படம் | Ishara K Kodikara, Getty Images, NAITIONAL POST
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையினுள் 27 சிறைக்கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றோடு நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரிக்கவென நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையும், உண்மை வெளிவருவதை இன்றும் விரும்பாத அன்றைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அறிக்கையும் இதுவரை நாடாளுமன்றிலும், ஊடகத்துக்கும், பொதுமக்களுக்கும் வெளிப்படுத்தப்படாமல் இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது இந்தக் கூட்டுப் படுகொலை தொடர்பாக விசாரிக்கவென முன்னாள் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, 3 பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல அதபத்துகே தலைமையில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் குணசேன தேனபது மற்றும் அப்போதைய சிறைச்சாலைகள் அமைச்சின் சட்ட ஆலோசகர் லலித் அந்ராஹென்னதி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒன்றரை வருடங்களாக கசியவிடப்படாமல் இரகசியமாக பாதுகாக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை 2014 ஜனவரி மாதம் அமைச்சர் கஜதீரவினால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. அந்த அறிக்கை வெளியிடப்படாததுடன், படுகொலை தொடர்பாக எந்தவித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆட்சியில் இருக்கும் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கம் 2015ஆம் ஆண்டு 8ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் மேடைகளில் உரத்து முழங்கிய – உறுதி வழங்கிய வாக்குறுதிகளுள் பிரதானமானதாக, வெலிக்கடை கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகள், அதனோடு தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதுவும் உள்ளடங்கியிருந்தது.
நல்லாட்சி ஆட்சிபீடமேறி ஒரு மாதமானதும் (பெப்ரவரி 17) சிறைச்சாலையினுள் கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவுகள் உட்பட சிவில் சமூகத்தவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, தான் இதுகுறித்து தேடியறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியிருந்தார்.
அதன்படி, வெலிக்கடை சம்பவத்தை விசாரிக்கவென நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் தலைமையில் மூவர் கொண்டு குழு நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் அசோக விஜேதிலக, ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி சட்டத்தரணி எஸ்.கே. லியனகே ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். சம்பவத்தை நேரில் பார்த்த சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளின் சாட்சியங்களைப் பதிவுசெய்துகொண்ட 3 பேர் கொண்ட குழு 5 மாதங்களாக விரிவான விசாரணையை நடந்தி அறிக்கை வழங்கியிருந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து வெலிக்கடை படுகொலை தொடர்பான 2ஆவது விசாரணை அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த அறிக்கையை வெளியிடுவதையோ அல்லது அது குறித்து விசாரணை நடத்துவதையோ ரணில் – மைத்திரி அரசாங்கம் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.
சோதனை நடவடிக்கைக்காக சிறைச்சாலையினுள் ஆயுதங்களுடன் இராணுவம் உள்நுழையக்கூடாது என்று கூறப்படுகின்றபோதும், 2012 நவம்பர் மாதம் 9ஆம் திகதி எந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டனர்? பட்டியல் கொண்டு சிறைக்கைதிகள் தெரிவுசெய்யப்பட்டு கொல்லப்பட்டது எதற்காக? யாரின் அவசியம் கருதி அவர்கள் கொல்லப்பட்டார்கள்? என்று இதுவரை வெளிவராத – வெளியிடப்படாத ரகசியமாக கொலையாளிகள் நல்லாட்சியிலும் பாதுகாக்கப்படுகின்றனர்.
வெலிக்கடை படுகொலை தொடர்பான இரண்டாவது விசாரணை அறிக்கை வெளியிடப்படாதது, விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று கொலையாளிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்று நல்லாட்சி அரசாங்கத்திலும் செயற்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
அப்படி இல்லையென்றால் – கூட்டுப்படுகொலையோடு தொடர்புடையவர்கள் நல்லாட்சியுடனும் இணைந்து செயற்படுகிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை சம்பவங்களுள் ஒன்றான வெலிக்கடை படுகொலை சம்பவத்தின் உண்மை தெரியவருவதை மறைப்பதற்கு இரண்டு ஜனாதிபதிகள், அமைச்சர்கள் இருவர், இரண்டு விசாரணைக்குழுக்கள் முயற்சி எடுத்துவருவது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வெலிக்கடைப் படுகொலை தொடர்பாக Adobe Spark சமூக ஊடகத் தளத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோவைக் கீழே காணலாம்.
செல்வராஜா ராஜசேகர்