படம் | dbsjeyaraj

இலங்கை அரசு தகவல் ஒன்றை கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியிருக்கின்றது. “இலங்கை பல்லின நாடு. சகல சமூகங்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒரு சமூகத்திற்கு சார்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது அரசின் இன நல்லுறவு முயற்சிக்கு குந்தகமாக அமையும்” என்பதுதான் அந்தத் தகவல். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித உரிமை பேரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது இலங்கை அரசு இவ்வாறான கருத்துக்களை முன் வைத்திருந்தது. இம்முறையும் அதேமாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பொறுப்புக்கூறல் என்பதில் இதுவரையும் இலங்கை அரசினால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் என்ன என்பது தொடர்பாக பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் கேள்வி எழுப்பவில்லை.

அமைச்சர் பேராசிரியர் பீரிஸ்

யுத்தத்திற்கு பின்னரான இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குத் தேவையான விபரங்களை அனுப்பியுள்ளார். 16 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை நிலைப்பாடு குறித்து விளக்க கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவை கூடுவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் மேலும் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்து விளக்கமளிப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக அரச உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

மனித உரிமை பேரவையில் கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக கடும் அழுத்தங்களை இலங்கை சந்தித்தது. இந்த ஆண்டும் அழுத்தங்களை சந்தித்தாலும் சர்வதேச விசாரணை வராது என்பதில் இலங்கை அரசு கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஆதரவு இலங்கை அரசுக்கு இயல்பாகவே உள்ளது. அதனால், அந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூடுதல் நேரத்தை செலவளிக்காது மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து முடிந்தவரை பிரேரணையின் உள்ளடக்கத்தின் வீரியத்தை குறைத்துக்கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக கொழும்பில் வெளியான ஆங்கில நாளேடு ஒன்றின் செய்தி தெரிவித்தது.

இம்முறை கூடுதல் பிரதிநிதிகள்

ஜெனீவா மனித உரிமை பேரவை மார்ச் மாதம் கூடும்போது உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் இம்முறை அதிகளவிலான பிரதிநிதிகள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இலங்கை உட்பட ஆசிய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் பரவலாக இடம்பெறுகின்றன. இதனால், அவற்றை கட்டுப்படுத்துவது, அதற்கான ஆலோசணைகளை முன்வைப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. அரசியல் ரீதியாகவும் அறிவியல் வளர்ச்சியின் பயனாகவும் மனித உரிமை மீறல்கள் உலகில் அதிகரிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் ஷிப்ரொன் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

இந்திய எதிர்க்கட்சிகள் இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை இரண்டு வகையாக விமர்சித்துள்ளன. ஒன்று இனநெருக்கடி தீர்வுக்கான அரசியல்தீர்வு விடயத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பது. இரண்டாவது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பாக ஜெனீவாவில் மூன்றாவது முறையும் பிரேரணை நிறைவேற்றினால் அது இந்தியாவுக்கும் ஆபத்து என கருதுகின்றன.

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் சாட்டுகள் என்பது வேறு. ஆனால், உலகில் தற்போது மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என்றும், அது தொடர்பாக மனித உரிமை பேரவையில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கை அரசுக்கு இது இன்னமும் சாதகமான ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஏனைய நாடுகளில் இருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் பற்றியும் தகவல்களை சுட்டிக்காட்டியதாக கொழும்பில் உள்ள ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் புதுடில்லிக்கு சென்ற இலங்கை ஊடகவியலாளர் குழு ஒன்றை சந்தித்தபோது இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சி தொடர்பாகவே பேசியிருக்கின்றார். இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமை மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து அவர் கூறியிருந்தாலும் அதற்காக இலங்கை அரசை தண்டிக்கவேண்டிய தேவை இல்லை என்றும், அந்த அரசின் மூலமாகவே தீர்வை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய எதிர்க்கட்சிகள்

இந்திய எதிர்க்கட்சிகள், இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை கடந்த வாரம் இரண்டு வகையாக விமர்சித்துள்ளன. ஒன்று இனநெருக்கடி தீர்வுக்கான அரசியல்தீர்வு விடயத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பது. இரண்டாவது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஜெனீவாவில் மூன்றாவது முறையும் பிரேரணை நிறைவேற்றினால் அது இந்தியாவுக்கு ஆபத்து என கூறியுள்ளன. இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் ஜெனீவா குறித்து இந்திய மத்திய அரசு அமைதி காக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களில் அவற்றை பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் ஜப்பான், சீனா நாடுகளின் நகர்வுகளின் பின்னர் இந்திய அரசியல் கட்சிகள் தமக்கிடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்திய நலன் என்ற அடிப்படையில் பேச ஆரம்பித்துள்ளன. அதன் ஒருகட்டமாகவே இந்திய எதிர்க்கட்சிகளின் மேற்படி இரண்டு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆகவே, தமிழர்தரப்பு எதிர்பார்ப்பது போல ஜெனீவா பிரேரணை இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. மேற்குலக நாடுள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், அது பற்றிய விசாரணைகள் என்ற விடயத்தில் அமைதியான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தும் நிலைமை உண்டு.

மனித உரிமைகள் காப்பகம்

கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால், போருக்கு பின்னரான மனித உரிமை செயற்பாடுகளில் இலங்கை அரசு முன்னேற்றம் காண்பிக்கவில்லை என்பதை ஜெனிவாவில் உள்ள இலங்கை அரசின் பிரதிநிதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார் என இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றமை வேறு ஆனால், இனரீதியிலான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் இருந்து மாத்திரமே வெளிப்படுவதனால் ஜெனீவா மனித உரிமை பேரவை விசேட கவனம் செலுத்தும் என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தினார். அதேவேளை, இலங்கை தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருகின்றமையால் இலங்கை தொடர்பான பிரேரணையின் உள்ளடக்கம் இன்னும் இறுக்கமாக இருக்கும் என்று போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் அமெரிக்க இராஜதந்திரியான ஸ்ரீபன்ராவ் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேறும் என்பது உண்மை. ஆனால் ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் உலக அரசியல் ஒழுங்குகள் மற்றும் மாற்றங்கள் போன்றவற்றை இலங்கை அரசு அவதானித்து செயற்படுகின்றது. இதனால், அமெரிக்க காங்கிரஸில் இலங்கை தொடர்பாக ஆராய்ந்தாலும், ஜோன் ஷிப்ரொன் எச்சரிக்கை விடுத்தாலும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இலங்கை அரசு எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்ற நடைமுறையைத்தான் இந்த ஆண்டும் செய்யப்போகின்றது?

தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001