படம் | DAILY NEWS

‘மிருசுவில் படுகொலைகள்’ என அறியப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்ற ட்ரயல் அற் பாரின் அண்மைய குற்றத் தீர்ப்பும் மற்றும் சார்ஜன்ட் சுனில் ரட்னாயக்கவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் தீவிரத் தேசியவாத சிங்கள பௌத்த கும்பல்களின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஆவேசமான சீற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அரச இயந்திரத்தினுள் இருந்து ஒரு சுவாரசியமான பதிலிறுத்தலே இதற்கு வெளிப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கு இலங்கை சட்ட முறைமையின் செயற்றிறனை வெளிப்படுத்துவதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார் – இந்தக் கருத்து வழக்கு நடவடிக்கையைக் கையாண்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட வேறு பலரினாலும் கூட பிரதிபலிக்கப்பட்டது.

பதவியிலுள்ள அரசு பொறுப்புக் கூறலுக்கு ஒரு ‘முற்றிலும் உள்ளூர் மாதிரியைக்’ கவனத்தில் கொள்வதாக வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளிப்படும் மிகச் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உண்மையாயின், இது – ஒரு முற்றிலும் உள்ளூர் மாதிரி ஊடாக இடைக்கால நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான சாத்தியங்கள் குறித்து அதிகரித்தளவிவான ஐயங்களை வளர்த்துக் கொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுடன், இலங்கை அரசை ஒரு முரண்பட்ட நிலையிலிடும். செப்டெம்பரில், ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சில தினங்கள் முன், நாடாளுமன்றம் கூடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்ற நிலையில், செப்டெம்பரின் சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் குறைந்தது ஒரு சில சட்டபூர்வமான வரைபுகளையாவது அரசு சமர்ப்பிக்கும் என ஊகிப்பதற்கான ஒரு அரங்கு அங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியினுள் அரசுடன் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட வேளையில், செப்டெம்பரில் அநேகம் அறிவிக்கப்படக்கூடிய பொறிமுறைகளை உருவாக்குவதற்கு ஏதேனும் அர்த்தமுள்ள வகையில் இலங்கை அரசு அதன் சொந்த நிபுணர்கள், சிவில் சமூகம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவதற்கு நிர்ப்பந்திப்பதில் இதுவரை தவறியுள்ளது. குறிப்பாக, இலங்கைச் சூழ்நிலையில் சர்வதேச நியமங்களைத் திருப்தி செய்யும் ஒரு மாதிரியின் அமைப்பை அல்லது மாதிரிகளை விளக்குவதற்கு அது தவறியுள்ளது. விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் அவர்களின் அவதானித்தல்கள் வரவேற்கப்பட்டு சமனிலைப்படுத்தப்பட்ட வேளையில், அவை மிகவும் ஆரம்ப நிலையிலானவையாக இருந்ததுடன், அதன்பின் அதிகளவு விடயங்கள் நடந்தேறியுள்ளன. மார்ச்சில் ஆணையாளர் செயிட் இலங்கைக்கு ஒரு ஒத்திவைப்பை வழங்கிய பின்னும் கூட ஐ.நாவின் ஒரு பொருத்தமான மூலோபாயமின்மை ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபிநே நன்டி அவர்களின் அண்மைய கருத்துக்களிலிருந்து வெளிப்பட்டது. உள்நாட்டு – சர்வதேச கலப்பு முறை சார்ந்து ஆணையாளர் செயிட் அவர்களின் அலுவலகத்தால் சாத்தியமான பரிந்துரைத்தலை முன்கூட்டியே தடுத்து, ஒரு திட்டவட்டமான ‘உள்ளூர்’ செயன்முறைக்காக ஐ.நாவின் நிதி உதவியை அவர் வேண்டியதாகத் தெரிகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஏதேனும் செயன்முறைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமை மீறல்களின் வழக்குத் தொடர்தல்கள் தொடர்பாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஏன் முதலில் தேவைப்படும் என்பதை வெளிக்காட்டுவதற்கு மிருசுவில் வழக்கிலான ஒரு சில அவதானித்தல்களை இந்தக் கட்டுரையில் நான் தருகிறேன்.

முதலாவது, மிருசுவில் படுகொலை தொடர்பான வழக்கு, இலங்கையினுள் அரச செயற்பாட்டாளர்களால் புரியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மனிதப் படுகொலைகளுள், குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட்ட ஒரு சில வழக்குகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. மிகப் பெரும்பாலான வழக்குகளில் சந்தேகத்திற்குரியவர்கள் ஒரு நீதிமன்றத்தின் முன் ஒருபோதும் கொண்டு வரப்பட்டதே இல்லை அல்லது வழக்குகள் தொடுக்கப்பட்டவிடத்து அவை நிலுவையில் உள்ளன அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், 2000ஆம் ஆண்டின் முற்பகுதி, அப்போதைய சந்திரிக்கா குமாரதுங்க அரசால் ஒரு தொகையான வழக்கு நடவடிக்கைகள் தொடரப்பட்டன. இவை பிந்துனுவெவ வழக்கு மற்றும் கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கு என்பவற்றை உள்ளடக்குகிறது. ஆனால், மின்னோஸ்டாப் பல்கலைக் கழகத்தின் மொரியா லின்ச் என்பவரின் படி, இலங்கை தொடர்பான அவரது சம்பவக் கற்கையில், இந்த குமாரதுங்க காலத்திலான அதிகரித்த வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகள் குறுகிய காலமே நிலைத்தது, இந்தக் காலத்தின் போது முன்னெடுக்கப்பட்ட பல வழக்கு விசாரணைகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் அல்லது வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாவது, இந்த வழக்கு பற்றி கவனத்தை ஈர்க்கும் விடயம் என்னவென்றால் ட்ரயல் அற் பார் நீதிமன்றம் வழக்கு நடவடிக்கைகளை முடிப்பதற்கு பன்னிரெண்டு வருடங்களை எடுத்தமையாகும். இதனொரு மேன்முறையீடு முன்னெடுக்கப்படின், அச்செயன்முறை எந்தளவு நீண்ட காலம் எடுக்கும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது. ஒரு குறைந்த காலத்துக்கான ஊகமே மேலும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை எடுக்கும் என்பதாக உள்ளது. மிருசுவில் வழக்குத் தொடர்பான குற்றப் பகிர்வுகள் குற்ற விசாரணையைத் தொடர்ந்து இரண்டு வருடங்களிலேயே வந்தது, என்பதுடன் விசாரணை விளக்கம் 2003ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது இலங்கையின் ஒரு சீர்திருத்தம் அடையாத சட்ட முறைமையிடம் பொறுப்புக்கூறலை விடுவது, குறிப்பாக ஏன் ஒரு மோசமான யோசனை என்பதைச் சரியாக எடுத்துக் காட்டியது. வழக்கை விசாரிக்கும் அமர்வுக் குழுவின் கட்டமைப்புக்கான பல்வகை மாற்றங்களோடு வழக்கு அலைபட்டது. வழமையானதொரு மேல் நீதிமன்ற விசாரணையை விட துரிதமான ஒரு விசாரணை வடிவம் எனக் கருதப்பட வேண்டிய – ஒரு ட்ரயல் அற் பார் – வழக்கை முடிப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டமை நீதி முறைமையின் முற்றிலுமான அசாதாரண செயற்பாடு என்பதின் ஒரு துரதிர்ஷ்டவசமான சுட்டிக்காட்டுதலாக உள்ளது. இதனாலேயே கொடூரக் குற்றங்களைக் கையாள்வதற்கு ஒரு விசேட நீதிமன்றம் அத்தியாவசியமாகின்றது. அது இன்றி, மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களைக் கையாளும் விசாரணைகளே, அவற்றின் தரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை மற்றும் செயன்முறையின் தொடர்ச்சி என்பவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளுடன் பல தசாப்தங்களை எடுக்கும்.

மூன்றாவது, இந்த வழக்கானது கொடூரக் குற்றங்களுக்கான அரச உத்தியோகத்தர்களின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சட்ட நடவடிக்கைகள் பலவற்றுக்குப் பொதுவான ஒரு மாதிரியை தவறாது பின்பற்றியது. அதாவது, புலன்விசாரணைகள் உள்நாட்டு அல்லது சர்வதேச அழுத்தம் அல்லது அவை இரண்டின் காரணமாக முன்னெடுக்கப்பட்டன. சந்தேக நபர்கள் பலர் இனங்காணப்பட்டனர். ஆனால், ஒரு சில கீழ் நிலை படைவீரர்களே குற்றஞ் சாட்டப்பட்ட வேளையில் மற்றையவர்கள் குற்றஞ் சாட்டப்படவில்லை. விசாரணையின் போது விடுவிக்கப்பட்டனர் அல்லது விடுதலை செய்யப்பட்டனர். எம்பிலிப்பிட்டிய, பிந்துனுவௌ, செம்மணி மற்றும் இப்பொழுது மிருசுவில் வழக்குகள் இந்த இடர்ப்பாடான மாதிரியையே எடுத்துக் காட்டின. மிருசுவில் வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கண்கள் கட்டப்பட்டு அவர்களின் தொண்டைகள் கத்தியால் அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடலங்கள் ஒரு கழிவறைக் குழியில் போடப்பட்டன. தனிக் குற்றவாளியாகக் காணப்பட்ட சார்ஜன்ட் ரட்னாயக்க பதினேழு குற்றச்சாட்டுக்களில் குற்றங் காணப்பட்டார். அதிலொன்று, கொலை செய்யும் பொதுவான நோக்கத்தோடு சட்டவிரோதமாகக் கூடியமையாகும். ஒன்று சேர்ந்து பல ஆட்களால் ஒரு தொடரான குற்றங்கள் புரியப்பட்டமைக்கு தெளிவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், குற்றம் நடைபெற்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் ஒரேயொரு நபர் மட்டுமே குற்றவாளியாக நிற்கிறார். இந்த வழக்குகள் புலன்விசாரணை மற்றும் மனித உரிமைகள் வழக்கு நடவடிக்கைகள் என்பவற்றிலான கட்டமைப்புக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றதுடன், பொலிஸ் புலன்விசாரணை மற்றும் சட்ட மா அதிபர் முன்னெடுக்கும் வழக்கு நடவடிக்கைகளில் பரவலான அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளன. 1994 மற்றும் 1998 காணாமற் போனவர்களின் புலன்விசாரணை ஆணைக்குழு மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநரை அரசு அதிகாரமளித்தல் வேண்டுமென ஏற்கனவே பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. புலன்விசாரணை செய்வதற்கு ஏற்பாடளிக்கப்பட்ட சுயாதீனமான ஒரு வழக்குத் தொடுநரின்றி, கடுமையான மனித உரிமை மீறல்களின் வழக்குகளைத் தயார் செய்து வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளும், ஒரு உள்நாட்டுச் செயன்முறை குற்றவிலக்களிப்பு மற்றும் திரும்பத் திரும்ப நடைபெறும் தவறிய வழக்கு நடவடிக்கைகளின் ஒரு கலாச்சாரத்தை மட்டுமே நிலையானதாக்கும்.

நாலாவதாக, இலங்கையின் குற்றவியல் சட்டங்கள் பெருமளவிலான கொலைகளின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்வதற்கும் மற்றும் குற்றங்களுக்கு கூடுதலாகப் பொறுப்பு வகிப்பவர்களுக்கு கட்டளையிடும் மற்றும் மேற்பார்வை பொறுப்பு மீது கவனம் செலுத்துவதற்கும் வருத்தமளிக்கும் வகையில் போதுமானவையாக இல்லை. யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற சர்வதேசக் குற்றங்களைக் குற்றவியல்படுத்துவதற்கு சட்டங்கள் திருத்தப்பட்டாலன்றியும் – மற்றும் அதனுடன் கட்டளைப் பொறுப்பு மற்றும் கூட்டுக் குற்ற முயற்சி பொறுப்பு மாதிரிகளை அறிமுகம் செய்தாலன்றியும் – குற்றங்களில் யார் கட்டளையிட்டது, அனுசரனையளித்தது அல்லது உடந்தையாயிருந்து தீர்மானம் மேற்கொண்டவர்கள் என்பதை சுயாதீன வழக்குத் தொடுநர்கள் மற்றும் புலன்விசாரணையாளர்கள் கூட கவனிக்காது விட்டுவிடுவது உயர்ந்தளவிலாக இருக்கும்.

இறுதியாக, சுயாதீனத் தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் தகுதிவாய்ந்த நிலை என்பவற்றின் ஒரு அளவை உறுதிப்படுத்துவதற்கு வெறுமனே தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் உதவி என்பனவின்றி, சர்வதேசப் பங்குபற்றுதல் அவசியமாகும். சிக்கலான சர்வதேசக் குற்றங்களின் புலன்விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கை என்பன நிபுணர்களின் நிபுணத்துவம் மற்றும் முழுமையான பக்கச்சார்பின்மை என்பவற்றைத் தேவைப்படுத்துகிறது. அதன் சொந்த நியாயாதிக்கத்தினுள் இந்தக் குற்றங்களுக்கு வழக்கு நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை உரித்துடையதாக உள்ள வேளையில், தகுதிவாயந்த சர்வதேச நிபுணர்களின் உள்வாங்குதல் ஊடாக அந்த நியாயாதிக்கம் ஏன் அப்பியாசிக்கப்பட முடியாதென்பதற்கு ஒரு காரணம் எதுவுமில்லை.

ஆகையால், இலங்கையின் குற்றவியல் நீதி எந்தளவிற்கு இயலுமாதென்பதற்கு மிருசுவில் வழக்கு சிறந்த முறையில் எடுத்துக் காட்டுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் சுய பாராட்டு வெளிப்படுத்தல்களிலிருந்து அது தெளிவாகின்றது. சுயாதீனம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கான கடைப்பிடித்தல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான சீர்த்திருத்தங்கள் நீதி முறைமைக்குத் தேவைப்படுகின்றது. குற்றவிலக்களிப்பை முடிவுறுத்துவதற்கு ஓர் எதிர்கால அரசின் பற்றுறுதி, சர்வதேச அழுத்தம் காரணமாக பலிபீடத்தில் ஒரு சில கீழ் நிலைப் படைவீரர்கள் மற்றும் அரசியல் எதிரிகளைப் பலியிடுவதற்கு எந்தளவிற்கு அது முனைப்பாக உள்ளது என்பதினால் இல்லாது, இலங்கையின் இருண்ட கடந்த காலத்துடன் கையாள்வதற்கு அவசியமான நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகளை உருவாக்குவதற்கு அவசியமான நிறுவனரீதியான மற்றும் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அது எந்தளவிற்கு விருப்பாக உள்ளது என்பதினால் அளவிடப்படும்.

THE MIRUSUVIL CASE: WHY SEARCHING REFORM IS URGENT AND NECESSARY என்ற தலைப்பில் ‘கிரவுண்ட்விவ்ஸ்’ தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.