பட மூலம், ALJAZEERA

2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள்.

ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள்.  2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற போர் சூழ்நிலை காரணமாக சொல்லொணாத்துயரங்களை தினம்தோறும் முகம் கொடுத்த அவர்கள் போரின் முடிவை வரவேற்றார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஊடகவியலாளராக பயணங்களை மேற்கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட மக்கள் போர் நிறைவு பெறுவதற்காக எவ்வாறு ஏங்கினார்கள் என்பதை அவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்.

போரின் இறுதிக்கட்டத்தின்போது பொதுமக்களில் பலர் தமது உயிர்களை இழந்தனர். சர்வதேச கணிப்பீடுகளின் படி  இந்தத் தொகை 40,000 இருக்கும் 70,000 இற்கும் இடைப்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. மேலும் பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். போர் நடைபெற்ற பகுதிகள்  இவ்வாறு அங்கவீனர்களாக்கப்பட்டோரினால் நிறைந்திருக்கின்றது. இருப்பினும், போர் நிறைவடைந்ததால் தாம் பெருமகிழ்ச்சி கொண்டனர் என அவர்கள் வாயாலே கூற நான் கேட்டுள்ளேன். போர் இடம்பெற்ற 30 வருடங்களில் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், உயிர், உடற்பகுதி மற்றும் உறவினர்களின் இழப்புக்கள் காரணமாக அவர்கள்தான் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

போரின் நிறைவானது விடுதலைப் புலிகளின் முடிவு என்ற கருத்தையும் இம்மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ் மக்களை மீட்பவர்கள் என தம்மைத்தாமே கூறிக்கொண்டாலும் விடுதலைப் புலிகள் தமிழரை காப்பாற்ற வந்தவர்கள் அல்ல. அவர்களது கருத்துக்களுக்கு மாற்றான கருத்தைக் கொண்டவர்களை அவர்கள் கொலை செய்தார்கள். தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோடு இணைத்துப் பார்க்கப்படுவது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும்.

இதை விட வியப்பிற்குரிய விடயம் என்னவென்றால், இலங்கைக்கு வெளியே வாழும் ஒரு குறுகிய எண்ணிக்கையான தமிழர்களின் நன்னோக்கத்துடனோ அல்லது வேறு நோக்கத்துடனோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசியம் சார்பான குரல்களை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக கருதுவதாகும். ஆயினும் இலங்கையிலோ அல்லது வெளி நாடுகளிலோ வாழும் தமிழர்கள் மத்தியில் இவ்வாறான மனநிலை காணப்படுவதில்லை. எனினும், வழமைபோலவே, தமிழர்களுக்கான மேடைகள், ஊடக வெற்றிடங்களை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். தயவுசெய்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செல்வாக்கு மிகுந்த காலப்பகுதியில், அவர்களுக்கு எதிராக அல்லது மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு கொலைசெய்வதன் மூலம், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆனாலும், இவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் ஒருபோதும் வெளியே கசியவில்லை. ஆனால், இப்போது? ஊடகங்களும் சிவில் சமூகமும், தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளையும் குழுக்களையும் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்? இது பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

இதற்கு சிறந்த உதாரணமாக, அண்மையில் இடம்பெற்ற யாழ். சர்வதேச திரைப்பட விழாவைக் கூறலாம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களின் துன்பத்தை உலகுக்கு முதன்முதலாக எடுத்துக்கூறிய, ஜூட் ரத்னத்தினால் இயக்கப்பட்ட திரைப்படமான ‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’ திரைப்படம் இந்த விழாவின்போது திரையிடப்படவிருந்தது. எனினும் இத்திரைப்படத்தின் திரையிடல் திடீர் என்று எவ்வித காரணங்களும் கூறப்படாமல்  ரத்து செய்யப்பட்டது.

நான் அந்தத் திரைப்படத்தைப் பார்த்துள்ளேன். என்னைப்போலவே பல தமிழர்களும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். ஜூட் ரத்னம் இந்தத் திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பான எதையும் சொல்லவில்லை என்பதே அவர்களது கருத்தாகும். தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் எப்படியாவது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வருவதற்கு ஏதுவான மூலக்கருத்தை அவர் காண்பிக்கிறார்.

இந்தத் திரைப்படம் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன  ரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் கொலைகள் ஆகியவற்றை காண்பிக்கும் காணொளிகளினூடாக ஆரம்பிக்கின்றது. பல ஆண்டுகள் அகிம்சை முறையில் மேற்கொண்ட போராட்டங்களின் பின்னர் இளைஞர்கள் ஆயுதத்தை ஏந்துவதை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான காரணத்தையும் இத்திரைப்படம் விளக்குகின்றது. தமிழ் மக்களின் எதிர்கால நலனை நோக்காகக் கொண்டு தமது உயிரைக் கூட தியாகம் செய்ய துணிந்த இளைஞர்கள் பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் இணைந்தமையையும் இத்திரைப்படம் காண்பித்திருந்தது.

விடுதலைப் புலிகள் எவ்வாறு ஒரு பலம் மிக்க குழுவாக பரிணமிக்க ஆரம்பித்தது என்பதையும், இலங்கை இராணுவத்துக்கெதிராக போரிட முன்னர், வடக்கின் ஏனைய தமிழ் குழுக்களை வீழ்த்தி எவ்வாறு தன்னை பலப்படுத்திக் கொண்டது எனவும் இத்திரைப்படம் விளக்கியது.

விடுதலைப் புலிகள் இயக்கமானது காலப்போக்கில் எவ்வாறு தமிழ் மக்களுக்கே ஒரு அசுரனாக மாறியதையும், அவ்வமைப்பில் தார்மீக பொறுப்புமிக்க சிலர் எவ்வாறு அவ்வமைப்பை விட்டு வெளியேறி அதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர் என்பதையும் இத்திரைப்படம் விளக்கியிருந்தது. 2000ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் பணத்துக்காக கடத்தப்படுத்தல், சிறுவர் போராளிகளாக இணைப்பதற்கு வலுக்கட்டாயமான கடத்தல், வலுக்கட்டாயமாக பணம் பறித்தல் மற்றும் வலுக்கட்டாயமாக இராணுவ ஆட்சிமுறை ஆகிய காரணங்களினால் நெருக்கடி நிலையில் இருந்தார்கள்.

தமது ஆயுதங்களைக் கைவிட்டு மக்களைப் பற்றி நினைத்து மனிதநேயத்துடன் நடந்திருப்பார்களேயானால் இந்தப் போரானது குறைந்த உயிர் சேதத்துடன் சீக்கிரமாக முடிவுற்றிருக்கும். மாறாக ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறவிடாது மனிதக் கேடயங்களாக அவர்கள் வைத்திருந்தார்கள். அவ்விடத்தைவிட்டு தப்பியோட எத்தனித்த பலரை துப்பாக்கி ரவைகள் தீரும் வரை சுட்டார்கள். அவ்வாறு தப்பியோட முனைந்த சிலரோடு நான் பேசுகையில், விடுதலை புலி உறுப்பினர்கள் எவ்வாறு அவர்களை சுட்டார்கள் என்றும், ரவைகள் தீர்ந்தவுடன் எவ்வாறு சிவில் உடைகளை அணிந்து மக்களோடு மக்களாக தப்பிக்க முயன்றார்கள் என்பதையும் கோபத்துடனும் கண்ணீருடனும் நினைவு கூர்ந்தார்கள்.

இதேவேளை, வலுக்கட்டாயமாக இயக்கத்துக்கு இணைக்கப்பட்ட போராளிகளோடு நான் பேசுகையில், அவர்களுக்கு மேலிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும், அவ்வாறு செய்யாவிடின் தமது குடும்பத்தினர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் கூறினார்கள். இவ்வாறான கோபங்கள், யுத்தம் முடிவடைய ஏங்கிய மக்களின் மனநிலை மற்றும்  விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் வீழ்ச்சி ஆகியவை ஜூட் ரத்னத்தின் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இவ்விழாவின் ஏற்பாட்டாளர்கள், ‘சமூகம்’ எதிர்த்தமையினால் இத்திரைப்படத்தை திரையிட முடியவில்லை என்று கூறினார்கள். இந்தச் ‘சமூகம்’ யாராக இருக்கும்? இங்கு இருக்கும் சமூகத்தினரிடையே ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதா? இல்லாவிட்டால், ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சில தமிழ் தேசியவாதிகளின் கருத்தைக்கேட்டு இந்த முடிவு எட்டப்பட்டதா?

தமிழ் மக்களின், முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை ஓரளவுக்கு அறிந்த ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் நான் கூறக்கூடியது என்னவென்றால், ஒரு சாதாரண தமிழனுக்கு இந்தத் திரைப்படத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஒரு சிலருக்கு இந்தத் திரைப்படம் பிடிக்காமல் போகலாம். ஆனால், அவர்கள் இந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டவை பொய் என ஒருபோதும் கூற மாட்டார்கள். ஏனெனில், இங்கே கூறப்பட்டவை முற்றிலும் உண்மையே.

“விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்படுவதினால் எமது மக்களில் சிலர் கொல்லப்படுவார்களானால் அது அப்படியே ஆகட்டும்” என்ற ஒரு வசனம் திரைப்படத்தின் இறுதியில் இயக்குனரினால் கூறப்படுகின்றது. இந்த வசனமே இத்திரைப்படம் திரையிடப்பட முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆயினும், கொடூரமான கருத்தாக இருப்பினும், இவ்வாறானதொரு கருத்தே யுத்த களத்தில் வெளியில் வாழும் தமிழர்களிடையே அந்நேரத்தில் காணப்பட்டது. நானும் அவ்வாறு உணர்ந்தேன், ஆனாலும் நான் மட்டுமே அவ்வாறு உணர்ந்தேன் என்பதில் உண்மை இல்லை.

இந்தத் திரைப்படம் ஏன் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது என்பது பற்றி இன்னொரு நண்பருடன் நான் பேசுகையில் அவர் இப்படி கூறினார் – “யுத்த களத்திற்கு வெளியே வாழும் நம்மைப்போன்ற தமிழர்கள் அனைவரும் இவ்வாறே சிந்தித்தோம். ஜூட் ரத்னம் ஒரு உள்ளுணர்வு மிக்க ஒரு கலைஞன் என்ற ரீதியில் எமது மக்களின் உள்ளுணர்வை அறிந்து அதனை வெளிப்படையாக திரையில் காண்பித்துள்ளார். நம்மில் சிலர் ஒரு வேளை, நாம் சிந்தித்தபோதும் தைரியமாக வெளியில் சொல்ல தயங்கியதை வெளிப்படையாகக் காண்பித்தமைக்காக அவரை மன்னிக்க முடியாமல் இருக்கலாம். இத்திரைப்படம் நாம் காண்பிக்க வெட்கப்படும் நமது இன்னொரு பக்கத்தை காண்பிக்கும் ஒரு கண்ணாடியைப்போல நமக்கு முன்னால் இருக்கின்றது.”

எனக்கு அது புரிகின்றது. நானும் ஜூட் ரத்னத்தைப்போல சிந்தித்தபோதும், யுத்த சூழ்நிலையில் வாழாத ஒரு தமிழர் என்ற காரணத்தினால், மக்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து என் மேல் வெறுப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலும் எனது சிந்தனையை நான் வெளிப்படுத்தவில்லை. அந்நேரத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள், அவ்வப்போது இடம்பெறும் உயிரிழப்புக்களை விட, மக்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுதல் நலமாயிருக்கும் என்ற மனநிலையில் இருந்ததை நினைவில் கொள்ளலாம். இந்த உண்மையை நாம் இப்போது ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறோம். நானும் இதனை பெருமையாக ஒத்துக்கொள்ளவில்லை. என் வாழ்நாள் முழுவதும் இந்த நினைவு என் மனதில் பதிந்திருக்கும்.

எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் நான் அப்பிரதேசங்களுக்கு செல்கையில், மனிதக் கேடயங்களாக அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் மேற்குறிப்பிட்ட மனநிலையையே வெளிப்படுத்தியிருந்தார். “போர் கட்டாயமாக முடிவடைந்திருக்க வேண்டும். எமது எதிர்கால சந்ததியினருக்கு ஸ்திரமான மற்றும் சமாதானமான ஒரு சூழல் அவசியம். பலத்த சேதங்கள் மத்தியிலும் இப்போர் முடிவடைந்ததையிட்டு நாம் சந்தோசப்படுகிறோம்.”

போர் முடிவடைந்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழர்களையும் ஈர்க்கும் விதமாக (தமிழிலும் அவர் பேச) ஒரு அறிக்கையை வெளியிட்டார். “இன்று முதல் இந்நாட்டில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேதம் இல்லை. இந்நாட்டை நேசிப்பவர் மற்றும் இந்நாட்டை நேசிக்காதவர் ஆகிய இரு தரப்பினர் மாத்திரமே இருக்கிறார்கள்.” அந்நேரத்தில் இக்கூற்றானது நன்றாகவே இருந்தது. ஆனால் அது அவ்வாறு நிலைக்கவில்லை.

நாம் அனைவரும் நம் நாட்டை நேசித்தோம். நாம் இன்னமும் நம் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் அதுவே முடிவு அல்ல. திட்டமிடப்பட்ட இன ஒடுக்குமுறை இன்னும், சில சமயங்களில் போர் காலத்தில் காணப்பட்டதைவிட மோசமாக, நமது நாட்டில் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதையிட்டு அப்போது சந்தோஷப்பட்டவர்கள், ஒரு சில விடயங்கள் எவ்வாறு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது நன்றாக இருந்ததைப்பற்றி இப்போது கூறுகின்றார்கள். விடுதலைப் புலிகள் எவ்வாறு மோசமாக இருந்தார்கள் என்பதைக் கருதும்போது, இவ்வாறான கூற்றுக்கள் தற்போதைய நிலை மக்களுக்கு எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்பொழுதும் ஒரு மீட்பின் தலைவரை அல்லது பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவார்கள். இவற்றில் எதையும் விடுதலைப் புலிகள் நிறைவேற்றவில்லை. எனினும் அந்தக் கற்பனையுலகம் தொடர்பான அவர்களது வாக்குறுதிகளை இன்னமும் நம்பி மக்கள் கூட்டம் இருக்கின்ற அளவுக்கு அவர்களது அதிரடியான சுய விளம்பரம் வெற்றிகரமாக இருந்தது.

ஜூட் ரத்னம் தனது திரைப்படத்தின் மூலம் அந்தக் கற்பனையுலகத்தை நோக்கிய பாதையில் ஏற்பட்ட நரக வேதனையை வெளிக்காட்டியுள்ளார். வரலாறு மீண்டும் நிகழக்கூடாது எனில் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், நாம் திரைப்படத்தைப் பார்த்து கற்றுக்கொள்வோம்.

துளசி முத்துலிங்கம்