பட மூலம், MONEY1055

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு இருந்தாலும், அந்த நகர்வுகள் கூட எதிராளியை இறுதியில் திணற வைக்கும்.

தற்போது இலங்கை அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும் போது, சில காய்கள் பார்வையாளர்களுக்காக நகர்த்தப்படுவது போலவும், சில காய்கள் தத்தமது இறுதி வெற்றிகளை நோக்கி நகர்த்தப்படுவது போலவும் தோன்றுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த ஜனாதிபதியின் செயற்பாடு  சட்டரீதியானதா, ஜனநாயகத்திற்கு விரோதமானதா என்ற பேச்சுக்கள் ஒருபுறமும் நடந்துகொண்டிருக்க,  நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இரண்டு தரப்புகளும் முயற்சிகள் செய்துவருகின்றன.

ஆனால், இந்த பெரும்பான்மை எப்படி நிரூபிக்கப்படப்போகிறது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனெனில், பிரதமர் பதவியில் இருந்து ஒருவரை அகற்றுவதற்கு, அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியமாகிறது.

தமது பிரதமர் பதவியை பறித்தது சட்டத்திற்கு புறம்பானது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் ரணில் தரப்பும், தற்போது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் மஹிந்த தரப்பும் தமது எதிராளிகளுக்கு  எதிராக “பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்” என்ற ஒன்றை கொண்டுவரமுடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனெனில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட உடனேயே தாங்களே பிரதமர் பதவிக்கு உரித்துடையவர்கள் என்ற அவர்களின் வாதம் அடிபட்டுப்போகும் ஆபத்து இருப்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பகிரங்க விலை நிர்ணயம்

வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒக்ஷன் என்ற ஒரு கேலிக்கூத்துக்கு முழு நாட்டு மக்களும் பார்வையாளர்களாக மாறியிருக்கிறோம். மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றம் நுழைந்தவர்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் தங்களை மக்கள் மன்றத்தின் முன்னால் விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். கட்சி தாவுதல் என்பது புதிய விடயம் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் கட்சி மாறியவர்கள், அதை மக்களுக்கு நியாயப்படுத்தவேண்டிய தேவையிருந்தது, அதற்காக பெரும்பாடுபடவேண்டியிருந்தது.  ஒருமுறை எஸ்.பி. திசாநாயக்க சுதந்திர கட்சியிலிருந்து ஐதேகவுக்கு மாறிய போது,  ஏன் தனக்கு கட்சி மாறவேண்டி ஏற்பட்டது என்று மாதக்கணக்கில் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். தற்போது மக்கள் மனநிலை என்ன, தங்களது குடும்ப உறுப்பினரக்ளுக்கு தெரியாமலேயே காலை ஒரு கட்சியிலும் மாலை இன்னுமொரு கட்சியிலுமாக பணத்துக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள்தான் இந்த நாட்டு மக்களுக்கான கொள்கை வகுப்பாளர்கள் என்று நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. இன்னுமொன்று, கட்சி மாறுதல் என்பது அவர்களுக்கு மரத்துப்போன விடயமாக இருந்தாலும் மக்களும் இதை ஒரு சாதாரண விடயமாக, ஒரு அரசியல் மரபாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்பது ஆபத்தானது.

கட்சி மாறும் தடைசட்டம் மூலம் இந்த நிலையை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர முடியும். இதற்காக ஜேவிபி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது, இரண்டு பிரதான கட்சிகள் உட்பட சில கட்சிகள் இந்தத் தடைச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதன் எதிர்விளைவுகள் மக்கள் பிரதிநிதிகளை எந்தளவு மட்டகரமாக மாற்றியிருக்கிறது என்பது தற்போதைய நடப்புக்களை பார்க்கும் போது புரிகிறது. முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு கோடி இரண்டு கோடி என்றிருந்த விலைப்பட்டியல், வெளிநாடுகளின் தலையீடுகளால் தற்போது இருபது அல்லது முப்பது கோடிகளாக மாறியிருக்கிறது.

ஐ.தே.கவின் பலவீனம்

கிராமிய மக்களை, உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களை கவரும் எந்தவித வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல், தனது கல்லூரி நண்பர்களை வைத்து கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் ரணில் தலைமையிலான ஐதேக இந்த சிக்கலில் இருந்து ஒருவேளை தற்காலிகமாக மீண்டாலும் இன்னுமொரு தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஒருகாலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற பெருமையைப் பெற்றிருந்த ஐதேக கட்சியை பொறுத்தவரை முற்றிலும் சிறுபான்மை வாக்குகளிலேயே தங்கியிருக்கிறது. இந்த வாக்குகளும் தற்போது இல்லை என்றிருந்தால் ஐதேகவும் சில இடதுசாரி கட்சிகளைப் போன்று ஒரு பெயர்பலகை கட்சியாக மாற்றப்பட்டிருக்கும். இதற்காக கட்சி உறுப்பினர்கள் ரணிலை விட்டு விரண்டோடுவது என்பது புதிய விடயமும் இல்லை. சொல்லப்போனால் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் முக்கால்வாசி ஏதோ ஒரு காலத்திலாவது ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தற்போது எஞ்சியிருக்கும் ஒருசில எம்பிக்களும், சஜித் கட்சிக்கு தலைமேயேற்பார் என்ற நம்பிக்கையிலேயே ஐதேகவில் தொடருகிறார்கள். ஆனால், ரணில் இருக்கும்வரை அது நடக்குமா, எப்போது நடைபெறும் என்பது எவருக்கும் தெரியாது.

மஹிந்த மற்றும் மைத்திரியின் நகர்வுகள்

மறுபக்கம் பொதுத் தேர்தலை நோக்கியே மஹிந்த தரப்பு நகருகிறது என்பது புரிகிறது.  நாம் சமர்ப்பிக்கவிருக்கும் இடைக்கால பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டால்  பொதுத்தேர்தலுக்கு செல்வது எமக்கு இலகுவாகிவிடும் என்று மஹிந்தவே கூறியிருக்கிறார்.  19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் நான்கரை வருடத்திற்கு முன்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தாலே ஒழிய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லை என்ற விடயம் தெளிவாக இருக்கின்றது. இலங்கை அரசியலில் எதையும் நிச்சயித்து கூறமுடியாது. பிரதமரை அகற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் வறிதாக்கப்பட்டிருந்த போதிலும், மற்றொரு சரத்தை பாவித்து ரணில் விக்ரமசிங்கவை அகற்றியது போல குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இரண்டுமுறை அரசாங்கங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் நாட்டின் அரசியல் ஸ்தரத்தன்மை செயலிழந்திருகிறது. இதைப் பாதுகாக்க, நாடாளுமன்ற சம்பிரதாயப்படி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை நிறுவுவதை விட நாடாளுமன்றம் தானாக கலைக்கப்படும் என்ற அடிப்படையில் மஹிந்த அணி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுவருகிறது.

எனினும், மஹிந்த அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் அல்லது பட்ஜெட்டில் தோல்வியடைந்தால், மீண்டும் பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக ஜனாதிபதி நியமிக்கக்கூடும் என்ற ஒரு அரசியல் வதந்தியும் அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது. காரணம் மீண்டும் ரணில் பிரதமராக வந்தால், ஒரு மணித்தியாலம் கூட தான் ஜனாதிபதி பதவியில் இருக்க போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதையும் கவனித்தில் கொள்ளும் போது இந்தக் கூற்றை அடியோடு மறுப்பதற்கும் முடியாமல் இருக்கிறது

மஹிந்த அணி தங்களை இடைக்கால அரசாங்கம் என்றே அழைத்துக்கொள்கிறார்கள் என்பதும் அவர்களின் முக்கியஸ்த்தர்கள் எவரும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் இதுவரை பெறவில்லை என்பதும் அவர்கள் பொது தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பதற்கான சமிக்ஞையாகும். தேர்தலின் பின்னரான அவர்களின் உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெரும்பான்மையை நிரூபித்தல் என்ற இருதரப்புக்குமான இழுபறியில், துமிந்த திசாநாயக்க என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதில் இருந்த குழப்பநிலை காரணமாக இரண்டு நாட்களாக கள நிலவரம் கொஞ்சம் தளம்பல் நிலையில் இருந்தது. அதனால், கட்சி மாற உத்தேசித்திருந்தவர்கள்  மதில்மேல் பூனைகளாக இருந்திருந்தார்கள். துமிந்த என்ற தடை தற்போது அகற்றப்பட்டிருப்பதால், இனிமேல் விஷேட செய்திகளை எதிர்பார்க்கலாம். ஐதேகவில் இருந்து மாறமாட்டார்கள் என்று நம்பப்படும் பொன்சேகா, மங்கள, அகில, சாகல போன்றோர் வகித்த அமைச்சுக்கள் தவிர ஏனைய அமைச்சுக்கள் இதுவரை எவருக்கும் வழங்கப்படவும் இல்லை என்ற விடயத்தை “புதிய அரசாங்கம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறது” என்ற குறியீடாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

திரிசங்கு நிலையில் சிறுபான்மை கட்சிகள்

எந்த அரசாங்கம் தற்போது அமைந்தாலும், அடுத்த தேர்தல் வரும் வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு முடிவு எட்டும் வகையிலான சூழல் இருக்கப்போவதில்லை என்ற நிலையில் ஏதாவது ஒருதரப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களின்  பிரச்சினைகள்  தொடர்பில் எழுத்துமூலம் உறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் பேஸ்புக்கில் அறிவுரை கூறுவது வேடிக்கையாகத் தெரிகிறது. சிறுபான்மை கட்சிகளைப் பொறுத்தவரையில் எதிர்கால தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டே எந்தவொரு முடிவுகளை எட்ட முனைகிறார்கள் என்பது அவர்களின் கூற்றுக்களை வைத்துப்பார்க்கும் போது புலப்படுகிறது.

ஏனெனில், தமிழ் கூட்டமைப்பு தவிர ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமிசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் மஹிந்த தரப்புக்கு மாறும் போது மிகவும் கிட்டிய தூரத்தில் பொது தேர்தல் நடைபெற்றால், அவர்கள் ஒன்றில் மொட்டு அல்லது வெற்றிலை சின்னத்தில் களம் இறங்கவேண்டி ஏற்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி மாறும் உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த கூட்டணியில் இருக்கும் சிறுபான்மை உறுப்பினர்களுடன் விருப்பு வாக்குகளுக்காக கடுமையாக போராடவேண்டி வரும் என்பதையும் கணித்திருக்கிறார்கள்.

இன்னொரு தெரிவாக, பொதுத்தேர்தல் வரை ஐதேகவுடன் பயணித்து, பின்னர் மஹிந்த வெற்றிபெற்றால் இணைந்துகொள்வதும் இலகுவான தெரிவாக இல்லை. காரணம் பொதுத்தேர்தலில் மஹிந்த அமோக வெற்றிபெற்று தனியாக ஆட்சியமைக்கும் நிலை உருவானால், சிறுபான்மை  கட்சிகளின் தயவு மஹிந்தவுக்கு தேவைப்படப் போவதில்லை என்பதால் எதிர்கட்சியில் உட்காரவேண்டி ஏற்படும். கட்சித் தலைமைகளை மிச்சம் வைத்துவிட்டு, உறுப்பினர்களைப் பிரித்து கட்சிகளை உடைக்கும் பழைய வேலையை மஹிந்த செய்ய துணிவார் என்பதும் இவர்களுக்கு தெரிந்திருக்கும். எனவே, தங்களின் உறுப்புரிமையையும், கட்சியையும் காப்பாற்றும் உத்தியாக எதை செய்யப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

டில்ஷான் முஹம்மத்

 


தொடர்புபட்ட கட்டுரைகள்: “ஆபத்தைச் சந்தித்திருக்கும் ஜனநாயம்”, “இலங்கையில் ஏற்பட்டு அரசியல் நெருக்கடி: சில அபிப்பிராயங்கள்”