ஆசிரியர் குறிப்பு: 1959ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி தேவநேசன் நேசையா எழுதிய பகிரங்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு ஜனாதிபதி சிறிசேன தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார்.

7 நவம்பர் 2018

மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி

இலங்கை

மேதகு ஜனாதிபதியவர்களே,

நான் இந்த நாட்டின் விசுவாசமான பிரஜை என்ற வகையிலும் 2017 மார்ச் மாதம் நீங்கள் எனக்கு வழங்கிய பெரும்கௌரவத்திற்குரிய தேசமான்ய விருதை பெற்றவன் என்ற முறையிலும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு விருது கிடைத்ததையும் இந்த தேசத்திற்கான எனது பெரும் சேவையை ஜனாதிபதி அங்கீகரித்ததையும் கொண்டாடுவதற்காக மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், உறவினர்கள் இலங்கை வந்திருந்தனர்.

நான் உங்களை முன்னர் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால், நீங்கள் ஜனாதிபதியானதும் எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். எனினும், 70 வருட ஜனநாயகத்தை நீங்கள் வெளிப்படையாக மீறியதன் ஊடாக அந்த மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமாக மாறியுள்ளன.

தேசப்பற்றுள்ள விசுவாசமான இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் நீங்கள் எனக்கு வழங்கிய தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பி வழங்குவதை தவிர வேறு வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை. நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். இலங்கைக்குத் திரும்பியதும் நான் அவற்றை திருப்பிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் .

ஜனாதிபதியவர்களே எனது முடிவு எளிதாகவோ அல்லது அவசர அவசரமாகவோ எடுக்கப்பட்டதொன்றல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிவில் சேவையில் நான் இணைந்துகொண்ட நாளிலிருந்து கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்திருக்கிறேன். நான் பெருமையுடன் சுமக்கும் சுமை அது.

இலங்கை சிவில்சேவையில் நான் இணைந்துகொண்ட காலம் முதல் பணியின் போது நான் எனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காததால் ஐக்கிய தேசிய கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களால் இடையூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தேன்.

நீங்கள் எனக்கு வழங்கிய தேசமான்ய விருது குறித்து பெருமிதம் கொள்ள முடியாததால் இதுவரை நான் மதித்து வைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழ்களையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு வேறு வழியில்லை.

உண்மையுள்ள,

கலாநிதி தேவநேசன் நேசையா