பட மூலம், Selvaraja Rajasegar
ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றத்தைக் கலைத்த தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வௌியிடப்பட்ட அறிக்கை
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றின் முதலாவது அரசியலமைப்பிற்குப் புறம்பான ஆட்சி மாற்றம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தேறியது. இந்த அரசியலமைப்பு சதியை நிலை நிறுத்தவென நவம்பர் 9 அன்று நாட்டின் அரசியலமைப்பு மீண்டுமொரு முறை மீறப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி சிறிசேன நாட்டின் நாடாளுமன்றத்தை சட்டத்திற்கு முரணாகக் கலைக்கும் அறிவித்தலில் கையெழுத்திட்டிருக்கின்றார். இதற்குப் பதிலாக நாங்கள் இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். எம் நாட்டு வரலாற்றின் தீர்க்கமான கட்டத்தில் எமதும், எம் சக பிரஜைகளின் செயற்பாடுமே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை நினைவுபடுத்துவதே எம் பிரதான நோக்கம்.
திரு. சிறிசேனவினது இறுதி அறிவிப்பு தொடர்ச்சியான அரசியலமைப்பு மீறல்களின் பின்னணியில் வந்திருக்கின்றது. ஜனாதிபதியால் (1) நாடாளுமன்றம் கூடி நான்கரை வருடங்கள் கடந்த பிறகு அல்லது (2) 2/3 பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்தின் பெயரில் மாத்திரம் தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். இவ்விரண்டு நிபந்தனைகளில் ஒன்றேனும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் திரு. சிறிசேன மற்றும் திரு. ராஜபக்ஷ நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பிற்கு முற்றும் முரணாகச் செயற்படுகின்றார்கள் என்பது தெளிவு.
இருப்பினும், எமது அரசியலமைப்பு வெறும் தாளில் மையன்று. அதுவே எமது பிரதிநிதிகளிடத்தில் நாம் எவ்வெவ் அதிகாரங்களைக் கொடுக்கின்றோம் என்பதைத் தீர்மானிக்கின்றது. அதுவே நாட்டின் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித் துறையின் அதிகாரங்களை வரையறுத்து இத்துறைகளினிடையே வலுச் சமனிலையை அமுல்படுத்துகின்றது. அரசியலமைப்பே தேர்தல்கள் நியாயமாகவும், நீதியாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதிகளை நியமிக்கின்றது. சுருக்கமாகச் சொல்வதானால், எமது அரசியலமைப்பே நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏது செய்கின்றது.
நாடாளுமன்றக் கலைத்து மக்களிடம் தெரிவைக் கொடுப்பதனூடே ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றது என்பது அப்பட்டமானதொரு பொய். திரு. சிறிசேன மற்றும் திரு. ராஜபக்ஷ ஜனநாயகத்தைப் பற்றிய கரிசனையற்றவர்கள். எம் ஜனநாயகத்தின் அத்திவாரமான அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரே பிரதமராகவிருக்க வேண்டுமென்பதைச் சொல்லி நிற்கின்றது. ஆனால், பெரும்பான்மையின்றியே, திரு. சிறிசேன திரு. ராஜபக்ஷவைப் பிரதமராக்கத் தலைப்பட்டார். நாடாளுமன்ற வாக்கெடுப்பு இந்த உண்மையை அனைவருக்கும் உணர்த்தியிருக்கும். ஆனால், திரு. சிறிசேனவோ மக்கள் சபை கூடுவதைத் தடுத்தார். ஜனநாயகம், தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைத் தெரிந்தெடுத்தவர்களது விருப்பு மற்றும் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமென்கிறது. ஆனால் திரு. சிறிசேன மற்றும் திரு. ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பணத்தைக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறச் செய்தார்கள்.
இரண்டு வாரங்களாக, திரு. சிறிசேன மற்றும் திரு. ராஜபக்ஷ இருவரும் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவன்றி மக்கள் நலனிற்காகச் செயற்படவில்லை. எந்தத் தேர்தலும் இந்தச் சிந்தனையின் பாற்பட்டே நிகழப் போகிறது. சட்டவிரோத அமைச்சர்களின் கீழ், அரச வளங்கள் இருவரதும் தேர்தல் பிரச்சாரங்களிற்கெனப் பயன்படுத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்க்கட்சிகளைத் தடுக்கவும், பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல்கள் ஆணைக்குழு மீது இவர்களது கட்டளைகளுக்குப் பணியும் படியான அழுத்தம் பிரயோகிக்கப்படும். ஊடகங்கள் ஏற்கனவே நசுக்கப்படத் தொடங்கிவிட்டன. அரசியலமைப்பையும் மற்றும் ஜனநாயகப் பண்புகளையும் இவர்கள் உதாசீனம் செய்யும் தீவிரத்தைப் பார்க்கும் போது இவர்கள் தேர்தலிலே தோற்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்களா எனும் சந்தேகம் எழுகின்றது. எமது எதிர்ப்பு தேர்தல்களிற்கு எதிரானதல்ல. தேர்தல்களை நியாமாகவும், நீதியாகவும் நடப்பிக்கும் அரசியலமைப்பின் விதிகள் முற்றாக உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் நிகழவிருக்கும் சட்ட விரோத தேர்தலொன்றையே நாம் எதிர்க்கின்றோம்.
இதனால் நாம்:
1. ஜனாதிபதி சிறிசேன தனது வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2. சபாநாயகர் உடனடியாகவே நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையைச் சோதித்தறிய வேண்டும்.
3. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான – மஹிந்த தேசபிரிய, என். ஜே. அபயசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி) மற்றும் பேராசிரியர். இரத்தினஜீவன் ஹூல் என்போர் நாட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க நடக்க வேண்டும்.
4. உச்ச நீதிமன்றமும், ஏனைய நீதிமன்றங்களும் அரசியலமைப்பை துணிச்சலாகவும், பாரபட்சமின்றியும் நிலை நாட்ட வேண்டும்.
5. இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவினர் அடங்கலாக அரச சேவையாளர்கள் அனைவரும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு எழுத்து மூலம் தருவிக்கப்படும் சட்டபூர்வமான கட்டளைக்கு இணங்க மாத்திரம் இயங்க வேண்டும்.
எனக் கோரி நிற்கின்றோம்.
இளைய இலங்கையராக, இந் நிகழ்வுகளின் பலன்களை திரு. சிறிசேன மற்றும் திரு. ராஜபக்ஷ ஆகிய இருவரது காலமும் முடிந்த பிறகும் நாம் அனுபவிக்கப் போகின்றோம். சட்டம் பற்றிய ஆட்சியின்றி, ஊழலின்றிய நாளை இல்லை. சட்டத்தினூடான ஆட்சியின்றி அப்பட்டமான மனித உரிமை மீறல்களைத் தடுக்க பிற வழியேதுமில்லை. சட்டபூர்வ ஆட்சியின்றி நீதிக்கோ, சமாதானத்திற்கோ, நல்லிணக்கத்திற்கோ சந்தர்ப்பமேயில்லை. விதிமுறை கொண்ட ஆட்சியின்றி அனைவருக்குமான செல்வச் செழிப்போ, உருப்படியான அபிவிருத்தியோ எம்மெவர்க்கும் கிடையாது.
இருந்தாலும் நம்பிக்கை தீர்ந்துவிடவில்லை. ஒக்டோபர் 26 நிகழ்ந்த அரசியலமைப்பு சதிக்கு எதிரான தீவிரமான ஜனநாயக எதிர்ப்பு பூரணமான ஆட்சி மாற்றத்தைத் தடுத்தது. எமது எதிர்ப்பின் குரல்கள், எதிர்ப்புப் பேரணிகளில் எங்கள் தடங்கள், எம் செயற்பாடுகள் சிறியனவாகவும், பயனற்றதாகவும் தோன்றினாலும் நிச்சயம் அவசியமானவை. மாறத்திற்கு ஏதுவானவை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையர் அனைவரையும் எம்மோடு இணைந்து ஜனநாயகத்திற்காகவும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், எதிர்ப்பை வெளிப்படுத்தவும், எமது எதிர்காலத்திற்கு நேர்ந்திருக்கும் இந்தத் தீவிரமான அச்சுறுத்தலை எதிர்த்து நிற்கவும் வேண்டி நிற்கின்றோம்.