படம் | கட்டுரையாளர்
ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists).
2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163) பலனாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி பொறுப்புக்கூறவேண்டிய தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களை நினைவு கூறும் முகமாகவே இந்தத் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் ஊடாக ஐ.நா. கீழ்வரும் விடயங்களை நிறைவேற்றுமாறு உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.
- ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டும்.
- ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் தேவையற்ற குறுக்கீடு இன்றியும் கடமையாற்றுவதற்கு உகந்ததான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் 2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறுகிறது.
அதேவேளை, 2006ஆம் ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, 1992ஆம் ஆண்டிலிருந்து 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் (ஆட்லரித் தாக்குதல், தற்கொலைக் குண்டுத்தாக்குதல், இறுதி போரின்போது உயிரிழந்த ஊடகவியலாளர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை) என்றும் கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை ஊடகவியலாளர்கள் தொடர்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட விடயங்களை அங்கத்துவ நாடாக இலங்கை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலப்பகுதியிலேயே ஊடகங்களுக்கு எதிராக அதிகப்படியான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்றும் கூறலாம்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்தின் அனுசரணையோடு, ஆயுதப் படையினரால் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உயிர் பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் நீதியை நாடமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.
இவையனைத்திற்கும் நீதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த அன்று பொதுவேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிக்கு வந்ததும் ஊடகவியலாளர்களை நேரடியாகவே அச்சுறுத்தி வருகிறார்கள்.
சமாளிப்புக்காக – வாக்குகளுக்காக – மட்டும் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட போன்றோரின் சம்பவங்களை விசாரித்து வருகிறார்கள்.
தற்போது அதுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அச்சுறுத்தல் காரணமாக இடையே நின்றுவிடும் போல் இருக்கிறது. அக்டோபர் 12ஆம் திகதி ஜனாதிபதி காணாமல்போன பிரகீத் எக்னலிகொட வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய சி.ஐ.டி. பிரிவினரையும், அவர்களின் விசாரணையின் மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதிகள் போன்றோர் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த சம்பவத்தையும் விமர்சித்து காரசாரமாக உரையாற்றியிருந்தார். அதன் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது,
“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று தளபதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றமை குறித்து எனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எந்தவொரு கட்டத்திலும் இராணுவத்தை பலவீனமடையச் செய்யும் நடவடிக்கையில் இறங்கமாட்டேன். பலவீனமடையச் செய்வதற்கு இடமளிக்கவும் மாட்டேன்.
எல்லோருக்கும் தெரியும், வழக்கொன்று நீதிமன்றில் உள்ளது. கிட்டத்தட்ட 16 மாதங்கள் இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் என்னிடம் இரண்டு வாரங்கள் என்று கூறினார்கள், பிறகு ஒரு மாதம் என்றார்கள், அதன்பிறகு 3 மாதம் என்றார்கள். இப்போது 16 மாதங்கள் கடந்துவிட்டன. குற்றத்தோடு தொடர்புபட்டிருக்காவிட்டால் விடுதலை செய்யப்படவேண்டும். குற்றம் செய்திருந்தால் வழக்கு தொடரவேண்டும் அல்லது பிணையில் விடுதலை செய்து வழக்கை கொண்டு நடத்தவேண்டும். நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமை என்று ஒன்றுள்ளது.”
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள சம்பவத்துடன், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளபோதும், மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்டுக்கொண்ட தகவல்களை (நீதிமன்றின் மூலமும்) இன்னும் இராணுவம் தரமறுத்துவரும் நிலையில் விசாரணையை திசைதிருப்பும் வகையிலும், விசாரணை மேற்கொள்ளும் சி.ஐ.டி. பிரிவினரை பலவீனப்படுத்தும் வகையிலும் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். வழக்கை விரைவாக விசாரணை செய்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்யப்படவேண்டுமாக இருந்தால் சி.ஐ.டியினர் கேட்கும் தகவல்களை கொடுக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி இராணுவத்துக்கு உத்தரவிடலாமே?
ஜனாதிபதியின் இந்தப் பேச்சின் பின்னர், பிரகீத் வழக்குடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் இருவரும் ஒக்டோபர் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உதலாகம ஒக்கோடர் 27ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணை ஓரளவாவது மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை எதுவித விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை.
கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு, நிறுவனங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு யாழ். ஊடக மையம் கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. விசாரணையை வலியுறுத்தி ஊடக அமைப்புகளால் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இருந்தபோதிலும் கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் ஊடகவியலாளர் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட நிமலராஜன், கொழும்பில் கொல்லப்பட்ட சிவராம், மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசன், திருகோணமலையில் கொல்லப்பட்ட சுகிர்தராஜன் என அனைவர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருமே இராணுவத்தை விமர்சித்தவர்கள் அல்லது அரசை விமர்சித்தவர்கள் என்பதனால் அவர்கள் தமிழ் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்தவே அரசாங்கம், பாதுகாப்புத் தரப்பு முயன்று வருகிறது.
சி.ஐ.டியினர் மீதான ஜனாதிபதி சிறிசேனவின் அச்சுறுத்தலின் பின்னர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் வழக்குடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவரிடம் கேட்பது “சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல” இருக்கிறது.
செல்வராஜா ராஜசேகர்
தொடர்புபட்ட கட்டுரைகள்,
“அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…!”
“காணாமல்போய் 9 வருடங்கள்: ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமசந்திரன் எங்கே?
“பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்”