படம் | caravanmagazine (தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்)
சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை, இவர்களின் விடுதலை என்பது சட்ட பரிமாணத்துடன் (Dimension), அரசியல் – இராஜதந்திர பரிமாணங்களையும் முதன்மையாகக் கொண்டது. அதனடிப்படையில், இவர்கள் ஏழு பேரினதும் விடுதலை தொடர்பான பல்வேறு பரிமாணங்களையும், இவர்களின் விடுதலையின் அடித்தளத்தையும் மற்றும் அது எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய தாக்கங்களையும் ஆய்வு செய்கிறது இந்த கட்டுரை.
நீதி சந்தித்துள்ள சவால்
இந்தியாவின் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கான தண்டனையை, இந்தியாவின் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து, பெப்ரவரி 18ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் பிரகாரம், இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ் நாடு அமைச்சரவை முடிவெடுக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
அதனடிப்படையில், பெப்ரவரி 19ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், சிறீகரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்துவருவதைக் கருத்தில்கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432இல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் விடுதலை செய்வதாக தமிழ்நாடு அமைச்சரவை அறிவித்தது.
அத்துடன், ஏற்கனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் (CBI) புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435இன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில், குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்கிற தமிழ்நாடு அமைச்சரவை முடிவு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏழு பேரையும் விடுவிக்கும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவுக்கு இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தழிழ்நாடு அரசின் குறித்த முடிவு கவலையளிப்பதாக, காங்கிரஸின் துணைத் தலைவரும் ராஜீவ் காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழக அரசுக்கு ‘அதிகாரம்’ இருந்தாலும் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, பெப்ரவரி 20ஆம் திகதி குறித்த ஏழு பேரையும் விடுவிக்கும் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு
அண்மைக் காலமாக இலங்கை அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்குமிடையில் தோற்றம் பெற்றுள்ள முறுகல் நிலை, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவும்வோடு மேலும் தீவிரமடையும். தமிழக உயர் நீதிமன்ற தீர்ப்பும், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவும் இலங்கை அரசுக்கு கசப்பானதும் அதிருப்தியானதுமான விடயங்கள். இதேவேளை சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்த காங்கிரஸ் அரசுக்கு முக்கிய ஒரு பிடி நழுவுவது விரும்பத்தகாத விடயம். அத்துடன், இதனை வைத்து இலங்கையுடனும் தமிழ்நாடு அரசுடனும் பேரம் பேசுவதற்கான சூழல் இல்லாமல் போவது பாதகமாக அமையும்.
அதனடிப்படையில், காங்கிரஸ் அரசின் இராஜதந்திர நகர்வுகள் பலம் குன்றத் தொடங்கும். ஆதலால், இத்தகைய பாதிப்புகளை கருத்தில்கொண்டு, ஏழு பேரினதும் விடுதலையை மத்திய அரசு சட்ட காரணங்களை சாட்டாக வைத்து தடுக்க முயற்சிக்கக்கூடும். அல்லது குறைந்தபட்சம் தாமதப்படுத்தக்கூடும்.
திசை திருப்பும் உத்தி
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் எழுச்சி கொள்ளுகின்ற தருணங்களிலெல்லாம், அதனை முடக்குவதற்கு அல்லது திசை திருப்புவதற்காக ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விடயம் இந்தியாவில் பூதாகரமானதாக உருவாக்கப்பட்டது. இதற்குப் பின்னால் காங்கிரஸ் அரசு இருந்து வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தீவு மீதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அது தொடர்பான தமிழக தமிழர்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் எதிர்கொண்டபடியே, பாலகன் பாலச்சந்திரனின் ஒளிப்படத்தொடு பொங்கியெழுந்தது தமிழகம். அதன், அதிர்வு ஜெனிவா வரை எதிரொலித்து, இராஜதந்திர மட்டங்களிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்பென்றும், நடந்து கொண்டிருப்பது கட்டமைப்பு சார் இன அழிப்பென்றும் தமிழர் தேசத்தால் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுவருகிறது. இது தொடர்பாக ஜெனிவாவில் தாக்கத்தை செலுத்தவேண்டும் என்ற நோக்கோடு தமிழர் தேசமும், தமிழர் தேசத்தின் நட்புச் சக்திகளும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதில், தமிழக தொப்புள் கொடி உறவுகளின் வகிபாகம் மிக முக்கியமானது. இத்தகைய நிலையிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இது, ஜெனிவாவில் ஈழத்தமிழர்கள் மீது தொடரும் இன அழிப்பை வெளிக்கொணர அயராது பாடுபடும் தமிழக செயற்பாட்டாளர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான பொறியாகவும் இருக்கக்கூடும். ஆதலால், தமிழக அரசியல் செயற்பாட்டாளர்கள் சமநேரத்தில் இரு விடயங்கள் தொடர்பாகவும் பொருத்தமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய சவாலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை, அவர்கள் அவதானமாக கையாள வேண்டும்.
அடுத்த கட்ட அரசியல் தாக்கங்கள்
சாந்தன், பேரறிவாளன், முருகன் உட்பட ஏழு பேரினதும் விடுதலை பொதுவாக இந்தியாவிலும், பிரதானமாக தமிழ்நாட்டிலும், இலங்கைத் தீவிலும், புலம்பெயர் தமிழர்களிடத்திலும் மற்றும் நீண்டகால நோக்கில் சர்வதேச உறவுகளிலும் முக்கிய அரசியல் தாக்கங்களை உண்டுபண்டும்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு சட்டசபை முடிவு, இன்று உறுதியான முடிவுகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்குச் சாதகமானது. இது, எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டு தேர்தலில் ஏற்படக்கூடிய மாற்றம் என்பது மத்திய அரசில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேவேளை, தி.மு.காவையும் அதன் தலைவர் கருணாநிதியின் அரசியல் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது.
ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்த பின்னர், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ்நாடு மக்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகள் தமது வீட்டில் இடம்பெறும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை நடாத்தும்போது உள்ள மகிழ்சியான மனநிலையில் உள்ளனர் என தமிழ்நாடு தொடர்புகள் மூலம் அறிய முடிகிறது. வீரமங்கை செங்கொடியும், உறுதிகுன்றா அம்மா அற்புதம்மாளும் தமது பெயர்களுக்கான உண்மையான அர்த்தத்தை உணரவைத்துள்ளார்கள் என்கிறார்கள் உணர்வாளர்கள். குறித்த ஏழு பேரினதும் விடுதலைக்கான பயணத்தில், வரலாறு இவர்கள் இருவரையும் ஒரு பெரும் சரித்திரங்களாகப் பதிவுசெய்துள்ளது. இவர்களோடு, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்தவர்கள் நீதிப்பயணமொன்றின் அடித்தளமாகிவிட்டார்கள்.
தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வந்த தமிழ்நாடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால், உருவாகியுள்ள பூரிப்பு நிறைந்த விழாக்கோலம், தமிழக எதிர்கால அரசியலில் பெரும் தாக்கத்தை உருவாக்குவதோடு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் மீள்எழுச்சிக்கு வழியமைக்கக்கூடும்.
தமிழகத்திலுள்ளது போன்ற ஒரு மனநிலை, தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்த் தேசியத்தை நேசிப்போரிடம் காணப்பட்டாலும், நீடித்திருக்கும் திறந்த வெளிச்சாலையின் அடக்குமுறைக்குள்ளிருந்து அதனை முற்று முழுதாக வெளிக்காட்ட முடியாத சூழலே அங்கு நிலவுகிறது. ஆனால், இத்தாவிலையும் உடுப்பிட்டியும் தாண்டி, வன்னி தொடங்கி கிழக்கு மாகாணம் வரை மகிழ்ச்சி மிக்க உணர்வு உருவாகியுள்ளதாக தாயகத்திலுள்ள தொடர்புகள் மூலம் அறியமுடிகிறது.
அதேவேளை, தோல்வி மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருந்த புலம்பெயர் தமிழர்களின் பிரதான பேச்சு பொருள் கூட, குறித்த ஏழு பேரினதும் விடுதலையாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஆகமொத்தத்தில், 1991ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தயங்கி இருந்த தமிழகத்தையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் சோர்வடைந்திருந்த ஈழத்தமிழர்களையும் தட்டியெழுப்பியுள்ளது தமிழ்நாடு அரசின் முடிவு. குறிப்பாக, சுமார் ஐந்து வருடங்களாக கூட்டு உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருந்த தமிழினத்தின் மனோதிடத்தை, பெப்ரவரி 18இல் வழங்கப்பட்ட இந்தியாவின் உயர் நீதிமன்றத் தீர்ப்பும், பெப்ரவரி 19ஆம் திகதி தமிழ்நாடு அமைச்சரவை முடிவும் கட்டியெழுப்ப கணிசமாக பங்களித்துள்ளது. இனி, ஒரு வெற்றியை எவ்வாறு பல வெற்றிகளாக மாற்றுவது என்ற உபாயங்களை தமிழர் தரப்பு வகுக்க வேண்டும். இது உணர்ச்சிவசப்பட்டதாக இன்றி, உணர்வுபூர்வமானதாக, அறிவபூர்வமாக நிதானமாகவும் விவேகமாகவும் அணுகப்பட வேண்டும்.
எதிர்பார்த்துள்ளதையும் விட, சற்று காலம்தாழ்த்தித் தன்னும் குறித்த ஏழு பேரும் விடுவிக்கப்பட்டால், அது இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பக்கதுணையாக அமையக்கூடும். அல்லது அதற்கான வழிமுறைகளை விரைவுபடுத்துவதற்கு அடித்தளமிடக்கூடும். ராஜீவ் காந்தி கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இது இலங்கைத் தீவின் எல்லைக்கு வெளியே விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையென்ற குற்றச்சாட்டை சர்வதேச சமூகத்தினரின் ஒரு பகுதியினர் முன்வைத்து வந்தனர்; வருகின்றனர்.
அத்துடன், இந்தியா – அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளன. இந்தத் தடை, விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக கூறி ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், இதுவரை ஒரு குண்டு வெடிப்போ, ஒரு தோட்டா தன்னிலும் விடுதலைப் புலிகளால் சுடப்படாத சூழலிலும் தொடர்கிறது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி லக்சம்பேக்கிலுள்ள (Luxemburg) ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை எடுக்கப்படுமானால், அது மேற்குலக நாடுகளிலும் தாக்கத்தை செலுத்தும். மேற்குலக நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுமாக இருந்தால், புலம்பெயர் தமிழர்களின் இராஜதந்திர நடவடிக்கைகள் அதிகரிக்கும். ஏனெனில், இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களையும் அமைப்புகளையும் பயங்கரவாத முத்திரை குத்தும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, ஜனநாயக நடவடிக்கைகள், இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் பலர் பின்னிற்கிறார்கள். ஆதலால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதானது, தமிழர்களின் இராஜதந்திர செயற்பாட்டை துரிதப்படுத்தும். அது தமிழர்களின் போராட்டத்துக்கும் அபிலாசைகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழியேற்படுத்தக்கூடும். இது சாதரணமாகவோ இலகுவாகவோ நடக்கக்கூடிய விடயமல்ல. கடினமான நீண்ட பயணம். ஆனால், முக்கியமான பயணம்.
கற்றறிந்த பாடங்கள் ( Lessons Learned )
குறித்த ஏழு பேரினதும் விடுதலைக்காக பல்வேறு உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள், ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் என்று பல்வேறு தளத்திலிருந்த தரப்பினரும் ஒரு இலக்குகாக கூட்டாகப் பணியாற்றினார்கள். இவர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒரு இலட்சியத்திற்காக ஒன்றுபட்டார்கள். இன்று வென்று காட்டுவதற்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இது இத்துடன் நிறைவடையாமால், ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளையும் இறைமையும் பெற்றுகொள்ளும் வரை வியாபிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையில் ஒரு பொதுக் கோட்டினை உருவாக்குவதற்கான உதாரணமாக இதனை மாற்றியமைப்பதற்கான உறுதியான அடித்தளத்தை இத்தருணத்தில் இடுவது பொருத்தமாக இருக்கும். அதேவேளை, தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் இலக்கு சார் ஒற்றுமையினை (Goal Based Unity) கட்டியெழுப்புவதன் பலாபலனை சுட்டிக்காட்டும். அது தமிழர் தேசம் பாதுகாக்கப்படுவதையும் பலப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தும். அதனுடாக, தமிழர் தேசம் நீதியை, உரிமையை மற்றும் இறைமையை நிலைநாட்டலாம்.
நிறைவாக…
சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிப்பதற்கான செயற்பாடுகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டாலும், இந்தத் தீர்ப்பிற்கு அடித்தளமாக, இவர்களுக்காக நடாத்தப்பட்ட உறுதி தளராத போராட்டமே அமைகிறது. இவர்கள் மறக்கப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கான போராட்டங்கள் தொடரப்படாமல் இருந்திருந்தால், தூங்கிக் கொண்டிருந்த வழக்கு இவர்களுக்கான தூக்குத் தண்டனைக்கு வழியமைத்திருக்கும்.
இந்த அடிப்படையிலேயே, இவர்களுக்கான தூக்குத் தண்டனை ரத்து தனித்து மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல, தமிழ் மக்களின் சிந்தனைக்குரியதுமாகும். ஏனெனில், இரண்டு தசாப்தங்கள் கடந்தபோதும் பொறுமையோடும் தளராத நம்பிக்கையோடும் நீதிக்கான போராட்டத்தை மன உறுதியோடு தொடர்ந்தார்கள் போராட்டக்காரர்கள். அதுவே இன்றைய மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளமாகியது.
எத்தனை சாவால்கள்? எத்தகைய அவலங்கள்? எத்தகைய நெருக்கடிகள்? எத்தகைய மன அழுத்தங்கள்? அத்தனைக்கும் முகம்கொடுத்தபடி, போராட்டத்தை உறுதியோடு தொடர்ந்தார்கள். தளராத தன்நம்பிக்கையுடன் கூடிய தொடர்ச்சியான போராட்டம் அவர்களின் மகிழ்சிக்கு வித்தாகியுள்ளது.
இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்கள் இன்று இனஅழிப்பை எதிர்கொண்டிருந்தாலும், உறுதிகுன்றா மனோபாவத்துடன் தொடர்ந்து போராடினால், இறுதியில் நீதிக்கான போராட்டத்தில் வெற்றிபெறுவார்கள் என்பதற்கான உதாரணமாக இதனை நோக்கலாம்; மாற்றலாம்.
இலக்கினால் ஒன்றுபட்டு தாயகம், தமிழகம் மற்றும் புலம் என்ற மூன்று தளங்களிலும் செயற்திறனை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையுடனும், போராடும் மனோதிடத்துடனும் முன்நகர்வோம். தோல்வி மனப்பான்மையை தோற்கடிப்போம். வெற்றிபெறுவோம்.
நிர்மானுசன் பாலசுந்தரம்