பட மூலம், Selvaraja Rajasegar
“தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல”
– சொபொக்லீஸ் (என்டிகனி)
இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா?
கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் யாவை? அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியின் சூடு இன்னும் தணிந்து போகாத சூழ்நிலையில் கூட மனதில் எழுகின்ற பதில் என்னவெனில், ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து கொள்வதேயாகும்.
ஏதேனும் ஒன்று இடம்பெற்ற பிறகு அது தொடர்பில் தெளிவினை ஏற்படுத்திக் கொள்ளல் எனப்படுகின்ற பிந்திய ஞானம் எமக்கு நிறைய விடயங்களை கற்றுத் தருகின்றது. அதேபோல் சில குறைபாடுகளும் அங்கு இடம்பெறும். 2015இல் எமக்கிருந்த தெரிவு மிக சரலமானதொன்று. மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடவையும் வழங்குவதா, இல்லையா என்பதுதான் அது. மஹிந்த ராஜபக்ஷவை ஜனநாயக ரீதியாக அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான் அன்று எமது தேவைப்பாடாக இருந்திருந்தால், 2015 என்பது அதற்காக எமக்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். ராஜபக்ஷக்கள் இன்னும் ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். அன்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததைப் போல “மஹிந்த ராஜபக்ஷவினது ஏகாதிபத்திய வெறியினை இந்த சந்தர்ப்பத்தில் தோற்கடிக்கவில்லையெனில் மீண்டும் திருப்பம் ஒன்றினைக் காண்பதற்கு இலங்கைக்கான வாய்ப்பு இல்லாது போகும்.”
ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கான தர்க்கரீதியான காரணம் இதுவேயாகும். ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளூடாக அந்த தர்க்கத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து கொள்வதில் அல்ல தவறு நடந்தது. உண்மையாகவே 2014இல் செய்யக்கூடியதாக இருந்த மிகச் சரியான தெரிவு அதுதான். தவறு யாதெனில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக அவர் வழங்கிய உறுதிமொழியை மையப்படுத்தி அவரைக் கட்டுக்குள் வைப்பதில் நாம் அடைந்த தோல்வியே ஆகும்.
தமது ஒன்பது வருட ஆட்சிக் காலப்பகுதிக்குள், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினுள் சட்டரீதியாக அமையப்பெற்ற சர்வாதிகார ஆபத்து யாதென்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தி இருந்தார். 2014ஆம் ஆண்டின் போது எதிர்க்கட்சித் தரப்பினர் பெரும் விரிசலில் இருந்ததோடு அந்த பயங்கரமான அவதானமிக்க நிமைமையை மிகத்தெளிவாக அடையாளம் கண்டும் இருந்தனர். அதன் பிரதிபலனாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் எதிர்த்தரப்பு அரசியலில் அன்று முக்கியமானதொரு தலைப்பாக அமைந்தது.
மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஷ அரசிலிருந்து வெளியே வந்தது 2014 நவம்பர் 21ஆம் திகதியே. ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடுவதை ஏற்றுக் கொண்டார். அதனுடன் இணைந்ததாக நடந்த ஊடக சந்திப்பின் போது, தாம் நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பாக அவர் அங்கு தெளிவுபடுத்தினார். அவற்றுள் மிக முக்கியமான முதலாவது விடயமாக அமைந்தது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும். அந்த முறைமையானது அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் நாட்டுக்கு பெரும் தீங்கானது எனவும், அநீதி மற்றும் பாரபட்சத்தின் உறைவிடம் என்பதனையும் அவர் அங்கு தெரிவித்தது மட்டுமல்ல அதனை தோலுரிக்கும் வகையில் தெரிவித்து நின்றார். “ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிகத் தெளிவான இணக்கப்பாட்டுக்கு வந்தது, இந்த முறைமையை முடித்து விட வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும் அவர் அங்கு தெரிவித்தார். “எனவே நான் நாட்டு மக்களிடம் வேண்டி நிற்பது, 100 நாட்களுக்குள் அதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை எனக்கு பெற்றுக் கொடுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துக் கொண்டார்.
தாம் வழங்கிய உறுதிமொழி, வெற்றியினைத் தொடர்ந்து பின்வழியாக வீசி எரியப்படும் நிலைமை ஏற்படும் வரையில் இடமளித்தமையே தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் நாம் திருப்தி அடைந்தமையே தவறு நடப்பதற்கு காரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கப்பட மாட்டாது என நாம் நம்பிக்கை வைத்தமையே தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
அந்த தவறுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் சிறிசேன மீது மட்டும் ஒப்படைத்து விட முடியாது. அதற்கிணையான தவறும் பொறுப்பும் ஐக்கிய தேசியக் கட்சியையும் சாரும்.
இலங்கை சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மிக இலகுவாக வெற்றி கொள்வதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தது. அவ்வாறானதொரு இலகுவான வெற்றியைப் பற்றி அவர் எந்தளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்று கூறுவதாயின், நாட்டு மக்களது பொது எதிர்பார்ப்பினையும் கூட மறந்தே அவர் செயற்பட்டார். நல்லாட்சியின் தரங்களை தொடர்ச்சியாக மீறிச் செயற்பட்டார். சஜித் பிரேமதாஸ (ரவி கருணாநாயக்கவும் கூட) ரணில் விக்கிரமசிங்கவை தலைமையிலிருந்து அகற்றி விட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவே காத்திருந்தனர். அதனடிப்படையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதனை ஐக்கிய தேசியக் கட்சி தவிர்த்துக் கொண்டது.
இதற்கிடையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் விஷம் மைத்திரிபால சிறிசேனவையையும் தொற்றிக் கொண்டது. அந்த முறைமையை ஒழிக்கும் தலைப்பிலிருந்து லாவகமாக விலகிச் சென்ற அவர், ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தமது எண்ணத்தையும் மெதுவாக புறந்தள்ளி வைத்தார். அவரையும் நோய் தொற்றிக் கொண்டது. அதாவது மீண்டும் எவ்வாறு ஜனாதிபதியாக வருவது என்ற நோயே அது.
மாதுலுவாவே சோபித்த தேரர் உயிருடன் இருந்திருந்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கும் உறுதிமொழி எமது அரசியல் கலந்துரையாடலில் இருந்தும் சமூக சிந்தனையிலிருந்தும் மறைந்து போவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்க மாட்டாது. அவர் இல்லாத இந்த சமூகத்தில் அந்த செங்கோலை தாங்கிச் செல்வதற்கான தேசிய மட்டத்திலான வரவேற்பினைப் பெற்ற ஒரு கதாபாதத்திரம் நாட்டுக்குள் இல்லாது போனது.
(இந்த கட்டுரையாளர் உட்பட) நாம் செய்த ஒரு தவறுதான், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் விஷப் பல் அகற்றப்பட்டு விட்டதெனவும், இனிமேலும் அது பெரும் தீங்கினை விளைவிக்காது எனவும் நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொண்டமையாகும்.
அதன்படி அதுவரையில் காணப்பட்ட ஒட்டுமொத்த அடித்தளமும் மாற்றம் கண்டன. அதனூடாக 2018 ஒக்டோபரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சிக்கு பாதை உருவாக்கப்பட்டது.
முகமூடி அணிந்தவொரு ஆசிர்வாதமாக அரசியலமைப்பு சூழ்ச்சி அமைந்தது
சூழ்ச்சி நடைபெறுவதற்கு முதல் நாள் அதாவது ஒக்டோபர் 24ஆம் திகதி நாடு எங்கிருந்தது? 2015இல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமையானது உண்மையான இலங்கையின் ஒத்துழைப்பின் – ஒரு கூட்டு முயற்சியின் பிரதிபலனாகவே. 2018இல் அந்தக் கூட்டு ஒத்துழைப்பு சுக்கு நூறாக சிதைந்து போயிருந்தது.
அரசாங்கம் செய்தவைகள் ஊடாகவும் செய்யாதவைகள் ஊடாகவும் தமது பழைய தோழமைகளுடன் மனஸ்தாபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவ்வாறான பல தோல்விகளை உண்மையாகவே தவிர்த்துக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக் கொடுப்பது கடினமானதொரு விடயமாக இருக்கலாம். ஆயினும், வடக்கு கிழக்கு இரு மாகாணங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை போதுமானளவு அமைத்துக் கொடுக்க முடியாமல் போனது ஏன்? கண்டியில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் அரசாங்கம் எதிர்பார்த்திராத, திடீரென உருவாகிய ஒரு நிலையாக இருக்கலாம். ஆயினும், அதன் சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கெதிராக தண்டனை வழங்க முடியாமல் போனது ஏன்? ரூபாவின் வீழ்ச்சியை முழுமையாக கட்டப்படுத்த முடியாத விடயமாக இருக்கலாம். ஆனாலும் அதனால் சாதராண பொது மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கவனத்தில் கொள்ளாதது ஏன்? தம்மவர்கள் ஊழலில் ஈடுபட்ட போதும் கூட அரசாங்கம் மௌனம் காத்தது எதனால்? அரசியல் கொலைக் குற்றவாளிகள் ஒருவரையேனும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதில் தோல்வி கண்டது ஏன்? லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டு பத்தாண்டு நினைவு கூறப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், மேலே கூறப்பட்ட இறுதியானது மீண்டும் எமக்கு பழைய விடயங்களை நினைவுபடுத்தி இன்றும் அச்சம் கொள்ளவைக்கின்றது.
கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டாலும், தற்போதுள்ள நிலைமையின் விபரீதத் தன்மையைப் புரிந்து கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி கண்டுள்ளது. எரிபொருள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட விலைச் சூத்திரமானது வாக்காளர்கள் மீதான அரசாங்கத்தின் செயற்றிறன் அற்ற வெளிப்பாட்டின் ஒரு நிலைமையே ஆகும். புவி வெப்பமடைதல் இலங்கைக்கு எவ்வாறு தாக்கத்தினை செலுத்தும் என்பது தொடர்பாகவோ அல்லது சீனாவுக்கு துரித வேகத்தில் அடிமையாகிக் கொண்டிருப்பது தொடர்பிலோ (அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பான பாரிய பதாகைகள் சிங்கள, ஆங்கில மற்றும் சீன மொழிகளைத் தவிர தமிழ் மொழியில் காட்சிப்படுத்தப்படாத தன்மை சுட்டிக்காட்டப்படுகின்ற நிலைமையினுள்) அன்றாடம் கொன்றழிக்கப்படுகின்ற யானைகள் பற்றியோ அல்லது நுரைச்சோலை நிலக்கரி மின் ஆலையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாகவோ வன்புணர்வுகள் பற்றியோ சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலோ அரசாங்கத்திற்கு எவ்வித கரிசனையும் காணப்படவில்லை. அண்மையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் நபரொருவரால் நாயொன்று தீயிட்டு கொல்லப்பட்ட சம்பவம் கூட அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்திய இன்னுமொரு சம்பவமே அது. “விலங்குகள் நல சட்டம்” தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமையே அதற்கான காரணமாகும்.
மிக முக்கியமாக ‘அரசியலமைப்புச் சபைக்கு’ சமல் ராஜபக்ஷவை முன்மொழிவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த (தவறான) முடிவு, சில வேளைகளில், அரசியலமைப்புக்கு எதிரான சூழ்ச்சி கட்டவிழ்த்து விடப்படுவதற்கு முன்னதாக நாமிருந்த நிலைமையை மிகத் தெளிவாக புலப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். அரசாங்கத்தின் முட்டாள்தனத்திற்கு நன்றியாக அமையட்டும், பன்மைத்துவ இலங்கை தொடர்பான எண்ணக்கரு விடயத்தில் ராஜபக்ஷக்களினால் ஏற்படுத்தக் கூடிய அவதானமிக்க சூழ்நிலையை நாட்டிலிருக்கும் சிறுபான்மை இன கட்சிகள் கூட மறந்து போயிருந்தது.
மைத்திரிபால சிறிசேனவினது சூழ்ச்சியானது எந்தளவு பேரிடியாக இருந்தாலும், அது நித்திரையில் நடந்து திரிந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியமான நேரத்தில் கன்னத்தில் அறைய வேண்டியிருந்த ஒரு அடியாகும். ராஜபக்ஷக்கள் மீண்டும் பேயாட்டம் ஆடும் நிலைமையின் யதார்த்த நிலையானது யாவருடைய கண்களையும் திறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தமக்கு பழக்கமே இல்லாத ஒரு பலத்தை அங்கு நிரூபித்துக் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த அளவில் அவரைச் சுற்றி ஒன்று கூடியது.
ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அம் மாபெரும் மிரட்டலுக்கு முன்னால் 2015 குழுவானது மீண்டும் எழுந்து நின்றது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கென தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் துணிவுடன் எழுந்து நின்றமையானது, சிறிசேன சூனியக் குழுவினரால் உருவாக்கி விடப்பட்ட மிகச் சிறந்த பிரதிபலனாக கவனத்திற் கொள்ள முடியும். உதாரணமாக, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அநுரகுமார திசாநாயக்க அது தொடர்பில் பேசிய பேச்சுக்கள், அவசியமானதொரு கற்கையாக கொள்ள முடியும். ஏனெனில், அவர்கள் இந்தப் பிரச்சினையை வெறுமனே தமது கட்சி சார்ந்த கோணத்திற்கு அப்பால் சென்று தேசிய நோக்கக் கோணத்தில் வைத்து ஆய்வுக்குட்படுத்தியமையே அதற்கான காரணமாகும்.
ஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தின் ஆளுமையை நிலைநாட்டுவதற்காகவும் சாதாரண மக்கள் சுயமாகவே எழுந்து நிற்கின்றமையானது கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் ஊக்கம் அளிக்கப்பட்ட மற்றுமொரு சாதகமான விடயமாகும். ஐக்கிய தேசியக் முன்னணி அரசாங்கத்தின் தவறுகள், வெளிவேசங்கள் காரணமாக, 2015இல் மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு தடவைகள் தோற்கடித்த மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகி நின்றனர். ராஜபக்ஷவுக்கு எதிரான ஜனநாயக குழுக்களும் சோர்ந்து போயின, செயலிழந்து நின்றன. காரணமின்றி சிதறிப் போய், அவ்வாறான குழுக்களின் செயற்பாடு கூட நிலையில்லாத நிலைமைக்கு ஆளாயின. ஆயினும், அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியுடன் அவ் அனைத்தும் மாற்றம் பெற்றன. நாடு உண்மையிலேயே எதனால் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற விடயம் தெளிவாகியது. சாதாரண மக்கள் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக -எதிர்ப்பு செயற்பாட்டுக்கு எதிராக தம்மால் முடிந்த வகையில், ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும், மற்றொரு சந்தர்ப்பத்தில் மகஜரில் கையொப்பம் பெறுதல் ஆகியவற்றின் மூலமாக ஒத்துழைப்பு நல்கி எழுந்து நின்றனர். அந்தச் சமூக எழுச்சியானது இலங்கைக்கு புதிய அனுபவமாக அமைந்தது. இந்தச் சிக்கல் நிலைமையின் பின்னரும் கூட அந்த உயிரோட்ட பண்புகள் தொடர்ச்சியாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடியதாகவுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கதையின் வீரனாக கணிக்கப்பட்டது நீதிமன்றமே. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் (ஈவா வனசுந்தர நீதிவான் உட்பட) இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டதன் படி, “அதிகாரம் கொண்ட எவருக்கும், ஜனாதிபதி ஒருவருக்குக் கூட, வேறு அரச அதிகாரி ஒருவருக்குக் கூட, எமது சட்டத்தில் எல்லையற்ற அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என இந்த நீதிமன்றம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளது.” சூழ்ச்சியின் காரணமாக, ஜனநாயகத்திற்கு தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷக்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மிரட்டல்களை ஜனநாயகவாதிகளுக்கு நினைவூட்டுவதோடு மைத்திரிபால சிறிசேனவை விட கொடூரமான தலைவரொருவரின் கைகளில் அகப்படுவதற்கு முன்னர் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதன் தேவைப்பாட்டினையும் நினைவுபடுத்தியதாகவே அத் தீர்ப்பு அமைந்தது.
இது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு ஒத்துப் போகும் நாடு அல்ல
இலங்கையின் புராதன பண்டைய காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிப் பார்க்கின்றபோது அது நிறைவேற்று அதிகாரத்திற்கு பொருத்தமல்லாத நாடு என்பது தெளிவாகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனநாயகம் என்பன ஒன்றாக இணைந்து பொருத்தமாக காணப்படுவது அரசாட்சி முறைமை முற்காலத்தில் காணப்படாத அமெரிக்கா போன்ற நாடுகளுக்கேயாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை காணப்படுகின்ற பிரான்சிலும் முற்காலத்தில் அரசாட்சி முறைமை காணப்பட்டதென்பதும் உண்மைதான். ஆயினும், அந்த நாடு அரசாட்சி முறைமைக்கு எதிராக குடியரசு புரட்சியினை நடாத்தியதோடு அரசரும் கூட சரியான தருணம் பார்த்து தலையறுத்து கொல்லப்பட்டார். இலங்கையின் ஆட்சி வரலாற்றிலும் அரசர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், அது பிரான்சைப் போன்று ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகிய மூவகை விடயங்களின் கீழ் ஒன்று திரண்ட பொது மக்களைப் போலல்லாது அதிகார வெறிகொண்ட தரப்பினரால் தான் அவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, எமது நாட்டு மக்கள் அவ்வாறானதொரு விடயத்திற்கு ஒத்துழைப்பு நல்கியிருக்காத சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையொன்று தொடர்பில் கரிசனை ஏற்படுவதற்கு காரணமாயிருப்பது அரசாட்சி தொடர்பில் காணப்படும் விருப்பமாக இருக்கலாம். மறுபுறம் அடிமை எண்ணம் கொண்ட மனநிலையும் அங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் ஜனநாயகத்திற்கு முன்னால் இருக்கும் மிகத் தெளிவான சவால் யாதெனில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ ஒருவர் அதிகாரத்திற்கு வருவதேயாகும். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாக மஹிந்த, பஸில், கோட்டபாய மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பினும், சமல் ராஜபக்ஷ தொடர்பில் அவ்வாறானதொரு எதுவிதத் தடையும் இல்லை. ஆதரவாளர்கள் வலுவூட்டப்படுவதும், எதிர்த்தரப்பினர் வலுவிலக்கச் செய்யப்படுவதும் தொடர்பில் பார்க்கின்ற போது அவர் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளராகும் வாய்ப்பு உள்ளது.
ராஜபக்ஷக்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி பெறுவது யார்? அதிஷ்டத்தாலும் மைத்திரிபால சிறிசேனவால் வெற்றி பெற முடியாது. அப்போது மீதமாய் இருப்பது ரணில் விக்கிரமசிங்கதான். சஜித் பிரேமதாஸ அல்லது ரவி கருணாநாயக்கவும் பட்டியலில் இருக்கின்றனர். இங்கு சொல்லப்பட்ட தலைவர்களில் எவரேனும் ஏதேனும் வழியால் வெற்றி கொண்டாலும், மைத்திரிபால சிறிசேனவை விடவும் ஜனநாயகவாதியாக செயற்படுவார்கள் என நாம் நம்பிக்கை கொள்வதற்கு சாதகமான வேறேதும் காரணிகள் உள்ளதா?
புதிய ஜனாதிபதி யாராயினும், அதிகாரத்திற்கு வருகின்ற கையுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவர் என்பது ஊர்ஜிதம். அவ்வாறு செய்வதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியின் சூடு தணியுமுன்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்காகவே. அதாவது மார்ச் – ஏப்ரல் காலப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதென்பதே. அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஒரே கட்சியை சென்றடைய வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இருப்பு மற்றும் மாற்றுப் பொறிமுறை எந்தளவு வெற்றி பெறும்? அவ்வாறான நிலையில் பிரதமராகும் நபர் ஜனாதிபதியின் கைப்பொம்மையாக செயற்படும் நிலைமையே உருவாகும்.
இலங்கையானது நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு விசேடமாக பொருத்தமற்றதாக அமைவதற்கு ஏதுவானதொரு காரணி எமது அரசியல் முறைமையினுள் காணப்படுகின்றது. தற்போதுள்ள எந்தவொரு அரசியல் கட்சியிலும் உள்ளக ஜனநாயகம் காணப்படாமையே அதுவாகும். உதாரணமாக பார்ப்பதாயின், நிறைவேற்றறு ஜனாதிபதி முறைமை காணப்படுகின்ற (அமெரிக்கா, பிரான்ஸ், சிலி ஆகிய நாடுகள்) பெரும்பாலான நாடுகளில் பிரதான கட்சிகளுடைய தலைவர்களுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளராக ஒருவர் தெரிவு செய்யப்படுகின்ற ஜனநாயக அல்லது சம்பிரதாய முறைமையொன்று காணப்படுகின்றது. அவ்வாறான தெரிவானது ஒட்டுமொத்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து பிரதிநிதிகளையும் கொண்டவொரு கொத்தணி மூலமாகவே. இலங்கையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எப்போதும் கட்சித் தலைவர்களே, அவர்களது தலைமைத்துவ அதிகாரத்தையோ அல்லது கொள்கைகளையோ சவாலுக்குட்படுத்தக் கூடிய ஜனநாயக சூழல் எமது கட்சி முறைமையினுள் காண்பதற்கும் இல்லை. கட்சியில் உள்ளக ஜனநாயகம் காணப்படாமையானது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நியாயமான வெற்றிகளை அர்த்தமற்றதாக்கி விடுவதற்கு ஏதுவான காரணியாக அமையலாம்.
டிசம்பர் 13ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டார். அது மிக முக்கியமானதொரு விடயமாகும். சில சிங்கள ஊடகங்கள் (விசேடமாக ‘ஞாயிறு லங்காதீப) வெளியிட்ட செய்திகளின் படி, அவரது புதிய அரசியல் தோழமையாகிய மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு ஆலோசனை வழங்கியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினை கவனத்திற் கொள்ளாது நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லுமாறுதான். மைத்திரிபால சிறிசேனவும் அந்த ஆலோசனையின் படி செயற்பட்டிருந்தால் ஏற்படவிருந்த விபரீதத்தின் அழிவினை அளவிட முடியாது. ஆயினும், அவர் அவ்வாறு செய்யவில்லை. அப்படி எனில், அதாவது தமக்கு பாரியளவில் சாதகமற்றதாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடிபணியத் தயாரான ஜனாதிபதியாக அவர் செயற்பட்டமையானது, கடந்த இரண்டு -மூன்று மாத காலப்பகுதியில் பல குழப்ப நிலைகளை தோற்றுவித்தாலும் 2015இல் மேற்கொண்ட தெரிவானது சரியானது என்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.
அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்கின்ற காலம் நெருங்கி வரும் வேளையில் இந்த பிரச்சினையானது மேலும் முக்கியமான விடயமாக எம் கண்முன் காணப்படும். அவ்வேளையில் நாம் ஒத்தழைப்பு நல்கும் வேட்பாளர் இன்னுமொரு மைத்திரிபால சிறிசேன ஒருவரோ அல்லது அவரையும் மிஞ்சிய ஒரு நபராக இருக்கமாட்டார் என சொல்வதற்கு உள்ள உறுதிப்பாடு தான் என்ன?
அதன்போது எம் கண்முன் இருப்பது ஒரேயொரு பாதுகாப்பான மாற்றுவழி மாத்திரமே: நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும்.
இந்த முறைமையை ஒழிப்பதற்கு அவசியமான அழுத்தம் சமூகத்தினுள் காணப்படுமாயின் மேலும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு அந்த வேண்டுகோளுக்கு தலைமைத்துவத்தினை வழங்க முடியுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியினால் அதனை நிராகரிக்க முடியாமல் போகும். ஜனாதிபதியானவர், நேரடியாக தேர்தலொன்றின் மூலமாக தெரிவு செய்யப்படுவதற்கு பதிலாக நாடாளுமன்றத்தின் மூலமாக தெரிவு செய்யப்படுகின்றவரும், அரசாங்கத்தின் தலைவரல்லாத ஒருவராகவும் கட்சியொன்றின் தலைவருமல்லாத ஒருவராக இருப்பது தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த விடயம் தொடர்பிலான மிகச் சிறந்த ஆரம்பமாக சுட்டிக் காட்ட முடியும்.
அந்த முயற்சியானது வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம். ஆயினும், அது மேற்கொள்ளப்பட வேண்டிய பெருமுயற்சியாகும். அரசியலமைப்பு சூழ்ச்சியானது இந்நதளவு பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ள சூழ்நிலையினுள்ளும் அதனை செய்யாதிருப்பது முட்டால்தனமான ஒரு கொடுமையாகும்.
What the coup taught us என்ற தலைப்பில் திசரணி குணசேகர எழுதி கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.