படம் | LANKAPUVATH

சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால், வெளியில் வியப்பாக பார்க்கப்படுவது போன்று அவ்வளவு எளிதாக மேற்படி திருத்தம் நிறைவேறிவிடவில்லை. பல்வேறு சமரசங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், ஒரு சில முன்னேற்றகரமான விடயங்களும் மேற்படி சட்டத்திருத்தின் மூலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதில் முக்கியமானது, சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிப்பதற்கான இணக்கப்பாடு. மற்றையது, தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். தவிர, மஹிந்த ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட பல விடயங்கள் 19ஆவதின் மூலமாக வலுவிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 19ஆவது திருத்தச் சட்டத்தின் வாயிலாக அமுலுக்கு வந்திருக்கும் பல விடயங்கள் மாற்றங்களாக இருப்பினும் அவை தொடர்ந்தும் மாற்றங்களா இருக்குமா அல்லது தற்காலிகமானதொரு மாற்றமாக இருக்குமா என்பதெல்லாம் மத்தியில் யார் ஆட்சியில் இருக்கின்றார் என்பதை பொறுத்தே அமைந்திருக்கும். ஏனெனில், வரலாற்று போக்கில் தெற்கில் உருவாகும் சிங்களத் தலைவர் ஒருவர், எதிர்காலத்திலும் தற்போது ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்தை உடைக்க முடியும். எனவே, சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் விவகாரம் எப்போதுமே ஒரு ஊசலாடும் விவகாரம்தான்.

ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு முன்னாலிருந்த பிரதான சவாலொன்றை வெற்றி கொண்டிருக்கிறார். ஜக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த வெற்றியை கொண்டே எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும். ஆனால், இந்த இடத்தில் இடைமறிக்கும் கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது? எந்த கோஷத்துடன் தமிழ் மக்களை எதிர்கொள்ளப் போகிறது? நாங்களும் தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை பெறப் போகின்றோம் என்பதையா? அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை நோக்கி பயணிக்கிறது என்பது மக்களுக்கு விளங்காவிட்டாலும் கூட அதனை விட்டுவிடலாம். பெரிய விடயங்கள் பாமர மக்கள் விளங்கிக்கொள்வது கொஞ்சம் கடினமானதுதானே என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களுக்கே விளங்கவில்லை என்பதுதானே பிரச்சினை. ஏனெனில், கூட்டமைப்பின் சார்பில் அனைத்து விடயங்களும் தற்போது சம்பந்தன் மற்றும் சுமந்திரனால் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன. ஆட்சி மாற்றத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவிலிருந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் கூட்டமைப்பின் இருவர் நிலைப்பட்டதாகவே இருக்கிறது. கூட்டமைப்பில் பெரிய கட்சியாக தங்களை அடையாளப்படுத்தும் இலங்கை தமிழரசு கட்சி ஒரு வழியிலும் மற்றவர்கள் அந்த வழியில் செல்ல முடியாமலும், அதேவேளை செல்ல முடியவில்லை என்பதை மக்களுக்குச் சொல்ல முடியாமலும் தடுமாறிக் கொண்டிருக்கிற ஒரு நிலையில்தான் கூட்டமைப்பு இருக்கிறது. அண்மையில் தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நினைவுப் பேருரை நிகழ்த்தியிருந்தார். இலங்கையை இரண்டு தடவைகள் ஆட்சிசெய்து ஓய்வுபெற்ற சந்திரிக்கா, 2014இல் மீண்டும் கட்சியரசியலுக்குள் தலையீடு செய்தார். மஹிந்தவின் எழுச்சியை தொடர்ந்து அரசியலிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட சந்திரிக்கா மீண்டும் மஹிந்தவை வீழ்த்த வேண்டும் என்னும் ஒரே நோக்கில் அரசியலுக்குள் பிரவேசித்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அவரது பழைய தமிழ் நட்புகள் மீளவும் புத்துயிர் பெற்றன. சந்திரிக்கா – சம்பந்தன் தனிப்பட்ட நட்பு அனைவரும் அறிந்ததே! இவ்வாறானதொரு சூழலில்தான் சந்திரிக்கா தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வில் பேருரை ஆற்றுமளவிற்கு தமிழ் மக்களுக்குச் நெருக்கமான ஒருவராகக் காண்பிக்கப்படுகின்றார். அரசியல் ரீதியில் மக்களின் தேவை கருதி சந்திரிக்கா அல்லது எந்தவொரு சிங்களத் தலைவருடன் உரையாடுவதும் தவறானதல்ல. அது அவசியமானதும் கூட. ஆனால், இங்கு மக்களின் தேவையிலிருந்து இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா அல்லது தங்களின் தனிப்பட்ட நலன்களிலிருந்தா என்பதுதான் கேள்வி.

நான் மேலே குறிப்பிட்டவாறு தமிழரசு கட்சி ஒரு வழியிலும், ஏனையவர் எந்த வழியில் செல்வதென்று தெரியாமலும் இருக்கின்ற நிலைமைக்கு மேற்படி நிகழ்வு ஒரு நல்ல உதாரணமாகும். இந்த நிகழ்விற்கு சென்றிருந்த எனது ஊடக நண்பர் ஒருவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் பின்வருமாறு பதிலளித்தார், மாவை சேனாதிராஜா முன்னர் எவ்வாறு பிரபாகரனை புகழ்ந்தாரோ, அதே போன்று இன்று சந்திரிக்காவையும், ரணில் விக்கிரமசிங்கவையும் புகழ்ந்து தீர்த்தார். ஆனால், இதே மாவை சேனாதிராஜா வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு பேசுவதில்லை. ஏனெனில், இவ்வாறு பேசினால் அவர்கள் மாவையை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். தமிழரசு கட்சி அண்மைக்காலமாக விமர்சிக்கப்படுவதற்கு இந்த இரட்டை நாக்குத்தான் முக்கிய காரணம். கொழும்பில் ஆங்கிலத்தில் பேசுகின்ற போது ஒரு விதமாகவும், பின்னர் வடக்கில் பேசுகின்ற போது வேறொரு விதமாகவும் பேசி வருகின்றனர். அண்மையில் கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் கணிக்கப்படும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், விடுதலைப் புலிகளோடு எங்களுக்கு எந்தவிதமான கூட்டும் இல்லை என்று கூறியிருக்கும் அதேவேளை, நாங்கள் பயங்கரவாதத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சுமந்திரனுக்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கும் உரித்துண்டு. ஆனால், இதனை அவர் தமிழில் யாழ்ப்பாணத்தில் சொல்ல முடியுமா? முக்கியமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு தமிழ் மக்கள் முன் கூற முடியுமா? இப்படியான கருத்துக்கள் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் என்னும் வகையில் மாவை சேனாதியின் நிலைப்பாடு என்ன? மேதின வைபவம் ஒன்றின் போது, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து சிங்கக் கொடியை சம்பந்தன் உயர்த்தியபோது அதற்கு எதிராக மறு தினமே மன்னிப்பு கோரியவர்தான் இந்த மாவை சேனாதிராஜா என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இவ்வாறு குறிப்பிடுகின்ற அதேவேளை, அண்மையில் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான சுவிஸ்ரலாந்தில் விடுதலைப் புலிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டமொன்றில் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருக்கிறார். இதில் புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் ஒரு குழுவினர் பங்குகொண்டிருந்தனர். கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும், வெளியிலிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் உள்வாங்க வேண்டும் போன்ற யோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் போது ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவித்தல்’ என்னும் தலைப்பில் ஒரு ஆவணம் கையளிக்கப்பட்டு, அதில் கையெழுத்திடுமாறும் கோரப்பட்டுள்ளது. ஆனால், தமிழரசு கட்சியிலுள்ளவர்களுடன் பேசிய பின்னர் இதற்கு பதிலளிப்பதாக மாவை குறிப்பிட்டிருக்கின்றார். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்னும் தொனியில் குறிப்பிடுகின்ற அதேவேளை, கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சிறிதரனோ தொடர்ந்தும் தன்னுடைய தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் என்று குறிப்பிட்டு வருகின்றார். உண்மையில் இப்போது விடுதலைப் புலிகள் தொடர்பான கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன? இப்படியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதில் கூட்டமைப்பிலுள்ளவர்களே தெளிவற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிட்டேன். இவ்வாறானதொரு சூழலில்தான் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்களிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாகாண சபையை மேலும் வலுவுள்ளதாக்கும் வகையில் சில முன்னெடுப்புக்களும் நிகழலாம். ஆனால், இவற்றின் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு குரலில், ஒரு நிலைப்பாட்டில் செயலாற்றுமா என்பதுதான் இங்குள்ள கேள்வி. எனவே, கூட்டமைப்பு இவ்வாறு தெளிவற்று பயணித்துக் கொண்டிருக்கும் போது பயணத்தின் முடிவு எது என்பதை எவரும் அறிந்துகொள்ள முடியாது. எனவே, கூட்டமைப்பு தன்னுடைய பயணத்தின் மூலம் போக விரும்பும் இடத்தை முதலில் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஏழைத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் 19ஆவது, 20ஆவது எல்லாம் வெறும் உச்சரிப்புக்களாகவே இருக்கும்.