படம் | Ishara S. KODIKARA Photo, GETTY IMAGES

மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை.

பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்னுமொருவர் அனுபவித்திருக்க மாட்டார் என்று எண்ணுவார்கள். சித்திரவதை எனும் கொடூர குற்றத்தின் சாட்சியாக இருக்கும் நானும் அந்நேரம் அப்படித்தான் எண்ணினேன். கொடூர சித்திரவதைக்கு உள்ளாகி, குணப்படுத்த முடியாமல் ஊனமுற்ற நிலையில் இருக்கும் ஒருவர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும், கடந்துபோகும் ஒவ்வொரு விநாடியும் மனதளவிலும் உடலளவிலும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார். எனது மனதின் ஒரு மூளையில் ஒளிந்திருக்கும், அன்று நான் முகம்கொடுத்த அந்த பயங்கரமான அனுபவத்தை மீட்டிப்பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. நான் அனுபவித்த அந்த துன்பத்தை கூறுவது போன்றதொரு வேதனையை என் வாழ்க்கையில் இதற்கு முன்னர் முகம்கொடுத்ததே இல்லை. வெள்ளைக் கடதாசியுடன் அந்த வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜூன் மாதம் முதலாம் திகதியோடு நான் கடத்திச் செல்லப்பட்டு, சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு 7 வருடங்களாகின்றன. பல வருடங்கள் கடந்து சென்றிருந்தாலும் இன்னும் அந்தச் சம்பவத்தை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு நிலை இருக்கிறது. பல தடவைகள் மீண்டும் மீண்டும் சம்பவத்தை விவரித்தாலும் சித்திரவதைக்கு உள்ளான ஒருவர் மனதளவில் அனுபவிக்கும் வேதனையை, சித்திரவதைக்கு உள்ளாகாத ஒருவரால் புரிந்துகொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை. அன்று எனக்கு நேர்ந்த சம்பவத்தை எழுதிவைக்குமாறு கடந்துமுடிந்த 7 வருடங்களுக்குள் எனது நண்பர்கள் ஐந்தாறு தடவைகளாவது கூறியிருப்பார்கள், முயற்சி செய்து பார்த்தேன், முடியவில்லை.

கொடூரமான அந்த மாலை

வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு கையில் டொகியுமன்ட், மறு கையில் மகளுக்கும் மனைவிக்கும் வாங்கிய ‘மாலுபனிஸ்’ (மீன் பனிஸ்). குறுகிய இன்னொரு பாதைக்குத் திரும்பி முன்னால் சென்றுகொண்டிருக்கும்போது வெள்ளை வான் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. குறுகிய பாதை என்பதால் வான் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சிறிய இடைவெளியே இருந்தது. அந்த சிறிய இடைவெளியில் வானை கடந்து செல்வதற்கு காலை எடுத்து வைத்தது மட்டும்தான். சந்தோசமான, ஆரோக்கியமான மனிதனாக நான் கடைசியாக எடுத்துவைத்த காலடிகள் அவை.

கண்கள் இமைப்பதற்குள் என்னை வானினுள் இழுத்து கதவை மூடிய இனந்தெரியாத (அவர்களின் தலைவன் யார் என்று தெரியாவிட்டாலும்) குண்டர்கள், கீழே தள்ளிவிட்டு உயிர்போகும் வரை அடித்தார்கள். முகத்துக்கு – தலைக்கு – நெஞ்சுக்கு – வயிற்றுக்கு – கீழ் வயிற்றுப் பகுதிக்கு இடிபோன்று நூற்றுக்கணக்கான அடிகள். நினைவின்படி அந்த மொபைல் சித்திரவதை வானின் நடுவில் உள்ள ஆசனம் நீக்கப்பட்டிருந்தது. எனது கண்கள் இரண்டும் கட்டப்பட்டு கீழே வீழ்த்தப்பட்டது அந்த இடைவெளிப்பகுதியில்தான்.

எதுவித தனிப்பட்ட குரோதங்களும் அற்ற மனிதனுக்கு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த வழங்கப்பட்டிருந்த பயிற்சியைப் பற்றி நினைக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் எனது தலைமுடி, தாடியை வெட்டி வாயினுள் திணித்தார்கள், கை விரல்களை நையப்புடைத்தார்கள், கைகளை முறித்தார்கள், இரண்டு கால்களையும் முறித்து உடைக்க முயற்சி செய்தபோதிலும் முடியவில்லை. இருந்தபோதிலும் எனது இடது கால் பலத்த உள், வெளிக்காயங்களுக்கு உள்ளானது. குதிக்கால் மணிக்கட்டு இடது காலிலிருந்து விலகுவதற்கு, மரத்துண்டொன்றின் மீது காலை வைத்து இன்னொரு மரத்துண்டால் தாக்கினர். கடைசியாக வாயில் திணிக்கப்பட்டிருந்த முடியுடன் வாயைக் கட்டி, இறத்தம் சிந்திக்கொண்டிருந்த உடலை, சடலத்தைப் போன்று வீசிவிட்டுச் சென்றார்கள்.

அங்கொடை உண வைத்தியசாலை வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்குள் என்னை வீசிவிட்டுச் சென்றார்கள். எந்நேரமும் வாகனம் பயணிக்காத அந்தப் பாதையில் அன்று சென்றுகொண்டிருந்த த்ரீவீல் சாரதி ஒருவர், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கிடப்பதைக் கண்டிருக்கிறார். அச்சமடைந்துள்ள அவர் உடனே அங்கொடை சந்திக்குச் சென்று அவருடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். உடனே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் என்னை அவர்கள் சேர்த்துள்ளனர். இருண்ட யுகத்திலும் மனித நேயமிக்க அந்த மனிதர்கள் இருந்திராவிட்டால் அன்றைய தினமே வாழ்க்கை முற்றுப்புள்ளியைச் சந்தித்திருக்கும்.

சித்திரவதையின் விளைவுகள்

எனக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைக்காக அவசர சிகிச்சைகள் பிரிவில் தொடர்ந்து 29 நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. காயங்கள், முறிவு, உடைவு மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதியில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதலால் சிறுநீர்ப்பைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது. குதிக்கால் மணிக்கட்டுடன் உடைத்து விலக்கப்பட்ட வலது கால், வாழ்நாள் பூராகவும் அகற்ற முடியாத உலோகத்துண்டொன்றால் இணைக்கப்பட்டது. வைத்தியசாலையில் இருந்து வெளியாகி வீடு சென்ற போதிலும் 6 மாதங்கள் கட்டிலில்தான் வாழ்க்கை. இன்னும் ஒரு வருடம் ஊன்றுகோல்களின் உதவி.

வேதனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குளிர்காலங்களில் காலில் பொருத்தப்பட்டிருக்கும் உலோகத் தகடுகள் அதிக குளிர்ச்சி அடைந்ததமும் வலி அப்படியே காலிலிருந்து உச்சந்தலை வரைப் பயணிக்கும். தாங்கமுடியாத வலி அது. படியில் ஏறிக்கொள்ள முடியாது, உடைக்கப்பட்ட இடது கால்பக்கமாக பாரமாக எதையும் சுமக்க முடியாது. ஒருசில நேரங்களில் சமநிலையற்று நடந்துவிட்டால் அதனால் ஏற்படும் வலி, வீக்கம் ஒரு வாரம் வரைக்கும் நீடிக்கும்.

உடல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் வலியை விட மனதில் இன்னும் நிலைகொண்டிருக்கும் பயம் எவ்வளவு முயற்சி செய்தாலும் விட்டுப் போக மறுக்கிறது. இலங்கையிலிருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்தாலும், பாதையோரமாக நடந்து செல்லும்போது அருகில் கடக்கும் வெள்ளை வான்களைக் கண்டு பயத்தில் உறைந்து பின்வாங்குவது இன்னும் என்னை விட்டுப்போகவில்லை. கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தும்போது, இன்னும் ஓரிரு நிமிடங்களில் கொல்லப்படப்போகிறேன் என அன்று ஏற்பட்ட மரணபயம் வாழ்நாள் முழுவதும் என்னை விட்டு நீங்காது என்பதை கடந்த 7 வருடங்களாக உணர்ந்துவருகிறேன்.

என்னை சித்திரவதைக்கு உட்படுத்தியது ஏன்?

எவருடனும் எனக்கு எதுவித தனிப்பட்ட விரோதமும் இருந்ததில்லை, தெரிந்தவரையில் யாருக்கும் தீங்கெதுவும் செய்ததில்லை. ஆனால், நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எவராவது செயற்படுவதை கண்டபோது என்னால் முடிந்தவரை பதில் அளித்திருக்கிறேன். அது நபர்களாக அல்லது அராங்கமாகக் கூட இருக்கலாம். நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் நான் நிறைய எழுதியிருக்கிறேன். உலகிலேயே பாரிய கொள்ளையாக கருத வாய்ப்பிருந்த ஆசியாவின் மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் வரி மோசடி தொடர்பாக வெளிப்படுத்தியிருந்தேன். பொதுமக்களின் நலன் கருதி நடந்த குற்றங்களை வெளிப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களுக்கு உள்ள உரிமைக்காகவும், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினருடனும் இணைந்து ஊடக சுதந்திரத்துக்காகவும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடினேன். என்னைக் கொல்லாமல் கொன்றதற்கான காரணங்கள் இவைதான் என நினைக்கிறேன்.

தொடர்ச்சியாக அரச தொலைக்காட்சிகளில் எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள் மற்றும் எனக்கு விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்  நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதியுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் நான் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது விதி இது என்று நான் நினைக்கவில்லை. நான் கடத்தப்பட்ட செய்தி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களுக்குக் கிடைக்க, உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் உயர் பாதுகாப்பு வலயத்தைத் தாண்டிச் சென்று என்னை சித்திரவதைக்கு உட்படுத்தி சடலத்தைப் போன்று வீசிவிட்டுச் செல்ல அந்த ‘அனுமதிபெற்ற’ குண்டர்களால் முடிந்துள்ளது.

என்னை சித்திரவதைக்கு உட்படுத்த சில மாதங்களுக்கு முன்னர் லேக் ஹவுஸ் முன்னாள் தலைவர் பந்துல பத்மகுமாரவின் ஊடாக ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ என்னையும் சனத் பாலசூரியவையும் அழைத்து ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை உடனடியாக நிறுத்தும் படி உத்தரவிட்டதும், அதன் பிறகு அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கமும் எல்லோரும் அறிந்த விடயமாகும். அந்த சந்தர்ப்பத்தில் பந்துல பத்மகுமார மற்றும் லக்‌ஷ்மன் ஹுலுகல்ல உடனிருந்தனர். ஊடகவியலாளர்கள் கொல்லப் படுகின்றமை, கடத்தப்படுகின்றமை, தாக்குதல் நடத்தப்படுகின்றமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை அதற்கு எதிராக எங்களால் நடத்தப்படும் போராட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது என நானும் சனத்தும் கோட்டாபயவுக்கு உறுதியாகத் தெரிவித்தோம்.

அந்தக் காலப்பகுதியில் கோட்டாபயவின் முன்னால் நிற்கும் அமைச்சர்கள் கூட வாயை மூடிக்கொண்டு, கையைக் கட்டிக்கொண்டு, எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக்கொண்டிருந்த போது நாங்கள் இருவரும் இவ்வாறு பேசியது நிச்சயமாக அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். கோபத்துடன், அவரது கீழ்த்தரமான குணம் வெளிவரத் தொடங்கியது, “இவனுங்க யாருக்கு பிறந்தவனுங்க…” என்று சத்தமாகப் பேசினார். இவருடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை என்று அங்கிருந்து வெளியேறினோம். அப்போது அவர், “நல்லது, நடக்கப்போறத பார்க்கத்தானே போறீங்க” என்றார். திரும்பிப் பார்த்து, “நீங்களா அத செய்யப்போறீங்க” என்று நான் கேட்க, அதற்கு அவர், “இல்ல, நானில்ல, செய்றவங்க செய்வாங்க” என்றார். “செய்றவங்க செய்வாங்க” என்று கூறியது போலவே, செய்து முடித்துள்ளார்கள் என்று புதிதாக நான் இங்கு கூறத்தேவையில்லை.

கசப்பான இந்த விவாதம் நடந்து ஒரு சில தினங்களுக்குப் பின்னர் லசந்த விக்கிரமதுங்க வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் வெறிப்பிடித்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய எதிர்ப்பாக மாறியது. ‘காதகயா சாடகயா’ (கழுத்துப்பட்டிக்காரன்தான் கொலையாளி) என்ற சுலோகம் அந்த எதிர்ப்பின்போது எழுந்தது. லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஊர்வலத்தின் பின்னர் எனக்கும் சனத்துக்கும் விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தோம். நண்பர்கள் அறிவுறுத்தியபோதும் 3 வாரங்களுக்குப் பின்னர் இலங்கைக்குத் திரும்பினேன். அதன் பின்னர் 25 வருடங்களாக கனவாக மட்டுமே இருந்த உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். இந்தக் காலப்பகுதியில்தான் நான் கடத்தப்பட்டிருந்தேன். இறுதியில், எனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தால் அரச விரோதிகளாக தங்களைப் பார்ப்பார்கள் என்ற அச்சத்தில் மக்கள் வீடு தர மறுத்தார்கள். நான் பிறந்த எனது தாய்நாடு எனக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறியது. அதன் பின்னர் அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

இறுதியாக…

7 வருடங்களுக்குப் பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் உயிர்தப்பி வந்த பின்னரும், தைரியமான மனிதர்கள் கொடூரமான அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்தவாறு சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடியதனால்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 7 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்து எனது வயோதிப பெற்றோர்களின் முகத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தாக வேண்டும். சர்வதிகாரி ராஜபக்‌ஷ கண்ட கனவின்படி வாழ்நாள் பூராகவும் குடும்ப ஆட்சியை தொடர்ந்திருப்பாரேயானால் என்னால் எனது பெற்றோரின் முகங்களைப் பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய அளவில் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை என்றுதான் கூறவேண்டும். பிரகீத் எக்னலிகொட காணாமல்போனமை தொடர்பான விசாரணையைத் தவிர ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட ஊடகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சித்திரவதை அவற்றுள் ஒரு சம்பவம் மட்டுமே. ஆகவே, ஊடகத்துக்கு எதிராக குற்றங்களைப் புரிந்தவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

பிரகீத் எக்னலிகொட காணாமல்போனமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) எனக் கூறிக்கொண்டு நீதிமன்றத்துள் அத்துமீறி நுழைந்து, கூட்டமாக சிறைச்சாலைகளுக்கு சென்றுகொண்டிருக்கும் ‘பிரதான திருடர் உட்பட ஒருங்கிணைந்த திருடர்கள் கூட்டம்’ நடத்தும் நாடகத்தைப் பார்க்கும்போது ஊடகத்துக்கு எதிராக நடந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்று உறுதியாகிறது. இப்படியிருக்கும்போது ஊடக சுதந்திரம் தொடர்பாக திருடர்கள் கூட்டம் கருத்து தெரிவிப்பதைப் பார்க்க நேருவது சகிக்க முடியாமல் இருக்கிறது.

மீண்டுமொரு தடவை இந்த சர்வாதிகாரியைத் தலைமையாகக் கொண்ட ஊர்வலத்தை நிறுத்த வேண்டும். குற்றங்கள் தொடர்பாக முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம். அப்படிச் செய்தால் அந்த ஊர்வலத்தின் தலைமை மற்றும் இன்னும் பலரின் பயணம் சிறைச்சாலையில்தான் முற்றுபெறும்.

###

poddala-on-kihilikaru-sசிரேஷ்ட ஊடகவியலாளரும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் செயற்பாட்டாளருமான போத்தல ஜயந்த எழுதிய இக்கட்டுரை முதலில் ‘ராவய’ பத்திரிகையில் வெளியானதோடு, விகல்ப இணையதளம் அதனை மீள்பிரசுரித்திருந்தது. ‘மாற்றம்’ தளத்துக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் செல்வராஜா ராஜசேகர்.