பட மூலம், Selvaraja Rajasegar

ஆசிரியர் குறிப்பு: பெண்கள் குழுவொன்றால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

###

ஜனாதிபதி அவர்களே,

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அன்று தாங்கள் எடுத்த தன்னிச்சையானதும் ஒருதலைப்பட்சமானதுமான ஒற்றை முடிவு பல்வேறு சம்பவங்களுக்கு வித்திட்டு இன்று குழப்பமான துயர்மிக்க, அதிர்ச்சி மிகுந்த, நிலை தழும்பிய படுகுழியிலே நாட்டினைத் தள்ளிவிட்டுள்ளது. அன்றிலிருந்து நாட்டின் பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டு வீழ்ந்தே விட்டுள்ளதுடன் அரசியல் கலாச்சாரமானது சொல்லொணா வகையில் சீர்கெட்டுள்ளது. சுருங்கக் கூறின் தேசிய அவமானமாகவும் சர்வதேசத்தின் பார்வைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. இந்நிலைமை உடன் நிறுத்தப்பட்டு, சீர் செய்யப்படாவிடின் அரச நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் முற்றாகக் குழப்பமடைந்து, அர்த்தமற்ற வன்முறைகளால் நிறைந்துவழிய நேரிடும் நிலைமை காணப்படுகிறது. இப் பிரச்சினையானது ஜனநாயக முறையில் உடன் நிறுத்தப்படாவிட்டால் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் எனப் பல சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். இன்றைய நிலைப்பாட்டின் பிரகாரம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்குப் பணம் அனுப்புவதை நிறுத்திவைத்துள்ளன. சர்வதேச நிதி உதவி மற்றும் கடன்  உதவியிலேயே இலங்கையின் செயற்பாடுகள் பிரதானமாகத் தங்கியிருப்பதால் பொருளாதார முடக்கங்கள் இலங்கையையும் அதன் பிரஜைகளையும் பெருமளவில் பாதிக்கும்.

ஜனாதிபதி அவர்களே, எமக்கும் எமது சிறார்களுக்கும் இந்த நாடு மட்டுமே வாழ்விடம். அதன் பொருளாதாரத்தையும் அரசியலையும் நாசப்படுத்தினால் விளைவுகளைப் பொதுமக்களாகிய நாம்தான் எதிர்கொள்ள நேரிடும். அரசியல்வாதிகளிடம் உள்ளது போல் பணம் எங்களிடம் இல்லை. நாட்டில் எழும் பொருளாதாரப் பிரச்சினைகள் ரணில் விக்கிரமசிங்கக்களையோ, மஹிந்த ராஜபக்‌ஷக்களையோ, ஏன் மைத்திரிபால சிறிசேனக்களையோ பாதிப்பதில்லை என்பதும் நாமே பலிக்கடாக்கள் என்பதுமே நிஜம் ஜனாதிபதி அவர்களே.

நாட்டின் யாப்புரிமைக்கு அமைய தலைவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அந்த வகையில் சொந்த விருப்பு, வெறுப்புகள் மற்றும் முரண்பாடுகளுக்காக உண்மை புறக்கணிக்கப்படக்கூடாது. ஆட்சிக் கொள்கைகளுக்கு அமைய நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் தீர்வினைத் தாங்கள் சீக்கிரம் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தினால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது பழுத்த அரசியல்வாதியான தங்களுக்குத் தெரியாதது அல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சேதப்படுத்துவது என்பது மிகப் பாரதூரமான முன்மாதிரியாகும். இது நாட்டின் வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லக் கூடியது. நாம் எல்லோரும் அதனை அறிந்தவர்கள். நீங்கள் உருவாக்கிவைத்த இந்த நன்நாட்டிலே உள்ள சிறார்கள் அவல நிலையில் வளரப்போகிறார்கள் என்பதை சற்று நின்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள்.

தெளிவான சிந்தை கட்டுக்கோப்பான நடத்தை, பொய் பேசாமை, வார்த்தை நாணயம், வாக்கு மாறாமை எனும் பெளத்த போதனைகள் அனைத்தும் அவற்றைப் பின்பற்றும் அரசியல்வாதிகளாலேயே தவறவிடப்பட்டுள்ளது என்பது துயரத்தையும் அவமானத்தையும் தருகிறது. ஏமாற்றும் கபடமும் நிறைந்த இக்கலாசாரம் எமது அரசியல் யாப்பிலே நுழைவதை அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதி அவர்களே, ஏலவே காலம் தாழ்ந்துவிட்டது. தாங்கள் தங்களது பணியினைச் சரிவரச்செய்து நாடு மேற்கொண்டு அறிவின்மை பால் போகவிடாது உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாடும் அதன் சிறார்களும் எனும் பெரும் கடப்பாடு தங்கள் முன்னுரிமைகளாகக் காணப்படுகின்றன.