படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சார்பில் அனைத்து ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாக வேண்டும், அப்போதுதான் புதிய அரசுடன் நாங்கள் பலமான நிலையில் பேச முடியும் என்னும் உட்பொருளைக் கொண்டதாகும். சம்பந்தன் இவ்வாறு எதிர்பார்ப்பது தவறல்ல, ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? இதிலுள்ள சவால்கள் என்ன? சவால்கள் இருக்கிறதெனின் அதனைக் களைந்து முன்னகருவதற்கான வேலைத்திட்டங்கள் என்ன? அப்படியான வேலைத்திட்டமொன்றிற்காக நான்கு கட்சிகளும் கருத்தொருமிப்புடன் செயற்படுவது தொடர்பில் சிந்திக்கப்படுகிறதா? இப்படியான கேள்விகளின் அடிப்படையில் சில விடயங்களை இப்பத்தி ஆராயவிழைகிறது.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியாக அடையாளம் காணப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியாக வெளித்தெரிந்ததோ அன்றிலிருந்து, அதன் உள்முரண்பாடுகளும் வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. இது தொடர்பில் நான் இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்பில் பேசுகின்ற போது அது இனிப்பதாக கூறும் பலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனங்கள் மற்றும் அதில் தன்னை பிரதான கட்சியாக நிறுவிக்கொள்ள சதா முயன்றுவரும​ தமிழரசு கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால், சீ இந்தப் பத்தி புளிக்கிறது என்றவாறு முகத்தை சுளித்துக்கொள்வதை நான் அவதானித்திருக்கிறேன். ஆனால், இதனை வேறு விதமாக வாசிகைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சிக்கப்படுகின்றது என்றால் அதன் பொருள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பகிரப்படுகின்றன என்பதாகும். ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தி. தமிழ் மக்கள் அவ்வாறானதொரு இடத்தைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கின்றனர். எனவே, கூட்டமைப்பு உள்ளக, வெளியக நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கிலேயே அதன் மீது தொடர்ச்சியாக இப்பத்தி விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால், ஊடக தளங்களில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் அரசியல் தளத்தில் இயங்குவோரால் எந்தளவு தூரம் உற்றுநோக்கப்படுகிறது என்பதில் கேள்வி எழலாம். இது குறித்து ஊடகத்தளத்தில் இயங்குவோர் கவலைகொள்ள எதுவுமில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை, ஊடகத்தளத்தில் உரையாடக் கூடியளவிற்கு, நாங்கள் உரையாடிய விடயங்களையாவது, தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் என்போர் கருத்தில் கொண்டிருப்பார்களாயின், பல்வேறு விடயங்களை சாதகமாக கையாண்டிருக்க முடியும். ஆனால், அது நிகழவில்லை. இனியாவது நிகழுமா என்னும் கேள்வி ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது.

நான் இவ்வாறான விடயங்களை இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கும், இப்பத்தி முன்கொண்டுவர முயலும் விடயத்திற்கும் தொடர்புண்டு. நாடாளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெறுவது நிச்சயம் என்னும் நிலையில், கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரது கவனமும் தேர்தலின் மீதே குவிந்திருக்கிறது. கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றது? அதிலும் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்புக்கள் காணப்படுகின்றன? போன்ற கேள்விகளின் அடிப்படையில் கூட்டமைப்பினர் மத்தியில் கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றன. எவர் வெல்லுவார் அல்லது தோற்பார் என்பதற்கு அப்பால் சம்பந்தன் ஜயா, எதிர்பார்ப்பது போன்று கூட்டமைப்பு தன்னுடைய தலைமைத்துவ தகுதிநிலையை தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பேணிக்கொள்ளுவதிலுள்ள சவால்கள் என்ன என்பதையே இங்கு பார்க்க வேண்டிருக்கிறது. கூட்டமைப்பின் பலம் என்பது அதன் அதிகமான நாடாளுமன்ற ஆசனங்கள் என்பது மட்டும்தான். எனவே, ஆசனங்கள் குறையுமிடத்து கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதிநிலையும் சரிவடையும். ஆனால், வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டடிப்படையில் கூட்டமைப்பிற்கு சவால்விடுக்கக் கூடியளவிற்கு, மக்களை தன்வசப்படுத்தும் பிறிதொரு பலமான எதிரணி இல்லை. அந்தவகையில் கூட்டமைப்பிற்கு முன்னால் பிரதான சவால் என்று ஒன்றில்லை. ஆனால், சில சவால்கள் இல்லாமலுமில்லை.

அண்மைக்காலமாக கூட்டமைப்பு தொடர்பிலும், தமிழரசு கட்சி தொடர்பிலும் மக்கள் மத்தியில் சில அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது. அண்மையில் இடம்பெற்ற புங்குடுதீவு மாணவின் கோரக் கொலையின் பின்னர் நிகழ்ந்த சில சம்பவங்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கப்பட்டிருந்தன. இந்த விடயங்களில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதற்கு அப்பால், இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் உற்றுநோக்கப்படுகின்றன என்பதையே கருத்தில்கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அண்மைக்காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகளவு மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை எந்தளவு தூரம் கூட்டமைப்பு விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் என்னிடம் எந்தவொரு கருத்தும் இல்லை. ஆனால், இவ்வாறான அனைத்தும் நடைபெறவுள்ள தேர்தலில் ஓரளவு கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பாதிப்பதற்கான சூழல் இல்லாமலில்லை. இது தவிர, ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள இடைவெளியில் தமிழ் மக்களை நெருங்குவதற்கான வேலைகளை இரு பிரதான கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. ஜக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்ட தலைவர்கள் கிராமப்புறங்களிலுள்ள தமிழ் மக்களை அணுகி, அவர்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்கள் மத்தியில் தங்களின் ஆதரவை பெருக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மகாநாட்டை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆலோசனையிலும் ஜனாதிபதி மைத்திரிபால ஈடுபட்டுவருவதாகவும் அறிய முடிகிறது. ஆனால், இங்குள்ள சிக்கலான விடயம், இம்முறை அரசை இலக்கு வைத்து கூட்டமைப்பினரால் எதிர் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாது. இவ்வாறானதொரு பின்புலத்தில, இரு பிரதான கட்சிகளுக்கு, குறிப்பாக ஜக்கிய தேசியக் கட்சியும் ஓரளவு தமிழ் மக்களின் வாக்குளை பெறக்கூடிய வாய்ப்புண்டு.

நான் மேற்படி குறிப்பிட்ட சவால்கள் வடக்கு – கிழக்கு பொதுவானது. ஆனால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகள் மத்தியிலும் போட்டித்தன்மை உருவாகக் கூடியளவிற்கே நிலைமைகள் காணப்படுகின்றன. எனெனில், வடக்கு மாகாணத்திற்கான நடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழில்தான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துவரும் அனைவரும் வெற்றிபெற வேண்டும். ஆனால், நிச்சயம் ஒரு சிலர் தோற்றே ஆக வேண்டியளவிற்கு வடக்கின் கள நிலைமைகள் காணப்படுகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளை தமிழ்த் தேசிய நிலையில் எதிர்க்கும் ஆற்றலுள்ள ஒரே கட்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான். அந்த வகையில் கூட்டமைப்பிற்கான எதிரணி என்றால் அது தமிழத் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் என்னும் நிலையை உருவாக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அண்மைக்காலமாக வடக்கிற்கு வெளியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சில செய்ற்படுகளை முன்னெடுத்து வருகின்ற போதும், அதன் மூலம் பெரியளவில் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு சவாலை ஏற்படுத்த முடியுமென்று நான் கருதவில்லை. ஆனால், வடக்கில் இம்முறை கஜேந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணி கூட்டமைப்பிற்கு ஒரு சவாலாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. கூட்டமைப்பில் அதிருப்தியடைந்த யாழ். மத்தியதர வர்க்கத்தினர் முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தான் என்பதில் மாறுபட ஏதுமில்லை. ஆனால், நிலைமைகளை கஜன் எவ்வாறு தந்திரோபாயமாக கையாளுகின்றார் என்பதை கொண்டே, அவரது வெற்றியமையும். அதேவேளை, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கென ஒரு வாக்கு வங்கியை பேணிவரும் ஒருவர், அந்த வகையில் அவரும் ஒரு ஆசனத்தை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புண்டு.

அதேவேளை, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஊடாக களமிறக்கும் வேட்பாளர்களும் ஓரளவு வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்பில்லை என்றும் எழுந்தமானமாக கூறிவிட முடியாது. தற்போதுள்ள சூழலில் இப்போதுள்ள நிலைமைதான் தொடரப் போகின்றது என்றால், கூட்டமைப்பிலுள்ள ஒருவரை விடவும் ஜக்கிய தேசியக் கட்சியில் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற தமிழர் ஒருவரிடமிருந்து அதிக நன்மையை பெற முடியுமென்று சிந்திக்கும் மக்கள், ஆளும் கட்சியின் பலமான வேட்பாளர்களையும் ஆதரிக்க வாய்ப்புண்டு. இவ்வாறானதொரு அரசியல் சூழலில்தான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிதரன், சரவணபவன் ஆகியோர் மீண்டும் வெற்றிபெற வேண்டும். இவர்கள் வெற்றிபெறும் அதேவேளை, இதுவரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த எம்.ஏ.சுமந்திரனும் இம்முறை வடக்கில் போட்டியிடவுள்ளதாக தகவலுண்டு. அவர் போட்டியிட்டால் அவரும் வெற்றிபெற வேண்டும். இதேவேளை, புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் இயக்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ளார். தான் போட்டியிடும் தகவலை அவர் ஏலவே பகிரங்கமாக தெரிவித்துமிருக்கிறார். அவர் கடந்த மாகாண சபை தேர்தலில் மூன்றாவது நிலையில் விருப்பு வாக்குகளை பெற்ற ஒருவர். அவரும் வெற்றிபெறவே முயற்சிப்பார். இவ்வாறானதொரு சூழலில், வடக்கின் தேர்தல் களம் கூட்டமைப்பிற்குள்ளேயே ஒரு போட்டியை நிச்சயம் உருவாக்கும்.

வடக்கின் நிலைமை இவ்வாறென்றால் கிழக்கின் நிலைமையோ வேறு விதமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் கிழக்கில் கூட்டமைப்பிற்கு பிரதான சவால் என்று எதுவும் இல்லை. ஆனால், கூட்டமைப்பு எவ்வாறான வேட்பாளர்களை தெரிவு செய்கின்றது என்பதை பொறுத்தே நிலைமைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். சாதாரணமாக ஆசனங்களை வெற்றிகொள்ளுதல் என்னும் பொருளில் இந்த விடயங்களை நான் குறிப்பிடவில்லை. மாறாக, நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டுமென்னும் சம்பந்தனின் அழைப்பை கருத்தில் கொண்டே குறிப்பிடுகின்றேன். பலத்தை நிரூபிக்க வேண்டுமாயின் இதுவரை நிலவிந்த முரண்பாடுகள், நடைபெறவுள்ள தேர்தலிலும் வெளிப்படாத வகையில், அனைவரும் ஒன்றுபட்டு, ஒரு இலக்கில் பணியாற்ற வேண்டும். முக்கியமாக ஆசன ஒதுக்கீடுகளில் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கும் வகையில் செயற்படும் தமிழரசு கட்சியின் வழமையான அணுகுமுறையை அக்கட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். மட்டக்களப்பை பொறுத்தவரையில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகிய கட்சிகளிடமும் பலமான மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் உண்டு. அதேவேளை புளொட் அமைப்பும் தங்களுக்கான வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் நிறுத்த விரும்பின் அதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். ஏனைய கட்சிகளுக்கான இடங்களை வழங்குவதில் உடும்புப்பிடியில் முரண்படுவதை தமிழரசு கட்சி முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆசன ஒதுக்கீடுகளில் குறித்த கட்சிகளின் தலைமையின் முடிவே இறுதியான முடிவு என்பதற்கு அமைவாக ஆசன ஓதுக்கீடுகள் இடம்பெற வேண்டும்.

திருகோணமலையை பொறுத்தவரையில் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பே உண்டு. ஆனால், அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்புக்கள் வழங்கி, மிகவும் திட்டமிட்ட வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தால் இரண்டாவது ஆசனத்தை நெருங்குவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது முற்றிலும் சம்பந்தன் ஜயாவின் ஜனநாயக அணுமுறையில்தான் தங்கியிருக்கிறது. திருகோணமலையை பொறுத்தவரையில் சம்பந்தன் ஜயாவே இறுதி முடிவை எடுப்பவராக இருக்கிறார். இம்முறை அவர் தன்னுடைய முடிவுகளை மிகவும் பொறுப்புடன் எடுப்பாராயின், அது மாற்றங்களுக்கும் வழிவகுக்கலாம். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து, காணாமல் போய், பின்னர் தேர்தல் என்றவுடன் முகங் காட்டும் அரசியலற்றவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்காமல், தொடர்ந்தும் அரசியல் களத்தில் நின்று செயற்படக் கூடியவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் தன்னுடைய இறுதிக் காலத்திலாவது சம்பந்தன் ஜயா சிந்தித்தால் திருகோணமலைக்கு நன்மையாகலாம். குறிப்பாக கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளுக்கு விளக்கமளிக்கக் கூடிய ஆற்றலுள்ளவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் அவ்வாறில்லாது, மழைக்காலத்தில் ஊரும் நத்தைகள் போன்று தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்த் தேசியவாதிகளாக ஊர்ந்து திரிபவர்களை களமிறக்கினால், சம்பந்தன் ஜயாவின் பலத்தை நிரூபிக்கும் கனவு, அவரது சொந்த மாவட்டத்திலேயே நிராசையாகலாம். ஏனைய கட்சிகளும் தங்களின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுக்கு அப்பகுதியிலுள்ள செல்வாக்கிற்கு அமைவாக, ஆகக் குறைந்தது ஒரு வேட்பாளரையாவது நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படும் வேட்பாளர்களும், நான் மேலே குறிப்பிட்டது போன்று, மழைக்காலத்தில் ஊரும் நத்தைகளுக்கு ஒப்பானவர்களாக இருக்கக் கூடாது. இதன் மூலம் அனைத்து கட்சிகளின் செல்வாக்கும் ஓரணிப்படும் போது அதிகளவான மக்களை ஈர்க்க முடியும். அதற்கான திட்டங்களை வகுத்து செயலாற்ற முடியும். ஆனால், நான் குறிப்பிடுவதற்கு மாறாக, வழமை போல் ஆசன ஒதுக்கீடுகளில் முரண்பட்டு, அந்த முரண்பாடுகள் ஊடகங்களில் செய்தியாகி, பின்னர் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டாது ஒதுங்கும் நிலைமை உருவாகின், சம்பந்தன் ஜயா எதிர்பார்க்கும் பலத்தை நிரூபிப்பது வெறும் கனவாகவே போகும். இங்கு பலம் என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல, அவ்வசானங்கள் எத்தனையாயிரம் வாக்குகளால் தீர்மானிக்கப்படுக்கிறது என்பதே முக்கியமானது. நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் திருகோணமலைக்கு மட்டுமல்ல, அம்பாறைக்கும் பொருந்தும். மேலும், வடக்கு கிழக்கின் அனைத்து பகுதிகளுக்கும் பொருத்தமானது.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.