படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம்

வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் மறைந்து இன்றோடு நான்கு நாட்கள் பூர்த்தியாகின்றன.

அவர் ஜனநாயகத்திற்கு விரோதமாகவிருந்த சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் முன்னிலையான சிவில் சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். செயற்பாட்டு ரீதியான தலைமைத்துவம் காரணமாக அவரின் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஊழல் மோசடிகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான பயணத்தை பலப்படுத்த உதவியது. அதில் வெற்றியீட்டவும் முடிந்தது.

வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பங்களிப்பின்றி நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி – ரணில் அரசு மேடை ஏறியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது எனலாம். ஒரு தசாப்த காலம் நீடித்து வந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுத்த சோபித்த தேரரின் இறுதி ஆசையை, விருப்பத்தை ‘மாற்றம்’ அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“எனக்காக விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. யாரிடமும் எதுவும் கேட்பதையும் நான் விரும்பவில்லை. இறுதிக் கிரியை கூட எனக்குச் செய்யவேண்டாம்” என சோபித்த தேரர் கூறியிருக்கின்றார்.

இருப்பினும், நாளை 12ஆம் திகதி நாடாளுமன்ற மைதானத்தில் தேரரின் இறுதிக்கிரியை மாபெரும் நிகழ்வாக நடாத்த அரசு தீர்மானித்துள்ளது. அத்தோடு, அன்றைய தினத்தை அரசு தேசிய துக்கதினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகள் சோபித்த தேரரின் இறுதி விருப்பத்தை மீறுவதாக உள்ளது.

“அக்ஷிதான (கண்தானம்) சங்கத்தில் பிரதான ஆலோசகராக இருக்கிறேன். அதனால், என்னை அவர்களிடம் ஒப்படையுங்கள். தேவையானவற்றை எடுத்துக்கொண்டு – கண், காது என்பவற்றை எடுத்துக்கொண்டு எஞ்சியதை புதைத்துவிடுங்கள். எனக்காக இறுதிக் கிரியைகள் கூட நடத்தக்கூடாது” என்றும் அவர் கூறியிருந்தார்.

“பிள்ளைகளை வெயிலில் நிறுத்த வேண்டாம்; இறுதி ஊர்வலம் நடத்த வேண்டாம்; இலட்சக்கணக்கில் பெறுமதியான சவப் பெட்டி வாங்கவும் வேண்டாம். மலிவான சவப் பெட்டியொன்றை வாங்குங்கள். ஒரே நாளில் அனைத்து வேலைகளையும் முடித்து விடுங்கள். யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடாது” என்று தேரர் கூறியிருக்க, இன்று மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன, மறைந்த சோபித்த தேரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாணவர்களை கலந்துகொள்ளச் செய்யுமாறு ஜயவர்தனபுர கோட்டை வலய பாடசாலை அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பாடசாலை பிள்ளைகளைப் பயன்படுத்துவது சோபித்த தேரரின் இறுதி விருப்பத்தை மீறுவதாகவே உள்ளது.

“தேரர் ஒருவர் உயிரிழந்தால், ஏற்பாடுகள் சங்கம், தானம் வழங்கும் சங்கம், அலங்கார வேலைகள் செய்யும் சங்கம் என இலட்சக்கணக்கில் செலவு செய்கின்றார்கள். உயிரிழந்த பிறகு இவற்றை செய்வதால் எனக்கு என்ன பயன்? உண்மையாக நான் அதிகம் விரும்புவது ரேலுகானே தேரரைதான். “நான் உயிரிழந்த பிறகு என் உடல் குப்பைக்கு ஒப்பானது. ஆகவே, அதை உடனே அப்புறப்படுத்துங்கள். இதோ நான் படுத்திருக்கும் இந்தப் பலகையுடன் மயானத்துக்குத் தூக்கிச் சென்று புதைத்துவிடுங்கள்” என்று கூறியிருந்தார். அவ்வாறுதான் செய்யவேண்டும். அநியாயமாக பணத்தைச் செலவு செய்யாமல்” – இவ்வாறு அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

வணக்கத்துக்குரிய சோபித்த தேரரின் இறுதி விருப்பத்தை மீறும் வகையில் ‘மாற்றம்’ அரசு செயற்படுவது கடந்த கால மஹிந்த அரசை நினைவுபடுத்துவதாக உள்ளது. பௌத்த மதத்தை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திய மஹிந்த ராஜபக்‌ஷவின் வழித்தடத்தையே தற்போதைய அரசு சோபித்த தேரரின் உடலத்தைக் கொண்டு பின்தொடர்கின்றது.

சோபித்த தேரரின் இறுதி ஆசையை அவரே கூறும் வீடியோக் காட்சி,