படம் | கட்டுரையாளர்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.

வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள், பீரங்கிக் குண்டுகளின் பாகங்கள், ஏராளமாக மக்கள் வாழும் பகுதியில் பரவிக்கிடக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் அடிக்கடி போர் இடம்பெற்ற முன்னரங்கப் பகுதியான நாகர்கோவிலில்தான் இந்த நிலை.

பிரதான பாதையிலிருந்து கொஞ்சம் கீழிறங்கினால் போரின்போது பயன்படுத்தப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் முழுசாகவோ அல்லது பகுதியாகவோ பார்த்துவிடலாம். மணலில், மரத்தில் மக்களின் உடம்பில் என்று பல வகை வெடிபொருட்கள், இன்னும் மக்களை விட்ட பாடில்லை.

விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் வீச்சுகளால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகள் இன்னும் இருக்கின்றன. இராணுவத்தினர், புலிகள் இருந்த பங்கர்களும் அப்படியே இருக்கின்றன. குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் பங்கர்கள் காணப்படும் பகுதிகளுக்கு போகவேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வெடிச் சத்தங்களோடு பிறந்தவர்கள் இங்கு அதே வெடிபொருட்களோடு விளையாடி வருகிறார்கள். பல வகையான துப்பாக்கி ரவைக் கோதுகள், பீரங்கிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பிளாஸ்ரிக் குழாய் போன்றவற்றைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.

ஒரு சில வீடுகளில் பூக்கன்று பாத்திகளை பாதுகாப்பதற்காக, அலங்காரத்துக்காக பாதுகாப்பு வேலியாக ஆயுத எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் வெடிபொருட்களுடனான தொடர்பு இந்த மக்களிடமிருந்து அறுபடவே இல்லை.

###

புகைப்படங்ளூடான இக்கட்டுரையை SHORTHAND SOCIAL என்ற புதிய சமூக வலைதள தொழில்நுட்பத்தினூடாக தர முயற்சி செய்திருக்கிறோம். இலங்கையில் முதல் தடவையாக தமிழில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் கட்டுரையை வாசிக்கலாம்.