படம் | Forbes
இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அது சர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.
இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது.
கடன் நிலை என்பது தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால், இதனை விட வேறு விடயங்களும் உள்ளன.
முன்னைய அரசாங்கம் வழமையான வழிமுறைகளுக்கூடாக கடன்களை பெற்றதிற்கு அப்பால், அரச நிறுவனங்களை தனது சார்பில் கடன்களை பெறுமாறு கேட்டுக்கொண்டமையும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் முழுமையான அளவு இன்னமும் தெரியவராத அதேவேளை, தற்போது வரையான மதிப்பீடுகளின் படி 9.5 பில்லியன் டொலர் கடன் இந்த வழியில் பெறப்பட்டிருக்கலாம் என நம்பமுடிகின்றது. இவை எவையும் நிதியமைச்சின் ஆவணங்களில் காணப்படவில்லை.
இலங்கையின் கடன் நிலவரம் குறித்த துல்லியமான புள்ளிவிபரங்கள் எங்களிடம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுடன் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரும், அதிக செலவாகும் உள்கட்டமைப்பு திட்டங்களிற்காகவே இலங்கை அதிக கடன்களை பெற்றுள்ளது.
2009ஆம் முதல் 2014ஆம் ஆண்டிற்கு இடையில் இலங்கையின் ஒட்டுமொத்த கடன் மூன்று மடங்கால் அதிகரித்தது, வெளிநாட்டுக் கடன் இரண்டு மடங்காகியது. இலங்கை பெரும் பணச்செலவுடனான கட்டுமான திட்டங்களை முன்னெடுத்ததே இதற்குக் காரணமாகும். நாடு காடுகளுக்கு நடுவில் பல மில்லியன் டொலர் செலவில் புதிய நகரத்தை உருவாக்க முயன்றது (இதற்குள் உலகின் மிகப்பெரிய வெறுமையான சர்வதே விமான நிலையமும் அடங்கும்). உலகில் அதிக செலவுடன் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையையும் குறிப்பிடவேண்டும். மேலும், அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து பாரிய கல்லொன்றை அகற்றுவதற்கு 42 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டது.
எனினும், தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது என்பது இதன் அர்த்தமல்ல, 2015 ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் கீழ் உள்நாட்டு கடன் 12 வீதத்தினாலும், வெளிநாட்டு கடன் 25 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. புதிய பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதனையும் ஆரம்பிக்காமலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கவனிக்கத் தவறவில்லை. அவர் தற்போதைய அரசாங்கம் பெற்ற வெளிநாட்டுக் கடனைப் பயன்படுத்தி தான் இரு மத்தளை விமான நிலையங்களையும், ஒரு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், ஒரு நுரைச்சோலை அனல்மின் நிலையத்தையும், ஒரு கொழும்பு மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையையும், ஒரு கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையையும், ஒன்றல்ல இரண்டு கொழும்பு போர்ட் சிட்டிகளையும், 500 மெகாவோட் கொண்ட ஒரு சம்பூர் அனல்மின் நிலையத்தையும் ஏற்படுத்தியிருப்பேன் என சமீபத்தில் குறிப்பிட்டார்.
இலங்கை தான் வெளியேறமுடியாத கடன் பொறியில் சிக்கியிருக்கலாம். இந்த வருடம் மாத்திரம் வெளிநாட்டு கொடுப்பனவாளர்களுக்கு அது 4.5 பில்லியன் டொலர்களை வழங்கவேண்டியுள்ளது, அடுத்த வருடம் 4 பில்லியன் டொலர்களையும் செலுத்தவேண்டியுள்ளது, இதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து நாடு இன்னமும் திட்டமிடவில்லை.
கடன் நெருக்கடிக்கு பல இடைக்கால தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, சமப்பரிமாற்றத்திற்கு ஈடான கடன்கள், நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மையப்படுத்துதல் போன்றன அவற்றில் சில. எனினும், இவை குறித்து இதுவரை எந்த ஆர்வமும் காண்பிக்கப்படவில்லை.
இலங்கை தனது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பொருளதாரத்தின் திசையை சரிசெய்வதற்காக சில தகுதிகளிற்கு இணங்கியதை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் இவ்வருடம் ஏப்ரல் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்க முன்வந்தது. எனினும், இந்த நிதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் சர்வதே நாணய நிதியத்திடமிருந்து மேலும் 5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்ததாக கிழக்கு ஆசியா மன்றம் தெரிவித்துள்ளது.
“Sri Lanka’s Debt Crisis Is So Bad The Government Doesn’t Even Know How Much Money It Owes” என்ற தலைப்பில் ‘போர்ப்ஸ்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.