படம் | AP Photo, DHAKA TRIBUNE
பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வழியாகவே பார்க்கப்பட்டது. அந்த வகையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரபாகரன் என்னும் நாமமே தமிழ் தேசியத்தின் குறியீடாக இருந்தது. அன்றைய சூழலில் பிரபாகரனை அவரது பலம் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்வதை தவிர தமிழ் சூழலில் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. அனைவருக்குமே பிரபாகரனின் வெற்றி தேவைப்பட்டது. பிரபாகரனை விமர்சித்தவர்கள் கூட பிரபாகரனிடமிருந்து வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதன் விளைவாகத்தான் அனைவருமே பிரபாகரனின் பக்கமாக நகர வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. பிரபாகரனை தவிர்த்து தமிழர் அரசியலில் இயக்க முடியாது என்னும் யதார்த்தத்தின் விளைவுதான் அதுவரை அவருடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த ஏனைய பிரதான அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் அவரது தலைமையின் கீழ் ஒன்றுபட முன்வந்தன. இதன் விளைவாக தோற்றம் பெற்றதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. இன்று கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் கூட அன்று பிரபாகரனையும் அவரது ஆளுமையையும் ஏற்றுக் கொண்டிருந்தார். 2009இற்கு பின்னர் சம்பந்தன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்த ஒருவர் ஏன் விடுதலைப் புலிகளை ஏற்க வேண்டிவந்தது? இப்பத்தியாளர் மேலே குறிப்பிட்ட விடயங்கள்தான் இதற்கான பதில்.
2009இற்குப் பின்னரான அரசியல் சூழல் அடிப்படையிலேயே வேறுபட்டதாக இருப்பினும் கூட, ஒரு சில ஒற்றுமைகளை இங்கும் காணலாம். 2009இற்கு பின்னரான சூழலில் சம்பந்தன் ஒரு தவிர்த்துச் செல்ல முடியாதவொரு ஆளுமையாக வெளித்தெரிந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில அங்கம் வகித்துவரும் கட்சிகளுக்குள் சம்பந்தன் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், அவை அவ்வப்போது வெளிப்பட்டிருப்பினும் கூட, சம்பந்தனின் ஆளுமையைத் தாண்டி எவராலும் முன்நோக்கிச் செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு 2009இற்குப் பின்னரான அரசியல் சூழலை சம்பந்தன் தனது தனிப்பட்ட ஆளுமையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார். எவர் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்த போதும் அவர் தன்னுடைய அரசியல் இயங்குநிலையிலிருந்து பின்வாங்கவில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் 2009இற்கு பிற்பட்ட சூழலில் அவருடன் முரண்பட்டவர்கள் அனைவருமே அவரின் முன்னால் தங்களை ஒரு அரசியல் சக்தியாக நிறுவுவதில் தோல்வியடைந்திருக்கின்றனர். இதனை சம்பந்தனின் வெற்றி என்பதை விடவும் அவரை எதிர்த்தவர்களின் அரசியல் அணுகுமுறையில் உள்ள குறைபாடுகளாகவே இப்பத்தி காண்கிறது. ஆனால், அவரை எதிர்த்தவர்கள் அல்லது முரண்பட்டவர்களின் இயலாமை சம்பந்தனின் ஆளுமையை மேலும் பலப்படுத்துவதற்கே பயன்பட்டது. இந்த வகையில் நோக்கினால் பிரபாகரனின் மறைவுக்குப் பின்னரான கடந்த 7 வருடங்கள் என்பது சம்பந்தன் என்னும் தனிமனிதரின் ஆளுகைக்குள் தமிழ் அரசியல் கட்டுப்பட்டுக் கிடந்த காலம்தான்.
ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலில் குறிப்பாக சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், சம்பந்தன் என்னும் ஆளுமை ஒரு தனி ஆளுமையாகத் தொடர்வதில் சில நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன. சம்பந்தன் கொழும்புடன் அதிகம் நெருங்கிச் செல்லும் தன்மையும், வடக்கு மாகாணத்தில் அதிலிருந்து விலகிச் செல்லும் தன்மையும் தமிழ் தேசியவாத அரசியலில் ஒரு விரிசலாக வெளித்தெரிகிறது. இந்த விரிசலுக்கு ஊடாகத்தான் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனித்து தெரியத் தொடங்கினார்.
நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் அரசியல் களத்துக்குள் இழுத்து வந்தவர் சம்பந்தன்தான். ஆரம்பத்தில் ஏனைய கட்சிகள் முக்கியமாக இலங்கை தமிழரசு கட்சி விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட போது, அந்த எதிர்ப்புக்களை தன்னுடைய ஆளுமையால் சாதாரணமாக ஓரங்கட்டியவரும் சம்பந்தன்தான். அன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பியவர்களிடம் சம்பந்தன் ஒரு விடயத்தையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். அதாவது, எங்களுக்கு ஒரு படித்தவர் தேவை, அவர் உலகவங்கியுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும். சர்வதேசம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியான ஒருவர்தான் விக்னேஸ்வரன். இதன் மூலம், மாவை சேனாதிராஜாவை அவ்வாறான தகுதிகள் இல்லாத ஒருவர் என்றே சம்பந்தன் நிராகரித்திருந்தார். பெருந்தன்மைமிக்க மாவை வழமைபோலவே பெருந்தன்மையாகவே ஒதுங்கிக் கொண்டார். ஒருவேளை விரைவில் தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு கூட அவர் தகுதியற்றவர் என்று ஓரங்கட்டப்படலாம். கிடைக்கும் தகவல்களின் படி மூவர் தமிழரசு கட்டசியின் தலைவர் பதவிக்காக முன்வரிசையில் இடித்துக்கொண்டு நிற்கின்றனராம். அன்று சம்பந்தன் தகுதி அடிப்படையிலேயே விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்துவதாக கூறினாலும் கூட அது மட்டும்தானா காரணம் என்னும் கேள்வி இப்பத்திடம் உண்டு.
விடயங்களை சற்று ஆழமாகப் பார்த்தால், தமிழ் அரசியல் சம்பந்தனின் முழுமையான ஆளுகைக்குள் வந்ததன் பின்னர் முதலில் ஒரு உடைவே நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளால் தமிழ் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உண்மையில் சம்பந்தனின் இலக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அல்ல, மாறாக ஏனைவர்களே! கூட்டமைப்பிலிருந்து ஒருவரை வெளியேற்றுதல் என்பது மிகவும் இலகுவானது. அதாவது, ஒருவருக்கு தேர்தலில் ஆசனத்தை வழங்காது விடுவது. முன்னர் துப்பாக்கி இருந்த இடத்தில் தற்போது வேட்பாளர் பட்டியல் இருக்கிறது. கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரேயே சுமந்திரனின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. சுமந்திரன் தமிழ் தேசிய அரசியல் பரப்புடன் எவ்விதமான தொடர்புமற்ற ஒருவர். ஆனால், சம்பந்தன் சுமந்திரனுக்கு முக்கியமான இடத்தை வழங்கியிருந்தார். இன்றைய சூழலில் சம்பந்தனுக்கு அடுத்து கொழும்பிற்கும் கூட்டமைப்பிற்குமான தொடர்பாடல் புள்ளியாக இருப்பவர் சுமந்திரன் என்பது அனைவரும் அறிந்த சங்கதி. சம்பந்தனது எதிர்பார்ப்பிற்கு அமைவாகவே சுமந்திரனும் இயங்கி வருகின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கின் முதலமைச்சராக விக்னேஸ்வரனை கொண்டுவருவதில் சம்பந்தன் தனிப்பட்ட ஆர்வம் எடுத்துக் கொண்டார். இப்பத்தியாளரின் கணிப்பின் படி, சம்பந்தன் போட்ட அரசியல் கணக்கு வேறு. அதாவது, தமிழர் அரசியல் தனது பூரண ஆளுமைக்குள் இருக்கின்ற போதே, வடக்கு கிழக்கின் அரசியல் தலைமையை வடக்கு கிழக்கிற்கு வெளியில் கொண்டு போவது. இதன் மூலம் வடகிழக்கை அடிப்படையாக் கொண்ட தமிழ் தேசியவாத அசியலை கருத்தியல் ரீதியில் பலம்குன்றச் செய்வது. ஆனால், சுமந்திரன் விடயத்தில் கைகொடுத்த மேற்படி அரசியல் கணக்கு விக்னேஸ்வரன் விடயத்தில் பிழைத்துப் போனது. விக்னேஸ்வரனை வடக்கின் முதலமைச்சராக்கிவிட்டு தன்னுடைய ஆளுகைக்குள் கட்டுப்படுத்தி, கையாள முடியுமென்றே சம்பந்தன் எண்ணியிருந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. ஆரம்பத்தில் சில விடயங்களில் குழப்பமான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் கூட, நாளடைவில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த விடயங்களில் உறுதியான நிலைப்பாடுள்ள ஒருவராகவே தன்னை நிரூபித்திருந்தார். இதன் காரணமாக வடக்கிலும் புலம்பெயர் சூழலிலும் அவரது நன்மதிப்பு உயர்ந்தது. உண்மையில் வடக்கின் மத்தியதர வர்க்கம் அவ்வளவு இலகுவாக அடிப்படைகளை கைகழுவிவிட்டு, கொழும்புடன் இணைந்து செல்லும் அரசியலை ஆதரிக்காது. இதற்கு மாவை சேனாதிராஜாவின் கருத்துக்களே சிறந்த சான்று. உண்மையில் சம்பந்தனும் மாவையும் ஒரே கட்சியில் இருந்தாலும் கூட, வடக்கின் சூழலில் இயங்கும் மாவை எப்போதும் வடக்கின் நிலைமைகளுக்கு ஏற்பவே பேசிவருவதை காணலாம்.
வடக்கு கிழக்கின் அரசியல் வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருப்பவர்களால் கையாளப்படும் போது அதன் அரசியல் உறுதிப்பாடு இயல்பாகவே வீழ்ச்சியடைந்துவிடும் என்பதே சம்பந்தனின் கணிப்பாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு சூழலில் தனது எண்ணங்களை எதிர்ப்பின்றி அரங்கேற்றலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்தார் என்பதை விடவும், இங்கு எதுவும் சரிவராது ஏதோ கிடைப்பதை பெற்றுக் கொள்ளும் ஒரு அணுகுமுறைதான் சரியென்று அவர் கருதியிருக்கலாம். ஆனால், விக்னேஸ்வரன் வடக்கில் நிலைகொண்டு இயங்கத் தொடங்கிய பின்னர் அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் முற்றாகவே மாற்றமடைந்தன. தமிழரின் அரசியல் கோரிக்கைகள் சாகாமல் இருக்க வேண்டுமென்பதில் விக்னேஸ்வரனிடம் காணப்படும் உறுதிப்பாடு சம்பந்தனிடம் காணப்படவில்லை. தலைமை என்பது சூழலை கையாளுவது மட்டுமல்ல தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை சாகாமல் பேணிப்பாதுகாப்பதற்கான அரசியல் ஒழுங்கையும் கொண்டிருக்க வேண்டும். அந்த ஒழுங்கு என்பது அந்த கோரிக்கைளில் உறுதியாக நின்று கொண்டு, குறிப்பிட்ட சூழலை கையாளுவதில்தான் தங்கியிருக்கிறது. சூழலை கையாளுவது என்பது நெகிழ்வாக பயணிப்பதுதான். ஆனால், எந்த இடத்தில் நெகிழ்ந்து கொடுப்பது? – எந்த இடத்தில் இறுக்கிப் பிடிப்பது? என்பதில்தான் அந்த கையாளுகையின் வெற்றி தங்கியிருக்கிறது.
ஒரு உரிமைசார் அரசியலை கையாளும் தலைமை என்பதை நாம் இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையால் உருப்பெறும் தனிப்பட்ட ஆளுமையின் விளைவான தலைமை. மற்றையது, ஒரு குறிப்பிட்ட சூழலின் தேவை கருதி ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஜக்கிய முன்னணியின் ஊடான தலைமை. பிரபாகரனின் தலைமைத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட ஆளுமையாகவே இருந்தது. அவரது விருப்பு வெறுப்புக்களின் விளைவாவே அரசியல் பார்க்கப்பட்டது. அதன் வீழ்ச்சிக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட சம்பந்தனும் தன்னுடைய தனிப்பட்ட ஆளுமைக்குள்ளேயே தமிழ் அரசியலை சிறைப்படுத்தியிருக்கின்றார். உண்மையில் தனிப்பட்ட ஆளுமைகளில் ஒரு மக்களுக்கான அரசியல் இயங்குநிலை தங்கியிருப்பதானது மிகவும் ஆபத்தானது. அது பேராளுமைகளாக இருந்தாலும் கூட, அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தான் எதிர்கொள்ளவுள்ள வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது. ஆனால், அதுவே ஒரு ஜக்கிய முன்னணியாக இருப்பின் அதன் இயங்குநிலை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமாகும். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவரால் தமிழர் கோரிக்கைகளில் உறுதியாக நிற்க முடியாது. அந்த வகையில் உறுதியானதொரு தலைமைத்துவத்தின் கீழ் ஜக்கிய முன்னணி ஒன்றிற்கான தேவை முன்னர் எப்போதுமில்லாதவாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியின் பின்னர் அவ்வாறானதொரு ஜக்கிய முன்னணியின் தேவைப்பாட்டை உணரும் நிலைமை நிச்சயம் ஏற்படலாம். அது சாத்தியப்படாது போகும் போது, தமிழர் அரசியல் கோரிக்கைகள் ஒன்றில் சிதைவுறும் அல்லது மலினப்படுத்தப்படும்.
யதீந்திரா