படம் | AP, Kirsty Wigglesworth / globalpeacesupport
கடந்த வாரத்தில் இன அழிப்பு என்ற சொல் சலசலப்புக்குள்ளாகியிருந்தது. வட மாகாண முதலமைச்சரும், இலங்கையின் ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் இந்தச் சொல் குறித்த ஆபத்தை சமிக்ஞைப்படுத்தியிருந்தார். அதாவது, ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என உறுதிப்படுத்த முன்னர், அந்தச் சொல்லை பயன்படுத்துவது சட்டச் சிக்கலை உருவாக்கும் எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வழமையான சமூக வலைதள கலவரங்கள் வெடித்துச் சிதறின.
இது இவ்வளவும் குறித்த சொல் ஒன்றின் பின்னால் நிகழ்ந்தவைகளின் செய்தி. அதாவது, சொற்களில் குவிந்திருக்கின்ற அரசியலைப் புரிந்துகொண்டு எழுப்பப்பட்ட எச்சரிக்கை மணி. இனப்படுகொலையையோ, இன அழிப்பையோ புரிந்தவர் பக்கமிருந்து ஒலிக்கவேண்டிய அபாயச்சத்தம், படுகொலைக்குள்ளானவர் பக்கமிருந்தே ஒலித்தமையை அரசியல் ஆச்சரியம் என்ற சொல்லையிட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
இந்தச் சம்பவத்தை ஒரு அறிமுகப்பதிவோடு நிறுத்திவிட்டு, எழுத்துத் தொடருக்குள் செல்லலாம். இந்த வாரம் விக்னேஸ்வரன் அவர்களின் குறித்த சொல் பற்றிய அரசியலையே பேசலாம். இன அழிப்பு என்ற சொல்லுக்கும் இன சுத்திகரிப்பு என்ற சொல்லுக்கும் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லை. ஒரே விடயத்தை குறிக்கவே இரண்டு சொற்களும் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் இரண்டுக்கும் Ethnic Cleanshing என்கிற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர். இதனோடு ஒப்பிடுகையில், ஈழத்தவர் தமக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் குறிக்க பயன்படுத்தும் இனப்படுகொலை (Genocide) எனப்படுவது வலு குறைந்த சொல்லாகவே காணப்படுகிறது. இனப்படுகொலையும், இன அழிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதியான பொருளை தந்தாலும், பெரும் வித்தியாசங்களைக் கொண்டவை. இனப்படுகொலை என்பது மனிதக் கொலைகளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு இனத்தை கூட்டாக கொன்றொழித்தலை இனப்படுகொலை என்கின்றனர். ஆனால், இன அழிப்பு அவ்வாறானதல்ல. ஒரு இனத்தை அதன் புவியியல் எல்லைகளுக்குள் இருந்து கூட்டாக அகற்றுவதற்காக, அதிகாரம் கோலோச்சும் இனம் மேற்கொள்ளும் சகல வன்முறை வடிவங்களையும், தந்திர வடிவங்களையும் குறிக்க இன அழிப்பு அல்லது இன சுத்திகரிப்பு என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். இதையும் கடந்து தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்ற சொல்லும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. திடீரென்று ஒரு இனம் அழிக்கப்படுவதை நிராகரித்து, திட்டமிட்ட வகையில் குறித்த இனமொன்றை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இனம், அழிந்து கொண்டிருக்கும் இனத்தை தன்னின கூறுகளுக்குள் மூழ்கச் செய்யும் வழிமுறைகளையும் பின்பற்றுகின்றன. இது காலனிய ஆபிரிக்க தேசங்களில் நடந்தது.
ஏற்கனவே, குறித்தது போல இன சுத்திகரிப்புக்கு அல்லது இன அழிப்புக்கு நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை பொறிமுறை இருக்கும். அது பல ஆண்டுகள், நூற்றாண்டுகள் நீடிக்கும் பொறிமுறையாகக்கூட இருக்கலாம். இந்தப் பொறிமுறையில் முதலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படவிருக்கும் இனமொன்றின் தூண்களாக இருக்கின்ற விடயங்கள் சிதைக்கப்படும். கல்வி, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்கள் (மதம், மொழி, கலை) போன்றன முதலில் தாக்குதலைச் சந்திக்கும். அதன் பின் படிப்படியாக இனப் படுகொலைகள் நடக்கும். ஆண்களை குறிவைத்து அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படும். பெண்கள் பெருமளவில் நிராதரவாக்கப்படுவர். இதன் விளைவுகளை தாங்க முடியாதவர்கள் வேறு தேசங்களுக்கு புலம்பெயர்க்கப்படுவர். அவர்களுக்கும், அவர்களின் பூர்வீக நிலத்துக்கும் உள்ள உரிமைத் தொடர்பு அறுக்கப்படும். இவையெல்லாம் சரியான காலகதியில் நடைமுறைப்படுத்தப்படும். இறுதியாக கூட்டு இனப்படுகொலையில் குறித்த இனத்தின் அழிவு முற்றுப்பெரும். அதற்குப் பின்னரும், இன அழிப்பு பல்வேறு வழிகளில் தொடரப்படும் என்பதற்கும் சர்வதேச உதாரணங்கள் பல இருக்கின்றன. சீனா – ஜப்பான் – அமெரிக்க போர்களில் பார்க்கமுடியும். இரண்டாம் உலகப் போரின் அவமானகரமான முடிவைத் தொடர்ந்து ஜப்பான் இரு உலக வல்லரசுகளாலும் சூறையாடப்பட்டது. அதில் நிராதரவான ஜப்பானிய பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்பட்டனர். மிகக் கேவலமான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் நிலம் பறிபோனது. ஜப்பான் பீனிக்ஸ் தேசமானபடியால் மீண்டும் நிமிர்ந்தது.
இங்கு குறிப்பிட்ட இன அழிப்புக்குரிய வரைவிலக்கணங்கள் இலங்கைத் தீவில் அழிந்துகொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கலாம். அதற்குரிய சான்றுகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அண்மையிலிருந்து நினைவில் நிற்கும் காலம் வரை கட்டமைக்கப்பட்ட படுகொலையின் அம்சங்களை அவதானிக்க முடியும்.
கல்வி பறிப்பிலிருந்துதான் அகிம்சை வழிப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறியது. அந்த ஆயுதப் போராட்டத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளுக்குள் ஆங்காங்கே படுகொலைகள் நடந்தன. 1977, 1983 கலவரங்கள் இன அழிப்பின் தொடக்கத்தை இனப்படுகொலை என்ற ரீதியில் அறிமுகப்படுத்தின. கிழக்கு மாகாணத்தில் பல கட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. பொருளாதாரச் சுரண்டல் இன்றும் நீடிக்கிறது. புலம்பெயர்தல் உட்பட பெண் குழந்தைகள் வரையிலான வன்முறைகளுக்கு முடிவேயில்லை. நில அபகரிப்பு பூதாகரப் பிரச்சினைகளுல் ஒன்றாகியிருக்க, காணாமல்போனவர்களை தேடும் போராட்டங்களும் சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. மொழி, மதம் உள்ளிட்ட பண்பாட்டு சிதைவுகள் பற்றி நினைவுபடுத்தவே தேவையில்லை. இந்தச் சிதைவுகளை தமிழர்களே விரும்பி ஏற்கும் நிலையை அடைந்திருக்கின்றனர்.
அழிவை எதிர்நோக்கியவர்கள் ஈழத் தமிழர்கள் என்றபடியால், அழிவின் வகையை அடையாளப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. நீதியை நோக்கிய குரலை அவர்களால்தான் எழுப்ப முடியும். தம்மை நோக்கி வீழ்ந்திருப்பது எந்தவகை குற்றம் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.
ஜெரா