பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.
இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல. இலங்கை என்பது அதைவிட விசாலமானது. அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே போன்ற ஏராளமான இனத்துவ மக்கள் வாழ்கிறார்கள். பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவம் போன்ற ஏராளமான மதத்தைப் பின்பற்றுவோரும் வாழ்கிறார்கள். ஆகவே, இலங்கை சனத்தொகையைப் பொறுத்தவரை அஸ்கிரிய, நிக்காயக்கள், தலைமைத் தேரர்கள் ஒரு சிறு பிரிவினரேயாகும்.
அஸ்கிரிய விகாரை மற்றும் நிக்காயகளுக்குட்பட்ட விகாரைகள் தவிர, இவ்வாறான தலைமைத் தேரர்களின் அதிகார ஆதிக்கம், அழுத்தங்களைக் கவனத்தில்கொள்ளாத பெரும்திரளான முற்போக்கான தேரர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அந்த வகையில் புறக்கணிக்கவேண்டிய தலைமைத் தேரர்கள் கூட்டம் ஒரு சிறு பிரிவினரேயாகும். தங்களுடைய நிக்காயக்களுக்கு, பிரிவுகளுக்கு உட்பட்ட விகாரைகளில் உள்ள தேரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகாரமற்ற பலவீனமான பிரிவினராக இவர்கள் இருக்கிறார்கள். ஒழுக்கவிதிகளற்ற, பக்கச்சார்பான ஊடகங்களுக்குச் சென்று மைக்கைப் பிடிக்கும் இவர்கள் நடைமுறைக்குப் பொருந்தாத விடயங்கள் பற்றி பேசுவார்கள்.
நாட்டு மக்கள் அஸ்கிரிய அல்லது ஏனைய நிக்காயக்கள் கூறுவனவற்றை கவனத்தில் எடுத்து தீர்மானம் எடுக்கவில்லை, வாக்களிக்கவில்லை. அத்தோடு, தலைமை தேரர்களால் தங்களுடைய வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் புத்திகூர்மையான மக்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்.
இலங்கையில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், இன மத பேதமின்றி வாக்களித்த 62 இலட்ச மக்கள், 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான அனுமதியை வழங்கியிருந்தனர். மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டதன் படி, ஜே.ஆர்.ஜெயவர்தனவின் சர்வாதிகார அம்சங்கள் அடங்கிய 1978 அரசியலமைப்பின் அடிமைத்தனத்திலிருந்து மீளவே மக்கள் வாக்களித்திருந்தார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்திய 62 இலட்ச மக்கள் தொகையினுள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்ட அஸ்கிரிய விகாரை உட்பட தலைமைத் தேரர்கள் உள்ளடங்காதமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்னும் அந்த அரசாங்கத்தைக் கொண்டுவருவதையே விரும்புகிறார்கள். ஆதலால், இவர்களைத் தவிர்த்தே 62 இலட்சத்தை நாம் கணக்கிட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்காக மக்களின் ஆணை கிடைத்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியிலும், ஆகஸ்ட் மாதத்திலும் என இரண்டு தடவை மக்களது ஆணை இந்த அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கிறது. புதிய அரசியலமைப்புக்கு, நாட்டின் புதிய அரசியலமைப்புச் சீர்த்திருத்தத்துக்கு எதிரான பிற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளே இரண்டு தடவையும் தோல்வியடைந்திருந்தன. 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட வெற்றியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு அஸ்கிரிய, பிரதான மூன்று பெளத்த நிக்காயக்கள் அல்லது வேறெவராவது நடவடிக்கை எடுப்பார்களேயானால் அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள். இதை அஸ்கிரிய மற்றும் நிக்காயக்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தோடு, நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க பிரதான தேரர்களுக்கு இருக்கும் அறிவுசார் திறன்தான் என்ன? அரசியலமைப்பு என்பது பஞ்சசீலமோ, அஷ்டாங்க சீலமோ அல்லது திரிபிடகமோ அல்ல. அது அதைவிட ஆழமான, அறிவுசார் திறன்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். அரசியலமைப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்த ஓர் அரசியல் உரையாடலாகும். காவி உடை அணிந்த ஒரே காரணத்துக்காக, நாட்டின் அரசியலமைப்பைப் பற்றி பேசுவதற்கு தங்களுக்குத் தகுதி, உரிமை இருக்கிறது என தேரர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை.
தங்களிடம் ஆசிபெறுவதன் பேரில் வந்து, அரசியலமைப்புப் பற்றி உண்மைக்குப் புறம்பான வகையில், அடிப்படைவாத சிந்தனையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை செவிமடுத்து இன்னும் சட்டமூலம் கூட தயாராகாத அரசியலமைப்பை நிராகரிக்கும் தலைமைத் தேரர்களின் அறிவு குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்? இவர்களது இந்தச் செயற்பாடு, ‘காலாம சூத்திரம்’ போன்ற உயரிய அறிவுசார் விடயத்தை இந்த உலகுக்கு வழங்கிய புத்த பிரானை அவமதிப்பதில்லையா?
பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மட்டும் அரசியலமைப்பு அவசியமானதல்ல. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கும் இது அத்தியாவசியமாகும். 30 வருட போரால் தமிழ் மக்கள் சொத்துக்களை, உயிர்களை இழந்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அதிகாரத்தைப் பகிர்வதன் மூலமே மீண்டுமொரு போர் ஏற்படாமல் தடுக்க முடியும். புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்கிறது. இவற்றைக் கருத்தில்கொள்ளாமல், தங்களுக்கு அரசியலமைப்பு தேவையில்லை என அரசாங்கத்தை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த நாட்டை 20, 30 வருடங்கள் இன்னுமொரு போரை நோக்கி இழுத்துச் செல்லும் எண்ணத்திலா அஸ்கிரிய உட்பட மூன்று பிரதான நிக்காயக்கள் செயற்படுகிறார்கள்?
புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கவே மக்கள் 62 இலட்சம் வாக்குகளை நாட்டின் ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு, அரசாங்கத்துக்கு வழங்கினார்கள். ஆனால், தற்போது வேறொரு நிகழ்ச்சி நிரலையே இந்தத் தேரர்கள் கொண்டுவர முயல்கிறார்கள். அதற்கு அகப்பட்டுவிடக்கூடாது. போலியான இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும், பிரதமரும் நிறைவேற்றவேண்டும்.
கடந்த ஞாயிறு ‘ராவய’ பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.