைகள் மிகவும் விரக்தியூட்டுபவையாகவே அமைந்திருக்கின்றன. அவர்கள் வெளியேற்றப்பட்டுக் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கடந்த நிலையிலும் இந்தச் செயன்முறைகள் தொடர்பிலே அவர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளுகின்றனர்.

நாம் சந்தித்த முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பிலே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். மீள்குடியேற்றத்தின் போது தாம் எதிர்கொள்ளும் தடைகள் பற்றியும், தமது மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பு நல்க மறுக்கும் நிர்வாகம் பற்றியும் அவர்கள் பேசினார்கள். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினாலும், அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளினாலும் அவர்கள் கைவிடப்பட்டும், ஏமாற்றப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விடயம் குறித்து அவர்கள் மிகவும் பற்றுறுதி உடையவர்களாக இருக்கிறார்கள்; சாதாரண தமிழ் மக்களுடனான தமது நட்புப் பற்றியும், அவர்களுடன் தமது உறவுகளை மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்பது பற்றியும் அவர்கள் மிகவும் நம்பிக்கை கொண்டோராக இருக்கிறார்கள். எனினும், யாழ்ப்பாணத்தில் அவதானிக்கப்படும் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையின் உள்ளோட்டங்களும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்திரும்பலினை உறுதிப்படுத்தும் வகையிலும், ஒரு பன்மைத்துவம் மிக்க யாழ்ப்பாணத்தினைக் கட்டியெழுப்பவது தொடர்பிலும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியிலிருந்து பரந்துபட்ட முனைப்புக்கள் எதுவும் இல்லாமையும் அந்தக் கூட்டத்தினை முடித்து நான் வீடு திரும்பும் போது எனக்குக் கவலையினை ஏற்படுத்தின.

துருவப்படுத்தப்பட்டுப் போதலும் கூடி வாழ்தலும்

சில “இஸ்லாமிய சக்திகளே” ஈஸ்டர் தாக்குதலினை மேற்கொண்டதாக செய்தி அறிக்கைகள் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையிலே, சமூகங்கள் துருவப்பட்டுப் போயிருக்கும் தீவிர நிலையினைக் கையாளுவதற்காக நாம் எவ்வாறு ஒன்று திரளப்போகிறோம் என்ற கேள்வி என் மனதிலே தோன்றுகிறது.

எனது தாயாருக்குத் திருவிருந்தினை வழங்கிய பின்னர் எமது வீட்டை விட்டுப் புறப்படும் போது அந்த இளைய அங்கிலிக்கன் குருவானவர் இனி வரப் போகும் நாட்கள் குறித்துச் சிந்தித்தார். அடுத்த சில நாட்களுக்கு எல்லா வழிப்பாட்டு நிகழ்வுகளையும், எல்லாக் கிறிஸ்தவ ஒன்றுகூடல்களையும் நிறுத்துவது தொடர்பான தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தன.

தன்னுடைய எண்ணங்கள் தொடர்பிலே குருவானவர் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். தாக்குதல்களினை மேற்கொள்பவர்கள் அந்தத் தாக்குதல்களினால் கொல்லப்படுபவர்களினதும், காயப்படுத்தப்படுபவர் களினதும் வேதனையினை ஒரு போதும் காண்பதில்லை. இது தான் எமது வரலாறும் பிளவுபடுத்தலின் அரசியலும். இதுவே எமது நாட்டினை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

அந்தக் குருவானவரின் செய்தி மிகவும் முக்கியமானது. இந்தப் பிளவுபடுத்தும் அரசியல் எம்மை ஆக்கிரமிப்பதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை என கிறிஸ்தவ மதகுருக்கள், சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கருத்துருவாக்கிகள் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

கொல்லப்பட்ட மக்களுக்காகவும், காயப்பட்ட, இழப்புக்களினாலும், மன வேதனையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் நாம் எமது அன்பினையும், ஆறுதலினையும் வெளியிடும் அதேவேளை, தம்மீது பதில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்ச உணர்வுக்கு உட்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எமது அன்பினையும், கரிசனையினையும் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். பிளவுபடுத்தலின் அரசியலினைத் தடுத்து நிறுத்தவும், சமூகங்களாக நாம் கூடி வாழ்வதற்கான எமது பற்றுறுதியினை மீளவும் உறுதி செய்யவும் இதனை நாம் உடனடியாகச் செய்ய வேண்டும்.


அகிலன் கதிர்காமர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையிலே சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.