பட மூலம், VOX, Getty Images

அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து குழந்தைப் பிரிக்கும் அவரது நிர்வாக கொள்கையை இரத்து செய்வதாக ஜூன் 20ஆம் திகதி ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.

அவர்களின் காவலாளிகளால் மட்டுமே ஏளனப்படுத்தப்படும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் தாய் -தந்தையரை தேடி தேம்பி அழும் சத்தங்களின் ஒலிக்கோப்புகளும், தாய்மார்களின் மார்பிலிருந்து அப்பட்டமாக குழந்தைகளைப் பிடுங்கி பிரிப்பது குறித்த செய்திகளும், தங்களின் மழலைகளை உடலோடு இறுக்கிப்பிடிக்க முயலும் தாய்மார்கள் அடக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலைமை உலகெங்கிலும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் தூண்டியுள்ளன.

குழந்தைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள இத்தகைய காட்சிகள், நீண்டகாலமாக உலகின் “மிக முன்னேறிய முதலாளித்துவ நாடாக” குறிப்பிடப்படும் ஒரு நாட்டில் கட்டவிழ்ந்து வருகிறது என்பது அளப்பரிய அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதியாலும் அவர் உடனிருப்பவர்களாலும் நேரடியாக பாசிச வார்த்தையாடலில் இருந்து பெறப்பட்ட மொழியில் இந்த கொள்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்காவை “தொந்தரவு செய்ய” முனையும் “மிருகங்களாக” குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் அடோல்ப் ஹிட்லர் மற்றும் ஹென்றிச் ஹிம்லர் உரைகளுடன் மிகவும் ஒத்திருக்கின்றன.

ட்ரம்பின் இந்த உத்தரவு, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அவரது நிர்வாகத்தின் “பூஜ்ஜிய சகிப்பு” கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிட்டதாக ஆகாது. ஆவணங்களின்றி எல்லையைக் கடந்து வருபவர்கள் இனியும் குற்றவாளிகளாகவே கையாளப்படுவார்கள் என்பதோடு, அந்தக் குடும்பங்கள் மீது வழக்கு விசாரணை நடத்தி, சிறையில் அடைக்கப்படும் வரையிலோ அல்லது நாடு கடத்தப்படும் வரையிலோ, தடுப்புக்காவல் முகாம்களில் ஒன்றாக அடைக்கப்பட உள்ளார்கள்.

செவ்வாயன்று (ஜூன் 19) புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்கள் மாமிச பொட்டலங்கள் தயாரிக்கும் ஓகியோ ஆலையில் சோதனை செய்து, 146 புலம்பெயர்வு தொழிலாளர்களைக் கைது செய்து, நாடு கடத்தப்படுவதை முகங்கொடுக்க தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பினர் என்ற நிலையில், அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நாஜிகளின் கால கெஸ்டாபோ பாணியிலான வேட்டையாடல் தீவிரமாக்கப்பட்டு மட்டுமே வருகிறது. இதுபோன்ற வேட்டையாடல்களில் அடைக்கப்பட்டுள்ள பல தொழிலாளர்கள் ஏற்கனவே, அதுவும் கடந்த ஆண்டில் மட்டும், நான்கு மடங்கு அதிகமாகி உள்ளனர்.

ஐரோப்பாவிலும் மற்றும் அதற்கு அப்பாலும் நாடு மாற்றி நாடாக புலம்பெயர்ந்தவர்களே அரசியலின் முக்கிய கவனம்செலுத்தப்படுகின்ற நிலையில், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் என்பது ஓர் உலகளாவிய அபிவிருத்தியின் பாகமாகும்.

புதன்கிழமை  ஜூன் 22, ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் தினத்தைக் குறித்தது. போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, அடுத்தடுத்து ஐந்தாண்டுகளாக ஒரு சாதனையளவை அடைந்து, 2017 இல் 69 மில்லியனை எட்டியது. இந்த மொத்த எண்ணிக்கையில், 16.2 மில்லியன் பேர் கடந்த ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர், நாளொன்றுக்கு 44,000 பேர் என்ற விகிதத்தில் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

இந்த பத்து மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரதான ஏகாதிபத்திய சக்திகளால், முன்னணியில் அமெரிக்கா இருக்க, அவர்களின் சொந்த நாடுகள் மீது சுமத்தப்பட்ட பாரிய படுகொலைகளில் இருந்தும், பொருளாதார அழிப்பு மற்றும் சமூக சீரழிவிலிருந்தும் தப்பியோடி வந்தவர்களாவர்.

அவர்கள் சுவர்களையும், முள் கம்பிவேலிகள், சிறைமுகாம்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பலிக்கடா ஆக்கப்படுவதையும் முகங்கொடுக்கின்றனர்.

ஜூன் 22ஆம் திகதி ஹங்கேரியின் அதிவலது அரசாங்கம், ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்கும் எவரொருவரையும் சிறையிலடைக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், அதேவேளையில் ஹங்கேரி “அந்நிய மக்களை” ஏற்காது என்ற அந்நாட்டின் அரசியலமைப்பு பிரகடனத்தை உறுதிப்படுத்தவும் அழுத்தமளித்தது.

முந்தைய சமூக ஜனநாயக அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட காட்டிக்கொடுப்புகள் மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி இத்தாலி போன்ற ஐரோப்பாவின் ஏனைய இடங்களிலும் வலதுசாரி ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. இத்தாலியில் ஐந்து நட்சத்திர-லெகா அரசாங்கம் நெரிசலாக மிக அதிகளவில் மக்களை ஏற்றி வந்த மீட்புப்படகு Aquarius க்கு நிறுத்துவதற்கான உரிமை அளிக்க மறுத்ததுடன், ஏற்கனவே அந்நாட்டில் உள்ள நூறாயிரக் கணக்கானவர்களைச் சுற்றி வளைத்து, நாடு கடத்தவும் அச்சுறுத்தி உள்ளது.

ஜேர்மன் அரசாங்கமோ, புலம்பெயர்வை மையமிட்ட ஓர் அரசியல் நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் 20ஆம் நூற்றாண்டில் மிக மோசமான அட்டூழியங்களை நடத்தியவர்கள் பேசிய மொழியில் பேசும் ஒரு வலதுசாரி இயக்கம் அங்கே வளர்ந்துள்ளது.

அக்கண்டம் முழுவதிலும், இதேபோன்ற இயக்கங்கள் வளர்ந்துள்ளன என்பதோடு, அரசாங்கங்கள் ஐரோப்பிய புற-எல்லையின் சுவர்களை உயர்த்தி வருகின்றன.

ட்ரம்பைப் போலவே, இந்த வலதுசாரி அரசாங்கங்களும், ‘குற்றம்’ மற்றும் சமூக சீரழிவுக்கான காரணம் புலம்பெயர்ந்தவர்களே என்பதாக சித்தரித்து, உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் கூலிகளைப் பாதுகாக்கிறோம் என்பதாக, அவற்றின் இனவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை முன்னெடுக்கின்றன.

என்னவாக இருந்தாலும், இத்தகைய கேடுகெட்ட வார்த்தைகளை ஆதரிப்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. இவை வெறுமனே தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும், ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தவும் மற்றும் கூலிகள், சலுகைகள் மற்றும் இன்றியமையா சமூக சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எச்சசொச்ச தொகையை செல்வந்த ஆளும் உயரடுக்கினருக்காக பறித்தெடுப்பதையுமே அர்த்தப்படுத்துகின்றன.

ஒரு சிறிய நிதிய செல்வந்த தன்னலக்குழு பாரியளவில் செல்வவளத்தை ஏகபோகமாக்கி இருப்பதே, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் மீதான நெருக்கடிக்கு காரணமாகும். உலகின் “நிகர மதிப்பில் உயர்மட்ட நபர்கள்” என்றழைக்கப்படுபவர்களின், அதாவது 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கு அதிகமான நிகர சொத்துக்களை வைத்திருப்பவர்களது ஒட்டுமொத்த செல்வ வளம், உலகளாவிய நிதிய உருகுதலின் ஆண்டான 2008 க்குப் பின்னர் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக ஓர் அறிக்கை ஸ்தாபித்துக் காட்டியது.

அப்போதிருந்து, உலகெங்கிலுமான அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளையும், செல்வந்தர்களுக்கு முடிவில்லா சலுகைகளையும் கொண்ட இரண்டு-அடுக்கு கொள்கையைப் பின்பற்றுகின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான மூர்க்கமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் அளப்பரிய சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் தடையின்றி விரிவாகும் ஏகாதிபத்திய போரின் தீவிரப்பாடு ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கு என்ற உண்மையானது, வெறுமனே ட்ரம்பினது மற்றும் அவரது ஐரோப்பிய சமபலங்களினது பாசிசவாத சித்தாந்தத்தின் விளைபயன் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதற்கு மாறாக, அது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடி மற்றும் வரலாற்று திவால்நிலைமையின் கேடுகெட்ட வெளிப்பாடாகும், இது முன்னொருபோதும் இல்லாத பூகோளமயப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்புடன் அதிகரித்தளவில் வன்முறை மோதலுக்கு வந்து, போர் மற்றும் ஒடுக்குமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்காது. ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் வக்கிரமான கொள்கைகள் மீதான பாரிய சீற்றத்திற்கு ஆதரவை காட்டுகிறது என்றாலும், அது பல தசாப்தங்களாக புலம்பெயர்வு-விரோத சட்டங்கள் மூலமாக இதே கொள்கைகளுக்கு தான் அடித்தளம் அமைத்திருந்தது. பராக் ஒபாமா சாதனையளவுக்கு 2.5 மில்லியன் பேர்களை நாடு கடத்தியதற்காக “நாடு கடத்தும் தலைவர்” என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஜனநாயகக் கட்சியின் இடது முகமாக கூறப்படும் பேர்ணி சாண்டர்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதை உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக சித்தரித்து, அவ்விதத்தில் பாசிசவாத வலது முன்னெடுக்கும் பிற்போக்குத்தனமான சொல்லாடல்களை ஊக்குவித்து, எல்லைகளைத் திறந்துவிடுவதற்கு அவர் எதிர்ப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்பவர்களையும் அகதிகளையும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும், இதன் இன்றியமையா நலன்களும் உரிமைகளும் பிரிக்கவியலாதவாறு இத்தகைய மிகவும் ஒடுக்கப்படும் அடுக்குகளின் தலைவிதியோடு பிணைந்துள்ளன.

எந்தவொரு தொழிலாளியும் சமீபத்தில் ஓஹியோவில் நடத்தப்பட்டுள்ள இந்த விதமான சோதனைகளின் அச்சுறுத்தலான தாக்கங்களை அனுமதிக்கக் கூடாது. ஆலைகளின் அத்தனை பணிநேரங்களிலும் அணிவகுத்துச் சென்று, தொழிலாளர்களை விசாரணை செய்யவும், யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை இழுத்துச் செல்லவும் கூடிய மற்றும் அதிகாரம் பெற்றுள்ள ஒரு இராணுவமயப்பட்ட போலிஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய இலக்கு வேண்டுமானால் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் முற்றிலும் எதிர்நோக்கத்தக்க அரசியல் சூழல் மாற்றத்தின் போது, வரவிருக்கும் நாட்களில் அரசாலும் முதலாளிமார்களாலும் “போர்குணமிக்கவர்கள்” மற்றும் “தொந்தரவு செய்பவர்களாக” கருதப்படுபவர்கள் இலக்கில் வைக்கப்படலாம்.

புலம்பெயர்பவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இதை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்க முடியும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவுடன், உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்களால் பேரினவாத தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டு வருவதற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், எந்தளவுக்கு அவர்களின் போராட்டங்களை தேசிய எல்லைகளைக் கடந்து அவற்றை ஐக்கியப்படுத்துகிறார்களோ அந்தளவுக்கு மட்டுமே பூகோளமயப்பட்ட இடம்விட்டு இடம்பெயரும் முதலாளித்துவ பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியும்.

புலம்பெயர்வு பிரச்சினையைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம், முதலாளித்துவ அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தி வரும் உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சமரசமின்றி நிராகரிப்பதாகும். ஒடுக்குமுறை அல்லது நாடு கடத்தல் குறித்த அச்சமின்றி வேலை செய்வதற்கான மற்றும் பயணம் செய்வதற்கான உரிமை உள்ளடங்கலாக, தாங்கள் விரும்பும் நாட்டில், முழு குடியுரிமையுடன் வாழ்வதற்கு, உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உள்ள தொழிலாளர்களின் இந்த உரிமைக்கான போராட்டத்தினூடாக மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை அடைய முடியும்.

நன்றி: உலக சோசலிச இணையதளம்