அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – V : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து?

முதலாவது பாகமான இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I”

இரண்டாவது பாகமான இலங்கை இனச்சிக்கல் II”

மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம்

நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன தமிழர்கள்”

###

சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின் காங்கேசன்துறைக்கு இடைத் தேர்தல் நடத்துவதில் இழுத்தடிப்பு என சிறிமாவோ அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து தமிழர்களை கொந்தளிக்கவைத்தன.

இளைஞர்கள் கூடுதலாகவே கொதித்தெழ, தமிழரசுக் கட்சி அதன் பங்கிற்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெறியச் செய்தது. தலைவர்கள் வீராவேசமாக முழங்கிவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய்விடலாம், ஆனால் இளைஞர்கள் வெற்றுச் சவடால்களுடன் நிற்பார்களா?

(சிங்களர் தரப்பிலும் 80களில்தான் அப்படித்தானே நடந்தது? இனவாதத்தை தலைவர்கள் தூண்டிவிட, ஜேவிபி கலவரம் அங்கே வெடித்தது.)

பங்களாதேஷ் உருவான நிலையில் தமிழர் தலைவர்களின் உசுப்பேற்று வேலையும் எல்லை மீறியது. பொதுக் கூட்டங்களில் விரல்களைக் கீறி வழியும் குருதியில் தலைவர்களுக்கு திலகமிடும் புரட்சிகர பழக்கம் தமிழர் பகுதிகளில் பரவியது.

கடையடைப்புக்கள், உடன் வன்முறை, 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கி மக்கள் உணர்வுகளைத் தூண்டியது, அரசின் காட்டுத்தனம், துரையப்பா கொலை என ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள் நாட்டை பேரழிவுக்கு அழைத்துச் சென்றன.

1974 மாநாடு குறித்து நான் Arrogance of Power அதிகார மமதை என்ற நூலில் விவரமாக எழுதியிருக்கிறேன். மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரெஹ்மான்தான் மாநாட்டினை துவக்கிவைத்தார். வழக்கத்திற்கு மாறாக நாட்டுப் பிரதமரை அழைக்கவில்லை.

பிரிவினைக்கான குரல் எழுப்பப்படுமோ என்ற அச்சம் பொலிஸார் மத்தியில் இருந்தது, ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த இரா. ஜனார்த்தனத்தை அழைக்கக்கூடாது என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் அவர்கள் விதிக்கவில்லை, கெடுபிடி ஏதுமில்லை.

ஜனவரி 3லிருந்து 9ஆம் நாள்வரை மாநாட்டு நிகழ்வுகள் பிரச்சினை ஏதுமில்லாமல் நடந்தேறின. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருந்ததால் மேலும் ஒரு நாள் அது நீட்டிக்கப்பட்டது.

வீரசிங்கம் அரங்கிலிருந்து திறந்த வெளிக்கு மாற்றப்பட்டது. இடத்தை மாற்ற மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பாவும், ஒலிபெருக்கிகள் வைத்துக்கொள்ள பொலிஸாரும் அனுமதி அளித்தனர். ஆனால், மழை காரணமாக மீண்டும் மாநாடு வீரசிங்கம் அரங்கிற்கே மாற்றப்பட்டது. பெருங்கூட்டம். அரங்கில் நுழையும்போது ஏகப்பட்ட நெரிசல். வெளியே பலர் உட்காரவேண்டியிருந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போதும் பொலிஸார் நன்கு ஒத்துழைத்து வாகனங்களை வேறு வீதிகள் வழியே திருப்பிவிட்டனர்.

கூட்டம் துவங்கவிருந்த நேரத்தில் ஜனார்த்தனம் பலத்த ஆரவாரத்துக்கிடையே மேடையில் தோன்றினார். ஆனால் மற்ற மாநாட்டு அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கீழிறங்கினார்.

இன்ஸ்பெக்டர் நாணாயக்கார அங்கு வந்து ஜனார்த்தனத்திடம் ஏதோ உத்தரவு அடங்கிய தாளைக் கொடுக்க, ஜனார்த்தனம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அதன் பிறகு உயர் பொலிஸ் அதிகாரி சந்திரசேகர ஒரு பொலிஸ் படையுடன் அங்கு வந்தவர், ஜனார்த்தனத்தைத் தேடி கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினார். ஒரே தள்ளுமுள்ளு கூச்சல் குழப்பம். வானில் பொலிஸார் சுட்டனர். அலறிக்கொண்டு கூட்டம் கலையத் துவங்கியது. அந்த நேரம் பார்த்து ஒரு மின்சாரக் கம்பி அறுந்து விழ, அதனை மிதித்த ஏழு பேர் அங்கேயே மாண்டனர்.

பொலிஸார் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீதிபதி க்ரெட்சர் ஆணையம் கூறியது.

நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்வேல்பிள்ளை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு தடியடியை நிறுத்துமாறு கோரியபோது ஏன் ஜனார்த்தனம் பேச அனுமதிக்கப்பட்டார் என திருப்பிக்கேட்டார். ஜனார்த்தனமோ பேசவே இல்லை. அவருக்கு அங்கு மாலை மட்டுமே அணிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் நாணாயக்கார ஜனார்த்தனத்திடம் வெளியேற்ற உத்தரவை கையளித்தபின், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர அவரைத் தேடுவானேன், கைதுசெய்ய முயல்வானேன்?

அந்த நேரம்வரை அமைப்பாளர்களுடன் ஒத்துழைத்து வந்த பொலிஸார் திடீரென தடியடிப் பிரயோகத்தில் இறங்குவானேன்?

பொலிஸார் கண்ணில் பட்ட தமிழரையெல்லாம் இரண்டு நாட்களுக்கு தாக்கிக்கொண்டிருந்தனர் எவ்வித முகாந்திரமும் இல்லாமல்.

கொழும்பிலிருந்து அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் எவரேனும் யாழ்ப்பாண பொலிஸாரைத் தொடர்பு கொண்டு உத்தரவேதும் இட்டனரா என்பது சரியாகத் தெரியவில்லை.

எப்படியிருப்பினும், தாறுமாறாக, ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படாமல், பொலிஸாரும் அரசும் நடந்துகொண்டதன் விளைவே உயிரிழப்புக்கள்.

அதேநேரம், இதனை திட்டமிட்ட தமிழர் படுகொலை என சித்தரிப்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது. ஆனால், இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினர் தமிழர் தலைவர்கள். இப்போது கூட விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர்.

5
தமிழாராய்ச்சி மாநாட்டின்போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூர அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் | படம்: tamilguardian

இளைஞர் தலைவர் சிவகுமாரன் ஏழு பேர் மரணத்திற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவையும் மேயர்  துரையப்பாவையும் கொல்லப்போவதாக சூளுரைத்தார்.

பெப்ரவரியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திருமதி அமிர்தலிங்கம் துரையப்பாவை துரோகி என்றார், சந்திரசேகரதான் மரணங்களுக்குப் பொறுப்பென்றார்.

இப்போது ஆத்திரப்பட்ட இளைஞர்களுக்கும் தமிழர் தலைமையின் அணுகுமுறைகளுக்கும் இடையேயான தொடர்பு புரிகிறதல்லவா?

பெரும்பான்மையினருடன் பதற்றமானதொரு உறவிருக்கும் நிலையில், சிறுபான்மைத் தலைமை, இப்படி இளைஞர்களை சூடேற்றுவது அல்லது அதிகார மையங்களை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களில் இறங்குவது முட்டாள்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

ஆனால், 50:50 ஒதுக்கீடு வலியுறுத்திய நாட்கள் தொடங்கி தமிழர் தலைவர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கி, அரசை ஆத்திரமூட்டி, பொதுமக்களுக்குப் பெரும் நெருக்கடிகளை உண்டாக்கி அதில் குளிர்காய்ந்தனர்.

அதே தந்திரோபாயங்களைத்தான் விடுதலைப் புலிகளும் கையாண்டு, ஒரு கட்டத்தில் உலகமே தங்கள் காலடியில் என்பதுபோல நடந்துகொண்டனர். இறுதியில் அவர்கள் அழிந்தே போனார்கள், அவர்களுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி சிவிலியன்களும்.

யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பா கொலையினை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், செல்வநாயகமே அதனைக் கண்டிக்க முன்வரவில்லை என்பதைக் கடந்த பகுதியில் கண்டோம்.

அறத்திலிருந்து தமிழர் தலைமை வழுவியது. அந்தப் பின்னணியில் 1977 தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் பெரும் வெற்றி பொருளற்றதானது.

தமிழ் மக்கள் எங்கள் பின்னால் என்று பெருமையடித்துக் கொள்ளவேண்டுமானால் அவ்வெற்றி பயன்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்ச் சமூகத்தை சரியானபடி வழிநடத்தும் திறனை கட்சி இழந்துவிட்டிருந்தது.

அப்படியொரு மகத்தான வெற்றி பெற்றும் தங்கள் மக்களை அவர்களால் 1983இல் காக்கமுடியவில்லையே. ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை தமிழர் சவாலை முறியடிக்க எந்த அளவுக்கும் அவர் செல்லத் தயாராயிருந்தார். அதே கொடூர முகத்தைத்தான் ஜேவிபி கிளர்ச்சியின் போதும் நாம் பார்த்தோம்.

ஆனால், நாம் இங்கே பேசுவது தமிழர் தலைமை தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய எதையும் செய்யத் தயாராயிருந்ததைத்தான். 1958இல் தமிழர்கள் சிங்களக் காடையரால் கடுமையாக தாக்கப்பட்ட நேரத்தில், அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவின் செயலர் பிரட்மன் வீரகோன் கலவர விவரங்களைத் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்திற்கு மேல் பிரதமரால் கேட்கமுடியவில்லை. அவ்வளவு குரூரமாயிருந்தது வர்ணனை.

காதுகளைப் பொத்திக்கொண்டு ”போதும் போதும்,” என்றவர், கலவரத்தை அடக்கும் பொறுப்பை முழுவதுமாக ஆளுநர் நாயகம் சர் ஆலிவர் குணதிலக்கவிடம் விட்டுவிட்டார் என பிராட்மனே என்னிடம் கூறினார்.

அதாவது, அக்கட்டத்தில் சிங்கள மஹா சபையைத் துவக்கிய பண்டாரநாயகாவிற்கே அப்பாவித் தமிழர்கள் இப்படி வேட்டையாடப்படுவது அக்கிரமம் என உறுத்தியிருக்கிறது.

வன்முறைக்கு தமிழர்கள் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என அவர்கள் உணர்ந்திருந்ததால், அத்தகைய நிகழ்வுகளின்போது நாம் இன மோதலில் அதிக தூரம் சென்றுவிட்டோமோ, சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கிறோமோ என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பிற்கால கட்டத்தில், அறத்தை அறவே தமிழர் தலைமை தவிர்த்த போது தமிழர்களின் துன்பங்களுக்காக வருந்துவோர் சிங்களர் தரப்பில் எவரும் இல்லாமல் போய்விட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், பலராலும் மதிக்கப்படும் நாடகாசிரியர், யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மட்டும், 23 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து பின்னர் மரித்ததாகக் குறிப்பிட்டார்.

ஒரு நாள் அந்த நாடகாசிரியர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்த இரு சகோதரிகளைச் சந்திக்கிறார். நம் பகுதிக்கு வந்திருக்கிறார்களே என அவசர அவசரமாக அவர்களுக்காக உணவு மற்றும் தேநீருக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், அவர்கள் தின்பண்டங்களில் கைவைப்பதற்குள், அவசர அழைப்பு. எதையும் தொடாமலேயே எழுந்து ஓடுகின்றனர். அந்த இருவரும் பின்னர் இறந்த 23 பேரில் அடக்கம்.

அச்சகோதரிகளை அவர் சந்தித்த காலகட்டத்தில்தான் சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தத்துவங்கியிருந்தார். ஏற்கனவே, அவருக்கு தமிழர்கள் மத்தியில் ஓர் அளவு நல்ல பெயர் இருந்தது.

பேச்சுவார்த்தைக் குழு ஒன்று முதன் முதலில் யாழ்ப்பாணம் வந்தபோது அமோக வரவேற்பு மக்களிடமிருந்து. அவர்கள் வந்திறங்கிய ஹெலிகொப்டரைக் கூட கட்டித் தழுவி முத்தமிட்டனர் சிலர்.

அடுத்த முறை அக்குழு வந்தபோது எவரையும் ஹெலி பக்கம் வரவிடாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக்கொண்டனர்.

நம் நாடகாசிரியரும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் தன் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டியிருந்தது. சந்திரிகா ஏமாற்றுப் பேர்வழி, அவரால் ஏதும் நல்லது ஆகப்போவதில்லை, தமிழர்களை நாசப்படுத்தப்போகிறார் இப்படியெல்லாம் மேடையேறிப் பேசுமாறு பணிக்கப்பட்டார். அவரது உரையைக் கூட மற்றவர்கள் எழுதிக்கொடுத்துவிடுவார்கள். அதைத் தான் அவர் பேசவேண்டும். சொந்த சரக்கெல்லாம் சேர்க்கக்கூடாது.

2007இல் அந்த எழுத்தாளரின் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஒன்று கிடைக்க அவர் கைது செய்யப்படுகிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய இராணுவ அதிகாரி, “பிழைத்துப் போ… உன் கோபம் எனக்குப் புரிகிறது. எங்கள் மக்கள் மீது எனக்கிருக்கும் அக்கறை போல உனக்கும் தானே இருக்கும்… அதனால் இப்போது உன்னை விட்டுவிடுகிறேன்… ஆனால், இனியும் யாழ்ப்பாணத்தில் இருக்காதே… அடுத்த முறை சிக்கினால் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது” எனக் கூறி அவரை அனுப்பிவைத்தாராம்.

அதேநேரம், 2009இல் போரின் இறுதிக் கட்டங்களில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்? தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் எவரையும் வெளியே விடவே இல்லையே.

இராணுவம் தாக்காது என உறுதியளித்திருந்த பகுதிகளில் வசித்த மக்களின் பின்னால் அல்லவோ ஒளிந்துகொண்டு, இராணுவ இலக்குக்களைத் தாக்கிய புலிகள், சிவிலியன்கள் எங்கும் செல்லக்கூடாது எனக் கடுமையாக உத்திரவிட்டனர் எனக் குறிப்பிடுகிறார் அதே நாடகாசிரியர்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இனி அரசியல் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதே அபத்தம். வெட்டிப் பேச்சு.

நிறைய இழந்துவிட்டோம். ஏதோ ஒரு சிலவற்றையாவது மீட்டெடுக்கவேண்டும், நம் வாழ்வைப் புனரமைத்துக்கொள்ளவேண்டும்.

தரமான கல்வி வேண்டும், தாமதமின்றி நீதி கிடைக்கவேண்டும், இவை இரண்டும் உறுதிசெய்யப்பட்டால்தான் நாம் நாகரிகமடைந்த சமூகம் என சொல்லிக்கொள்ளமுடியும்.

ஆனால், அத்தளங்களில் தீவு பெரும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறது. இந்த அவல நிலையை எப்படி மாற்றுவது?

ifl-5தமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக பேராசிரியரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் எழுதிய தொடர் கட்டுரைகள் தி ஐலண்ட் பத்திரிகை மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் (கானகன்) செய்து முதலில் Patrikai.com வெளியிட்டிருந்தது. அந்த ஆறு பாகங்களைக் கொண்ட கட்டுரைகளில் ஐந்தாவது பாகம் இங்கு தரப்பட்டுள்ளது.