படம் | Reuters Photo/ Andrew Harnik, PBS

அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவருடைய வருகை பல்வேறு ஊடகங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் காரணமாக அமைந்த ஒரு செய்தியானது. இராஜாங்கச் செயலாளரின் வருகை பற்றி ஒவ்வொரு தரப்பினரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டனர். எமது வெளிநாட்டுக்கொள்கையை அணிசேராக் கொள்கையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இவரின் வருகை நல்ல ஆரம்பமாகும் என அரசத் தரப்பிலிருந்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். இது ஒரு ஆபத்தான தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது என்பது எதிர்க்கட்சியின் வாதமாகும். ஜோன் கெரியின் வருகை இலங்கை தேசத்திற்கும் அதன் சுயாதீனத்திற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது எதிர்க்கட்சியின் வாதமாகும். இது எவ்வாறு இருப்பினும் தேசிய ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இனப்பிரச்சினைக்கும் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் விசேடமாக வலியுறுத்தியிருந்தார். அதிகாரப் பகிர்வு பற்றிய விவாதத்தின் போது இந்தியா உட்பட ஏனைய அரச தலைவர்களின் இடையீட்டைவிட வித்தியாசமான முறையிலேயே ஜோன் கெரி இவ்விடயத்தை அணுகினார். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற காரணத்தினால் பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசோடு தொடர்ந்தும் முரண்படாமல் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதே நன்மை பயக்கும் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்போடு அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியிருந்தார்.

அதிகாரப் பகிர்வு என்ற விடயம் நீண்டகாலமாக எதுவிதத் தீர்வும் இன்றி ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு இந்தத் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உள்நாட்டில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாம் தவறிவிட்டோம். 1987இல் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்பிரச்சினைக்கு எதுவிதத் தீர்வும் இன்றி நகர்ந்துகொண்டிருக்கிறது. மாகாண சபைகளை அறிமுகப்படுத்தி 20 ஆண்டுகள் கடந்துள்ளன. மாகாண சபை உறுப்பினர்களும் அதன் உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து அந்தந்த மாகாண சபைகளில் உள்ள பிரச்சினைகளை தனித்தனியாக அடையாளம் காண்பது பற்றிய ஓர் அறிக்கையை எமது நிறுவனம் 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தினோம். அந்த அறிக்கையிலிருந்து பின்வரும் விடயங்களை மேற்கோள் காட்ட விரும்புகின்றோம்.

அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைகள்

பிரச்சினை:

அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் செயற்படாமை.

  1. ஒருங்கியல் நிரல்
  2. இரட்டித்தல்
  3. நியதிச் சட்டங்களை உருவாக்கும் போது சட்டமா அதிபரின் பரிந்துரைகளின் தேவைப்பாடு
  4. மாகாண சபையின் பதவிகள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியான உடன்பாடு இல்லாமை. (உதாரணம்: எதிர்க்கட்சித் தலைவர், பிரதித் தவிசாளர், ஆளும் கட்சித் தலைவர்)
  5. அ. மாகாண சபையின் தலைவர் பதவியும், பிரதித் தலைவர் பதவியும்

மாற்றீடு

  • இந்த அதிகாரத்தை மீள வழங்குதல்
  • அரசியலமைப்பு ரீதியான திருத்தம் ஒன்றை மேற்கொள்ளும் வரை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திட்டவட்டமாக அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்.
  • மாகாண சபை விடயங்களுக்கு மத்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களை இல்லாதொழிக்க வேண்டும்.
  • முதலமைச்சரை மத்திய அரசின் அமைச்சரவை உறுப்பினராக உத்தியோகபூர்வமாக நியமித்தல்.
  • மாகாண சபைகளுக்கென சட்ட திணைக்களம் ஒன்றை அமைத்தல்.
  • 13ஆவது திருத்தத்தின் ஒருங்கியல் பட்டியலில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக பூரண அதிகாரங்களை ஒப்படைத்தல் உட்பட மாகாணத்திற்குத் தேவையான அமைச்சர்களையும் அலுவலர்களையும் தேவை கருதி நியமித்தல்
  • குறிப்பிட்ட மாகாண சபைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதற்கு ஏற்புடைய பதவிகளை யாப்பு ரீதியான பதவிகளாக உருவாக்குதல்.
  • மேற்படி பதவிகளுக்குப் பதிலாக மாகாண சபையின் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகிய பதவிகளை உருவாக்குவதற்கு சட்ட ரீதியாக உடன்பாடு காணுதல்.

நிர்வாகப் பிரச்சினைகள்

பிரச்சினை:

  1. மாகாண அரச சேவையின் பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கு மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற நேரிடுதல்.
  2. பிரதேச நிர்வாகத்தை மத்திய அரசிலிருந்து நீக்கி மாகாண சபைகளுக்கு ஒப்படைத்தல்.
  3. மாகாண சபை விடயங்கள் தொடர்பாக மாகாண சபையின் அங்கீகாரம் அல்லது இணக்கப்பாடு இன்றி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் சுற்றறிக்கைகளை வெளியிடுதல்.
  4. மாகாண சபைகளுக்கு ஒப்படைக்கப்பட்ட விடயங்கள் நிரல் அமைச்சுகள் மூலமும் திணைக்களங்கள் மூலமும் நடைமுறைப்படுத்தல். இதற்கென நிரல் அமைச்சுக்களையும் திணைக்களங்களையும் உருவாக்குதல். (சமூக சேவை நடவடிக்கைகள், சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்டுறவு விவகாரங்கள், சிறு கைத்தொழில் நடவடிக்கைகள், தேசிய பாடசாலைகளாக வகையீடு செய்தல், மாற்றுத் திட்டங்கள்

மாற்றுத்திட்டம்

  • அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல் தொகுதியின் கீழ் அந்தந்த மாகாண சபைகளுக்குத் தேவையான அலுவலர்களை அடையாளம் கண்டு குறித்துறைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு மூலம் நியமனம் செய்தல்.
  • மாகாண முகாமைத்துவ சேவைகளை ஒரு பணிப்பாளரின் கீழ் நிறைவேற்றுதல்.
  • அகில இலங்கை சேவைக்குரிய உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்யும் போது மாகாண சபையில் அவர்களை இணைத்தல் தொடர்பான அதிகாரத்தை மீண்டும் மாகாண சபைகளுக்கே ஒப்படைத்தல்.
  • மாகாண சபைகளுக்கு ஒப்படைக்கப்பட்ட விடயங்கள் பற்றி மத்திய அரசு நேரடியாக தலையீடு செய்யக்கூடாது. அதேசமயம் பல்வேறு நிறுவனங்களுக்கும் அத்தகைய அதிகாரம் வழங்கப்படக் கூடாது.
  • மாகாண சபைகளின் பதவிகளுக்கு உரித்தான சகல நிரல் அமைச்சுக்களையும் திணைக்களங்களையும் இல்லாதொழித்து மேற்படி நடவடிக்கைகளை மாகாண சபைகளே நிறைவேற்றுதல்.

நிதிப் பிரச்சினைகள்

பிரச்சினை:

  1. பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது தொடர்பாக ஒரு சில அதிகாரங்களும் பொறுப்புக்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் அவை தொடர்பான செலவுகளையும் மாகாண சபைகள் சுயாதீனமாக மேற்கொள்ள முடியாமை.
  2. வருடம் தோறும் மாகாண சபைகளுக்குக் கிடைக்க வேண்டிய நிதியின் அளவை திறைசேறிக்குப் பரிந்துறைக்கும் அதிகாரத்தை மாத்திரம் நிதி ஆணைக்குழுவிடம் வழங்குதல்.
  3. மாகாண சபைகளுக்கு உரித்தான விடயங்களுக்கு நிரல் அமைச்சுக்கோ அல்லது மத்திய அரச திணைக்களத்திற்கோ நிதி ஒதுக்கீடு செய்தல். (உதாரணம்: சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள், விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள்)
  4. மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி திறைசேறியின் மூலம் இடையிடையே வெட்டிவிடுதல், குறைத்தல் (உதாரணம்: 2007ஆம் ஆண்டில் மாகாண சபைகளுக்குச் சேர வேண்டிய நிதியிலிருந்து 65 சதவீதத்தை குறைத்து மத்திய அரச அமைச்சுக்களிலிருந்து 20 சதவீதத்தை மாத்திரம் குறைத்துக் காட்டல்.
  5. வரி அறவிடும் போது மாகாண சபைகளுக்கு மட்டுப்பாடுகளை வித்தித்தல். வெளிநாட்டு நிதி நேரடியாக மாகாண சபைகளுக்குக் கிடைக்காமை. நிரல் அமைச்சுக்கள் மூலம் கருத்திட்ட அலுவலகங்களைப் பராமரித்த வண்ணம் மேற்படி கருத்திட்டங்களை நிர்வகித்தல்.

மாற்றுத்திட்டம்

  • வரி அறவிடும் மற்றும் வருமானத்தை ஈட்டும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு வேறு வகைகளில் நிதியை வழங்குவதற்கும் சந்தர்ப்பங்களை வழங்குதல்.
  • நிரல் அமைச்சுத் திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்தல். அதேசமயம், மாகாண சபைகளின் பிரதிநிதித்துவத்துடன் தேசிய நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுடன் மாத்திரம் திரைசேரியின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தலும், அவற்றிற்கு வெளியே நிதி ஒதுக்கீடு செய்யாமை.
  • மாகாண சபை விடயங்களுக்கு உரித்தான நிதி ஒதுக்கீடு செய்தலை மத்திய அரசின் கீழ் வேறு அமைச்சுக்களுக்கோ திணைக்களங்களுக்கோ நிதி ஒதுக்காமை.
  • அரசு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளின்போது மத்திய அரசின் அமைச்சுக்களிலிருந்தும் திணைக்களங்களிலிருந்தும் குறைக்கும் சதவீதத்திற்கு சம அளவிலான நிதியை மாத்திரம் மாகாண சபைகளிலிருந்து குறைத்தல்.
  • மாகாண சபைகளுக்கு மேற்படி அதிகாரத்தை முழுமையாக ஒப்படைத்தல்.
  • வெளிநாட்டு வளத் திணைக்களத்தின் அளவுகோள்களின் கீழ் (அதாவது தேசிய பாதுகாப்பு, அரசியல் தக்க வைப்பின் தாக்கங்கள் ஏற்படாத வகையில் கிடைக்கும் வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் மாகாண சபையின் பிரதம செயலாளரின் முழுமையான அதிகாரத்துடன் அமுலாக்கப்பட வேண்டும்.

‘2008’ 20 ஆண்டு அனுபவங்களின் அடிப்படையிலான தேசிய பரிந்துரைகள் என்ற நூலில் இருந்து.

2008ஆம் ஆண்டின் அனைத்து மாகாண சபைகளினது அமைச்சர்களும் உறுப்பினர்களும் முக்கிய உத்தியோகத்தர்களும் சமர்ப்பித்த பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டதோடு, இது பற்றிய சாதகமான எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம். இவற்றுள் ஒரு சில யோசனைகள் மாத்திரம் மிகச் சிறு அளவில் நிறைவேறினாலும் முக்கியமான யோசனைகள் மீது எதுவிதமான பிரதிபலிப்பும் காட்டப்படவில்லை.

இது மிகவும் கவலைக்கிடமான நிலமையாகும். மாகாண சபைகளுக்கு தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அடிப்படையின் கீழ் தோன்றியுள்ள பிரச்சினைகள் யாவை என்பதை அடையாளம் காண்பதே இங்கு முக்கியமாகும். அதிகாரப் பகிர்வு பற்றிய ஓர் இணக்கப்பாடு மத்திய அரசிற்கு இருக்குமேயாயின் இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படமாட்டாது. பதவியிலிருந்த அனேகமான அரசுகள் மாகாண சபைகளை இயல்பாகவே மரணிக்கச் செய்யும் வகையிலேயே செயற்பட்டுள்ளன. மாகாண சபைகள் தொடர்பாக திறந்த மனதுடன் நோக்க வேண்டும். இந்தியா அல்லது அமெரிக்கா அல்லது மற்றுமொரு நாடு கோருகின்ற காரணத்தினால் இப்பிரச்சினையை அணுகாமல் எமது நாட்டில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையை அனைத்து அரசியல் கட்சிகளும் கையாள வேண்டும். அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தது போல எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும். மிக சிறு எண்ணிக்கையினரான இனவாதிகளின் குரலுக்கு அடிபணியாமல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதியாக செயற்பட வேண்டும். இங்கு ஒருங்கியல் நிரலே பாரிய தடையாக உள்ளது. மாகாண சபை விடயங்களுக்கும் மத்திய அரசின் விடயங்களும் ஒருங்கியல் நிரலில் உள்ளடக்கப்பட்டிருப்பதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தின் மூலம் சில நிறைவேற்று அதிகாரங்கள் கைவிடப்பட்ட ஒரே காரணத்தினால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கமாட்டாது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் இன்றிருப்பதை விட கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், அவை சுயாதீனமாக இயங்குவதற்கும் வழி வகை செய்தல் வேண்டும். அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

வட மாகாண சபை

வட மாகாண சபை அமைக்கப்பட்டு ஓராண்டு காலம் கழிந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது வடபுலத்திலே செயற்படும் ஓர் பிராந்திய அரசியற் கட்சியாகும். வட கிழக்கு மக்களின் அபிவிருத்தி, கலாசாரம் மற்றும் அரசியல் தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மிக உயர் மட்டத்தில் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டே செயற்பட வேண்டும். அதற்கு அவசியமான நியதிச் சட்டங்களை அவர்கள் தயாரிக்க வேண்டும். வட மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்களைக் கோருவதோடு மாத்திரம் நிற்காமல், ஏற்கனவே உள்ள அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி அவர்களுக்கு வேலைத்திட்டம் இருக்க வேண்டும். எனவே, ஏற்கனவே உள்ள அதிகாரங்களை விட கூடிய அதிகாரங்களின் தேவையை நிரூபிக்க அவர்கள் தவறிவிட்டார்கள். இருக்கக்கூடிய அதிகாரங்களை மிக உயர்ந்த மட்டத்தில் அவர்கள் பயன்படுத்த வேண்டும். அத்தோடு, இல்லாத அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் முயற்சிக்கலாம். அதிகாரத்தைப் பகிர்தல் என்பது தேசிய இனப்பிரச்சினை காரணமாக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் அல்ல. வறுமையை இல்லாதொழிப்பது உரிய முறையில் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த முறை அதிகாரப் பகிர்வாகும். இதை நடைமுறையூடாகவே மேற்கொள்ள முடியும். ஆனால், இத்தகைய அணுகுமுறையை வட மாகாண சபை கையாளவில்லை. அதே சமயம் மத்திய அரசு மென்மேலும் அதிகாரங்களை தன்னகத்தே குவித்துக்கொண்டிருக்கின்றது.

வட மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிரதேச அரசியற் கட்சிகள் மாத்திரம் அதிகாரத்தைத் தம் வசப்படுத்தவில்லை. ஸ்ரீ லங்கா சுததந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற தேசிய அரசியற் கட்சிகள் இந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, மேற்படி மாகாண சபைகளின் அதிகாரம் தேசிய அரசியற் கட்சிகளிடமே குவிந்துள்ளன. தேசிய அரசியற் கட்சிகள் மாகாணத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதில்லை. மேற்படி கட்சிகள் தேசிய அரசியல் தேவைகளை நோக்கமாகக் கொண்டே செயற்படுகின்றன. தமது கட்சிகளின் உள்ளக ஜனநாயகம் இன்மை இவ்விடயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது ஒரு வகையில் பாரதூரமான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

அதேசமயம், மத்திய அரச சேவைக்கு முதன்மை அளிக்கப்படுகிறதே ஒழிய மாகாண அரச சேவைக்கு வழங்கப்படும் இரண்டாம் மட்டக் கவனிப்பு மேலும் ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய ஒரு நிலைமை காரணமாக மாகாண சபைகள் தோல்வி கண்டுள்ளன. சுதந்திரத்தின் பின்னர் தீர்வுகாண இப்பிரச்சினைகளுக்கு நடைமுறையிலுள்ள நாடாளுமன்றம் அல்லது எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத்தின் மூலமோ சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முற்படவேண்டும். இத்தீர்வு மேற்கத்தேய தேவைகள் அல்லது கிழக்கின் தேவைகள் அல்லது இந்திய தேவைகள் என்றல்லாது உண்மையான இலங்கையின் தேவைகளின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படல் வேண்டும். அதேபோல் அனைத்து பிரிவினரும் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயமானது, “முழுப் பங்கும் வேண்டும்” எனக் கோராமல் நடுநிலையாக இதனைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

விசேடமாக, வட மாகாண சபையின் இனவாத உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் வகையிலான கருத்துக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முன்வைக்கின்றனர். வடக்கு தெற்கு என்ற கலந்துரையாடலுக்கு போகாமல் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்கின்றனர். இந்நிலைமையில் இருந்து மீள வேண்டும். தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ளவர்களுக்கு முக்கியமானதொரு பிரச்சினை இருப்பதைச் சிந்திக்க வேண்டும். அதேபோல், வடக்கில் உள்ளவர்களும் சிந்திக்க வேண்டும். தெற்குடன் எவ்வாறு ஒன்றிணைந்து வேலைகளைச் செய்துகொள்வது என அத்தகையதொரு அரசியல் நடுநிலையான மனநிலையை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் தேசிய அரசியல் கட்சிகளும் இதனை மேலும் அவர்களது வாக்குகளைப் பெறுவதற்கான அடிப்படையாகக் கொள்ளாமல் முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் இதற்கு உரிய தீர்வினை காண்பது எவ்வாறு என்ற அடிப்படையில் செயற்படுவது முக்கியமாகும். வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை அதிகாரப் பகிர்வு முறைக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் மறுப்பதற்கு உரிமையுள்ளதுடன் இதற்கு பொதுவாக நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் கடுமையான தேவை காணப்படுகின்றது. அதேநேரம் அதிகாரப் பகிர்வின் மூலம் தனி நாடாகப்பிரிந்து செல்லும் என்ற பொய்யான பயத்திலிருந்து நீங்க வேண்டும்.

எமது பொறுப்பு

அதிகாரப் பகிர்வின் வெற்றியை இந்தியா மற்றும் வேறு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இங்கு நியாயமாகவும் நேர்மையாகவும் செயற்படுவது மத்திய அரசினது பொறுப்பாகும். அதிகாரப்பகிர்வானது தேசியத் தேவையாகும் என நாம் இறுதி ஆலோசனையாக முன்வைக்கிறோம். இது சமஷ்டி அல்லது வேறு எந்தப் பெயரினால் அழைக்கப்பட்டாலும் இது மக்களது வாழ்க்கைக்கு சாதாகமான முறையில் தாக்கம் செலுத்துவதாக அமைய வேண்டும் என்பதாகும். சொற்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதை விட ஒரு நாடு என்ற வகையில், ஒரு இனமாக முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் இத்தகைய கடினமான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் நாம் உலகத்தின் முன்னிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இது தொடர்ச்சியாக தீர்வு காணப்படாத பிரச்சினையாக அமைந்துவிடும். ஆதலால் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து பிரஜைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொறுப்பானது, இதனை யாரோ கூறுகின்றார்கள் என்று கருதாமல் தேசிய பொறுப்பாக கருதி உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தலாகும்.

லயனல் குருகே

சிரேஷ்ட ஆய்வாளர்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்