படங்கள் | தியாகராஜா நிரோஷ்

“எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.”

– இவ்வாறு சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி வேண்டுகோள் விடுகின்றார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டணையை இந்திய உயர் நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் உள்ள சாந்தனின் இல்லத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தோம். சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி, சகோதரி, சகோதரர் மாதி சுதா ஆகியோருடன் கலந்துரையாடினேன். அச் சந்தர்ப்பத்திலேயே தாயார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தூக்குத் தண்டணை நிராகரிக்கப்பட்ட தினமான கடந்த செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சிக்குரிய – எப்போது மகன் வருவான் என்ற எதிர்பார்ப்புக்குரிய – தினமாகவும் அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரின் விடுதலை அறிவிப்பு அறிவிக்கப்பட்ட புதன்கிழமை சொல்ல முடியாத மகிழ்ச்சிக்குரிய பொழுதுகளாகவும் அவர்களுக்கு அமைந்தன. எனினும், மறுநாள் வியாழக்கிழமை இவர்களது விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சாந்தனது குடும்பத்தவர்களுடன் பேசப்பட்ட விடயங்களின் தொகுப்பு வருமாறு,

சாந்தனுக்கு தூக்குத் தண்டணை நிராகரிக்கப்பட்டு தமிழகம் விடுதலைத் தீர்ப்பும் அளித்திருந்தது. எனினும், மத்திய அரசு இவர்களது விடுதலை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளது. இந்த நிலைமைகள் இடையே உங்கள் மனநிலை எவ்வாறுள்ளது?

பாரத தேசம் என் மகனை கருணை காட்டி விடுதலை செய்யவேண்டும். தாயை மதிக்கும் இந்திய தேசத்திடம் இரந்து கேட்கின்றேன் என்னுடைய அவலநிலைமையினைப் புரிந்துகொண்டு என்னுடைய பிள்ளையை விட்டுவிடுங்கள என்று. எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும்; ஆவலாக இருக்கின்றேன்; தவித்துப்போய் இருக்கின்றேன். தயவுடன் என் பிள்ளையை விட்டுவிடுங்கள். வேறு வழிகள் எனக்குத் தெரியவில்லை.

DSC09120நானும் சாந்தனின் தந்தையார் போன்றே மகனைப் பார்க்காது மரணித்து விடுவேனோ என்று ஒவ்வொரு நொடியும் ஏங்குகின்றேன். பிள்ளையைப் பிரிந்த கஷ்டத்திலும் சோகத்திலும் ஒருநேர உணவைவைத்தான் உண்டு வாழ்கின்றேன்.

ஒவ்வொரு வருடமும் அண்ணாவை விட்டு விடுவார்கள் விட்டு விடுவார்கள் என்றே எதிர்பார்ப்போம். 98ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும் வரையில் நாம் எதிர்பார்த்திருந்தோம். நடக்கவில்லை. கருணைமனுக்களும் கிடப்பில் போடப்பட்டன. கருணை மனுவுக்குப் புறம்பாக நாங்களும் இங்கிருந்து கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பினோம். பதில்கள் தான் கிட்டவில்லை. எனவே, பாரத தேசம் எங்களது அவலத்தினைப் புரிந்துகொண்டு எங்கள் அண்ணாவை விடுவிக்கவேண்டும் என்றே சாந்தனின் சகோதரர்களும் கலங்குகின்றனர்.

சாந்தன் இந்தியா செல்வதற்கு முன்பான உங்கள் நினைவுக்கு எட்டிய சம்பவங்கள் எவ்வாறு உள்ளன? அவரின் 23 வருடங்களின் முன்பான நிலைமை எவ்வாறிருந்தது?

தாயார் – உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் உயர்தரம், வணிகப் பிரிவில் கற்று சித்தியெய்திய பின்னர் இங்கு சிறு வேலைகளுக்குச் சென்று வருவார். அப்போது அவர் உழைத்து வரும் பணத்தினைக் கொண்டு எங்கள் குடும்பத்தின் வருமானக் கஷ்டத்தின் ஒரு பகுதியை நாங்கள் போக்கிக் கொள்வோம். இந்த நிலையில், தனக்கு இளைய சகோதரங்களாக உள்ள தங்கச்சி மற்றும் தம்பியின் எதிர்காலமாவது வறுமை இன்றி அமைய வேண்டும் என்ற கனவுடன் தான் என் மகன் புறப்பட்டான். இந்தியா சென்றால் அங்கிருந்து வெளிநாடுகளில் இருக்கும் யாருடையதாவது ஒத்துழைப்பினைப் பெற்று ஒருவாறு லண்டன் சென்று விடுவேன் என்ற நம்பிக்கையிலேயே அவன் அங்கு சென்றான். நாங்கள் குடியிருந்த காணியை அடகுவைத்து அயலில் எல்லாம் கடன்பட்டுத்தான் தந்தையார் பிள்ளையை இந்தியா அனுப்பினார். தந்தையார் தான் கொழும்பில் சென்று அவரது பயணத்திற்கான ஒழுங்குகளையும் செய்தார். என் பிள்ளை புறப்பட முன்பு தான் போயிட்டு வாரன்… தம்பியையும் தங்கச்சியையும் நல்லாப் படிப்பியுங்கள் என்றே சொல்லிவிட்டுச் சென்றான்.

DSC09112சகோதரி – அம்மா கைத்தொழில்களிலும் பண்னை வேலைகளிலும் ஈடுபட்டே எங்களை ஆளாக்கினார். அப்பா சிறிய விவசாய முயற்சிகளில் ஈடுபடுவார். இதனால், என்னுடைய அண்ணாவுக்கு எமது குடும்பத்தின் கஷ்ட நிலைமைகள் தொடர்பில் அதிக கவலை இருந்தது. இந்த சூழலில் உள்நாட்டு அரசியல் நிலைமைகளும் மோசமடைய வெளிநாட்டில் சென்று உழைத்தாவது எங்கள் வாழ்வாதாரத்தினை காப்பாற்றவேண்டும் எனச் சென்ற அண்ணா சிறையில் வாடவேண்டியேற்பட்டுவிட்டது. இந்தியா சென்றால் அங்கிருந்து வெளிநாடுகளில் இருக்கும் யாருடையதாவது ஒத்துழைப்பினைப் பெற்று ஒருவாறு லண்டன் சென்று விடுவேன் என்ற நம்பிக்கையிலேயே அங்கு சென்றான். நாங்கள் குடியிருந்த காணியை அடகு வைத்து அயலில் எல்லாம் கடன்பட்டுத் தான் அப்பா அவரை இந்தியா அனுப்பினார். இது தான் அவன் புறப்படுவதற்கு முன்னான விடயங்கள்.

சாந்தன் இந்தியா சென்ற பின்னர் அவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டார் என்பதை அக்காலப்பகுதியில் எவ்வாறு அறிந்த கொண்டீர்கள்? அறியும்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?

தாயார் – என்னுடைய மகன் வெளிநாடு செல்வதற்காக புறப்பட்டு விட்ட சந்தர்ப்பத்தில் நான் கோயில்களுக்கு வழிபாடுகளுக்காக போயிருப்பது வழக்கம். தந்தையார் எப்போதும் சகல செய்திகளையும் நடப்புகளையும் கேட்டுக்கொண்டிருப்பார். அப்போதுதான் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ளவர்களின் பெயர்களை வெரிதாஸ் தமிழ்ச் சேவை செய்தியில் கூறினார்கள். அதனை அவதானித்தபோது அதில் சாந்தன் என்று அழைக்கப்படும் சுதேந்திரராஜா எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் விபரங்களைச் சொன்னார்கள் அப்போது தான் என் பிள்ளைக்கு இந்த கதி நேர்ந்துவிட்டது என்பதை அறிந்தேன்.

இந்த நிலை பிள்ளைக்கு நடந்து விட்டது என்பதை அறிந்து கதறினோம். அவனைச் சென்று பார்ப்பதற்கு எம்மிடம் எப்போதும் வசதி இருக்கவில்லை. வறுமையில் வாடிய நாம் எங்களுடைய இயலளவுக்கு ஏற்றதாக திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என தினமும் தெய்வத்தினைத்தான் நம்பினேன்.

சகோதரி – அண்ணா கைதுசெய்யப்பட முன்னர் எழுதிய கடிதம் ஒன்று எமக்குக் கிடைத்தது. வல்வெட்டித்துறை அம்மன் கோயில் இருந்து பொங்கல் முடிந்து வந்திருந்த அம்மாவிடம் அம் மடல் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் அண்ணா அம்மா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நான் இன்னும் சில நாட்களில் வெளிநாட்டுக்குப் புறப்பட்டு விடுவேன் என்று தான் எழுதியிருந்தார்.அதிலும் சகோதரர்களது படிப்பு பற்றி தான் எழுதியிருந்தார். எனினும், அந்தக் கடிதம் என்னுடைய கைக்குக் கிடைக்க முன்பே அவர் கைதாகிவிட்டார் என வானொலி செய்திகளின் அடிப்படையில் ஊகிக்கின்றோம்.

கடந்த இருபத்து மூன்று வருடங்களாக சிறையில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தூக்குத் தண்டணை வரை சென்று மீண்டபோது உங்களுக்கும் சாந்தனுக்கும் இடையில் எந்தளவிற்குத் தொடர்புகள் இருந்தன?

தாயார் – கைதானதன் பின்னர் நான் இன்றுவரை பிள்ளையினைக் கண்களால் காணவே இல்லை. எங்களின் வீட்டிலிருந்து யாரும் சென்று பார்த்ததும் கிடையாது. கடிதங்கள் மட்டும் சிறையில் இருந்து சிறை அதிகாரிகளின் மேலொப்பத்தோடு அனுப்புவார். அவ்வாறு அனுப்பிய கடிதம் ஒன்றில் அவர் கேட்டிக்கொண்டதற்கிணங்க, இங்கிருந்து அவரின் கா.பொ. சாதாரண தர, உயர்தர பெறுபேற்றினைகூட அனுப்பினோம். மகன் தன்னில் குற்றங்கள் எதுவும் இல்லை. ஆகவேதான், விடுவிக்கப்பட்டு விடுவேன் என்று நம்பினார். நானும் என் பிள்ளை வருவான் வருவான் என்றே காத்திருக்கின்றேன். பார்ப்பதற்கு ஆசையாக உள்ளது.

DSC09111சகோதரன் மதி சுதா – வழக்கிற்குக் கொண்டுவரும்போது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்கள் வாயிலாகவே கைதான பின் அண்ணாவை கண்டிருக்கின்றோம். அவர் என்னை ஆறு வயதில் பிரிந்தார். நேரில் சந்திப்பதற்கு பொருளாதார வசதிகளும் எங்களிடம் இருக்கவில்லை. அம்மா மட்டும் சென்றால் சிறைவரை சென்று பார்த்து அவரால் உயிருடன் திரும்பி வர முடியாது. என்ன செய்வது தினமும் கண்ணீர் வடித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அழுது புரள்கின்றோம். இதுதான் எங்கள் கண்ணீர்க் கதை. அண்ணா பூந்தமல்லி சிறையில் இருந்தபோது கடிதத் தொடர்பு இருந்தது. அது ஒரு வருடம் வரையில் என்று நினைக்கின்றேன். பின்னர் அந்தத் தொடர்புகளும் அற்றுப்போனது. சந்திப்பதற்கோ பார்ப்பதற்கோ எமக்கு எந்தவித வசதிகளும் இருக்கவில்லை. நாம் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றபோது கடிதத் தொடர்புகள் பல வருடங்களாக அற்றுப் போயின. அக்காலப்பகுதியில் அவர் எந்த சிறையில் இருக்கின்றார் என்பதை பத்திரிகையில் பார்த்தே அவருக்கு கடிதம் போடுவோம். அதில் எத்தனை கிடைத்தன, கிடைக்கவில்லை என்று கூட எமக்குத் தெரியாது. பின்னர் அவர் மல்லாவிக்கும் கடிதம் போட்டார்.

சகோதரி – இவ்வாறே இடையிடையே வருடக்கணக்கில் கடிதத் தொடர்பு துண்டிக்கப்படும். சில சமயம், அவர் அம்மா நீங்கள் என்னால் கவலைப்படுவீங்கள் என்றுதான் நான் தொடர்பே இன்றி இருந்து பார்க்கலாம் என்றதுக்காக கடிதம் எழுதவில்லை என்று கடிதம் போடுவார். அப்பிடியும் இருந்தேன். தொடர்ந்தும் இருக்க முடியவில்லை. என்றெல்லாம் எழுதுவார்.

கடிதத்தில் மேலும் என்ன விடயங்களை எழுதுவார்?

தாயார் – அம்மா நீங்கள் என்னைப்பற்றி பயப்படாதீர்கள். நான் குற்றம் இழைக்கவில்லை. வந்துவிடுவேன் என்று தான் எப்பவும் எழுதுவார்.

சகோதரி – தங்கச்சி எனக்காக காத்திருக்க வேண்டாம், உங்கட வாழ்க்கை வீணாகிடும் என்று எழுதுவார். சிறையில் இருந்தபோதும் வீட்டுச் சிந்தனையுடனேயே வாழ்கின்றார் என்பதை கடிதத்தின் வரிகள் சொல்லும். அவர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டே நாளைக் கழிக்கின்றார் என்பது அவரது கடித வரிகளில் இருந்து எமக்குப் புலப்படும். எனினும், அவர் நம்பிக்கையுடன் இருங்கோ இருங்கோ நான் வருவேன் என்றுதான் எங்களுக்குத் திரும்பத்திரும்ப எழுதுவார்.

இவருக்கு ஆயுதப் போராட்டத்தின் மீது ஈடுபாடு அறிந்தவகையில் எப்போதாவது இருந்ததா?

தாயார் – அப்படி ஒருபோதும் இருக்கவில்லை. பொதுவாக தமிழ் உணர்வு மாத்திரமே அவரிடம் இருந்தது. குடும்பத்திற்கு உழைக்க வேண்டும் என்பதற்காக என்ன சிறு வேலையையும் ஊரில் வெட்கமின்றி செய்து எனக்கு பிள்ளை உழைத்துத் தந்துள்ளது. அதுதான் பிள்ளையின் அவாவாக இருந்தது.

சகோதரி – அவர் ஒரு கடவுள் பக்கதனாகவே இருந்தார். காலையில் எழுந்தவுடன் கோயில் கிணற்றில் சென்று குளித்துவிட்டு விபூதியும் பூசி காதில் பூவுடன்தான் நாளைத் தொடங்குவார். இவ்வாறாக இருந்தவர் கைதுசெய்யப்பட்டமை எம்மைப் பொருத்தளவில் நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சரியத்துக்கு உரியதாகும்.

மகன் சிறைவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை சிறையில் சென்று பார்ப்பதற்கேனும் முடியாத சூழ்நிலைத் தாய் என்ற வகையில் இதனை எவ்வாறு தாங்கிக் கொள்ளத்தக்கதாக இருந்தது?

எனக்கு பார்க்க வேண்டும் போலவே ஒவ்வொரு மணித்துளியும் இருந்தது. வீட்டுச் சூழல் கஷடங்கள் எம்மை இப்படி வாழ வைத்து விட்டது. நான் இருந்தால்தான் இருக்கின்ற பிள்ளைகளுக்கு எதாவது வேலைசெய்து எதையாவது உண்ணக்கொடுக்கலாம் என்ற நிலை இருந்தது. தந்தையாரால் மட்டும் குடும்பக் கஷ்டத்தினைச் சமாளிக்க முடியவில்லை. மிகுந்த விரக்தியுடனும் மனவேதனையுடனும் தான் நாம் வாழ்ந்தோம். மகன் பற்றிய கவலைதான் எனது கணவரின் உயிரையும் பலி எடுத்தது. அவர் மாரடைப்பினாலேயே இறந்தார். இந்தியா சென்ற அயலவர்கள் மகனைப் பார்த்துவர முயற்சி எடுத்தார்கள். அவர்களிடம் அம்மா, அப்பா மற்றும் நெருங்கிய சொந்தங்களே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களும் திரும்பிவிட்டனர்.

இந்தியச் சிறையில் மகன் இருந்த காலப்பகுதியில் சர்வதேச மனித நேய அமைப்புக்களிடம் மகனைப் பார்ப்பதற்கு நீங்கள் நாடினீர்களா? மனித நேய அமைப்புக்கள், ஆர்வலர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தாயார் – நாங்கள் அவ்வாறான அமைப்புக்களிடம் சென்று மகனைப் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு கேட்பதற்கு எமக்கு யாரினதும் ஆலோசனைகள் இருந்திருக்கவில்லை. தமிழக மக்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள். அதனை உண்மையான உறவு என்றுதான் நாங்கள் கூறுவோம். அதுபோன்றே பல அரசியல் தலைமைகளும் எமக்காகப் பேசியிருக்கின்றார்கள்; செயற்பட்டிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக செங்கொடி தீங்குளித்ததை என்றும் நினைத்து மெய்சிலிர்க்கின்றோம். அவர்களின் தியாகங்கள் சொல்லில் சொல்லமுடியாதவை.

பொதுவாக தூக்குத் தண்டணை உங்கள் அண்ணனை துரத்தியுள்ளது. அதன் அனுபவங்களில் இருந்து குற்றங்களுக்கு மரண தண்டணை அளிக்கப்படுதல் என்பதை என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?

சகோதரன் மதி சுதா – எதுவானாலும் மரண தண்டணை என நிச்சயிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் அண்ணாவுக்குத் தூக்குத் தண்டணை கொடுக்கப்போகின்றார்கள் என்று தூக்குக் கயிறுகளை காட்சிப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே அப்பாவின் மரணத்திற்கு காரணமானது. இப்படியாக யாருக்கும் உலகில் நடக்கக் கூடாது. மரண தண்டணை என்பது ஒருவரைக் கொல்வதைக் காட்டிலும் அது அவர் சார்ந்த எத்தனையோ பேரைக் கொல்லும் சம்பவமாகும். உண்மையில் அவர்கள் தூக்குக் கயிற்றையும் தூக்கு மேடையினையும் காட்டியது எம்மை அணு அணுவாகக் கொன்றது. மரண தண்டணை என்பது உண்மையிலேயே உலகத்தில் ஒளிக்கப்பட வேண்டும். அதற்காக எல்லோரும் இணைந்து பாடுபடவேண்டும்.

எதிர்காலத்தில் உங்கள் சகோதரன் (சாந்தன்) எவ்வாறு வாழ வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

சகோதரன் மதி சுதா – அண்ணா விடுதலையாகவேண்டும். அவன் ஒரு படைப்பாளியாக வாழவேண்டும். அதற்கு முன்னர் அவன் அம்மா இடியப்பம் அவிப்பது, அப்பா கஷ்டப்பட்டு வேலை செய்வது போன்றவற்றையே கதாபாத்திரங்களாக வைத்து கதைகளை எழுதுவான். சிறை சென்ற பின்னர் யுத்தத்தினால் மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பற்றி அவன் எழுதிய கதைகளை புத்தகக் கடைகளில் கண்டுள்ளேன். நூலகங்களில் படித்திருக்கின்றேன். எனவே, ஒரு படைப்பாளியாக அவன் வாழ வேண்டும். அம்மா அருகில் அவன் வாழவேண்டும். அதுபோதும் எமக்கு.

நேர்க்காணல் – தியாகராஜா நிரோஷ்

Niro