படம் | jdsrilanka

வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும், பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், வடக்கில் நாதியற்ற பெண்கள் விபசார விடுதிகள் நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றனர் என தாக்கம் மிக்கதும் கவலைக்குரியதுமான ஒரு கருத்தினை இவ்வாரம் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஷ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். போரின் பின்பான நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து தீவிரமாக ஆராயப்படவேண்டியது ஒன்றாகும்.

உள்நாட்டில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஐந்தாண்டுகள் கடந்து செல்லவுள்ளன. இந்தத் தருணத்தில், யுத்தகாலத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றியும் அதன் அவலங்களில் இருந்து மீள்வது பற்றியும் உள்நாட்டில் ஒரு காத்திரமான கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த தேவையை இதயசுத்தியுடன் கண்டுகொள்ளாத அரசின் போக்கு, எரிகின்ற மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் உரிய வகையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களையும் நழுவவிட்டு விட்டது. போரின் பின் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி ஆராயும் அதேசமயம், மக்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றியும் சமாந்தரமாக அரசுடன் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தன. எனினும், அரசு பேச்சுக்களில் மட்டும் அதற்கான ஆமோதிப்பினைத் தெரிவித்துவிட்டு செயலில் எதையுமே காட்டவில்லை. இந்த இடத்தில் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு அரசியலற்ற பெறிமுறையொன்றை அரசு நடைமுறைப்படுத்த முன்வந்திருக்குமாயின் போரின் பின்பாக ஐந்தாண்டுகளை அடைகையில் முதலமைச்சர் எடுத்துக்கூறியது போன்று நாதியற்ற பெண்கள் விபசாரத்திற்குள் தள்ளப்படும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்காது.

யுத்தமும் அதன் பின்னர் நிலவிய சூழ்நிலைகளும் நாட்டில் அதிகளவான விதவைகளை பிறப்பித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டின் இறுதியில் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, அரசின் சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார். அத்தொகையானது பல்வேறுபட்ட கோணங்களில் புறட்டிப் பார்க்கப்பட்டு வடக்கு கிழக்கின் நிஜத்தினை விளங்கிக்கொள்ள பயன்பட வேண்டும். அதாவது, வடக்கில் 40 ஆயிரம் யுத்த விதவைகளும் கிழக்கில் 49 ஆயிரம் யுத்த விதவைகளும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட தொகையினுள் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்குக் குறைந்த இளம் விதவைகளாவர். மிகுதியில் எட்டாயிரம் பேர் சராசரியாக மூன்று பிள்ளைகளுடன் கணவர் இன்றி வாழ்வாதாரத்தினைக் காப்பாற்ற முடியாதவர்களாக உள்ளவர்களாவர். இத்தொகையினை மாத்திரம் வைத்து யுத்தத்தினால் விதவைகளானோர் என்ற எண்ணிக்கையினை நாம் மட்டுப்படுத்திவிட முடியாது. காரணம், யுத்தத்தினால் பிரகடனப்படுத்தப்படாத விதவைகளாக கணிசமானோர் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக வாழ்வோர் தமது கணவர்மார் தடுப்புக்களிலோ அல்லது சிறைகளிலோ அரசியல் காரணங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவர் என்ற ஏக்கத்தில் தான் வாழ்கின்றனர்.

விதவைகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கணவன் பற்றிய தகவல்கள் அறியாதுள்ளோர் சமூகத்தில் பரவி கைவிடப்பட்டுள்ளனர். அரசின் பராமரிப்புக்கள் அவர்களை உரிய வகையில் சென்றடையவில்லை. போரின்போது கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு அதுவும் மரண சான்றிதழைச் சமர்ப்பித்தால் இழப்பீடாக குறிப்பிட்ட சில ஆயிரங்களே  பெறமுடியும் என்ற நிலையுள்ளது. இதற்கு மேலாக அரச சார்பற்ற நிறுவனங்கள் சில அவர்களால் முடிந்த சிறு திட்டங்களை மேற்கொள்கின்றன. அது எதுவும் பாதிக்கப்பட்ட பெண்களை குறைந்த மட்ட இயல்புநிலை நோக்கிக் கொண்டுவர ஏனும் போதுமானதாக இல்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல்போயுள்ள தமது குடும்பத் தலைவனையோ உறவுகளையோ தேடும் அசாதாரண பொறுப்பு பெண்களின் தலைகளியே அதிகமாகக் காணப்படுகின்றது. உண்மையில் வருமானத்திற்கான மார்க்கமின்றி உள்ள இந்தப் பெண்கள் மேற்குறிப்பிட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பணத்திற்காக எங்கே செல்வது எனத் திண்டாடுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளின் இறுதியே அவர்களை விபசாரத்தினை நோக்கித் தள்ளப்பட நிர்ப்பந்திக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 170 விதவைகளுக்கும்  உதவிகளைச் செய்வதற்கு நலன்விரும்பிகள் முன்வரவேண்டும் என்று அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டிலேயே அவர் இவ் அழைப்பை விடுத்துள்ளார்.

அதேபோன்றே, யாழ்ப்பாண மாவட்டத்தில் 26 ஆயிரத்திற்கு மேல், வவுனியாவில் 4 ஆயிரத்திற்கு மேல், மன்னாரிலும் 4 ஆயிரம் வரையானோரும் கணவனை இழந்தோராகவுள்ளனர். இதனை பெண்கள் தொடர்பாக ஆய்வில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.

அந்நிறுவனங்கள் தமது ஆய்வில், இந்த விதவைகளில் யாழில் 40 வயதிற்கு உட்பட்ட 3,118 விதவைகள் உள்ளனர் என்றும் 20 வயதுக்குட்பட்ட விதவைகளும் 38 பேர் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக போர்காலத்தில் 1,042 பேர் தற்கொலை செய்துகொண்டதனால் அவர்களின் மனைவிமார் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். விதவைகளின் இப்பெருந் தொகைகள் எண்ணிக்கைகள், அரசினையும் மக்கள் அமைப்புக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் செயற்பாடு நோக்கி தட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த வருடம் நவம்பர் 22ஆம் திகதி மட்டக்களப்பில் விதவைகள் தொடர்பான மாநாடு ஒன்று அரச சார்பற்ற நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மூவினத்தையும் சேர்ந்த பெண்தலைமையுள்ள குடுமபத்தவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அரசின் கவனத்திற்காக தமது கஷ்டங்களை வெளிப்படுத்தி பிரகடனம் ஒன்றையும் முன்வைத்தனர். அதில், தமது பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதனாலும் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனாலும் பாலியல் வன்முறைகளுக்கும் தெந்தரவுகளுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது என பெண்தலைமையுள்ளோர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டு தமது பாதுகாப்பிற்கு பொலிஸார் சரிவர கடமைகளைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் அப்பிரகடனத்தில் அவர்களால் கோரப்பட்டது. மேலும், தமக்கு எதிராக சமூக ஒதுக்கல்கள் தொடர்வதாகவும் சில சமயங்களில் தமது ஆடைகளும் நடத்தைகளும் கூட விமர்சிக்கப்படுவதாகவும் அம்மாநாட்டில் பங்கேற்ற பெண்களால் கவலை தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த இடத்தில் அரசு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்கள் தொடர்பாக உரிய திட்டங்களை வகுக்கவேண்டும். அதேகாலப்பகுதியில் தமிழ்ச் சமூகமும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தனக்கென சில முற்போக்கான விடயங்களில் தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பொருத்தளவில் அவர்கள் வருமானத்திற்காக பாடுபடும் நிலையுள்ளது. வடக்கில் போரின் பின்பான நிலையில் தொழில்களுக்கான சந்தர்ப்பங்கள் கட்டியமைக்கப்படவில்லை. மாறாக விரிந்த நுகர்வுக் கலாசாரம் ஒன்றே பாதிக்கப்பட்டவர்களின் முன்தென்படுகின்றது. இந்த இடத்தில் பெண்தலைமையுள்ள குடும்பங்கள் வருமானமீட்டத்திற்காக எங்கே போவது என்ற நிலையுள்ளது. சுயதொழில் முயற்சிகளை நோக்காகக் கொண்டு வங்கிகளாலும் இதர நிறுவனங்களினாலும் பெண்தலைமையுள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் கடன்கள் வழங்கப்பட்டன. எனினும், பாதிக்கப்பட்ட பெண்களிடத்தில் தொழில் முயற்சிகளைக் கொண்டு நடத்துவதற்கான அறிவூட்டல்கள் வழங்கப்படவில்லை. எனவே, இம் முயற்சிகளும் பெண்தலைமையுள்ளவர்களுக்கு வருவாயைக் கொடுக்கவில்லை. முதலில் இழப்புக்களையே கொடுத்தன. கடன்களை அளித்த நிறுவனங்களின் அறவீட்டாளர்கள் கடன்களை செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரினர் எனவும் கிழக்கில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனவே, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வறுமை அவர்களை விபசாரத்தை நோக்கியோ அல்லது தற்கொலையை நோக்கியோ விரும்பியோ விரும்பாமலோ தள்ளுகின்றது என்பது யதார்த்தமாகும். கடந்த வருட இறுதியில் வவுனியாவில் தாயும் சேய்களும் வறுமையின் பாதிப்புக்கள், உளவியல் தாக்கத்தினால் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். முன்னர் யாழ். வரணியிலும் தாயொருவர் கணவன் கடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இவைகள் கூட பொறுப்புவாய்தவர்களின் கவனத்தினை உரியதாக்கவில்லை.

இலங்கையில் நல்லிணக்கத்திற்காக முன்வைக்கப்பட்ட பல சாசனங்கள் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினை மீள்விப்பது பற்றி எழுத்தளவில் எடுத்துக் கூறுகின்றது. நடைமுறையில்தான் எதுவும் இல்லை என்பது விசனத்திற்கு உரியது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரை 9.86இல் மோதலின் பின்னர் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளமையினால் அரசும் ஏனைய அக்கறை கொண்டவர்களும் நல்லிணக்கத்தின் கூட்டு முயற்சியாக இந்தப் பிரச்சினையையைக் கையாளவேண்டும் என்றுள்ளது. பெண்தலைமையுள்ள குடும்பங்களின் நிலைமையினை இவ் ஆணைக்குழு முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தி இதனை சவாலாகவும் அங்கீகரித்துள்ளது.

மேலும், கணவனை இழந்த பெண்கள், கணவன் இருக்குமிடம் அறியாதுள்ள பெண்கள், தடுப்பில் கணவர் உள்ள பெண்கள் போன்றோரின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அதேவேளை, அவர்களது ஜீவனோபாயம் மற்றும் ஏனைய வருமான மூலங்களுக்கான பொருளாதார உதவிகளையும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு பரிந்துரைத்திருந்தது (9.87). எனினும் நடைமுறையில் இவ்விடயங்கள் பெரிதளவில் கொண்டுவரப்படவில்லை. இதுவே இன்றைய பிரச்சினையாகவுள்ளது. ஏற்கனவே, சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கான உதவிகள் நல்கப்பட்டிருந்தால் ஏனும் வடக்கிலோ கிழக்கிலோ கணவனை இழந்த பெண்களின் அவலங்கள் தணிந்திருக்க வாய்ப்புக்கள் கிட்டியிருக்கும்.

யுத்தத்திற்குப் பின்னர் கணவனை இழந்து நிற்கும் பெண்களது பாதுகாப்பு, வாழ்வாதாரம், சமூக அந்தஸ்து, இதர நலன்நோன்பு நடவடிக்கைகள் என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது காணாமல்போயுள்ள தமது குடும்பத் தலைவனையோ உறவுகளையோ தேடும் அசாதாரண பொறுப்பு பெண்களின் தலைகளியே அதிகமாகக் காணப்படுகின்றது. உண்மையில் வருமானத்திற்கான மார்க்கமின்றி உள்ள இந்தப் பெண்கள் மேற்குறிப்பிட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பணத்திற்காக எங்கே செல்வது எனத் திண்டாடுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளின் இறுதியே அவர்களை விபசாரத்தினை நோக்கித் தள்ளப்பட நிர்ப்பந்திக்கின்றது.

உண்மையில் மக்களிடத்தில் நிலவும் வறுமையைத் தணிப்பதற்கு அரசு திட்டங்களை முன்வைக்கவேண்டும். அவற்றின் வெற்றியளிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகள் எதுவும் இல்லை என மேதாவித்தனம் பேசுவது சரியான முன்னேற்றத்திற்கான வழிவகை ஆகப்போவதில்லை. அரசின் பொறுப்புணர்வு தட்டியெழுப்பப்படவேண்டும். அதேவேளை, தமிழர்களிடத்திலும் பாரிய பொருளாதார சக்தியாக புலம்பெயர் சமூகம் உள்ளது. எனவே, புலம்பெயர் சமூகம்  நேரடியாகவே வடக்கில் உள்ள பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களை இனங்கண்டு உதவியளிக்க முடியும். இது தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் முயற்சியாகும்.

அரசார்பற்ற நிறுவனங்களின் நடத்தையில் வடக்கில் பலதரப்பட்ட மட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இம் மட்டுப்பாடுகளில் சரியான அணுமுறையொன்றை அரசு கடைப்பிடித்தால் சமூகத்தில் நலிவுற்ற தரப்புக்களின் உடனடி மீள்வாழ்விற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

தியாகராஜா நிரோஷ்

Niro