பட மூலம், Theconversation
டிசம்பர் 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினமாகும். 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புலம்பெயருபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துக்காக பிரகடனப்படுத்தப்பட்டது தான் இந்த சர்வதேச புலம்பெயர்வோர் தினமாகும். இதில் முக்கிய விடயம் என்னவெனில், ஐக்கிய நாடுகள் சபையானது, புலம்பெயர்வோருக்கான தினத்தை பிரகடனப்படுத்த முன்னரே அவர்களுக்கான சமவாயத்தை 1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பிரகடனப்படுத்தியது விசேட அம்சமாகும். இச்சர்வதேச சமவாயத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது, 1996ஆம் ஆண்டு இச்சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் தங்களுடைய புலம்பெயர் தொழிலாளர்களையும் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மற்றும் அவர்களுடைய பங்களிப்பை பாராட்டி கௌரவப்படுத்தும் நோக்கில், இச்சர்வதேச தினத்தை வருடாவருடம் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில், இலங்கை அரசாங்கமும் இத்தினத்தில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டிருக்கும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் அதிக அளவிலானோர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தொழிற்சந்தைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளின் தொழிற்சந்தைகளில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சந்தர்ப்பங்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அதேவரிசையில், அண்மையில் இலங்கை தாதிமார்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தங்களை இருநாடுகளும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள், இலங்கையின் பொருளாதார உயர்வுக்கு பெரும் பங்களிப்புக்குச் செய்வதினால், இலங்கை அரசாங்கமானது மேலும் பல நாடுகளுடன் இணைந்து வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. அதன் விளைவாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (Gross Domestic Product) இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வருடமொன்றிக்கு சராசரி 7 மில்லியன் அமெரிக்கா டாலர் அந்நிய செலவாணியை நாட்டிற்கு வருவாயாகப் பெற்றுத்தருகின்றனர்.
இலங்கை அரசாங்கமானது, புலம்பெயர் தொழிலாளர்களை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 1985ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டுவந்ததுடன், 1994ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் சட்ட திருத்தங்களை உள்ளடக்கியது. இதில் விசேட அம்சம் என்னவெனில், ஐக்கிய நாடுகளின் சமவாயம் பிரகடனப்படுத்த முன்னரே, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயருவோருக்கான உயர் நிலை கூட்டத்தொடரில் (UN High Level Dialogue on International Migration and Development (“UN-HLD”)) கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் கொள்கைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதுடன் மற்றும் கட்டுப்பாடு நடைமுறைகளில் புதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதற்கு சுவிஸ் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து புலம்பெயர்வோர் பாதுகாப்புத் திட்டம் ஒன்றினை அமுல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திக்கான தொழிநுட்ப மற்றும் நிதி உதவியினை சுவிஸ் அரசாங்கம் வழங்கி வருகின்றது. இத்திட்டத்திலே மற்றைய பங்காளர்களான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை காரியாலயம் உட்பட இலங்கையின் தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கொண்டு சேவையினை வழங்கி வருகின்றன. இதன் ஒரு பலனாக, இலங்கையின் ஒவ்வொரு மாவட்ட ரீதியில் நியமிக்கப்பட்ட புலப்பெயர்வோருக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வருகின்ற நேரடிச் சேவையைக் குறிப்பிடலாம்.
2008ஆம் ஆண்டு அமைச்சர் ரம்புக்வெல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்கம் மற்றும் நலன்புரி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கைக்கு (The National Policy on Labour Migration in Sri Lanka) அமைவாகவே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அவரைத்தொடர்ந்து, அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் அமைச்சர் ஹரின் பர்னாந்து ஆகியோரின் காலப்பகுதிகளில் பல்வேறு ஆணையங்கள் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளின் முன்னேற்றத்துக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பின் பயனாக, பல்வேறு நன்மைபயக்கும் விடயங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
எவ்வாறாயினும், இலங்கையில் தொடரும் அரசியல் நிலைமையும், சட்ட இடைவெளியும், குறிப்பாக சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டிய சந்தர்ப்பங்களில் அதிகாரத்துவ பிரயோகம் போன்ற காரணங்களால், தொழில்நிமித்தம் புலம்பெயருபவர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவதாக சர்வதேச அறிக்கைகள் தெரியப்படுத்தியுள்ளனர். இவ் உரிமை மீறல்களில் அதிகமாக முகவர் மோசடி, குற்றவியல் செயற்பாடுகள், சட்ட விரோத ஆட்கடத்தல், சட்டவிரோத சிறுவர் தொழில், பெண்கள் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் துஸ்பிரயோகம், சம்பளம் வழங்காமை, ஏற்படும் விபத்துக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். மிக முக்கியமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்த காலம் முடிவடைந்து நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் திறமை மற்றும் தொழில் அனுபவங்களை உள்ளூர் தொழில் சந்தைகளில் ஒருங்கிணைப்பதற்கான சாத்திய பொறிமுறை நடைமுறையில் இல்லாத காரணத்தினால், நாட்டிற்கு திரும்பிய தொழில்வகுப்பினர் மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளாகியுள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) ஆய்வின்படி, உலகத்தில் கிட்டத்தட்ட 164 மில்லியன் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு 150 மில்லியன் வரை காணப்பட்ட இவ் எண்ணிக்கையானது, கடந்த 06 வருட காலப்பகுதியில் 09 விகிதமாக அதிகரித்துள்ளது. இதற்குப் பிரதான காரணிகளாக ஒவ்வொரு நாடுகளில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இதைத்தவிர, உலகில் நிலவிவரும் சனத்தொகை அதிகரிப்பும் மற்றும் காலநிலை மாற்றங்களும், தொழிலாளர்கள் தங்கள் நாடுகளிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளைத் தேடி செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இனிவரும் காலங்களில் இவ்வெண்ணிக்கையானது பல மடங்காக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அண்மைக்காலமாக, அகதிகளாக அந்தஸ்து கோரி சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு கடல் மற்றும் தரை மார்க்கமாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துக்காக 2016ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட சர்வதேச உடன்படிக்கையினை, 2018ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மொரோக்கோ நாட்டில் நடைபெற்று முடிந்த மாநாட்டில் 164 நாடுகள் கையொப்பமிட்டு உறுதிசெய்துள்ளனர். ஆகவே, இவ்வுடன்படிக்கையின் நிமித்தம் இலங்கை அரசாங்கமானது, இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளைக் கொண்டு தனது கொள்கைகளில் பல திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்திக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் உரிமை சார்ந்த பிரச்சினைகளை, இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்கள் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் பலன்களை அல்லது விளைவுகளை மதிப்பீடு செய்யும் சந்தர்ப்பங்களில், இலங்கையில் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தேசிய மட்டத்தில் சுயாதீனமாக இயங்கக்கூடிய சிவில் சமூக கூட்டணிகள் மூலம் கிடைக்கப்பெறும் முடிவுகளைப்போலன்றி, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்கு பலமிக்க சிவில் சமூக கூட்டணிகளின் ஸ்தீரமற்ற செயல்பாடுகளின் காரணத்தினால் இவ்விடயம் இலங்கை நாட்டைப்பொறுத்தமட்டில் முதன்மையற்றதாக ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.
விஷேடமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பமான காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக இயங்கிக்கொண்டிருந்த ஒருசில சிவில் சமூக அமைப்புக்களின் முன்னிலை மனித உரிமைகள் ஆர்வலர்கள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் பாரிய பிரச்சாரம் மற்றும் பரப்புரை செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்தமை இலங்கை வரலாறுகளில் எழுதப்பட வேண்டியதொன்றாகும். ஆனால், கடந்த தசாப்தங்களாக நிதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் சிவில் சமூக அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து திட்டங்களை அமுல்படுத்துகின்ற காரணத்தினாலும், உரிமை சார்ந்த பிரச்சனைகளை தனித்துவமாக அழுத்தம் கொடுக்க முடியாத காரணங்களால் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை சார்ந்த விடயத்தில் பிரச்சார செயற்பாடுகள் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகின்றது.
ஆகவே, சாதாரண பிரஜை ஒருவருக்கு கிடைக்கப்பெறும் உரிமைகளுக்கு சமனான உரிமை புலம்பெயர் தொழிலாளர்கள் விதிவிலக்கு அல்ல என்பதை நிர்ணயிக்கவேண்டிய தேவைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு என்பது மிகையாகாது. இன்று உலகத்தில் நிலவுகின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியில், புலம்பெயர் தொழிலாளர்களின் வருவாயைக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கமானது, எதிர்வரும் காலங்களில் எதிநோக்கப்படும் பாரிய சவால்களுக்கு எவ்வாறு தனது தொழில்வர்க்கத்தினை தயார்படுத்தப்போகின்றது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக காணப்படுகின்றது. எனவே, இதில் பங்குதாரர்களான இலங்கை அரசாங்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, வெறுமனே புலம்பெயர் பாதுகாப்புத் திட்டத்தை மட்டுமன்றி, உள்ளூர் சந்தைகளில் காணப்படும் தேவையினை அடைவதற்கும் மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில் கிடைக்கப்பெற்ற திறமை மற்றும் அனுபவங்களை கொண்ட தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த முனைய வேண்டும். அத்துடன், புதிய தொழில்வகுப்பினர்களை எதிர்கால சர்வதேச சந்தையில் நிலவும் தொழில்துறைகளில் கலந்துகொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார கொள்கைகளை பன்முகப்படுத்த வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர்க்கும் சந்தர்ப்பங்களில், வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பை தேடிச்செல்லும் தொழில்வகுப்பினர் அரசியல் மற்றும் பொருளாதார உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகவேண்டியதுடன், அவர்களை தங்கிவாழும் குடும்ப அங்கத்தினவர்கள் மற்றும் நாட்டினுடைய பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியவர்களாவர்.
ஆகவே, இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புக்களும் டிசம்பர் 18ஆம் திகதியானது வெறுமனே ஒரு சர்வதேச நாள் என்பதற்கு அப்பால், புலம்பெயர்வோருக்காக கொண்டாடப்படுகின்ற இத்தினம், ஒரு மிகப்பெரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்பதினை நினைவில் வைத்திருத்தல் பல நேர்த்தியான மாற்றங்களுக்கு ஒரு அடித்தளமாக அமையலாம்.
பிரான்சிஸ் சொலமன்ரைன்
பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய கிழக்கு நிலையம்- துபாய்