படம் | TEDxColombo

1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது கணவர் மனோவும் கலந்துகொண்ட போது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு ஆசனங்களைக் கைப்பற்றிய ஜெயவர்தன முதலில் செய்த கைங்கரியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக காடைத்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டதேயாகும். சுதந்திரக் கட்சிக்கு அத்தேர்தலில் வெறுமனே 8 ஆசனங்களே கிடைத்தன. இடதுசாரி இயக்கம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் எதிரணியினரைப் பழிவாங்குவதற்காக பொலிஸாருக்கு இருவாரங்கள் விடுமுறை வழங்கப்போவதில்லை என்று கூட ஜெயவர்தன தேர்தல் பிரசார காலத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறைகளின் அடுத்தகட்டமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தை நோக்கி நாடாளுமன்றத்தில், “உங்களுக்குப் போர் வேண்டுமென்றால் நாம் அதை உங்களுக்குத் தருவோம், உங்களுக்கு சமாதானம் வேண்டுமென்றால் அதையும் உங்களுக்குத் தருவோம்” என்று ஜெயவர்தன சவால் விடுத்தார். அவரின் இத்தகைய பேச்சுகளே பிறகு 1983 ஜூலை வரை தமிழர்களுக்கு எதிராக நாடுபூராகவும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு காடையர்களுக்கு உந்துதல் அளித்தது. காடையக் கும்பல்கள் தமிழர்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் அடையாளம் கண்டு தேடித்தேடி கொள்ளையடித்தன, கொலைகளைச் செய்தன, தீ வைத்தன.

இத்தகைய அனர்த்தத்தனமான சூழ்நிலையில்தான் சாந்தியையும் மனோவையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இருவருமே சிறந்த புத்திஜீவிகள், நாட்டின் முற்போக்குப் புத்திஜீவிகள் வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர்கள் விளங்கினார்கள். வன்முறைகளில் அவர்களது வீடும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இருவரும் தங்கள் குழந்தைகளுடன் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் செல்ல வேண்டியேற்பட்டது. பிறகு நிலைமை ஓரளவு சுமுகமானதும் கொழும்பு திரும்பிய சாந்தியும் மனோவும் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கலந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

சாந்தி வாழ்வூக்க உறுதியும் சுறுசுறுப்பும் கொண்ட ஒரு பெண்மணி. மனித உரிமைகளுக்காகவும் சகலரதும் கௌரவத்துக்காகவும் குரல்கொடுத்துப் போராடிய ஒரு பெண்மணி. புத்திஜீவிகளுடன் மிக எளிதாகவே அன்புரிமையுடன் பழகும் சுபாவம் கொண்டவர். அவரது அறிவும் புத்தி ஜீவித்துவ விவேகமும் பெருமகிழ்ச்சி தருபவை. மிகவும் அமைதியானதொரு வாழ்வை முன்னெடுத்த அவர் அர்ப்பணிப்புச் சிந்தை கொண்டவர். வடக்கு கிழக்கில் உள்ள சமூக இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். விழுது அமைப்பு சாந்தியின் உருவாக்கமே. சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்துவதையும் வடக்கு கிழக்கில் சமூகங்கள் மத்தியில் அறிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் மக்கள் சேவையையும் இலட்சியமாகக் கொண்டது அந்த அமைப்பு.

விழுது அமைப்பு பற்றிய விளக்கக் குறிப்பில் சாந்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஒழுங்கான ஆட்சிமுறை இல்லாமல் இருப்பதே இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளின் அடிப்படையாகும். அதிகாரங்களை மத்தியில் குவித்திருக்கும் அரசு உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்திருந்தது. அரசியல் உயர்மட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்றன. சிவில் சமூகம் ஊக்கமற்றுக் கிடக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணங்கள் இவையேயாகும். நல்லாட்சி ஏற்படுத்தப்படாவிட்டால், எந்தளவுதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது. இரண்டரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக போர் நீடித்த ஒரு நாட்டில் இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. சிவில் சமூகத்தினால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. இத்தகைய பின்புலத்திலே, இளைஞர்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் ஊடாக உள்ளூராட்சி அமைப்புகள், தனியார்துறை மற்றும் ஊடகத்துறை ஊடாக சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டியது மிகமிக அவசியமானது என்று விழுது கருதுகிறது”.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாந்தி கூடுதல் அக்கறை காட்டினார். அந்த மாவட்டத்தில் ஒரு தடவை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். பெண்களின் இயக்கங்களில் சாந்தி எப்போதுமே முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டார். பெண்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதுமே போராடினார். ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட சகாக்களுடன் இணைந்து சாந்தி முன்னெடுத்த அரும்பணிகளை பின்வருமாறு விளக்கலாம்.

விதவைகள் சாசனம்

போரின் காரணமாக கணவர்மாரை இழந்து விதவைகளானோரினதும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களினதும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த சாந்தி பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் ஈடுபாட்டுடன் விதவைகளுக்கான சாசனம் ஒன்றை வரைந்தார். வடக்கு கிழக்கில் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் தலைமையில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரமாகும். மகளிர் விவகார அமைச்சு, வடக்கு – கிழக்கு, வடமேல் மாகாண சபைகள், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அந்த விதவைகள் சாசன பிரதிகள் கையளிக்கப்பட்டன.

போஷாக்குத் திட்டம்

ஒரு கோப்பை உணவு (One dish meal என்ற பெயரில் போஷாக்கு ஆலோசகரான திருமதி விசாகா திலகரத்னவுடன் சேர்ந்து போஷாக்குத் திட்டத்தை சாந்தி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூதூர், புத்தளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ‘சஞ்சீவி’ சேதன உணவு கொட்டகைகள் நிறுவப்பட்டன. தெற்காசிய நாடுகளில் வகைமாதிரி உணவு என்று அங்கீகரிக்கப்பட்ட இதை விளங்கிக் கொள்வதற்காக உலக வங்கி பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு குழுவினரை இலங்கைக்கு அழைத்துவந்தது. (2015 ஆகஸ்ட் 29 கொழும்பு ரெலிகிராபில் விசாகா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.) போர் பற்றிய பெண்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், வவுனியா, மொனராகலை, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடாவில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மத்தியஸ்த சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்

கல்வி வட்டம்/ வாசகர் வட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மத்தியஸ்த சபைகளில் பங்கேற்கும் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு உதவுவதில் சாந்தி பெரும்பணியாற்றினார். நாடு பூராகவும் 2012ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீத பெண்களே மத்தியஸ்த சபைகளில் பங்கேற்றார்கள்.

பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கருத்தோவியக் கைநூலொன்றை தமிழ் மொழியில் தயாரித்த சாந்தி, பெண்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை அணுகுவதற்கு உதவி செய்தார். உதாரணமாக, இத்தகைய அணுகுமுறை மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருமால்புரம் கிராமத்தில் மின்சார இணைப்பைப் பெறக்கூடியதாக இருந்தது. இவ்வாறாக வலுவூட்டப்பட்ட பெண்களினால் 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தங்களின் தேவைகளுக்காக சுமார் 70 இலட்சம் ரூபாவைத் சேகரிக்கக்கூடியதாக இருந்தது.

உள்ளூராட்சி முறையில் ஆலோசனைக்குழு நியமனம்

சில உள்ளூராட்சி சபைகள் பெண்களின் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் “வாக்குகளால் பேசுவோம்” என்ற தலைப்பில் தமிழில் விவரணத் தொகுப்பு ஒன்றைத் தயாரிப்பதில் சாந்தி பெரும் பங்காற்றினார். இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கையை கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.

அரசியல் பங்கேற்பு

பெண்கள் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் வாக்குகளால் பேசுவோம் அமைப்புகள் பலவற்றுடன் ஒன்றிணைந்து சாந்தி அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிரசாரம், ஒழுங்கமைப்பு மற்றும் விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் பெண்களுக்கு பயிற்சியளித்தார். அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமுடைய பெண்களின் பெயர்ப்பட்டியல்கள் சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

பெண்களின் 100 கோடி எழுச்சி

2012ஆம் ஆண்டு சாந்தி தனது அமைப்பின் மூலமாக பெண்களின் 100 கோடி எழுச்சி (One Billion Rising of Women) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். இதன் ஒரு அங்கமாக சாந்தியும் அவரது சகோதரி செல்வியும் பாடிய பாடல் யூரியூப்பில் வெளியிடப்பட்டது.

இந்தச் செயற்றிட்டங்கள் சகலவற்றுக்கும் மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த No Run Tell திட்டமொன்றையும் சாந்தி அறிமுகப்படுத்தினார்.

பல வருடங்களாக நானும் எனது குடும்பத்தவர்களும் சாந்தியுடன் நடத்திய சம்பாஷனைகளையும் கலந்துகொண்ட பல இரவு விருந்துபசாரங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். சாந்தி எப்போதுமே தனது கருத்துகளை தெளிவாக விளக்கிக் கூறுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் அவர் வாழ்ந்தார். ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணாகவே அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். விடுதலைப் புலிகளுடனும் தமிழ்த் தேசியவாத இயக்கத்தின் பழைய தலைமுறையினருடனும் சாந்திக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. காலப்போக்கில் அவரின் புத்திஜீவித்துவ ஆர்வம் ஆன்மீகப் பரிமாணங்கள் பலவற்றையும் எடுத்தது. பற்றுறுதியுடனும் உற்சாகத்துடனும் சாந்தி அவற்றை கைக்கொண்டார். அவரது ஆன்மீக பயணமும் தியானமும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரின் வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் அவரை உறுதி குலையவிடாமல் வைத்திருந்தன.

கலாநிதி குமார் ரூபசிங்க